சில நாட்களுக்கு முன் முகநூலின் அன்னையர்களுக்கான ஒரு குரூப்பில் கண்ட ஒரு பதிவு, குழந்தை வளர்ப்பில் இன்றைய பெற்றோர்களாகிய நாம் நம் கடமையை சரி வர செய்வதிலேயோ என யோசிக்க வைத்தது. "இன்றைய அம்மாக்களின் நிலைமை - நம் பெற்றோர் சொல்வதை மறு வார்த்தை சொல்லாமல் கேட்டுக்கொண்டோம், நம் குழந்தைகள் சொல்வதையும் அதே போல கேட்க வேண்டியிருக்கிறது" என்பது தான் அந்த பதிவு. நிறைய பேர் அதை ஆமோதித்து கருத்து தெரிவித்து இருந்தனர். டீவி பார்ப்பதிலிருந்து, மொபைலில் கேம்ஸ் விளையாடுவது, வீடியோஸ் பார்ப்பது, கடைக்கு போகும் போது சாக்லேட்ஸ், பிஸ்கட்ஸ், சிப்ஸ் வாங்க அடம் பிடிப்பது என ஒவ்வொருவரும் தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து கொண்டிருந்தனர்.
ஆனால் யோசித்து பார்த்தால், நாம் தான் நம் குழந்தைகளின் மீது பாசத்தை பொழிகிறேன் என்ற பெயரில் மேற்கூறிய அனைத்தையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தியிருப்போம். அல்லது "சோஷியல் பிரஷர்", அதாவது மற்ற பெற்றோர்கள் எல்லாம் அவர்கள் பிள்ளைகளுக்கு ஐபாட் வாங்கி தருகிறார்கள், வித விதமான சாக்லேட்ஸ் வாங்கி தருகிறார்கள் நம்ப அதை விட இன்னும் பெட்டெரா கொடுக்க வேண்டும் என்கிற உந்துதலினால் செய்திருப்போம். அப்படி என்றால் இதெல்லாம் என் பிள்ளைக்கு கொடுக்கவே கூடாதா என நினைக்க தோன்றும். "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு", அப்படி இருக்க துளி அளவும் நன்மை இல்லாத இவற்றை அளவோடு பயன்படுத்த கற்று கொடுக்க வேண்டுமே.. எப்படி?
எதையுமே நாம் அவர்களிடம் இருந்து முழுமையாக ஒதுக்கி வைக்க கூடாது, அப்படி வைக்கவும் முடியாது. ஒரு விஷயம் பற்றிய நல்லது கெட்டதை அவர்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துரைக்க வேண்டும். அந்த புரிதல் வந்து விட்டாலே ஒரு வயதிற்கு பின் ஒரு குழந்தை தானே யோசித்து ஒரு விஷயம் சரியா, அதை செய்யலாமா என திடமான முடிவெடுக்க ஆரம்பித்து விடும். அந்த நிலைக்கு அவர்களை கொண்டு போவது பெற்றோராகிய நமது கடமை அல்லவா?
உதாரணத்திற்கு ஒரு குழந்தைக்கு ஒரு வயது ஆகும் வரை கண்டிப்பாக டீவியோ, மொபைல் போனோ கொடுக்க கூடாது என்பது தான் மருத்துவர்களே கூறும் அறிவுரை. அதற்கு பிறகும் கூட ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கு மேல் கூடாது, அதுவும் தொடர்ச்சியாக 30-40 நிமிடங்கள் மட்டுமே பார்க்கலாம் போன்ற பரிந்துரைகளை நாம் கண்டிப்பாக பின்பற்றலாம். பள்ளி நாட்களில் மாலையில் மட்டுமே டீவி பார்க்கலாம், விடுமுறை நாட்களில் காலையில் சிறிது நேரம் மாலையில் சிறிது நேரம் என ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவர்களுக்கு ஒதுக்கலாம்.
இதை படிக்கும் பெரும்பாலான பெற்றோர் மனதில் ஒரு எண்ணம் தோன்றலாம், அவர்கள் எங்கே நம்மிடம் பர்மிஷன் கேட்கிறார்கள், டீவியை நினைத்த நேரத்தில் அவர்களே போட்டு கொள்கிறார்கள் என்று. வீட்டில் உள்ள பெரியவர்களிடமோ அல்லது பெற்றோர்களிடமோ அனுமதி பெற்று தான் டீவி, மொபைல் போன், கேம்ஸ் போன்றவற்றை உபயோகப்படுத்த வேண்டும் என்று பழக்க வேண்டும்.
அப்படி அவர்கள் பயன் படுத்தும் போதும் அவர்கள் பார்க்கும் கார்டூன்/வீடியோ அவர்கள் வயதிற்கு ஏற்புடையது தானா என்பதை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். அதே போல கேம்ஸ் விளையாடும் குழந்தைகள் எனில் பிளே ஸ்டோரிலிருந்து அவர்களே டவுன்லோட் செய்ய விடுவதை தவிர்ப்பது நல்லது.
அதே போல இப்போதெல்லாம் வித விதமாக பாக்கெட்களில் ஸ்னாக்ஸ் வர ஆரம்பித்து விட்டன. கடைக்கு போகும் போதெல்லாம் குழந்தை ஒன்று மாற்றி ஒன்று கேட்டு கொண்டே இருக்கும். அவை எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பது நமக்கு தெரிந்தாலும் குழந்தை கேட்கின்றதே என்பதற்காக வாங்கி கொடுத்து விடுவோம். நாம் கொடுக்க கொடுக்க அவர்கள் கேட்டு கொண்டே தான் இருப்பார்கள், பிறகு எப்படி அவர்களை குறை சொல்லலாம்? அடிக்கடி வாங்கி கொடுக்காமல் தின்பண்டங்களுக்கும் கூட சிறிய விதிமுறைகளை வைக்கலாம். சாக்லேட்ஸ் என்றால் வாரத்திற்கு ஒன்று தான், கிரீம் பிஸ்கட்ஸ் மாதம் ஒரு முறை தான் என்று அவரவர்க்கு தகுந்தாற் போல வரைமுறைகள் சொல்லி குடுக்கலாம்.
குழந்தை வளர்ப்பில் இவ்வளவு ரூல்ஸ் தேவையா என தோணலாம். "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" இல்லையா? சிறு வயதில் நாம் என்ன சொல்லி குடுத்தாலும் அவர்கள் எளிமையாக பழகி கொள்வார்கள். மேற்கூறிய அனைத்துமே உடலுக்கும், கண்களுக்கும், எண்ணங்களுக்கும் எவ்வாறு தீங்கு விளைவிக்கும் என்பதை மீண்டும் மீண்டும் அவர்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துரைக்க வேண்டும். இவற்றை எல்லாம் ஒரே நாளில் பழக்க படுத்தி விட முடியாது, கொஞ்சம் கொஞ்சமாக தான் நடைமுறை படுத்த முடியும். பிற குழந்தைகளை பார்த்து நம் பிள்ளைகள் அடம் பிடித்தால் அவர்களை அந்த இடத்தில் இருந்து டைவர்ட் செய்ய முயற்சிக்கலாம். அவர்களுடன் விளையாடி அவர்களை சிரிக்க வைத்து அப்படியே நைசாக அந்த சூழலை மாற்றலாம். "நம் வீட்டில் நாம் இப்படி தான் செய்வோம், அது நம் நன்மைக்காக தான்" என அன்பாக எடுத்துரைக்கலாம். நாம் சொல்லி கொடுக்காமல் அவர்களுக்கு எப்படி தெரியும்?
நான் எப்பொழுதும் சொல்வது போல எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு ஒரு விதமாக சொன்னால் தான் புரியும். எனவே பெற்றோர் ஆகிய நாம் தான், நம் பிள்ளைகளுக்கு எது சரி, எது தவறு, அதை எப்படி சொல்லி புரிய வைக்க வேண்டும் என்பதை அறிந்து அவர்களை வளர்க்க வேண்டும் இல்லையா?
No comments:
Post a Comment