"ஏய்யா.. ராசா.., கடைத்தெருவுக்கு போகும் போது கொஞ்சம் புளிப்பு மிட்டாய் வாங்கிட்டுவாய்யா" படித்துக்கொண்டிருந்த ராகவனிடம் பாட்டி கேட்டாள்.
"அட போ கெழவி, உனக்கு வேற வேலையே இல்லையா? எப்ப பாரு இதை வாங்கிட்டு வா அத வாங்கிட்டு வான்னு" அலுத்துக்கொண்ட பேரனின் தாடையை பரிவாக தடவியபடியே "எந்தங்கம்ல.. கொஞ்சம் வாங்கிட்டு வந்து தாய்யா. சுருக்கு பைல இருக்கது காலியா போச்சு, அசதியா இருக்கும் போது துளியூண்டு நாக்குல வச்சு ஒனச்சுக்கிட்டா கொஞ்சம் தெம்பாருக்கும்" என்றார்.
"சரி சரி காலேஜ்ல இருந்து வரும் போது வாங்கிட்டு வரேன். தொண தொணங்காம இப்ப என்ன படிக்க விடு" என்று சிடு சிடுத்தான் ராகவன்.
" உஸ்ஸ்.. உஸ்ஸ்.. என்று தன் பொக்கை வாயிலிருந்து பெருமூச்செறிந்தபடி சுவற்றை பிடித்தபடி மெதுவாக நடந்தாள் எழுபத்தெட்டு வயது மிக்க லெச்சுமி பாட்டி.
ராகவன் லெச்சுமி பாட்டியின் மகள் வழிப்பேரன். லெச்சுமி பாட்டியின் கணவர் அவரது இருபத்தைந்தாவது வயதிலேயே இறந்து விட, பெண் குழந்தையை இவள் எப்படி தனியாக வளர்க்க போகிறாளோ என்று போவோர் வருவோர் எல்லோரும் பேசியது அவளை யோசிக்க வைத்தது. முடங்கிக்கொண்டிருந்தால் வாழ்க்கையை ஓட்ட முடியாது, பெண் பிள்ளையை கரை சேர்க்க முடியாது என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வீட்டில் அங்கும் இங்குமாக இருந்த சொற்ப பணத்தில் சிறிதாக ஒரு தொழிலை தொடங்கலாம் என்று முடிவு செய்தாள்.
எவ்வளவு தான் யோசித்தாலும் தன்னால் என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு அவளால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை. "இந்த சமயக்கட்டை தாண்டி ஏதாவது கத்துக்கொண்டிருந்திருக்கலாமோ?" என்று நொந்து கொண்ட போது தான், இதையே தொழிலாக செய்தால் என்ன என்று தோன்றியது. அளவாக சாமான் செட்டுகளை வாங்கி காலை, மதியம் மற்றும் மாலை என மூன்று வேளையும் உணவு பதார்த்தங்களும், பலகாரங்களும் சிக்கனமாக அதே சமயம் சுத்தமாகவும் செய்தாள்.
அன்றைய நாட்களில் சூரியன் மறையும் நேரத்திற்குள் அவரவர் வீடுகளுக்குள் முடங்கி விடுவர், ஆதலால் இரவு வேளைகளில் அடுத்த நாளைக்கு வேண்டியதை எல்லாம் சரி பார்த்து வைப்பது, வீட்டில் இருக்கும் வேலைகளை செய்வது என்று சக்கரம் கட்டிக்கொண்டு சுழலுவாள். குருவி சேர்ப்பது போல சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தில் மகளுக்கு ஜாம் ஜாம் என்று திருமணமும் செய்து வைத்தாள்.
எழுபத்தைந்து வயது வரையிலும் கூட தளராமல் சமையல் தொழிலை செய்து கொண்டிருந்தவளை அவளது மகளும் மருமகனும் தான் வற்புறுத்தி அவர்களுடன் வந்து தங்குமாறு செய்தனர். வேலைகளை செய்து கொண்டிருந்தவரை வைராக்கியமாக திடமாக இருந்த மனமும் உடலும், சும்மா இருக்க ஆரம்பித்தவுடன் வயதுக்கான முதிர்ச்சியையும் ஆட்டத்தையும் காட்டத்துவங்கின. இருந்தாலும் அவரது துணிகளை அவரே துவைத்து, உலர்த்துவது, மடித்து வைப்பது, சாப்பிட்ட தட்டை தொட்டியில் எடுத்துச்சென்று கழுவி வைப்பது என்று அவரது வேலைகளை அவரே செய்து கொள்வார்.
எப்போதும் ஆரஞ்ஜு நிற புளிப்பு மிட்டாய்களை, கொஞ்சம் கல்லை வைத்து சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு சிறிய கவரில் சுற்றி சுருக்கு பையில் வைத்திருப்பார். அசதியாக தோணும் நேரங்களில், அதில் ஒரு சிறிய துண்டை எடுத்து வாயில் ஒதுக்கிக்கொள்வார். ராகவன் சிறு பிள்ளையாக இருக்கும் போது அவனை பக்கத்தில் அமர்த்திக்கொண்டு கதைகள் சொல்லிக்கொண்டே இந்த உடைத்த புளிப்பு மிட்டாய் துண்டும் தருவார். ராகவனும் அந்த மிட்டாய்க்காகவே லெச்சுமி பாட்டியிடம் ஓடுவான். இன்று பருவ வயதின் தாக்கத்தில் கெழவி என்று சொன்னாலும், சலித்துக்கொண்டாலும் கேட்பதை அவ்வப்போது வாங்கிக்கொடுக்கத்தான் செய்வான்.
படிப்பு முடித்து ராகவன் வேலை நிமித்தமாக பட்டிணத்தில் சில வருடங்கள் தங்கி இருந்தான். அப்படியே உயர் படிப்பு, வெளிநாட்டு வேலை என்று வருடங்கள் உருண்டோடின, திருமணமாகி மனைவியையும் வெளிநாட்டிற்கு கூட்டிச்சென்றவன், அவளது பேறுகால சமயத்தில் வந்தவன் தான்; அதன் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து இப்போது தான் மனைவியையும், இரண்டு வயது மகன் ரிஷியையும் அழைத்து வந்திருந்தான். நல்ல வெய்யில் காலமாதலால் வெக்கை தாளாமல் ரிஷி சுருண்டு சுருண்டு படுத்திருந்தான். எப்பவும் துறு துறுவென்றிருக்கும் மகன் ஏன் இப்படி இருக்கிறான், என்னவோ ஏதோ என்று ராகவன் பதை பதைக்க "ஒண்ணுமில்லியா... நீர் சத்து கொறஞ்சு போயிருக்கும், எஞ்சாமிக்கு இந்த புளிப்பு மிட்டாய கொஞ்சம் குடு, தெம்பாகிருவான்" என்று சுருக்குப்பையிலிருந்து அந்த நொறுக்கிய மிட்டாயை எடுத்து நீட்ட, ராகவன் மறு பேச்சின்றி அதை வாங்கி ரிஷியின் நாவில் வைத்தான். "சாக்கெட் சூப்பதா இதுக்கு கிராம்மா (Grandma)" என்று மழலை பொங்க லெச்சுமி பாட்டியை கட்டிக்கொள்ள, ராகவன் "பாட்டி, நீ கூட இருந்தா டாக்டரே வேணாம் போ" என்று சொல்லி அவளது தாடையை தடவி முத்தமிட்டான்.