இந்த கதையை கதைகேட்கலாம் பகுதியில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்.
"இதோ உன்னைப்போல் தான் டா, நானும் அப்படியே தூக்கி போட்டேன், டேபிளில் போய் விழுந்திருக்கும்னு நெனச்சேன், எங்க போச்சுன்னே தெரியலையே" என்றபடி தேடிக் கொண்டிருந்தவர், "ஆ, கெடச்சிருச்சு... என்று குஷியில் கத்தினார். சரிப்பா... வாங்க உடனே கிளம்பலாம், ப்ளீஸ்" என்று அவரை இழுக்காத குறையாக கூட்டிபோனான். காலை நேரம் என்பதால், டிராபிக் அதிகமாக இருந்தது. அவர்களது கார் ஊர்ந்து கொண்டிருந்தது. மணியை பார்த்த அர்ஜுனுக்கு கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. "மணி இப்பவே ஒன்பதே கால் ஆகிருச்சு, பஸ் கெளம்பிருக்கும்ல" என்று சோகமாக கேட்டான். "அப்படித்தான் நினைக்கறேன், மே பீ, நாம இன்னும் கொஞ்சம் சீக்கிரமா கெளம்பி இருக்கணும், இல்லேனா நீ உன்னோட பொருட்களை எல்லாம் அது அது எடத்துல வச்சிருந்தா, நா என் கார் சாவிய ஒழுங்கா ஸ்டாண்ட்ல மாட்டியிருந்தா, இவ்ளோ லேட்டா ஆகியிருக்காதுனு நினைக்கறேன்" என்ற போது அர்ஜுன் அவன் தவறு புரிந்ததால் தலை குனிந்து கொண்டான்.
அப்படி இப்படி, ஒரு வழியாக பள்ளிக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் எதிர்பார்த்தபடியே பஸ் கிளம்பி போயிருந்தது. அர்ஜுன் அழுதே விட்டான், "சரி அர்ஜு, அழாத, இனிமே இதை மாதிரி லேட்டாகாம பாத்துக்கலாம். இப்ப போயி நீ உன் கிளாஸ்ல உக்காந்துக்கோ. சாயந்திரம் பஸ்ல வீட்டுக்கு போயிரு, எனக்கு ஆபீஸ்க்கு நேரமாச்சு" என்ற அப்பாவிடம், "ஐயோ அப்பா, கிளாஸ்ல யாருமே இருக்க மாட்டாங்களே, நா மட்டும் தனியா என்ன செய்வேன், என்னை வீட்ல கூட்டிட்டு போயி விட்ருங்க, ப்ளீஸ்" என்றான்.
"நோ அர்ஜு, டிராபிக் எப்படி இருக்குனு பாத்தேல, எனக்கு ஆல்ரெடி டைம் ஆச்சு. சொன்ன நேரத்துக்கு ஆபீஸ்ல நா கண்டிப்பா இருக்கணும்" என்று கண்டிப்புடன் சொன்ன அப்பாவை பாவமாக பார்த்தான் அர்ஜுன். நேரம் தவறாமை எவ்வளவு முக்கியம் என்பதை அன்று அவன் உணர்ந்தான். இருப்பினும் அன்றைக்கு அவன் ட்ரிப்பை மிஸ் பண்ணினது பண்ணினது தான். ஒரு டைம் மெஷின் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும், காலையிலிருந்து எல்லாவற்றையும் மாற்றிவிடலாம் என்று நினைத்துக்கொண்டான்.
"அப்பா, ப்ளீஸ்ப்பா, நா என் தப்பை உணர்ந்துட்டேன். இனிமே இப்படி லேட் பண்ண மாட்டேன், பொருட்களை அது அது எடத்துல வைப்பேன். இந்த ஒரே ஒரு தடவ மட்டும் என்னை வீட்ல கூட்டிட்டு போய் விட்ருங்கப்பா, நா கிளாஸ்ல தனியா நாள் முழுசும் எப்படி இருக்கறது" என்று கெஞ்சினான். அப்போது ஹார்ன் சத்தம் கேட்க, திரும்பி பார்த்த அர்ஜுனின் விழிகள் மகிழ்ச்சியில் விரிந்தன. பீல்ட் ட்ரிப்க்கு போன ஸ்கூல் பஸ் வந்து கொண்டிருந்தது.
"போ அர்ஜு, பஸ் உனக்காக தான் திரும்ப வந்திருக்கு. பட் நீ சொன்ன வார்த்தைகளை மறந்துராத.. இனிமே எப்பவும் லேட் பண்ணாத" என்று சொன்ன தந்தையை கட்டியணைத்தபடி "கண்டிப்பா மறக்க மாட்டேன்ப்பா" என்று துள்ளிகுதித்து பஸ்சை நோக்கி ஓடினான்.
அதன் பிறகு அவன் எல்லா நாட்களும் நேரத்திற்கு எல்லா வேலைகளையும் முடிக்க கற்றுக்கொண்டான்.
முற்றும்.