எல்லோரையும் போல கொ.மு (கொரானாவிற்கு முன்) வரை, என்னுடைய வேலைகள் தவிர்த்து, எனக்கே எனக்கான நேரம் என்று ஒன்றை நித்தமும் ஒதுக்கி, அதில் அன்றைய தினத்தில் மூடுக்கு ஏற்றவாறு சத்தமாகவோ அல்லது சத்தம் குறைவாக வைத்தோ பிடித்தமான பாடல்களை கேட்பது, இணையத்தில் உலாவுவது என்று ஏதோ ஒன்றை கண்டிப்பாக செய்திடுவேன்.
கொ.பி (கொரானாவிற்கு பின்) அது முற்றிலுமாக மாறி விட்டது. முன்னரெல்லாம் ஒவ்வொரு நாளும் எனக்கு சுளையாக மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் வரை அவகாசம் கிடைக்கும், இப்போது சேர்ந்தாற்போல் ஒரு மணி நேரம் கிடைத்தாலே பெரிய விஷயம் என்றாகி விட்டது. வாழ்வில் எல்லா நாட்களும் ஒரே மாதிரி இருக்காது என்று உணர்த்திய நாட்கள் இவை.
இரவில் கிடைக்காத தனிமை, காலையில் சீக்கிரம் எழுந்தால் தான் கிடைக்கும் என்பதாலேயே சீக்கிரம் எழுவதை வழக்கமாக்கிக் கொண்டேன். அப்போது கிடைக்கும் முப்பதில் இருந்து நாற்பது நிமிடம் தான், மனதிற்கு அமைதி தரக்கூடிய நேரம். இந்த காலகட்டத்தில் உடலோடு சேர்ந்து மனதின் ஆரோக்கியமும் மிகவும் முக்கியம் என்பதால் அந்த நேரத்தை உடற்பயிற்சிக்கும், நடைப்பயிற்சிக்கும் ஒதுக்கிவிட்டேன். சில சமயங்களில் அப்போதும் என் பையன் எழுந்து வந்துவிடுவான், அவனுடன் பேசியபடியே பயிற்சியை முடித்துவிட்டு அன்றைய நாளுக்கான வேலையை ஆரம்பித்து விடுவேன்.
எல்லாருக்கும் விருப்பமான உணவை சமைக்கவும் வேண்டும், அதே சமயம் எந்நேரமும் அடுக்களையில் இருக்கவும் கூடாது என நினைப்பவள் நான். மட மடவென சமையல் முடித்து காலை பத்தரை மணிக்குள் கிச்சன் வேலை, வீட்டை சுத்தம் செய்வது என எல்லாவற்றையும் முடித்தாக வேண்டும்.. என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் காது மட்டும் மகனின் இணைய வகுப்பில் ஒரு காலை வைத்திருக்கும். அதன் பிறகு என்னிடம் பாடம் படிக்க வரும் பக்கத்து வீட்டு பாப்பாவுக்கு வகுப்பு எடுத்து முடித்தால் மணி நண்பகலை தொட்டு விடும்.
அதன் பிறகு மதிய உணவு, தொட்டு தொட்டு வரும் சிறு சிறு வீட்டு வேலைகள், மகனுக்கு புரியாத பாடங்களை விளக்குதல் என்று ஒவ்வொன்றாக செய்து முடித்துவிட்டு, என்னுடைய ஆங்கில மொழி திறன் (English Language Training Class ) வகுப்பிற்கான ஆயத்த வேலைகள், நூலகத்தின் வேலைகள் என நேரம் முழுவதும் ஓடி விடும். அதன் பிறகு சொற்பமாக அங்கங்கே கிடைக்கும் கால் மணி நேரம், அரை மணி நேரமும் மகன் நண்பர்களுடன் போடும் செல்ல சண்டைகளுக்கு பஞ்சாயத்து செய்தே தீர்ந்து விடும். இதையெல்லாம் தாண்டி எல்லா வேலையும் முடித்து, மகனும் உறங்க சென்ற பிறகு, அப்பாடா ஒரு மணி நேரம் கிடைக்க போகிறது என நினைத்தால், காலையிலிருந்து சேர்த்து வைத்த அழுத்தம் எல்லாம் சேர்த்து வைத்து எந்த நேரமும் வெடித்து விடும் Pressure Cooker போல கணவர் வேலை முடித்து வருவார்.
ஆணோ பெண்ணோ, வீட்டில் இருந்து வேலை செய்வதில் மிகப் பெரிய சிரமம் உண்டு. அவர்கள் அழுத்தத்தை உடன் பணிபுரிவோரிடமோ அல்லது நண்பர்களிடமோ பகிர்ந்து கொள்ள தோதான நேரம் அவர்களுக்கு அமைவதில்லை. தவிர வீட்டிற்குள்ளேயே இருப்பதினால் வரும் உடல் உபாதைகள் வேறு. அதனால் கணவர் வேலை முடித்து வரும் போது, மடிக்கணினியை தள்ளி வைத்து விட்டு, சிறிது நேரம் ஒதுக்கி விடுவேன், அப்படியே பேசிக்கொண்டிருந்தால் மணி பதினொன்றரை ஆகியிருக்கும். அதற்கு மேல் என்ன "இழுத்து போத்திட்டு போயி தூங்குடா கைப்புள்ள" டயலாக் தான்.
வார நாட்கள் முழுவதும் busy'யாக இருப்பது போல் தோன்றினாலும் "இதுவும் நல்லா தான் இருக்குல்ல" அப்படீன்னு அடிக்கடி தோணும். நாம் செய்யும் வழக்கமான வேலைகளிலிருந்து மாறுபட்டு செய்யும் எந்த வேலையும் நமக்கு கூடுதல் உற்சாகம் கொடுக்கும். மீ டைம் என்பதும் அது தான் அல்லவா? அதனால் எனக்கு எப்பவும் கிடைக்கும் தனிமை கிடைக்காவிட்டாலும், அவ்வப்போது அந்த நேரத்திற்கு மனம் ஏங்கினாலும் , இன்றைய சூழ்நிலை இது தான் என ஏற்றுக்கொண்டு அதில் கிடைக்கும் சிறு சிறு சந்தோஷங்களை அனுபவித்துக்கொள்ள பழகிக்கொண்டேன்