"சொல்லுங்க சார், என்ன விஷயம்?" என்ற பள்ளியின் ஆபீஸ் ஸ்டாஃபிடம், "செகிரேட்டரி சார் வர சொன்னார்" என்று என் கணவர் சொன்னதும் ஒரு பவ்வியம் ஒட்டிக்கொண்டது. "உங்க பேரு சார்?" என்று பெயரை கேட்டு கொண்டு, கொஞ்சம் இருங்க, சார் கிட்ட சொல்றேன் என்று அங்கிருந்து நகர்ந்தார் அந்த நபர். அதற்குள் மற்றொருவர் வந்து அதே கேள்வியை கேட்க, நாங்களும் அதே பதிலை சொல்ல, "உக்காருங்க சார், உக்காருங்க மேடம்", என்று வலுக்கட்டாயமாக இரண்டு நாற்காலியை போட்டு அமர வைக்கப்பட்டோம். சிறிது நேரத்தில் முதலில் பேசிய அந்த நபர் வந்து "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, சார் ரௌண்ட்ஸ் போயிருக்கார்" என்று சொல்லி விட்டு சென்றார்.
நேரில் வர வைத்து என்ன சொல்ல போகிறாரோ என்ற சிறு பதற்றத்துடன் பவ்யமாக அமர்ந்திருந்தோம். ஒரு பத்து நிமிட காத்திருத்தலின் பிறகு, "சார் உங்களை கூப்பிடறார்" என்று அந்த இரண்டாம் நபர் வந்து அழைக்க, பிரின்சிபால் என்று அறிவித்த அந்த கதவை நாசூக்காக தட்டியபடி உள்ளே நுழைந்தோம். பள்ளி மாணவர்கள் வாங்கி குவித்த ட்ரோபிகள், மெடல்கள், சான்றிதழ்கள் அந்த அறை முழுவதும் நிரம்பியிருந்தன. ஸ்வாமி படங்களும், பரிசாக கொடுக்கப்பட்ட புத்தகங்களும் நேர்த்தியாக அடுக்கப்பட்டு, ஸ்வாமி படங்களுக்கு மலர்கள் சூட்டப்பட்டு இருந்த அறையில் ஒரு புன்னகையுடன் எங்களை வரவேற்றார் பள்ளியின் செயலாளர். மிகுந்த மரியாதையுடன் அவருக்கு வணக்கங்கள் தெரிவித்துக்கொண்டு எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம்.
பள்ளி முதல்வரின் மேசைக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தபடி, எங்களுக்கும் இருக்கைகளை காட்டி, உட்காருங்கள், என்று சொன்னார். அவ்வளவு பெரிய பொறுப்பில் இருக்கும் அவர், எங்களிடம் அவரை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், அதை அவர் செய்தார். "நான் தான் இந்த பள்ளியின் செயலாளர், சேத்பட் பள்ளியில் தான் நான் பெரும்பாலும் இருப்பேன். அவ்வப்போது தான் இங்கு வருவேன். இப்போது கரெஸ்பாண்டெண்ட் மேடம் ஒரு ட்ரைனிங்'காக வெளிநாடு போயிருக்கிறார். அதனால் இன்று இங்கு வந்தேன். நீங்கள் கொடுத்த feedback லெட்டரை படித்தேன், எனவே தான் நீங்கள் நேரில் சந்திக்க வர முடியுமா என நேற்று தொலைபேசி வாயிலாக கேட்டேன்" என்று எளிமையான ஆங்கிலத்தில் சொல்லி முடித்தார்.
"நீங்கள் நேரில் சந்திக்க அழைப்பீர்கள் என்று நினைக்கவே இல்லை சார், ஏற்கனவே சில முறை மீட்டிங்கின் போது வகுப்பாசிரியரிடம் இந்த பரிந்துரையை சொல்லி இருக்கிறோம். பள்ளியும் சில மாற்றங்கள் ஏற்படுத்தி இருந்தது. பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக அதை இன்னும் கொஞ்சம் மாற்றியமைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதால் தான் அந்த feedback லெட்டர் கொடுத்தோம்" என்று கணவர் சொல்ல; அது பற்றிய கருத்துகளை சில நிமிடங்கள் பரிமாறிக்கொண்டோம். அப்போதும் கூட, எங்களை உட்கார வைத்து இவ்வளவு விலாவரியாக கேட்டது ரொம்பவே ஆச்சரியப்படுத்தியது. பேசிக்கொண்டிருக்கும் போதே அந்த துறை சம்பந்தப்பட்ட அலுவலர்களை வரும்படி கூறினார். அவர்களிடமும் அதை விளக்கி தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி சொல்லிவிட்டு, "அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். தேவைப்பட்டால் எனி டைம் எனக்கு கால் பண்ணுங்கள்" என்று மிகவும் சாதாரணமாக சொன்னார். இதனிடையே எங்களுக்கு காபி வேறு வந்தது. "அய்யயோ, வேண்டாங்க நா காபி குடிக்கறதில்லை, சார்க்கு குடுங்க" என்று அந்த அக்காவிடம் நாங்கள் சொல்ல, "நா அப்பவே குடிச்சிட்டேன், இது உங்களுக்கு தான்" என்றார். அத்தோடு நிற்காமல் எங்கு வசிக்கிறீர்கள், எங்கு வேலை செய்கிறீர்கள், சொந்த ஊர் என்ன என்று மிகவும் சகஜமாக எளிமையாக பேசிக்கொண்டிருந்தார். ஹவ் யுவர் சிப் ஆப் காபி!! என்று சொன்னவரிடம், "ஸுர் சார், நாங்க வெளில எடுத்துட்டு போயி குடிச்சுக்கறோம். எங்களுக்காக உங்களுடைய நேரத்தை ஒதுக்கியதற்கு மிக்க நன்றி. சோ நைஸ் டு மீட் யு சார்!" என்று விடைபெற்று கொண்டு வெளியில் வந்து காபியை அருந்தினோம். அதற்கு மேலும் வேலை நேரத்தில் அவருடைய டைமை எடுத்துக்கொள்வது அவ்வளவு சரியல்ல அல்லவா!
அங்கிருந்து வந்த பிறகும், உத்தம புத்திரன் படத்தில் வரும் எமோஷனல் ஏகாம்பரம் போல வாயடைத்து போயிருந்தேன். ஒரு பள்ளியின் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒருவர், யாரோ ஒரு பாரென்ட் ஒரு feedback கொடுத்திருக்காங்க, என்று அதை அலட்சியப்படுத்தாமல், அவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து, நேரில் பேசலாமா என கேட்டு, அவருடைய அரைமணி நேரத்தை ஒதுக்கி, அவர்களை உபசரித்து, அந்த நிமிடங்களிலும் கூட சர்வ சாதாரணமாக உரையாடியது எவ்வளவு பெரிய விஷயம். என் வாழ்நாளில் மறக்க முடியாத சில நிமிடங்களில் இதுவும் இடம் பிடித்து விட்டது.
மிக முக்கியமாக ஒரு பள்ளி என்பது படிப்பு என்பதை தாண்டி பல விஷயங்களை மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் ஒரு அற்புதமான இடம். கற்பித்தல் என்பதும் வாய் மொழியாக மட்டுமின்றி நம் செயலிலும் இருக்க வேண்டும் என்பதற்கு இதுவும் கூட ஒரு உதாரணம் தானே.
No comments:
Post a Comment