Sunday, August 18, 2019

பெண்ணே, உனக்கான தருணம் இது!

 ஆவி பறக்க போட்டு வைத்திருந்த காபி, கோல்டு காபி ஆகியிருந்தது. ஹாட் பாக்கில் போட்டு வைத்திருந்த தோசை தீண்டப்படாமல் இருந்தது.  ஏ.ஆர் ரஹ்மான், சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே  என்று டீவி வழியாக பாடிக்கொண்டிருந்தார். இதே வேறொரு நாளாக இருந்தால் அனுவின் கையும் காலும் தலையும் பாட்டுக்கு ஏற்றவாறு தாளம் போட்டு கொண்டிருக்கும். ஆனால் இன்று எதிலும் மனம் லயிக்கவில்லை.

மனம் எங்கோ அலைபாய, கையை முட்டு குடுத்து டைனிங் டேபிளில் படுத்திருந்தவளை சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் என்று பாடி செல்பேசி உசுப்பியது. அக்கா என்று ஸ்கிரீன் காட்ட, போனை காதுக்கு கொடுத்தபடி "சொல்லுக்கா" என்றாள் அனு. "என்னடி, உடம்புக்கு ஏதும் முடியலையா? குரல் ரொம்ப டல்லா இருக்கு" என்றவளிடம் "ப்ச்,  அதெல்லாம் ஒன்றுமில்லை" என்றாள். "பின்ன, விஷ்ணு ஏதாது திட்டினாரா?"  என்றவளிடம் "யாரு, உன் மாப்பிள்ளையா? இந்த கேள்வியே அபத்தம்னு உனக்கே தெரியும்" என்றாள் அனு.

"அப்புறம் என்ன தான்டி விஷயம், ஒழுங்கா தான் சொல்லேன்" என்று சலித்துக்கொண்ட தீபாவிடம் "நேற்று இரவு சம்யு, அவளோட பெட்ரூமில்  போயி படுத்துகிட்டா. இனிமே டெய்லி அங்கேயே படுத்துக்கறேன்னு சொல்றா. காலைல எந்திரிச்சு அவ பாட்டுக்கு ஸ்கூலுக்கு கெளம்பி போயிட்டா, இந்த மனுஷனும் ஒண்ணுமே நடக்காதது மாதிரி ஆபீஸ்க்கு கெளம்பி போயிட்டாரு" என்றாள் அனு. "இப்ப என்ன, உன் பொண்ணு அவ ரூம்ல படுத்து தூங்கினா, அதுனால என்ன?" என்று தீபா கேட்க, "என்னக்கா, இவ்ளோ அசால்ட்டா சொல்லிட்ட?  எனக்குள்ள இருந்து வந்து, என்கிட்டயே பன்னிரண்டு வருஷமா ஒட்டிக்கிட்டு படுத்திருந்தா, நேத்து அவ ரூம்ல போயி படுத்ததும் எனக்கு தூக்கமே வரல, நெஞ்செல்லாம் அடைக்கறாப்ல இருந்துச்சு.  என் பெட்ரூமே வெறிச்சோனு இருக்க மாதிரி இருந்துச்சு. நாலஞ்சு தடவ எந்திரிச்சு போயி அவ ரூம்ல பாத்தேன், ஆனா அவ படுத்ததும் தூங்கிட்டா" என்று விம்மினாள்.   

"அட அசடே, நா கூட ஏதோ பெரிய விஷயமோனு பயந்துட்டேன்" என்று சிரித்தபடி சொன்ன தீபாவிடம் "உனக்கு இதெல்லாம் பழகிருச்சு, அதுனால சின்னதா தெரியுது. எனக்கு பூதாகாரமா இருக்கு. நா அனுபவிக்கும் போது தான் உன்ன கேக்கணும்னு தோணுது, பசங்க ரெண்டு பேரும் வேலைக்காக வெளியூருக்கும், வெளிநாடுக்கும் போனப்ப உனக்கு கஷ்டமாயில்லையா?" என்று கேட்ட அனுவிடம் "இல்லாமல் எப்படி இருக்கும், நீ சொல்ற மாதிரி தான் எனக்கும் இருந்துச்சு, மாமா கெளம்பி ஆபீஸ் போயிருவாரு. எனக்கு தான் வீடே வெறிச்சுனு இருக்கமாறி இருக்கும், எந்த சாமானை பாத்தாலும் பசங்க நியாபகம் வரும், சாப்பிடவே தோணாது. அதுக்குன்னு வாழ்க்கை அப்படியே நின்னுருமா என்ன? ஒரு பெண்ணா பிறந்து நாம் வாழ்க்கையில் சந்திக்கிற மாற்றங்கள் கொஞ்ச நஞ்சமா? அப்பா அம்மாவுக்கு செல்ல மகளா இருக்கற நாம, திடீர்னு வேற ஒரு குடும்பத்துக்குள்ள போயிடறோம், அந்த புது மனிதரோடு விருப்பு வெறுப்புக்கு ஏத்தமாதிரி நம்மள அட்ஜஸ்ட் பண்ணிக்கறோம். ஒரு குழந்தைன்னு வந்ததுக்கப்புறம் அதுக்காக உணவையும் தூக்கத்தையும் மறக்கறோம், அவங்க வளர்ந்து படிச்சு முடிக்கறதுக்குள்ள நமக்குள்ள எவ்வளவு எவ்வளவு மாற்றங்கள் நேர்ந்துடுது? நிறைய நேரங்கள்ல படிச்ச படிப்புக்கும் செய்யற வேலைக்கும் சம்பந்தம் இல்லாம ஏதேதோ செஞ்சிட்டு இருப்போம்.  இதை எல்லாம் அனாயசமாக செய்யும் நாம், நம் பிள்ளைகள் நம்மை விட்டு கொஞ்சம் தள்ளி இருப்பதை தாங்கி கொள்ள முடியறதில்லை. வேலைக்கு போற பெண்களாக இருந்தாலும், வீட்டிலிருந்து கவனித்துக்கொள்ளும் பெண்களாக இருந்தாலும்  வீடு, கணவர், பிள்ளைகள்னு ரொம்ப எமோஷனலா கனெக்ட் ஆகிடறோம். அதுக்குன்னு ஆண்கள் எமோஷனலா அட்டாச் ஆகறதில்லைனு அர்த்தம் கெடயாது, அவங்க அதை வெளிப்படுத்தறதில்லை, அவ்ளோ தான்.  அவங்களுக்கு எல்லாமே நான் தான் பாத்து பாத்து செய்யணும்னு ஒரு பெரிய பொறுப்பை நாமாக தான் நம் தலையில் தூக்கி வைச்சுக்கறோம். பசங்க வளர்ந்ததும் அவங்களே அவங்களுக்கு வேண்டியதை பாத்துக்கும் போது நமக்கு இனி என்ன வேலைன்னே தெரியாம மனசு ப்ளாங் ஆகிரும், அதோட வெளிப்பாடு தான் இந்த டென்ஷன், விரக்தி எல்லாம்.  சரி, இவ்ளோ நாள் அவங்களுக்காக இருந்தோம், இனிமே நம்ம உடலையும், மனசையும் கொஞ்சம் கவனிப்போம்னு  நம்ம  மைன்ட்க்கு வேற மாதிரி வேல குடுத்து  டைவர்ட் பண்ண வேண்டியது தான்." என்று தீபா சொல்லி முடிக்க, "இதுக்கு தான் ஊர்ல ஒரு ஆல் இன் ஆல் அழகு அக்கா வேணும்கறது. நா எப்ப குழப்பத்துல இருந்தாலும் என்னை தெளிய வைக்கறதுக்குனே ஆண்டவன் உன்ன படைச்சிருக்கான்" என்று சிரித்தபடி சொன்ன அனுவிடம், "அம்மாடி, சிரிச்சிட்டியா... இதுக்கு நா எவ்ளோ பெரிய கதை சொல்ல வேண்டியிருக்கு? என் பசங்களுக்கு கூட இப்படி கதை சொன்னதில்லை போ" என்று நக்கலடித்து போனை கட் பண்ணினாள் தீபா. அனுவிற்கு மனம் மிகவும் லேசானது  போல் இருந்தது. ஷி இஸ் எ பாண்டஸி என்று காக்க காக்க ஜோ பாடிக்கொண்டிருக்க அனுவும் சேர்ந்துகொள்ளலானாள்.  


Learning Beyond Textbooks - Life Skills - Child Growth

#Learning_Beyond_Textbooks #Life_Skills A home is the first environment where children can playfully learn a plenty. Traditional textbook le...