(22-11-09 அன்று என்னுடைய பர்சனல் blog'ல் பதியப்பட்ட பதிவின் தமிழாக்கம்)
2009'ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் 11'ஆம் நாள், இரவு 12.30 மணி. மனம் அமைதியின்றி தவித்தது. அம்மா, அப்பா, அக்கா மற்றும் அக்கா பிள்ளைகள் ஏதோ படம் ஒன்றை பார்த்து கொண்டிருந்தனர். கிடைத்த சில மணி நேரங்களில் ஒரு குட்டி தூக்கம் போட வேண்டிய கட்டாயம் எனக்கு, புரண்டு புரண்டு படுத்தும் உறக்கம் வர மறுத்தது. இன்னும் 3 மாதம், இன்னும் 3 மாதம் என மனது அரற்றிக்கொண்டே இருந்தது.
இதே சில மாதங்களுக்கு முன்னால் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால் நிலைமையே வேறு. வானத்துக்கும் பூமிக்கும் குதித்திருந்திருப்பேன். மேற் படிப்பு முடித்து, நல்ல வேலையில் சேர்ந்து, ஒரே ஒரு முறையாவது விமானத்தில் வெளி நாட்டிற்கு வேலை நிமித்தமாக பயணித்திட வேண்டும் என்பது என் 5 வருட கனவு. அந்த கனவு தான் அன்று நிறைவேறியிருந்தது. இன்னும் சிறுது நேரத்தில் விமான நிலையத்திற்கு புறப்பட வேண்டும்.
இன்றைய தேதிக்கு இது சாதாரண விஷயமாக தோன்றலாம், பத்து வருடத்திற்கு முன் அது அவ்வளவு எளிதான காரியமில்லை. அதுவும் ஒரு சிறிய ஊரில், வரையறுக்க பட்ட ஒரு சூழலில் வளர்ந்த ஒரு பெண்ணுக்கு, அது மிகவும் பெரிய விஷயம் தான். பள்ளி படிப்பு முடித்த போது ஏதோ ஒரு கட்டு பெட்டிக்குள் இருப்பது போன்ற ஒரு உணர்வு. வெளி உலகத்தின் அனுபவமும், தனித்து நிற்கும் தைரியமும் கிடைக்க வேண்டுமெனில் கல்லூரி படிப்பை ஹோஸ்டலில் தங்கி படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது. அம்மாவும் அப்பாவும் அதற்கு சரி என்றது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். 8 வருட கால விடுதி வாழ்க்கை நிறைய அனுபவங்களையும், தன்னம்பிக்கையையும் கொடுத்தது.
ஆனால், அன்று அந்த தன்னம்பிக்கை எங்கே போய் ஒளிந்து கொண்டது என்றே தெரியவில்லை. திருமணமாகி 9 மாதங்கள் ஆகி விட்டிருந்த போதும், ஒரு ரோடீன் செட் செய்து, அதற்கு நாங்கள் அட்ஜஸ்ட் ஆவதற்கு ஆறு ஏழு மாதங்கள் ஆகி விட்டன. கணவருக்கு நைட் ஷிப்ட் அல்லது விடியற்காலை ஷிப்ட் என மாறி கொண்டே இருக்கும் ஆதலால் மாதத்தில் பாதி நாட்கள் நாங்கள் பார்த்துக்கொள்வதே கடினம். தொலைபேசியிலும் ஆபீஸ் ஈமெயிலிலும் தான் எங்களது பேச்சு வார்த்தை நடக்கும். அப்படி இருக்கும் போது தான் அந்த ஆன்சைட் ப்ராஜெக்ட் கிடைத்தது.
மனதிற்குள், இன்னும் நூறு நாட்கள் நேரில் பார்க்க முடியாது, அவ்வப்போது phone'ம், வீடியோ சாட்டும் தான் என்று ஓடிக்கொண்டே இருந்தது. பத்து வருடத்திற்கு முன் இருந்த டயல் அப் connection'ல் இன்டர்நெட் கனெக்ட் ஆகி வீடியோ சாட் செய்வதற்குள் விடிந்து விடும். கண்ணில் முட்டிக்கொண்டு வந்த கண்ணீர் எங்கே வெளியே வந்து விடுமோ என்று மிகவும் கவனமாக இருந்தேன். அப்படியும் கட்டுக்கடங்காமல் பொங்கி வந்த ஒரு துளி சிறுதுளி கண்ணீரை அந்த பக்கம் இந்த பக்கம் வேடிக்கை பார்ப்பது போல திரும்பி நாசூக்காக கைக்குட்டையில் துடைத்து கொண்டேன். எங்கே நான் அழுது அது காதல் கணவருக்கு சங்கடமாகி விடுமோ என்று அஞ்சி வலிய ஒரு புன்னகையை வரவழைத்து கொண்டு எல்லோரிடமும் பேசிக்கொண்டு இருந்தேன்.
சிறிது நேரத்திற்கெல்லாம் என்னுடைய flight'ற்கான அழைப்பு ஒலிப்பெட்டியில் ஒலித்தது. அனைவரிடமும் சொல்லிக்கொண்டு, கணவருடன் பார்வை பரிமாற்றங்கள் நடந்தேறியபின் செக் இன் கவுண்டருக்கு நோக்கி ட்ராலியை தள்ளி கொண்டு எந்த விதமான உற்சாகமும் இன்றி நடக்கலானேன்.
என்னுடன் சேர்ந்து மூன்று பேர் பயணித்ததாலும், அமெரிக்காவில் தங்குவதற்கு நண்பர்களுடன் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்ததால் பெரிதாக கவலை படுவதற்கு ஒன்றுமில்லை. இருப்பினும் மனம் வீட்டையும் அன்பு கணவரையும் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. விமானத்தில் காலடி எடுத்து வைக்கும் அந்த தருணத்திற்காக அவ்வளவு வருடம் காத்திருந்த போதும் அன்று அந்த நொடி இனிக்கவில்லை. டேக் ஆப் ஆகும் அந்த தருணம் எந்த வித சலனத்தையும் உண்டு பண்ணவில்லை.
ட்ரான்சிட்'ல் இருக்கும் போதும் நண்பர்களுடன் பளிங்கு போன்ற தோஹா விமான நிலையம் முழுவதும் சுற்றி திரிந்த போதும் எதிலும் லயிக்காமல் மனம் 22 மணி நேரத்திற்கு பிறகு கேட்கபோகிற 'ஹலோ குட்டிமா' என்ற அந்த ஒரு வார்த்தைக்காக பரிதவித்துக்கொண்டிருந்தது.
(எப்பவும் போல 3 மாதம் ப்ராஜெக்ட் என்பது 6 மாதமாக ஆனது என்பதை சொல்லவா வேண்டும்? துவக்கத்தில் இப்படி இருந்தாலும் போக போக அங்கே நண்பர்களுடன் கொட்டமடித்தது தனிக்கதை :)