தாம்பரம் ஸ்டேஷனிலிருந்து ரயில் மெதுவாக நகரத்தொடங்கியது. குதூகலத்துடன் வைபவ் "பை'ப்பா, வீக்எண்டு ஊர்ல மீட் பண்ணுவோம்" என்று பெரிய மனுஷ தோரணையில் சொன்னான். கோடை விடுமுறை ஆரம்பித்திருந்ததால் கூபே முழுவதும் குழந்தைகளும் அவர்களது பெற்றோர்களும் நிறைந்திருந்தனர். புதிய கோச் ஆதலால் பளிச்சென்று இருந்தது, ஜன்னல் கூட ஸ்லைடிங் டைப்பாக இருந்தது. பொதுவாகவே வைபவிற்கு பயணங்கள் மிகவும் பிடிக்கும், இன்று அதிகப்படியான உற்சாகத்துடன் இருந்தான். அதற்கு காரணம் அவனுக்கு என்று தனி பெர்த் புக் பண்ணி இருந்தது தான்.
வைபவிற்கு 8 வயது ஆகிறது, எனினும் எப்பொழுதும் ரயில் பயணத்தின் போது அவன் தன் அம்மாவுடன் ஒரே பெர்த்தில் தான் படுத்துக்கொள்வான். கடந்த இரண்டு முறையும் கூட அவனுக்கு தனி பெர்த் புக் செய்திருந்த போதும் அவனை தனியே படுக்க விட அனுவிற்கும், தருணிற்கும் மிகவும் பயமாக இருந்ததால் அவன் அனுவுடனே படுக்க வேண்டியதாயிற்று. இந்த முறை கண்டிப்பாக அவனை தனி பெர்த்தில் விடுவதாக வீட்டிலேயே அனு சொல்லி இருந்தாள்.
வண்டி நகரத்தொடங்கியதுமே "எப்பம்மா பெர்த் போடலாம்? நா மிடில் பெர்த்ல போயி உக்காந்து வேடிக்கை பாக்கணுமே" என்று கேட்கத் தொடங்கியவனை "இப்பவே முடியாது அப்பு, செங்கல்பட்டு வரட்டும் அப்புறம் போட்டுக்கலாம். அது வரைக்கும் இந்த சீட்லேயே உக்காந்து வேடிக்கை பாரு" என்று ஒருவாறாக சமாளித்து வைத்தாயிற்று. சிறிது நேரத்திற்கெல்லாம் அருகில் இருந்த குடும்பமும் பெர்த்தை போடுவதற்கு தயாரானார்கள். ஊதி வைத்திருந்த ஏர் பில்லோ, போர்வை சகிதமாக மிடில் பெர்த்தில் ஏறிய வைபவின் முகத்தில் இமயமலையில் ஏறி உட்கார்ந்து விட்டதோர் பெருமிதம். "அம்மா, ஸ்டோரி புக்.." என்றவனிடம் கைப்பையை திறந்து ஒரு ஹாரிட் ஹென்றி புத்தகத்தை கொடுத்துவிட்டு தனக்கான படுக்கையை இடலானாள். பார்வையை மீண்டும் ஒரு முறை கூபே முழுவதும் ஓட விட்டாள், நிறைய குழந்தைகள் இருந்ததால், பெற்றோர் யாராவது ஒருவர் மாற்றி ஒருவர் கண்டிப்பாக நைட் முழுவதும் முழித்து இருப்பார்கள். கொஞ்சம் பயமின்றி இருக்கலாம் என தேற்றி கொண்டாள். இன்றைய கால கட்டத்தில் குழந்தை வளர்ப்பில் அவ்வளவு விழிப்புடன் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோமே!
கொண்டு வந்திருந்த பையை அவன் கீழே விழுந்து விடாமல் இருப்பதற்கு ஏதுவாக முட்டு கொடுத்து வைத்து விட்டு அவனுக்கு குட் நைட் சொல்லி தன் பெர்த்தில் படுத்தாள். 8 வருடமாக குறுக்கி கொண்டு, காற்று கூட புக இடமில்லாமல் இருந்த பெர்த் இன்று மிகவும் விசாலமாக இருப்பது போன்று தோன்றியது அனுவிற்கு. மணி பத்து தான் ஆகி இருந்தது, எப்படியும் உடனே தூக்கம் வராது, எனவே மொபைலை எடுத்து நோண்டி கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து வைபவ் உறங்கி விட்டானா என அவன் பக்கம் திரும்பி பார்த்தாள். அவன் உறங்காமல் விழித்து கொண்டே அசையாமல் கண்ணை மூடி படுத்திருப்பதில் கில்லாடி, எனவே அவள் படுத்திருந்த இடத்தில் இருந்து அவன் உறங்கி விட்டானா என கண்டு பிடிக்க முடியவில்லை. பேசாமல் இன்றிரவு அவனை கண்டு கொள்ளாமல் விட்டு விட வேண்டியது தான் என நினைத்து கொண்டாள்.
சில்லென்று வீசிய தென்றலும், ரயிலின் மெல்லிய தட தட ஓசையும் அனுவை மெல்ல மெல்ல அதன் வசப்படுத்த துவங்கின. மொபைலை பைக்குள் வைத்துவிட்டு குப்புற படுத்து வேடிக்கை பார்க்கலானாள். அது சித்ரா பௌர்ணமியின் முந்தின நாள், ரம்மியம்மான நிலவொளி, தெளிவான வானம், அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மினுக்கிய நட்சத்திரங்கள், அவ்வப்போது ஒரு சிறிய கீற்றாய் மின்னலின் ஒளி, ரயிலின் வேகத்திற்கு ஈடு கொடுத்து எதிர் திசையில் ஓடிய காட்சிகள்!! காட்சிகள் மாறினாலும் ரம்மியம் மாறவில்லை. அவ்வப்போது ரயில் ஸ்டேஷனில் நிற்கும் போது கேட்ட பால், டீ, சாயா என்ற குரல் அனுவை பல வருடங்கள் பின்னோக்கி அழைத்து சென்றது.
பள்ளி, கல்லூரி படிக்கும் காலங்களில் இரவு நேர பேருந்து பயணங்களின் போது, பேருந்து நிலையங்களில் நிறுத்தும் சமயம் அவளது தந்தை சூடான வேகவைத்த கடலை அல்லது வறுகடலை வாங்கி தருவார். இரவு நேர உலகிற்கு என்று ஒரு அழகு உண்டு, எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், நிதானமாக இருப்பது போல தோன்றும். அதிலும் இது போன்ற ஒரு இரவு நேர ஜன்னலோர பயணம், அத்தி பூத்தார் போல என்றோ ஒரு நாள் கிடைக்கும் தருணம். அதை துளி கூட விடாமல் மொத்தமாக வாரி கொள்ள மனம் எத்தனித்தது, கண்கள் இமைக்க மறந்தன. இந்த ஒரு இரவிற்கு மட்டும் நான் ஒரு மினியானாக மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும். இந்த பெர்த்தில் உட்கார்ந்து கொண்டு வர முடியுமே என சிறு பிள்ளைதனமாக தோன்றினாலும் ஏசி காரும், ஸ்லீப்பர் பஸ்ஸும் தர முடியாத சுகமல்லவா அது!!!