அந்த மார்கழி மாதத்தின் காலை பொழுதில் எல்லா வீட்டு அடுக்களையில் இருந்து குக்கர்களும், வாணலியுடன் கரண்டியும் இசைக்கச்சேரி நடத்திக்கொண்டிருக்க, மிக்சிகள் உறுமிக்கொண்டும் கர்ஜித்துக்கொண்டும் இருந்தன. "டைம் ஆகிருச்சு, சீக்கிரம்.... இன்னும் குளிக்கலையா? யூனிபார்ம் போட இவ்வளவு நேரமா? மட மடன்னு சாப்பிடு..." என்று வசனங்கள் வித விதமான மாடுலேஷனில் அம்மாக்களிடம் இருந்து கேட்டுக்கொண்டிருந்தன. மாடர்ன் அப்பாக்கள் சிலர் அம்மாக்களுக்கு துணையாக கோதாவில் இறங்கியிருக்க, சில வீடுகளில் கந்தசஷ்டி கவசமும், தின பலன்களும், செய்திகள் என்ற பெயரில் விளம்பரங்களும் தன் பங்குக்கு காலைப் பரபரப்பை மெருகேற்றிக்கொண்டிருந்தன.
அந்த அடுக்கு மாடி குடியிருப்பின் எட்டாவது தளத்தில் ரம்மியமாக அமைந்திருந்த "மகிழ்வகம்" என பெயரிடப்பட்ட அந்த வீட்டில் அருணா பருப்பு சாதத்தை நன்கு மசித்து அதனுடன் சிறிது ரசத்தையும் சேர்த்து கிளறி, குழந்தை ஆத்யாவின் டிபன் பாக்ஸை நிரப்பி மூடினாள். ஆத்யாவிற்கு பிடித்த வெண்டைக்காய் பொரியலையும் தனி டப்பியில் போட்டு லன்ச் பேகில் அடுக்கினாள். பள்ளி பேருந்து வரும் நேரமாகிவிட, மின்னல் வேக தாரகையாக மாறி ஆத்யாவிற்கு ஷூ மாட்டி, குளிருக்கு தோதாக ஸ்வெட்டர் போட்டு, ஐடி கார்டு போட்டு விட்டு கபிலனிடம் குழந்தையை பஸ் ஏற்றிவிடுமாறு சொன்னாள். "ஏங்க அப்படியே வரும்போது ஒரு கட்டு பாலக் கீரையும், 2 வாழைக்காயும் வாங்கிட்டு வந்துடுங்க " என்றாள்.
பிள்ளைகள் பள்ளிக்கு கிளம்பியதும், சிறிது நேரத்திற்கு முன்னர் இருந்த களேபரம் எல்லாம் அடங்கி எல்லா வீடுகளும் நிசப்தமாகியிருந்தன. கதவுகள் படார் படார் என சாத்தப்பட்டன. அருணா கபிலனுக்கு ஆபீசுக்கு கொடுத்து விட சுண்டைக்காய் குழம்பு சமைக்க மறுபடி கிச்சனுக்குள் நுழைவதற்குள், டீவியில் யூடியூப்பில் பாடலை ஒலிக்க விட்டாள். சில பல நேரங்களில் காலை பரபரப்பில் வீட்டில் ஏதோ பூகம்பம் வந்ததை போல பொருள்கள் இங்கும் அங்கும் சிதறி கிடக்கும். அருணா கண்களை சுழல விட்டாள். பெரிதாக ஒதுக்க எதுவும் இல்லை, அடுக்களையும் கூட சுத்தமாகவே இருந்தது. தனக்குத் தானே ஒரு ஷொட்டு போட்டுக்கொண்டு வேலையை ஆரம்பித்தாள்.
ஆத்யாவை பள்ளி பேருந்தில் அனுப்பிவிட்டு கையில் கீரையுடன் கபிலன் வீட்டு கதவை திறந்து உள்ளே நுழைந்தான். "பள்ளம் இன்றி உயரம் இல்லை... புவனம் எங்கும் பாடங்களே..." என்று பேப்பர் ராக்கெட்டுடன் சேர்ந்து அருணாவும் கையில் கரண்டியுடன் நளினமாக உடலை அசைத்து ஆடிக்கொண்டிருந்தாள். சின்ன வெங்காயமும், பூண்டும், மணத்தக்காளியுடன் கைகோர்த்து வீட்டை கமகமக்க செய்து கொண்டிருந்தன. ஆடிக்கொண்டிருந்த அருணாவை பார்த்து "நீ என்ன இன்னும் சின்ன குழந்தையா? தைய தக்க தைய தக்கான்னு குதிச்சிட்டு இருக்க" என்றான் கபிலன் எரிச்சல் கலந்த தொனியில். "இதுல என்ன இருக்கு. எனக்கு பாட்டு கேட்டுட்டே வேலை செய்ய பிடிக்கும். தானா ஆட ஆரம்பிச்சிடறேன் அது என்ன அவ்வளவு பெரிய விஷயமா" என்றவள் கை தன்னிச்சையாக ரிமோட்டை எடுத்தது. அவள் முகத்தில் இருந்த உற்சாகம் வற்றிப் போனது. அதன் பிறகு அவர்கள் இருவரும் பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அருணாவிற்கு இது ஒன்றும் புதிது இல்லை. அவளுக்கு வரைவதில் ஆர்வம் அதிகம். திருமணத்திற்கு முன் கிளாஸ் பெயிண்ட்டிங் பேசிக் கோர்ஸ் முடித்திருந்தாள். திருமணம் ஆன புதிதில் சின்ன சின்னதாக வரைந்து கபிலனுக்கு ஆசையாக பரிசளித்தாள், "எதுக்கு தேவையில்லாம நேரத்தையும் பணத்தையும் விரயம் பண்ற" என்ற அவன் பதில் அவளுக்கு வினோதமாக இருந்தது. "நான் ஏதாவது வேலைக்கு போகட்டுமா, வீட்டில் ரொம்ப போர் அடிக்குது" என்று மெல்ல ஒருநாள் அருணா பேச்செடுக்க "நீ வேலைக்கு போனா வீட்டை எப்படி பாக்கறது. அதெல்லாம் ஒன்னும் வேணாம். அதான் நான் சம்பாதிக்கறேன்ல" என்றான் வெடுக்கென. கபிலன் அன்பானவன் தான் என்றாலும் கொஞ்சம் கட்டுப்பெட்டி. அருணாவிற்கு அவன் குணம் புரிந்தது, ஆசைகளை அடக்க பழகிக்கொண்டாள். அவள் செய்யும் எந்த ஒரு வேலைக்கும் சிறு பாராட்டோ அங்கீகாரமோ கபிலனிடம் இருந்து கிடைக்காது என்பதை புரிந்து கொண்டாள்
கபிலன் குளித்து முடித்து, சாப்பிட்டு, லேப்டாப் பையோடு லன்ச் பேக்கையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான். பார்க்கிங்கில் இருந்த சியாஸின் இன்ஜினை உசுப்பி எழுப்பி, ஸ்டியரிங்கை வளைத்தான். வண்டி சாலையில் வேகம் எடுக்கவும் கைபேசி சிணுங்கியது. டாஷ்போர்டு தொடு திரை ஆஷிஷ் காலிங் (Aashish Calling) என காட்டியது. ஆஷிஷ் கபிலனின் மேலதிகாரி. அவன் குடியிருக்கும் அதே அபார்ட்மென்ட்டில் வேறு ஒரு பிளாக்கில் தான் அவரும் குடியிருந்தார். ஸ்டியரிங்கில் இருந்த ஆன்ஸர் பட்டனை தட்டி ஆஷிஷுடன் பேசலானான். "என்ன கபிலன் கெளம்பியாச்சா? உங்களிடம் ஒரு உதவி கேட்கலாம்னு தான் கூப்பிட்டேன். உங்கள் மனைவி நல்லா டான்ஸ் ஆடுவாங்களாமே, என் பொண்ணு ஸ்ருதிக்காவின் தோழியோட அம்மா சொன்னதா என் மனைவி சொன்னாங்க. அவங்க பொண்ணோட டான்ஸ் காம்பெடிஷனுக்கு உங்க மனைவி அருணா ஒரு முறை டான்ஸ் சொல்லி கொடுத்தாங்களாமே. ரொம்ப அருமையா ஆடினாங்க, அத விட ரொம்ப பொறுமையா சொல்லிக்கொடுத்தாங்கன்னு புகழ்ந்து தள்ளிட்டாங்களாம். ஆடறத விட அத சொல்லிக்கொடுக்க தெரியறது தனி கலை. அடுத்த வாரம் ஸ்ருதிக்காவுக்கும் ஒரு டான்ஸ் காம்பெடிஷன் இருக்கு. அதான் அருணா டான்ஸ் சொல்லிக் குடுப்பாங்களான்னு என் மனைவி உங்க கிட்ட கேக்க சொன்னாங்க. நமக்கெல்லாம் ஆட வருமா? ரெண்டு ஸ்டெப் போட்டாலே கையும் காலும் சுளுக்கிக்கும். உங்க மனைவியோட திறமையை என் பொண்ணுக்கும் கொஞ்சம் சொல்லி குடுக்க சொல்லுங்க கபிலன் " ஆஷிஷ் பேசப் பேச கபிலனுக்கு ஏதோ உறுத்தியது.
No comments:
Post a Comment