அன்று உகாதி என்பது காலை எழுந்து வாட்ஸாப்ப் மெசேஜ் பார்த்த பிறகு தான் தெரிந்தது. சனிக்கிழமை ஆதலால் நிதானமாக 7.30 மணிக்கு தான் பொழுது விடிந்தது. ஒரு மாத காலமாகவே வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல் நிலை சரி இல்லாமலே இருந்து கொண்டிருந்தால் சமையலும் சிம்பிள் ஆகவே இருந்து வந்தது. சரி இன்றாவது கொஞ்சம் நாவிற்கு ருசியாக சமைக்கலாம் என்று நினைத்து அன்றைய மெனுவை பிளான் பண்ணி கொண்டே படுக்கையை சரி பண்ணினேன். 11 மணிக்கு பாத்திரம் கழுவும் அக்கா வந்து விடுவார்கள் என்பதால் காலை சிற்றுண்டிக்கு பிறகு மட மட என்று வேலையை பார்க்க ஆரம்பித்தேன்.
10.30 மணிக்கு கைபேசி அழைத்தது, டிஸ்பிளே அப்பா என்றது. விஷயம் என்னவென்று யூகித்தவாறே ஒரு சிறு டென்ஷனுடன் போன்'ஐ அட்டென்ட் செய்தேன். ''காலை 10.30 மணிக்கு பெரியம்மா தவறிட்டாங்க டா'' என்றார். இதயம் கனத்து போனது, கண்கள் கண்ணீர் துளிகள் பூத்தன. ஒரு மாத காலத்திற்கும் மேலாகவே உடல் நலமின்றி ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணி இருந்தார்கள். எப்படியாவது சரி ஆகி வீட்டிற்கு திரும்பி வந்து விடுவார்கள் என்று தான் அனைவரும் எதிர் பார்த்து கொண்டிருந்தோம். மிகவும் வயதானவர் என்றாலும், அவர் எப்போதும் மன திடமும் தேக உறுதியும் உடையவர். தன் வேலைகளை தானே செய்து கொள்வார். எப்பவும் மனதையும் உடலையும் பிஸி'யாக வைத்திருப்பார்.
வித விதமான பலகாரங்கள் செய்வது, வயர் கூடை பின்னுவது, க்ரோஷா நூலில் பல விதமான டிசைன்ஸ் போடுவது என எதையாவது செய்து கொண்டே இருப்பார். மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கு பெரியம்மா என்றால் அவருடைய சிரித்த முகமும் கணீரென்ற குரலும் தான் ஞாபகத்திற்கு வரும். சிறு வயதில் என் வயதையொத்த பிள்ளைகள் யாரும் இல்லாததால் எப்போதும் பெரியம்மா வீட்டில் தான் இருப்பேன். எனக்கு ஞாபகம் தெரிந்து அவர் தான் எனக்கு கிடைத்த முதல் தோழி. டீச்சர் விளையாட்டு, சோழி, தாயம், சீட்டு விளையாடுவது, வித விதமாக கதை சொல்வது என நேரம் போவதே தெரியாமல் அவர் வீட்டில் இருப்பேன், எனவே எனக்கு அவர் மேல் ஒரு தனி பிரியமும் மரியாதையும் உண்டு. அவர் மட்டுமல்ல, அண்ணன்கள் மதினிமார்கள் என அனைவரின் செல்ல பிள்ளையாக நான் வளர்ந்தேன்.
ஒரு கால கட்டத்திற்கு பிறகு வேலை நிமித்தமாக அவர்கள் குடும்பம் சொந்த ஊருக்கே மாற்றலாகி போன பொழுது அவரது அன்பை மிகவும் மிஸ் பண்ணினேன். ஆனால் சிறு வயதில் அதை பெரிதாக வெளிகாட்டியதில்லை. அதன் பிறகு ஊருக்கு போகும் போது எப்போது அவர்களை பார்த்தாலும் ''என்னடி இந்து எப்படி டி இருக்க?' என வாஞ்சையாக கேட்பார்கள். என்னை மட்டும் அல்ல, எல்லா பேத்திகளையும் எப்பொழுதும் டி என்று தான் சொல்லுவார்கள், அதில் அப்படி ஒரு அன்பு கலந்திருக்கும். இனியும் அந்த உரிமை கலந்த 'டி'யை யாரிடம் கேட்பேன் என நினைக்கையில் மனம் வலித்தது. அவரது வீட்டின் ஒவ்வொரு மூலையும் சிறு வயதின் ஒரு நினைவலையை கொண்டு வந்து மனதை என்னவோ செய்தது. அவ்வப்போது பொங்கி பொங்கி வந்த கண்ணீரை அடக்கி கொண்டேன். மரணம் வெல்ல முடியாத எதிரி. மனதின் சலனம் தானே மெல்ல அடங்கும், அவரின் மலர்ந்த முகமும், அன்பு வார்த்தைகளும் என்றும் நினைவை விட்டு நீங்காது உடனிருக்கும்.
No comments:
Post a Comment