அயர்ச்சியினால் அலுவலத்தில் இருந்து மதியமே வந்து அசந்து உறங்கியவள் மாலை ஐந்து மணிக்கு தான் எழுந்தாள். "இப்ப பரவாயில்லையா குட்டி?" என அனுசரணையாக கேட்டபடி கையில் பூஸ்ட் எடுத்துக்கொண்டு வந்தான் விவேக். "இப்ப ரொம்பவே தேவலாம். அப்பா அந்த மாத்திரையை அவங்க அன்னைக்கே குடுத்துருக்கலாம்" என்றாள். "மே பீ அத அதிகமா எடுத்துக்க கூடாதா இருக்கும், அதுனால தான் குடுத்துருக்க மாட்டாங்க. நீ இன்னும் கொஞ்ச நாள் லீவு எடுத்துக்கறியா? முடியுமா?" என்றான் "பாக்கலாம் பா, கொஞ்சம் செட்டில் ஆகிட்டா சமாளிச்சுக்குவேன். வெயிட் பண்ணி பாப்போம்" என்றாள். "சரி நீ இதை குடி, நா சூடா ரெண்டு தோசை வார்த்து எடுத்துட்டு வரேன்" என்றபடி கிச்சனுக்குள் சென்றான். அடுத்தநாள் விவேக் காலையில் சீக்கிரமே கிளம்ப வேண்டியிருந்ததால் முந்தைய இரவே காலைக்கும் மதியத்துக்கும் சமைத்து பிரிட்ஜ்ஜில் வைத்துவிட்டிருந்தான். வந்தனா வேணுங்கிற பழங்களை நறுக்கி டப்பாவில் போட்டுக்கொண்டு காலை உணவை முடித்தாள். ரெடி ஆவதற்குள் வயிற்றை பிரட்ட ஆரம்பிக்க முந்தின நாள் டாக்டர் சொன்ன மாத்திரையை போட்டுக்கொண்டாள். பொதுவாக MTC பஸ்ஸில் தான் ஆபீசுக்கு செல்வது வழக்கம். அதற்க்கு அவளுடைய வீட்டில் இருந்து சில தூரம் நடக்க வேண்டும். இன்றைக்கு இருக்கும் நிலைமைக்கு அதெல்லாம் முடியாது, பேசாமல் ஆபீஸ் பஸ்ஸிலேயே போய்விடலாம் என வீட்டின் முக்கில் இருந்த ஸ்டாப்பிற்கு சென்றாள். கால் மணி நேர காத்திருப்பின் பிறகே பஸ் வந்தது. ஆபீசில் பஸ் பார்க்கிங்கில் இருந்து அவளது இருப்பிடத்திற்கு செல்வதற்குள் அசதியாக உணர ஆரம்பித்தாள். அந்த ஏசியிலும் முத்து முத்தாக வேர்த்திருக்க, கொண்டு வந்திருந்த ஜூஸ்'ஐ கொஞ்சம் குடித்தாள். சிறிது இடைவெளி விட்டு கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு முறை குடித்ததில் அசதி கொஞ்சம் குறைந்தது. ஆனால் உறக்கம் வருவது போல் இருந்தது. விவேக்கிடமிருந்து அழைப்பு வர மாத்திரை போட்டு கொண்டதையும், அசதியாக இருப்பதையும் சொன்னாள். "இதுக்கு தான் லீவு போடறியான்னு கேட்டேன். டார்மிட்டரி போய் வேணும்னா ரெஸ்ட் எடேன்" என்றான். "தேவைப்பட்டா போய்க்கறேன், நீ என்னை பத்தி கவலை படாம வேலைய பாரு" என சொல்லிவிட்டு பேசாமல் டார்மிட்டரி போலாமா என நினைத்து எழுந்து சென்றாள். அவள் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து லிஃப்ட் வரை செல்வதற்குள் திரும்பவும் அசதி வர, டார்மிட்டரி வரை போக அரை கிலோமீட்டர்க்கு மேல் நடக்கணும், முடியுமா என யோசித்து இடத்திற்கே வந்து உட்கார்ந்துவிட்டாள்.
இப்படி இருந்தால் எப்படி வேலை செய்வது? எடுக்கும் வேலையை நேரத்திற்கு சரிவர செய்ய முடியாமல் போகலாம். பேசாமல் இன்னும் சில தினங்கள் விடுப்பு எடுப்பது தான் சரியாக இருக்கும் என முடிவெடுத்து விவேக்கிற்கு மெசேஜ் பண்ணினாள். "லீவு எடுக்க கேட்கபோகிறேன்" என அவள் அனுப்பிய மேசேஜ்க்கு, "சரியான முடிவு, ப்ளீஸ் கேளு. நா கொஞ்சமேனும் நிம்மதியா வேலை செய்ய முடியும், நீ வீட்ல பாதுகாப்பா ரெஸ்ட் எடுத்தா" என ரிப்ளை பண்ணினான்.
தேவிகாவின் இடத்திற்கு சென்று உபாதைகள் அதிகமாக இருப்பதால் இன்னும் சில தினங்கள் விடுப்பு எடுக்க விரும்புவதாக சொல்ல, "நேத்து தான ஜாயின் பண்ணீங்க, அதுக்குள்ள விடுப்புல போறேன்னு சொல்றீங்க" என்றார். "வாமிட்டிங் இவ்ளோ அதிகமா இருக்கும்னு எதிர்பாக்கல தேவிகா. தவிர வீட்டிலும் உதவிக்கு யாரும் இல்ல. இன்னைக்கெல்லாம் நடக்க கூட முடியல. நா ஆபீஸ் வரதுக்கே சிறிது தூரம் நடந்து வந்து தான் பஸ் ஏறணும். அது மட்டுமில்லாம ப்ராஜெக்ட்ல போய்ட்டா, இது மாறி உபாதைகளுடன் சரி வர வேலை செய்ய முடியலனா நல்லா இருக்காது" என வந்தனா சொல்ல, "ஏற்கனவே உங்கள பத்தி எனக்கு கம்பளைண்ட்ஸ் வந்துருக்கு, வேலைல நீங்க அவளோ பொறுப்பும் அக்கறையும் காட்டறது இல்லேனு. நா தான் உங்கள இந்த ப்ரொஜெக்ட்க்கு தேர்ந்தெடுத்தேன். அவர்கள் சொல்வது சரி தான் என நிருபீச்சிடீங்க" என குரலை கடுமையாக்கி கொண்டு தேவிகா சொல்ல சொல்ல "வந்தனாவுக்கு கிறு கிறுத்தது. அவள் எந்த வேலையையும் நிதானமாக பொறுப்புடன் கையாளக்கூடியவள். அவளை யாருமே இப்படி முகத்திலடித்தாற்போல் பேசியதில்லை. இன்று தேவிகா சொன்னதற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை அவளுக்கு "எனக்கு தெரிந்தவரை நான் கொடுக்கப்பட்ட வேலைகளை சரியாகவே செய்திருக்கிறேன் தேவிகா" என பொறுமையாகவே சொல்ல, "நீங்க HR கிட்ட பேசிக்கோங்க, எனக்கு வேல இருக்கு" என முகத்திலடித்தார் போல சொல்லிவிட்டாள்.
கார்ப்பரேட் கம்பெனிகளின் உண்மையான முகம் இது தான், செய்த நூறு நல்ல விஷயங்கள் எதுவுமே கண்ணுக்கு தெரியாது. வந்தனாவுக்கு மிகவும் அவமானமாகிவிட்டது. பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர்களுக்கு எல்லாம் கேட்டிருக்கும், அவர்கள் என்ன நினைப்பார்கள் என நினைத்துக்கொண்டிருந்த போதே விவேக் கால் பண்ண, உணர்ச்சிவசப்பட்டவளாக தேவகி சொன்னதை அப்படியே சொன்னாள். "எனக்கு அவர்களுக்கு எப்படி திருப்பி கொடுப்பது என்று கூட தெரியவில்லை, அவள் எப்படி என்னை அப்படி பேசலாம்? ஒவ்வொரு வேலையையும் பாத்து பாத்து செய்வேன் நான்" என சொல்லும்போதே அவள் குரல் கமர "குட்டி கேளு, இப்ப இது எதுவுமே முக்கியம் இல்ல. உன்னோட ஹெல்த், நம்ம குழந்தையோட நலம், இது தான் ரொம்ப ரொம்ப முக்கியம். அவ பேசினதை விட்டு தள்ளு. நீ HR கிட்ட பேசி லீவு அப்ளை பண்ணு. இல்லையா வேலைய கூட ரிசைன் பண்ணிரு. என்ன கேட்டா அது தான் பெட்டெர்" என முடிக்குமுன் "ஏய் விளையாடறியா? அவளுக்காக நா ஏன் வேலைய விடணும்? நமக்கு இந்த வேல வேணும். இன்னும் எவ்ளோ கடன் இருக்கு? அப்படியெல்லாம் விட்ர முடியாது. அதும் இப்ப ஹாஸ்பிடல் செலவுகள் வேற அதிகமா வர ஆரம்பிக்கும்.
விவேக்கிற்கு திருமணம் ஆவதற்கு ஒரு வருடம் முன்னர் தான் அவன் அப்பா பார்த்து வந்த பிசினஸ்ஸில் ஏகப்பட்ட சரிவு வர, அதை ஈடுகட்ட விவேக் நிறைய லோன் அடுக்க வேண்டியதாகியது. அதன் பிறகு இவர்களது கல்யாண பேச்சு வர, அதற்காகவும் செலவுகள் சேர்ந்து கொண்டன. பெற்றோர் சம்மதத்துடன் நடந்தேறிய திருமணம் என்றாலும் வீட்டிற்கு தேவையானவற்றை எல்லாம் நானே வாங்குறேன் என வந்தனாவின் பெற்றோரிடம் சொல்லிவிட்டான். இதையெல்லாம் சமாளிக்க வந்தனா பெயரிலும் லோன் எடுக்க வேண்டியதாகிவிட்டது. திருமணம் முடிந்து பதிவு செய்யும் போது போட்ட முதல் கையெழுத்தோடு, உடனடியாக அவள் கையெழுத்து போட்டது, லோன் பத்திரத்தில் தான். அவர்களது வாழ்க்கையே பத்து லட்சம் லோன் மீது தான் ஆரம்பம் ஆனது. அதனால் தான் வந்தனா அந்த வேலையை விட கூடாது என நினைத்தாள். அதுமட்டுமில்லை, ஒரு நல்ல கம்பெனியில் வேலை அதில் பதவி உயர்வு என அவளுக்கும் நிறைய குறிக்கோள்கள் இருந்தது.
"என்ன பேசற குட்டிமா நீ? இவ்ளோ நாள் நீ சம்பாதிச்சதெல்லாம் ஒரு வார்த்தை கூட கேட்காம மொத்தமா என்கிட்டே தான குடுத்துருக்க. அது என் மேல இருக்கற நம்பிக்கை தான. அத நா காப்பாத்தணும்னா இதை விட ஒரு நல்ல முடிவு இருக்க முடியாது. மூணு வருஷம் காத்திருந்தோம், நம்ம குழந்தைக்காக. யாருக்காகவோ உங்க ரெண்டு பேரோட நலனை நா விட்டு குடுக்க முடியாது. நீ HR கிட்டயே பேசி விடுப்பு வாங்கினாலும், திரும்ப அந்த ப்ராஜெக்ட்ல போனா அவங்கள சமாளிக்கணும். பாலிடிக்ஸ் பண்ணுவாங்க, இந்த டைம்ல அதை ஹாண்டில் பண்ற டென்ஷன் உனக்கு எதுக்கு? டெலிவரி முடிஞ்சு கொஞ்ச நாள் கழிச்சு வேற கம்பெனில கூட சேர்ந்துக்கலாம். இந்த நாட்கள் ஒரு முறை தான். அதோட சந்தோஷத்தை நாம முழுசா அனுபவிக்கலாம்மா" என்றான். அவன் சொல்வதெல்லாம் முழுக்க சரி தான், ஆனால் எவ்வளவு ஆசையாக சேர்ந்த வேலை? இன்னும் சில மாதங்களில் ப்ரோமோஷன் வரும் என காத்துக்கொண்டிருக்கும் வேளையில், எங்கிருந்தோ சில மாதங்களுக்கு முன் வந்து இங்கே சேர்த்துவிட்டு என்னுடைய நிம்மதியை குலைக்கிறாளே இந்த தேவகி.
அவளுக்காக என்னுடைய கனவை நான் விடணுமா? விவேக்கிற்கு மட்டும் ஆபீசில் பிரச்சனை இல்லாமலா இருக்கிறது? அதை சமாளிக்க தானே பார்க்கிறான், நினைத்தபடி வேலையை அவன் விட்டுவிட முடியுமா என்ன? ஆனால் என்னால் கண்டிப்பாக பாலிடிக்ஸ் பண்ணி எதிர்த்து பேசி, அதெல்லாம் வரவே வராதே எனக்கு, என வருத்தமாக நினைத்துக்கொண்டாள். மாறி மாறி எண்ணங்கள் ஓட, ஒரே குழப்பமாக இருந்தது அவளுக்கு. சரி HR'இடம் பேசிப்பார்க்கலாம் என HR என பதிக்கப்பட்டிருந்த அறையின் கதவை ஆட்காட்டி விரலை மடக்கி நாசுக்காக மெல்ல தட்டி, "எக்ஸ்கியூஸ் மீ மிதுன், உள்ள வரலாமா" என கேட்டபடி கதவை லேசாக திறந்து தலையை மட்டும் நீட்டினாள்.
புருவங்களை உயர்த்தி புன்னகைத்தபடி "ஹேய் வந்தனா வாங்க, உங்க ஹெல்த் இப்ப எப்படி இருக்கு? அண்ட் காங்கிராட்ஸ்" என சொல்லி அவளது கையை குலுக்கினான். "பாக்கவே ரொம்ப டல்லா இருக்கீங்களே" என்றான். "தாங்க் யு மிதுன், அது பத்தி பேச தான் வந்தேன். நேத்து தான் ஜாயின் பண்ணேன், பட் சமாளிக்க முடியல. மார்னிங் சிக்னஸ், ட்ராவல் டயர்ட்னஸ் எல்லாமே ரொம்ப அதிகமா இருக்கு. சம்பளமில்லா விடுப்புல இன்னும் கொஞ்சம் நாள் போகலாமான்னு யோசிக்கறேன்" என ஆரம்பித்து தேவகிக்கும் அவளுக்கும் நடந்த உரையாடல்கள் பற்றியும் ஒரு ப்ரொஜெக்ட்டிற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது பற்றியும் சொல்லி முடித்தாள். "கம்பெனி பாலிசி படி நீங்க விடுப்பு எடுக்கறதுக்கு தகுதி உடையவங்க தான். பில்லிங்ல இன்னும் போகல, உங்களுக்கு இன்னும் ரொம்ப பிளான் பண்ணலேன்னா ப்ரொஜெக்ட்க்கு வேற யாராவது கூட ஆள் பார்த்துக்கலாம். என் சைடுல எந்த ப்ராப்ளமும் இல்ல, ப்ராஜெக்ட்க்கு தேவகி தான் சொல்லணும். இல்லேனா ஷங்கர் கிட்ட பேசுங்க (ஷங்கர், டெலிவரி மேனேஜர்). உடம்ப பாத்துக்கோங்க" என மிக சாமர்த்தியமாக HR பாணியில் பேசி அவளுக்கு விடை கொடுத்தான்.
இங்கே அவரவர்க்கு அவங்க சேப்டி முக்கியம். அப்ப எனக்கும் அப்படி தான இருக்கும்? முப்பது பேரில் இருந்து இரண்டு பேராக வேலை செய்த வரை அந்த ப்ராஜெக்ட்டில் நான் இருந்திருக்கிறேன், திரும்பவும் அதே ப்ராஜெக்ட்டிற்கு தனி ஆளாக கவனித்துக்கொள்வதற்கு என்னை பரிந்துரைத்ததிலேயே என்னுடைய திறன் வெளிப்பட்டிருக்கிறது தானே. இவ்வளவு நாட்கள் நான் எந்த காரணங்களும் சொல்லியதில்லை. எனக்கு ஒரு தேவை என்று வரும் போது நானே தான் எனக்காக பேச வேண்டும், கம்பெனி எனக்காக என்று தானாக முன் வந்து யோசிக்காது. அவர்கள் பேசும் சில வார்த்தைகளை மனதில் ஏற்றிக்கொள்ளாமல் இருக்கவும் பழகிக்க தான் வேணும். எப்படியும் இன்னும் சில நாட்கள்ல இந்த சிக்னெஸ் சரி ஆகிரும். ரெண்டு மூணு மாசத்துல அம்மாவும் கூட வந்துருவாங்க. அப்புறம் எதுக்கு நா வேலைய ரிசைன் பண்ணனும்? அவனவனுக்கு வேலை கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிற காலகட்டத்தில் யாரோ ஏதோ சொன்னார்கள் என்பதற்காக வேலையை விடுவது சரியா என்ன? தவிர இப்போது நான் வேலையை விட்டால் அவர்கள் சொன்னது உண்மை என்றாகி விடும். பின்னாளில் ரொம்ப முடியவில்லை என்று ஒரு நிலைமை வந்தால், வந்தால் அன்றைய தினத்தில் முடிவு செய்து கொள்ளலாம்.
ஒரு தீர்மானத்திற்கு வந்தவளாக அவளது இருக்கைக்கு சென்று, முகத்தில் அரும்பியிருந்த வியர்வை துளிகளை கைக்குட்டையால் துடைத்து கொண்டாள். பின்னர் சிறிது சாத்துக்குடி பழச்சாறை அருந்தி ஆசுவாசப்படுத்திக்கொண்டு தேவகிக்கு விடுப்பு ஈமெயில் அனுப்புவதற்கு விசைப்பலகையில் விசைகளை தட்டலானாள்.
No comments:
Post a Comment