Friday, March 3, 2023

விடியல்!

 மேகலா பொறுமை இழந்தவளாக மணிக்கட்டில் இருக்கும் கடிகாரத்தை பார்த்தாள். இரவு பத்து மணியை கடந்திருந்தது. சென்னையில் திருவான்மியூரின் பிரதானமான சாலையின் ஒரு புறத்தில் இருந்த அந்த பேருந்து நிறுத்தத்தில் மேகலா நின்று கொண்டிருந்தாள். ஒல்லியான தேகம்,  கலைந்த கேசம், துறு துறு விழிகள் என இருந்தாலும் காலையிலிருந்து வேலை செய்திருந்த களைப்பு முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. அதைவிட அதிகமாக பதட்டமும் சோகமும் ஒருசேர கவ்வியிருந்தது. 

அங்கிருந்த ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் தான் அவள் வேலை செய்தாள். சொந்த ஊரான நாகப்பட்டினத்தில் கல்லூரி படிப்பை முடித்திருந்த சமயத்தில் தான் அந்த செய்தி இடியாக வந்து இறங்கியது. மாதவன் வீட்டை விட்டு வெளியேறுவதாக லெட்டர் எழுதி வைத்துவிட்டு எங்கோ சென்றுவிட்டான். மாதவன் மேகலாவை விட மூன்று வயது இளையவன். படிப்பு சரிவர வராமல் பிளஸ் டூவில் பெயில் ஆகிவிட்டதால் அப்பா அவனை அன்று வெளுத்து வாங்கி விட்டார். பெண் பிள்ளை என்று மேகலாவை கண்டித்த அளவுக்கு அவனை கண்டிக்கவில்லை. கேட்டபோதெல்லாம் செலவுக்கு பணம், தனி செல்போன் என செல்லம் குடுத்து அவனது போக்கை அந்த வீட்டில் யாரும் கவனிக்கவில்லை.

மேகலாவின் அப்பா சபாபதி ஒரு சிறிய துணி கடையில் வேலை செய்தார். அப்பாவிற்கு வரும் சொற்ப வருமானம் வீட்டு செலவுக்கு பத்தாததால்,  அம்மா அக்கம் பக்கத்தாருக்கு துணி தைத்துக்கொடுத்து அவளால் முடிந்த அளவுக்கு அதை ஈடுகட்டினாள். அரசு பள்ளியில் படித்தாலும் பன்னிரண்டாவதில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்ததால் "நல்ல மார்க் வாங்கும் அவளது ஆசையை ஏன் வீணடிப்பானேன். அதுதான் அவளுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கும் என்கிறாளே" என்று அம்மா பரிந்து பேசியதால் அப்பா அவளை அதே ஊரில் இருந்த கல்லூரியில் சேர்த்து விட்டார். மற்றபடி தனக்கு வரும் சிறு வருமானத்தில் பெண் பிள்ளைக்கு செலவு செய்ய அவளது அப்பாவிற்கு பெரிதாக விருப்பம் இல்லை. 

வீட்டின் சூழ்நிலை மற்றும் கல்வியின் அவசியம் உணர்ந்து மேகலா நன்கு படித்தாள்.   ஆனால் மாதவனுக்கோ கொஞ்சம் கொஞ்சமாக படிப்பில் இருந்த நாட்டம் குறைந்து, நண்பர்கள், ஊர் சுற்றல் என வேறு விதமாக அவனது உலகம் விரிய ஆரம்பித்தது. பிளஸ் டூவில் அவன் கோட்டை விட்ட போது தான் அவனது அப்பாவிற்கு நிலைமை புரிந்தது. ஏதாவது ஒரு கல்லூரியில் சேர்ந்து படித்து சம்பாதித்து தலையெடுத்து விடுவான் என்ற அவரது நம்பிக்கை அன்று ஆட்டம் கண்டுவிட்டது. அந்த கோபத்தை அவர் காட்ட, மாதவன் அதற்கு மேல் முறுக்கி கொண்டு, ஒரு வாரம் யாரிடமும் பேசாமல், வீட்டில் சாப்பிடாமல் முரண்டு பிடித்தான். அவன் அம்மா தான், கெஞ்சி கொஞ்சி அவனை சரிக்கட்டினாள். "மறுபடி பரீட்ச்சை எழுதி ஏதாவது கல்லூரியில் சேர்ந்துடுடா மாதவா, அந்த மனுஷன் உன்னை தான் நம்பிக்கிட்டு இருக்கார்" என்று மட்டும் அடிக்கடி சொல்லுவாள். 

எதுவும் அவன் காதில் விழுந்ததாக தெரியவில்லை. ஏதோ பெயருக்கு பரீட்ச்சை எழுதி வைத்தான். மேகலா கல்லூரி படிப்பை முடித்து, ஒரு நாள் பக்கத்து வீட்டு சகுந்தலா டீச்சருக்கு விடைத்தாள் திருத்த உதவிக்கொண்டிருந்தாள். சிறு வயதில் இருந்தே மேகலாவுக்கு விடைத்தாள் திருத்த பிடிக்கும். டீச்சர் ஒவ்வொரு கேள்விக்கும் போட்டிருக்கும் மதிப்பெண்ணை கூட்டி, அந்த பக்கத்தில் கீழே, பென்சிலால் டோட்டல் போடுவாள். சில நேரங்களில் கணக்கு தாள்களில் இருக்கும் சிறு சிறு கணக்குகளை சரி பார்த்து சிகப்பு பால்பாய்ண்ட் பேனாவால் திருத்துவாள். அன்றும் அப்படி செய்து கொண்டிருக்கும் போது தான் அம்மாவின் அய்யயோ என்ற அலறல் கேட்டது. மேகலாவும் சகுந்தலா டீச்சரும் பதறிப்போய் பார்த்த போது, அம்மா கையில் ஒரு லெட்டரை வைத்துக்கொண்டு இடிந்து போய் உட்கார்ந்திருந்தாள்.

மாதவன் தன் எதிர்காலத்தை தேடி போவதாக இரத்தின சுருக்கமாக எழுதி வைத்திருந்த அந்த காகிதம் அவனது பெற்றோரை நொடித்துவிட்டது. அவர்களுக்கு தெரிந்த வரையில் விசாரித்ததில், எதுவும் தகவல் கிடைக்கவில்லை. பல நாட்கள் அழுது ஓய்ந்து, யாரும் ஒருவரிடம் ஒருவர் ஏதும் பேசிக்கொள்ளவில்லை.  சில வாரங்கள் சபாபதி வேலைக்கும் போகவில்லை. வீட்டின் சூழல் அவரை வேலைக்கு உந்தி தள்ள, நடைப்பிணமாக கடைக்கு போய் வந்தார். மேகலா தனக்கு ஏதாவது வேலை வாங்கி தரும்படி சகுந்தலா டீச்சரிடம் கேட்க, அவரது உறவினர் மூலமாக தான், சென்னை வேலை பற்றி விவரம் தெரிந்தது.

"பிஎஸ்சி தான் படிச்சிருக்கதால சம்பளம் ரொம்ப அதிகமா இருக்காது. மாதம் பதினைந்தாயிரம் தான் கிடைக்கும். ஆனா வேலை பார்த்துகிட்டே மேல படிச்சா அதிக சம்பளம் வாங்கலாம்" என அவர் சொன்ன போது மேகலாவுக்கு தலை சுற்றியது. பதினைந்தாயிரம் என்பது அவளது குடும்பத்திற்ற்கு பெரிய விஷயம். அதுவே கம்மி, இன்னும் படித்தால் அதைவிட கூட சம்பளம் என்றால், இந்த வாய்ப்பை விடக்கூடாது, எப்படியாவது அப்பா அம்மாவிடம் பேசி சம்மதம் வாங்கிவிட வேண்டும் என முடிவெடுத்தாள். 

பயந்து பயந்து தான் அவள் அப்பாவிடம் பேச்சை ஆரம்பித்தாள். அவள் பயந்ததற்கு மாறாக "உனக்கு என்ன தோணுதோ செய்யும்மா. ஆனா நீயும் எங்களை கைவிட்றாத" என்று அவர் சொல்லும்போது குலுங்கி அழுதே விட்டார். அந்த வீட்டின் குடும்ப பாரம், அப்பா அம்மாவின் மனச்சுமை என அத்தனையையும் சுமக்க அவள் தயாராகினாள். சகுந்தலா டீச்சரின் உறவினர் அவளுக்கு அந்த வேலையை வாங்கி கொடுத்து, அவள் தங்குவதற்கு பக்கத்திலேயே ஒரு விடுதியையும் பார்த்துக்கொடுத்தார். முதலில் சென்னையும் அங்கிருந்த கலாச்சாரமும் மிகவும் அந்நியமாக இருந்தது. அவளது வைராக்கியம் அவளுக்கு தைரியத்தை கொடுத்தது. எளிதில் எதையும் கற்றுக்கொள்ளக்கூடிய திறமை அவளுக்கு அலுவலகத்தில் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. 

சில மாதங்களிலேயே மேற்படிப்புக்கு விண்ணப்பித்து தொலைநிலைக்கல்வி மூலம் படிக்கலானாள். அப்பா அம்மாவை தன்னுடன் வந்து தங்கிவிடும்படி கேட்டதற்கு இருவருமே மறுத்துவிட்டனர். "என்றாவது ஒருநாள் மாதவன் வருவான்" என அம்மாவும், "என் பொழப்பு இந்த துணிக்கடையில் தான்" என அப்பாவும் சொல்லிவிட்டார்கள். பழகிய ஊர், அக்கம் பக்கத்து வீட்டார் என அங்கிருக்கும் மனப்பாங்கு இங்கு சென்னையில் அவர்களுக்கு கிடைக்காது என்று மேகலாவும் அவர்களை வற்புறுத்தவில்லை.

வேலைக்கு சேர்ந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகியிருந்தன. ஒரு வாரநாளில், வேலை அதிகமாக இருந்ததால், ஒன்பது மணி ஆகியும்  அலுவலகத்தில் இருந்தபோது தான் அவளது கைப்பேசி அழைத்தது. பெயர் வராமல் நம்பர் மட்டும் வரவே யாராக இருக்கும் என யோசித்தபடி எடுத்து பேசினாள். "அக்கா நா மாதவன் பேசறேன்" என்ற சொற்களை கேட்டபிறகு சில நிமிடங்கள் என்ன நடந்தது என்று அவளுக்கு புரியவில்லை. "அக்கா.... அக்கா... நா பேசறது கேக்குதா?" என மாதவன் திரும்ப திரும்ப கேட்க, சுயநினைவுக்கு வந்தவளாக "மாதவா, எங்கடா இருக்க? எங்களை எல்லாம் விட்டுட்டு போக உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு? என்றாள் ஆதங்கத்துடன். "அக்கா, சாரிக்கா. நா எல்லாமே விபரமா சொல்றேன். நீ நாகைக்கு வரியா உடனே? நீ சென்னைல இருக்கேன்னு  தெரியும். நா நாளைக்கு காலைல நாகைல இருப்பேன். கொஞ்சம் கெளம்பி வாயேன் ப்ளீஸ். மீதி எல்லாமே நா நேர்ல சொல்றேன். இப்ப போன்ல கேக்காத. இது தான் என் நம்பர், சேவ் பண்ணிக்கோ" என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான்.  

மேகலாவுக்கு எதையும் யோசிக்க நேரமில்லை. செய்து கொண்டிருந்த வேலையை சட்டென முடித்துவிட்டு, விடுதி வார்டென்னுக்கும், அறை தோழிக்கும் மட்டும் அவசரமாக ஊருக்கு செல்வதாக தகவல் சொல்லிவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறினாள். அங்கிருந்த ஆட்டோ ஒன்றை பிடித்து பேருந்து நிறுத்தம்  போய் இறங்கினாள். அவளது நேரம், ரொம்ப நேரமாக பஸ் எதுவும் வரவில்லை. நேரம் ஆக ஆக வாகனங்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியது. கடைக்காரர்கள் கடை ஷட்டரை மூடும் சத்தம் இங்கும் அங்குமாக கேட்டுக்கொண்டிருந்தது. ரோட்டோரமாக இருந்த இட்லி கடைகள், மாவு காலியாகி பாத்திரம் கழுவி எடுத்து வைக்கப்பட்டன. அங்கிருந்த தூணில் இருந்த பல்லி ஒன்று சர சரவென கீழிறங்கி வந்து அங்கிருந்த ஒரு சிறிய கரப்பான் பூச்சியை லபக்கியது. பொதுவாக கரப்பான் பூச்சியை பார்த்தாலே அரை கிலோமீட்டருக்கு ஓடுவாள். இன்று எதையும் சட்டை செய்யாமல் நின்றுகொண்டிருந்தாள். மழைக்காலம் என்பதால் காற்றில் ஒரு சிலுசிலுப்பு இருந்தது. எறும்புகள் சாரை சாரையாக, கிடைத்த உணவையெல்லாம் தங்கள் குழிக்குள் இழுத்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தன. இவ்ளோண்டு இருக்கும் எறும்புகளே தங்கள் சக்திக்கு மீறின பளுவை தூக்கும் போது, மனுஷங்க நமக்கு எவ்ளோ சக்தி இருக்கும் என சின்ன வயசில் அவளது அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது.

அதே சமயம் நாகை என போர்டு போட்ட பஸ்ஸும் வர, நிம்மதி பெரு மூச்சு விட்டபடி பஸ்ஸில் ஏறினாள். வாரநாள்  ஆகையால் கூட்டம் இருக்கவில்லை. ஜன்னலோரமாக இருந்த ஒரு இருக்கையில் உட்காரவும், கண்டக்டர் "எங்கம்மா போகணும்" என்றபடி வந்து நின்றார். வாங்கிய டிக்கட்டை பத்திரப்படுத்திவிட்டு பையில் இருந்த பாட்டிலில் இருந்து தண்ணீர் குடித்தாள். அவசரமாக கிளம்பியதில் பாட்டிலில் தண்ணீர் நிரப்பவில்லை. சாயங்காலம் குடித்த ஒரு காபி மட்டும் எப்படி போதும் என்பது போல வயிறு பசியால் பொரும ஆரம்பித்தது.  அதை அலட்சியப்படுத்தியபடி, கண்கள் ஜன்னலுக்கு வெளியில் இருந்த காட்சிகளில் பதிந்திருந்தன.  பூரண சந்திரனாக வளர்ந்திருந்த பிறையை வேறொரு நாளாக இருந்திருந்தால் அப்படி ரசித்திருப்பாள். மனம் முழுக்க ரணமாய் வலித்தது. நான்கு வருடங்கள் ஆயிற்றே. அப்படி என்ன, ஒரு தகவல் கூட சொல்ல முடியாமல். வீட்டில் இருப்பவர்கள் எவ்வளவு வேதனைப்படுவார்கள் என்று கூடவா அவனுக்கு நினைக்க தோன்றவில்லை?" என ஆயிரம் கோபக்கேள்விகள். அதே நேரம் அப்பாவும் அம்மாவும் மாதவனை பார்த்தால் என்ன சொல்வார்கள், எப்படி எதிர்கொள்வார்கள் என ஒருபக்கம் யோசித்துக்கொண்டிருக்கும் போதே பேருந்து வேகம் குறைந்து சாலையோரம் இருந்த ஒரு சிறிய ஓட்டலில் நின்றது. இறங்கி தண்ணீர் பாட்டிலும், ஒரு பிஸ்கட் பாக்கெட் மட்டும் வாங்கிக்கொண்டாள். 

பேருந்து கிளம்பியதும் நாலு பிஸ்கட்டை மட்டும் கொறித்தாள். மனதிற்குள் நடந்த பிரளயத்தை மீறி எப்போது தூங்கினாளோ, திடீரென விழிப்பு வர பேருந்து காரைக்காலை நெருங்கியிருந்தது. மனம் படபடக்க துவங்கியது. மாதவன் வீட்டிற்கு நேராக வருவானா, ஒருவேளை இந்நேரம் வீட்டிற்கு போயிருப்பானோ என யோசித்துக்கொண்டிருக்கும்போதே அவளது கைப்பேசியில் மெஸ்சேஜ் வர, எடுத்து பார்த்தாள். "சகுந்தலா டீச்சர் வீட்டுக்கு வந்துரு அக்கா" என மாதவன் அனுப்பியிருந்தான். முகத்தில் அறைந்த காற்றில் பரந்த கூந்தலை அவ்வப்போது அடக்கியபடி, நேரம் சீக்கிரம் ஓடி விடாதா என பதைபதைப்புடன் காத்திருந்தாள். பஸ் நாகை பேருந்து நிலையத்தில் நுழைந்தது தான் தாமதம். வேகமாக சீட்டில் இருந்து எழுந்து வாசல் அருகே சென்று நின்று கொண்டாள். வண்டி நிற்கும் முன் வேகமாக அதே சமயம் ஜாக்கிரதையாக கீழே இறங்கி, (குதித்து என்றே சொல்லலாம்), அங்கிருந்த ஒரு ஆட்டோவை பிடித்து சகுந்தலா டீச்சரின் வீட்டு விலாசத்தை சொல்லி போக சொன்னாள். 

"ஆட்டோ சத்தம் கேட்டு அப்பாவோ அம்மா கதவை திறந்து வந்து விட்டால்? அவர்களுக்கு என்ன பதில் சொல்வது? பேசாமல் கொஞ்சம் முன்னாடியே இறங்கி நடந்து போய்டலாம்." என நினைத்து முன்னாடியே இறங்கிக்கொண்டாள். சகுந்தலா டீச்சரின் வீட்டு கதவை தட்டும் முன்னரே கதவு திறந்துக்கொள்ள, கதவருகில் நின்றது, மாதவன். மேகலா திகைத்து விட்டாள். ஆளே கொஞ்சம் மாறிப்போயிருந்தான். ஜிப்பா போட்டு, ஹேர் ஸ்டைல் கூட மாற்றி இருந்தான். முகத்தில் இருந்த ஊதாரித்தனம், இருந்த இடத்திற்கான அறிகுறியே இல்லை. மேகலா வாயடைத்து பார்த்துக்கொண்டிருக்க "எப்படிக்கா இருக்க?" என்றபடி மாதவன் வந்து அவளை கட்டிக்கொண்டான். சிறு வயது நியாபகம் வர மேகலா அவனை அப்படியே அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள். அடுத்த வினாடி அவனை "சதிகாரா சதிகாரா, எங்கேடா போய் தொலைஞ்ச? எங்களை விட்டுட்டு போற அளவுக்கு வளந்துட்டியா நீ?" என வசை பாடியபடி அவனை கன்னத்திலும் முதுகிலும் அடித்தாள். அவன் அசையாமல் அப்படியே நிற்க, சிறிது வினாடியில் சுதாரித்து கொண்டு "எப்படிடா இருக்க? எங்கே தான் போன இவ்ளோ நாளா?" என்றாள் நா தழுதழுக்க. 

"பிளஸ் டூ பெயில் ஆனப்ப கூட நா அத பெருசா எடுத்துக்கல, ஆனா என்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் காலேஜ் போனப்புறம் தான் எனக்கு ஏதோ புரிய ஆரம்பிச்சது. நானும் படிக்கணும்னு பார்த்தேன், ஒண்ணுமே புரியல. மண்டைல ஏறல. நீ நல்லா படிச்ச, அப்பா கஷ்டப்பட்டு சம்பாதிக்கறது புரிஞ்சது. என்னால எப்படி இந்த குடும்பத்துக்கு உதவ முடியும்னு யோசிச்சு பாத்தேன். சின்னதா ஏதாவது வேலை செய்யலாம்னா, டிகிரி முடிக்காம ஏதும் வேல கெடைக்காதுன்னு சொல்லிட்டாங்க. அப்ப தான் பேப்பர்ல ஒரு விளம்பரம் பாத்தேன். பெங்களூர்ல, ஒரு பார்ல பாட்டு பாடறதுக்குன்னு. எனக்கு தான் நல்லா பாட வருமே, ஆனா பார்ல போயி பாடி சம்பாதிக்கறேன்னு வீட்ல சொல்லவா முடியும். அதான் சொல்லாம கிளம்பிட்டேன். எப்படியாவது முன்னேறணும்னு நெனச்சேன், ஆனா படிப்போட அருமையை கொஞ்சம் கொஞ்சமா அப்புறமா தான் உணர ஆரம்பிச்சேன். அங்க ஒருத்தரும் என்ன மதிக்க மாட்டாங்க. கிட்டத்தட்ட மூன்று வருஷம் நரகமா போச்சு. வீட்ல அப்பா அம்மா என்ன எப்படி தாங்கினாங்கன்னு நெனச்சு நெனச்சு நெறையா நாள் ராத்திரில அழுதிருக்கேன். சம்பாதிச்சிட்டு வந்து தான் உங்க எல்லார் முகத்திலயும் முழிக்கணும்னு நெனச்சேன். எதையாது செஞ்சு சம்பாதிக்கணும்னு ஒரு வைராக்கியம் வந்துச்சு. அப்ப தான் பார்ல ஒருத்தர் பழக்கம் ஆனார்.  

என்னோட வாய்ஸ் நல்லா இருக்கதாவும், அவரோட மியூசிக் ஆல்பம்ல நா பாடறதுக்கு வாய்ப்பு குடுக்கறதாவும் சொன்னார். பார் வேலையை விட்டுட்டு அவரோட போயி தங்கிட்டேன். நெறய கத்துக்கிட்டேன். அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை அனுபவம் கொடுத்திடும் இல்லையா. கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு  அப்புறம் எங்களோட மியூசிக் ஆல்பம் ரெடி ஆகிருச்சு. அடுத்தடுத்த ஆல்பம்லயும் வாய்ப்புத்தரேன்னு சொல்லி இருக்கார். உழைப்போட அருமையையும் உணர்ந்துட்டேன். அப்படியே ஏதாவது சைடுல படிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்." என்றபடி கையில் இருந்து ஒரு CDயை மேகலாவிடம் கொடுத்தான். அதில் வலிகளை எல்லாம் மறந்து மறைத்து மாதவன் அழகாக சிரித்துக் கொண்டிருந்தான், அல்லது சிரிப்பது போல் பாவ்லா செய்திருந்தான். 

"இனிமே நா பொறுப்பா இருப்பேன்க்கா" என்று சொன்னவனை தோளோடு அணைத்துக்கொண்டாள்.  வாழ்வை மலர வைக்கும் சக்தி காலத்திற்கு உண்டு என்று சிறு வயதில் அம்மா சொல்வதை இன்று மேகலா கண்கூடாக பார்த்தாள். "வா அப்பா அம்மாவை போயி பாப்போம்" என சொல்லியபடி அவனை வீட்டிற்கு அழைத்துப்போனாள். அன்றைய விடியல் அவர்களது பெற்றோருக்கு ஆனந்தமான விடியலாக இருக்கும் என நம்புவோம்.  


 

Thursday, March 2, 2023

My E-Books - எனது மின் புத்தகங்கள்

 சிறார்களுக்காக நான் எழுதியிருக்கும்  சில சிறுகதை புத்தகங்களும், ஒரு குறு நாவலும் இதோ இங்கே. கிண்டில் App'ல் படிக்கலாம்.


1. வாஷிங் மெஷினுக்குள் சிக்கு சுண்டெலியின் சாகசம் 

2ஜெர்ரி ஸ்டூவர்ட் கேட்ச் அப் - டாம் நாக் அவுட்:  Jerry Stuart Catch Up - Tom Knock Out 

3குரங்கின் நூடுல்ஸ் ஆசை

4. சிறுவன் கற்றுக்கொண்ட பாடம் 

5. உன்னருகே நான் இருந்தால்!!!

காற்றுக்கு வேலி!

 அந்த மார்கழி மாதத்தின் காலை பொழுதில் எல்லா வீட்டு அடுக்களையில் இருந்து குக்கர்களும், வாணலியுடன் கரண்டியும் இசைக்கச்சேரி நடத்திக்கொண்டிருக்க, மிக்சிகள் உறுமிக்கொண்டும்  கர்ஜித்துக்கொண்டும் இருந்தன. "டைம் ஆகிருச்சு, சீக்கிரம்.... இன்னும் குளிக்கலையா? யூனிபார்ம் போட இவ்வளவு நேரமா? மட மடன்னு சாப்பிடு..." என்று வசனங்கள் வித விதமான மாடுலேஷனில் அம்மாக்களிடம் இருந்து கேட்டுக்கொண்டிருந்தன. மாடர்ன் அப்பாக்கள்  சிலர் அம்மாக்களுக்கு துணையாக கோதாவில் இறங்கியிருக்க, சில வீடுகளில் கந்தசஷ்டி கவசமும், தின பலன்களும், செய்திகள் என்ற பெயரில் விளம்பரங்களும் தன் பங்குக்கு காலைப் பரபரப்பை மெருகேற்றிக்கொண்டிருந்தன. 

அந்த அடுக்கு மாடி குடியிருப்பின் எட்டாவது தளத்தில் ரம்மியமாக அமைந்திருந்த "மகிழ்வகம்" என பெயரிடப்பட்ட அந்த வீட்டில் அருணா பருப்பு சாதத்தை நன்கு மசித்து அதனுடன் சிறிது ரசத்தையும் சேர்த்து கிளறி, குழந்தை ஆத்யாவின் டிபன் பாக்ஸை நிரப்பி மூடினாள். ஆத்யாவிற்கு பிடித்த வெண்டைக்காய் பொரியலையும் தனி டப்பியில் போட்டு லன்ச் பேகில் அடுக்கினாள். பள்ளி பேருந்து வரும் நேரமாகிவிட, மின்னல் வேக தாரகையாக மாறி ஆத்யாவிற்கு ஷூ மாட்டி, குளிருக்கு தோதாக ஸ்வெட்டர் போட்டு, ஐடி கார்டு போட்டு விட்டு கபிலனிடம் குழந்தையை பஸ் ஏற்றிவிடுமாறு சொன்னாள். "ஏங்க அப்படியே வரும்போது ஒரு கட்டு பாலக் கீரையும், 2 வாழைக்காயும் வாங்கிட்டு வந்துடுங்க " என்றாள்.

பிள்ளைகள் பள்ளிக்கு கிளம்பியதும், சிறிது நேரத்திற்கு முன்னர் இருந்த களேபரம் எல்லாம் அடங்கி எல்லா வீடுகளும் நிசப்தமாகியிருந்தன.  கதவுகள் படார் படார் என சாத்தப்பட்டன.  அருணா கபிலனுக்கு ஆபீசுக்கு கொடுத்து விட சுண்டைக்காய் குழம்பு சமைக்க மறுபடி கிச்சனுக்குள் நுழைவதற்குள், டீவியில் யூடியூப்பில் பாடலை ஒலிக்க விட்டாள். சில பல நேரங்களில் காலை பரபரப்பில் வீட்டில் ஏதோ பூகம்பம் வந்ததை போல பொருள்கள் இங்கும் அங்கும் சிதறி கிடக்கும். அருணா கண்களை சுழல விட்டாள். பெரிதாக ஒதுக்க எதுவும் இல்லை, அடுக்களையும் கூட சுத்தமாகவே இருந்தது. தனக்குத் தானே ஒரு ஷொட்டு போட்டுக்கொண்டு வேலையை ஆரம்பித்தாள். 

ஆத்யாவை பள்ளி பேருந்தில் அனுப்பிவிட்டு கையில் கீரையுடன் கபிலன் வீட்டு கதவை திறந்து உள்ளே நுழைந்தான். "பள்ளம் இன்றி உயரம் இல்லை... புவனம் எங்கும் பாடங்களே..." என்று பேப்பர் ராக்கெட்டுடன் சேர்ந்து அருணாவும் கையில் கரண்டியுடன் நளினமாக உடலை அசைத்து ஆடிக்கொண்டிருந்தாள். சின்ன வெங்காயமும், பூண்டும், மணத்தக்காளியுடன் கைகோர்த்து வீட்டை கமகமக்க செய்து கொண்டிருந்தன. ஆடிக்கொண்டிருந்த அருணாவை பார்த்து "நீ என்ன இன்னும் சின்ன குழந்தையா? தைய தக்க தைய தக்கான்னு குதிச்சிட்டு இருக்க" என்றான் கபிலன் எரிச்சல் கலந்த தொனியில். "இதுல என்ன இருக்கு. எனக்கு பாட்டு கேட்டுட்டே வேலை செய்ய பிடிக்கும். தானா ஆட ஆரம்பிச்சிடறேன் அது என்ன அவ்வளவு பெரிய விஷயமா" என்றவள் கை தன்னிச்சையாக ரிமோட்டை எடுத்தது.  அவள் முகத்தில் இருந்த உற்சாகம் வற்றிப் போனது. அதன் பிறகு அவர்கள் இருவரும் பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை.  அருணாவிற்கு இது ஒன்றும் புதிது இல்லை.  அவளுக்கு  வரைவதில் ஆர்வம் அதிகம். திருமணத்திற்கு முன் கிளாஸ் பெயிண்ட்டிங் பேசிக் கோர்ஸ் முடித்திருந்தாள். திருமணம் ஆன புதிதில் சின்ன சின்னதாக வரைந்து கபிலனுக்கு ஆசையாக பரிசளித்தாள், "எதுக்கு தேவையில்லாம நேரத்தையும் பணத்தையும் விரயம் பண்ற" என்ற அவன் பதில் அவளுக்கு வினோதமாக இருந்தது. "நான் ஏதாவது வேலைக்கு போகட்டுமா, வீட்டில் ரொம்ப போர் அடிக்குது" என்று மெல்ல ஒருநாள் அருணா பேச்செடுக்க "நீ வேலைக்கு போனா வீட்டை எப்படி பாக்கறது. அதெல்லாம் ஒன்னும் வேணாம். அதான் நான் சம்பாதிக்கறேன்ல" என்றான் வெடுக்கென. கபிலன் அன்பானவன் தான் என்றாலும் கொஞ்சம் கட்டுப்பெட்டி. அருணாவிற்கு அவன் குணம் புரிந்தது, ஆசைகளை அடக்க பழகிக்கொண்டாள்.  அவள் செய்யும் எந்த ஒரு வேலைக்கும் சிறு பாராட்டோ அங்கீகாரமோ கபிலனிடம் இருந்து கிடைக்காது என்பதை புரிந்து கொண்டாள்

 கபிலன் குளித்து முடித்து, சாப்பிட்டு, லேப்டாப் பையோடு லன்ச் பேக்கையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான். பார்க்கிங்கில் இருந்த சியாஸின் இன்ஜினை உசுப்பி எழுப்பி, ஸ்டியரிங்கை வளைத்தான். வண்டி சாலையில் வேகம் எடுக்கவும் கைபேசி சிணுங்கியது. டாஷ்போர்டு தொடு திரை ஆஷிஷ் காலிங் (Aashish Calling) என காட்டியது. ஆஷிஷ் கபிலனின் மேலதிகாரி. அவன் குடியிருக்கும் அதே அபார்ட்மென்ட்டில் வேறு ஒரு பிளாக்கில் தான் அவரும் குடியிருந்தார். ஸ்டியரிங்கில் இருந்த ஆன்ஸர் பட்டனை தட்டி ஆஷிஷுடன் பேசலானான். "என்ன கபிலன் கெளம்பியாச்சா? உங்களிடம் ஒரு உதவி கேட்கலாம்னு தான் கூப்பிட்டேன். உங்கள் மனைவி நல்லா டான்ஸ் ஆடுவாங்களாமே, என் பொண்ணு ஸ்ருதிக்காவின் தோழியோட அம்மா சொன்னதா என் மனைவி சொன்னாங்க.  அவங்க பொண்ணோட டான்ஸ் காம்பெடிஷனுக்கு  உங்க மனைவி அருணா ஒரு முறை டான்ஸ் சொல்லி கொடுத்தாங்களாமே. ரொம்ப அருமையா ஆடினாங்க, அத விட ரொம்ப பொறுமையா சொல்லிக்கொடுத்தாங்கன்னு புகழ்ந்து தள்ளிட்டாங்களாம்.  ஆடறத விட அத சொல்லிக்கொடுக்க தெரியறது தனி கலை.  அடுத்த வாரம் ஸ்ருதிக்காவுக்கும் ஒரு டான்ஸ் காம்பெடிஷன் இருக்கு. அதான் அருணா டான்ஸ் சொல்லிக் குடுப்பாங்களான்னு என் மனைவி உங்க கிட்ட கேக்க சொன்னாங்க. நமக்கெல்லாம் ஆட வருமா? ரெண்டு ஸ்டெப் போட்டாலே கையும் காலும் சுளுக்கிக்கும். உங்க மனைவியோட திறமையை என் பொண்ணுக்கும் கொஞ்சம் சொல்லி குடுக்க சொல்லுங்க கபிலன் " ஆஷிஷ் பேசப் பேச கபிலனுக்கு ஏதோ உறுத்தியது.

Learning Beyond Textbooks - Life Skills - Child Growth

#Learning_Beyond_Textbooks #Life_Skills A home is the first environment where children can playfully learn a plenty. Traditional textbook le...