சந்திரமதி செய்வதறியாது கணவரையும் மகனையும் பார்த்துக்கொண்டிருந்தாள். நடராஜன் "நீ சாப்பிடு மதி" என்று சொல்லிவிட்டு, எதுவுமே நடக்காதது போல அவரது தட்டில் இருந்த உணவை வாய்க்கு கொடுத்துக்கொண்டிருந்தார். அந்த தேக்கு மரமேசையில், நடராஜனுக்கு எதிர்புறம் நகுல் உட்கார்ந்திருந்தான். நகுல் சந்திரமதி நடராஜனின் ஒரே மகன்.
ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் நான்கு வருடமாக வேலை பார்த்து வந்தான். அன்று ஞாயிற்றுக்கிழமை, மதிய உணவிற்கு உளுந்து சாதமும், எள்ளு துவையலும், பாகற்காய் வறுவலும் சமைத்திருந்தாள் மதி என்கிற சந்திரமதி. நகுலுக்கு கல்லூரி நாட்களில் இருந்தே ஒரு வழக்கம் ஏற்பட்டது, தினமும் கிளம்பும் போது "அம்மா இன்னைக்கு லஞ்ச்க்கு என்ன?" என்று கேட்பான். அவனுக்கு பிடிக்காத உணவு என்றால் "நான் கேன்டீனில் சாப்பிட்டுக்கறேன்" என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவான். அல்லது டிபன் பாக்ஸை நண்பர்கள் யாரிடமாது கொடுத்துவிட்டு அவன் கேன்டீனில் வாங்கிக்கொள்வான்.
இது வேலைக்கு சேர்ந்த பிறகும் தொடர்ந்தது. அந்த ஞாயிறு அன்றும் அப்படி தான், அவர்கள் அனைவரும் சாப்பிட உட்கார்ந்த பிறகு "ஐயோ பாகற்காயா, எனக்கு வேண்டாம். நீங்களே சாப்பிடுங்கள்" என்று சொல்ல, நடராஜன் "நகுல், அதென்ன சாப்பாடை வேண்டாம்னு சொல்றது. அம்மா என்ன சமைக்கராங்களோ அதை மனதார சாப்பிடு. சாப்பாடுனா பிடிச்சதும் இருக்கும், பிடிக்காததும் இருக்கும். அட்ஜஸ்ட் பண்ணி சாப்டுக்கணும்" என்று சொல்ல. "போங்கப்பா, சும்மா அட்வைஸ் பண்ணாதீங்க. நா என்ன இன்னும் குழந்தையா. எனக்கு என்ன வேணும்னு எனக்கு தெரியும். நான் ஸ்விக்கில பட்டர் நானும் பன்னீர் லபாப்தாரும் ஆர்டர் பண்ணி சாப்டுக்கறேன்" என்று சொல்லியபடி கைபேசியில் ஸ்விக்கியை தட்டினான்.
நடராஜன் ஒன்றும் கண்டிப்பான அப்பா இல்லை தான், என்றாலும் உணவை வீணாக்குவதை என்றும் ஏற்றுக்கொள்ள மாட்டார். என்ன சமைத்தாலும், சுவை எப்படி இருந்தாலும் சாப்பிட்டுக்க வேண்டும் என்பார். கறாராக அவர் சொல்லும் தோரணையிலேயே நகுலும் சாப்பிட்டு விடுவான். இன்று அவனும் பதிலுக்கு பேசியதில் மதி செய்வதறியாமல் உட்கார்ந்திருந்தாள். "நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க, நா ஆர்டர் பண்ணிட்டேன். இன்னும் ஒரு இருபது நிமிடத்தில் வந்திடும்" என்று சொல்லியபடி நகுல் டிவியில் நீயா நானாவை ஓடவிட்டான். கண்டிப்பான அப்பாக்கள், அதை விரும்பாத இந்த காலத்து பிள்ளைகள் என்று கோபிநாத் தலைப்பை சொல்ல நகுல் நமட்டு சிரிப்பை உதிர்த்தான்.
நகுல் டிவியில் மூழ்கியிருக்க நடராஜனும் மதியும் அமைதியாக சாப்பிட்டு முடித்து கை கழுவிய போது காலிங் பெல் அழைத்தது. "அதுக்குள்ள ஸ்விக்கி வந்தாச்சா, பரவால்லயே.. ரொம்ப சீக்கிரம் வந்துட்டான்" என்று சொல்லியபடியே நகுல் கதவை திறக்க, அங்கே நின்றிருந்த எழிலரசை பார்த்து வியந்தான். "எழில், நீ எப்படி இங்க?" என்றான் ஆச்சரியத்துடன். எழிலரசன் அவன் உடன் வேலை பார்ப்பவன். வேலைக்கு சேர்ந்து இரண்டு வருடம் கூட ஆகவில்லை, ஆனால் அயராது உழைப்பவன், செய்யும் வேலையை திருத்தமாக செய்வான்; அதனால் அவனை எல்லோருக்கும் பிடிக்கும். வேலைக்கு சேர்ந்த நாளிலிருந்து ஒவ்வொரு மாதமும் சம்பளம் வந்த அன்று, ஐம்பது உணவு பொட்டலம் வாங்கிக்கொண்டு போய் அவனது அலுவலகம் அருகில் இருக்கும் ஒரு குடிசை பகுதிக்கு போய் கொடுப்பது வழக்கம்.
அதனால் அவன் மீது அனைவருக்கும் கூடுதல் அபிப்பிராயம் உண்டு. எழிலரசனும், கதவை திறந்த நகுலை வியப்புடன் பார்த்து "நகுல் இது உங்க வீடா? பத்து வருடம் முன்னாடி பாங்க்ல கிளெர்க்கா வேலை பாத்த நடராஜன் சார் வீடு அட்ரஸ்னு கேட்டேன், இந்த அட்ரஸ் தான் குடுத்தாங்க" என்று சொல்லிக்கொண்டிருந்த போதே உள்ளேயிருந்து நடராஜன் எட்டி பார்க்க, "தோ... சார் இருக்காரே. சார், வணக்கம் சார். உங்கள தான் ரொம்ப வருஷமா பாக்கணும்னு நெனச்சேன் சார்" என்று பரவசத்துடன் சொன்ன எழில், நகுலை பார்த்து, "அப்ப நீங்க சாரோட பையனா? இவ்ளோ நாள் தெரியாம போச்சே" என்று மூச்சு விடாமல் பேசிக்கொண்டிருக்க, நடராஜன் "உள்ளே வா தம்பி" என்று அழைத்தார். நகுல் ஒன்றும் புரியாமல் "உள்ள வா" என்று அழைத்து சென்றான். வெய்யிலில் வந்தவனுக்கு சந்திரமதி மோர் கொடுத்தார். "பன்னிரண்டு வருடத்துக்கு முன்னாடி அய்யா கொடுத்த பிரியாணி, இன்னைக்கு அம்மா கொடுத்த மோர்; ரெண்டுமே தேவாமிர்தம்" என்று எழில் சொல்ல நடராஜன் அவனை அடையாளம் கண்டு கொண்டார்.
அவரது நினைவுகள் பின்னோக்கி சென்றது. இரண்டாம் பாகம்