Thursday, October 29, 2020

பழைய வீடு

 அவசியம் இல்லாவிடினும்

அடிக்கடி செல்கிறேன்

அந்த தெருவிற்கு,

அரிதாரம் பூசி

மாறுவேடம் பூண்டு

உயர்ந்தோங்கி நிற்கும்

எங்கள் பழைய வீட்டை பார்க்க

அது இன்று சொந்தமில்லை எனினும்!!

Saturday, October 17, 2020

குழந்தையின் முத்தம்

 எங்கும் சுத்தம்,

எதிலும் சுத்தம்

என இருக்கும் நான்

உன் எச்சில் முத்தத்திற்கு 

காத்திருக்கிறேன்!!

Friday, October 16, 2020

அமிர்தம்

 உணவு 

வெறும் அன்னமாக இருப்பதற்கும் 

அமிர்தமாக இனிப்பதற்கும்

ஒருபிடி அன்பே ரகசிய மூலப்பொருள்!!

நிலா பாட்டி

வயிறு ஒட்டிப்போய், 

கூன் விழுந்த முதுகோடு வந்து 

"பசிக்குதும்மா" என்ற கிழவியை விரட்டிவிட்டு 

உனக்கொரு வாய், 

நிலாவில் இருக்கும் பாட்டிக்கு ஒரு வாய்

என்று குழந்தைக்கு 

பால் சோறு ஊட்டிவிட்டு கொண்டிருந்தாள் அவள். 

உணவா? மருந்தா?

 இருபதில், உணவே விருந்தாய் 

நாற்பதில், உணவே மருந்தாய்

கசக்கும் பாகற்காயும் இனிக்கிறதாம்,

இனிக்க இனிக்க சக்கரை 

உடலில் கூடிப்போனதால்!

விரதம்

 பாத்திரத்தின் ஓரத்தில் இருந்த துளி உணவினை  

பசியால் வாடும் தன் பிள்ளை 

கால்வயிரேனும் சாப்பிட எண்ணி 

சொன்னாள், 

"நான் இன்று விரதம்" என்று!

#தாய்

ஆரோக்கியம்!!

 உணவு உடலுக்கு தெம்பூட்ட; 

அன்பு உள்ளத்திற்கு தெம்பூட்ட;

ஆரோக்கியம் என்பது உடலுக்கு மட்டுமல்ல

உள்ளத்திற்கும் தான்!

Thursday, October 15, 2020

கனவுக் காதலா!!

 ஒவ்வொரு நாளும், உன்னை என் நெஞ்சம் முழுவதும் நிரப்புவதற்காகவே இரவு உறங்குகிறேன்

கனவில் மட்டுமே நீ வருவதினால்!

கனவில் மட்டும் காட்சி தரும் கண்ணாளனே,

நேரிலே நீ வரும் நாளுக்காக காத்திருக்கிறேன்!!

Tuesday, October 13, 2020

முகமூடி பெண்ணே!!

 புதியதாய் அரைத்த ஆரஞ்சுதோல் தூளுடன், சிறிது முல்தானிமிட்டி, தயிர் மற்றும் ரோஸ்வாட்டர் சேர்த்து குழைத்து முகத்தில் பூசியிருந்தாள் அனு.  அப்படியே காலார மொட்டைமாடியில் நடக்கலாம் என்று கைப்பேசியில் இயற்போனை சொருகி அதை காதுக்கு கொடுத்தவாறே மாடிப்படியேறினாள். கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என எஸ்பிபி இனிக்க இனிக்க பாட, விரல்கள் தாளம் போட்டுக்கொண்டே நடக்கலானாள். எதிரிலிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் அவளின் தோழி தனது இரண்டுவயது குழந்தையோடு இவளுக்கு கையசைத்தபடி சாப்பாடு ஊட்டிவிட்டுக்கொண்டிருந்தாள். அனுவும்  அவர்களுக்கு ஹாய் சொல்லிக்கொண்டும், குழந்தைக்கு பறக்கும் முத்தம் கொடுத்துக்கொண்டும் இருந்தாள். கால்மணி நேரம் ஆனதால் முகத்தை கழுவலாம் என்று வீட்டிற்குள் சென்றவளை கணவன் சந்துரு  "பேஸ்பேக்(Facepack) போட்டுட்டு மாடிக்கு போயிருந்தியா?" என்று கேட்டபடி, "உன் தோழி உன்னைக்காட்டி தான் பயமுறுத்தி குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு கொண்டிருந்தாளாம், இன்னும் ஒரு ஐந்து நிமிஷம் வந்து நின்னா குழந்தை முழுதும் சாப்பிட்டு முடிச்சிடுவாளாம். உன்கிட்ட சொல்ல சொன்னா" என்றான்.

எதை விதைத்தோம்?

 ஊஞ்சலில் ஒய்யாரமாக சாய்ந்துகொண்டு, கையில் இருந்த ஐபாடில்(iPad) யூடியுபில்(YouTube) GiggleBellies'இன் வீல்ஸ் ஆன் தி பஸ் கோ ரவுண்டு அண்ட் ரவுண்டு ரைம்ஸ் பார்த்துக்கொண்டே கையசைத்து அதனோடு சேர்ந்து பாடிக்கொண்டிருந்த  மூன்று வயது பேத்தியிடம் "குட்டி பாப்பால்லாம் இப்படி உக்காந்து வீடியோ பாக்க கூடாதுமா, நல்ல சூரிய வெளிச்சத்துல போயி விளையாடனும். சமர்த்து குட்டில, போயி வெயில்ல விளையாடுங்க பாப்போம்" என்றாள் கோமளா பாட்டி. "சரி பாட்டி" என்று கொஞ்சும் மழலையில் சொல்லிவிட்டு வேகமாக ஓடிப்போய் அம்மாவின் கைபேசியில் அமேசான் செயலியை (Amazon  App) திறந்து, பாட்டியிடம் கொடுத்து "நீங்க சொன்ன வெய்யில் என்கிட்டே இல்ல, அமேசான்ல   ஆர்டர் பண்ணுங்க பாட்டி, ரெண்டே நாள்ல வந்துடும்" என்றது வெள்ளந்தியாய்.

Monday, October 12, 2020

பன்முகத்தன்மை!!

 வீட்டையே பள்ளிக்கூடமாக,  

அலுவலகமாக, 

விளையாட்டுத்திடலாக, 

உணவகமாக, 

உடற்பயிற்சிகூடமாக,  

திரையரங்கமாக மாற்றிய பெருமை நமக்கன்றோ!!!


#கொரோனாகாலக்கதை 

Learning Beyond Textbooks - Life Skills - Child Growth

#Learning_Beyond_Textbooks #Life_Skills A home is the first environment where children can playfully learn a plenty. Traditional textbook le...