"அப்பா என் பிரெண்ட் ஒரு பம்பரம் வச்சிருக்கான், அது ரொம்ப சூப்பர்'ஆ இருக்கு. எனக்கும் அது மாதிரி ஒண்ணு வாங்கி தருவீங்களா?" என ஆஃபீஸிலிருந்து வீட்டிற்குள் நுழைவதற்கு முன்னே காலை கட்டி கொண்டு கேட்ட மகனை வாரி அணைத்தபடி "வாங்கித்தறேனே" என்றான் தருண். பொதுவாக தருண் மிகவும் தாமதமாக தான் அலுவலகத்தில் இருந்து வருவான். அன்று தலை வலி மண்டையை பிளந்து கொண்டிருந்ததால் சீக்கிரமே கிளம்பி வந்திருந்தான். பசி வேறு வயிற்றை கிள்ளியது. "மதியத்தில் இருந்து மாறி மாறி மீட்டிங், கால்ஸ் னு பயங்கர வேலை இன்னைக்கு. காபி குடிக்க கூட நேரமில்லை அனு" என சொன்னவனிடம் "சப்பாத்தி சூடாக போட்டு வைத்திருக்கிறேன், சீக்கிரம் ரெப்பிரெஷ் பண்ணிட்டு வாங்க" என்றாள்.
"இன்னைக்கு டின்னர் டைம் ஜாலியா இருக்குப்பா நீங்க சீக்கிரமே வந்துட்டதால" என்று சொன்ன வைபவ்'ன் தலையை செல்லமாக வருடியபடி பேசிக்கொண்டே இரவு உணவை சாப்பிட்டு முடித்தனர் மூவரும். தருணின் தலை வலியும் சற்றே தேவலாம் போலிருந்தது. அன்று அவனும் வைபவுடன் சேர்ந்து சீக்கிரமே உறங்கி விட்டான். மறுநாள் மறக்காமல் அவன் சொன்னபடி வைபவ்'ஐ கூட்டி போய் அவன் கேட்ட பம்பரத்தை வாங்கி கொடுத்தான். அது ஒரு பிளாஸ்டிக் பம்பரம், நூல் போன்ற ஒன்றை இழுத்து விட்டால் மேலிருக்கும் பம்பரம் சுற்றும். தான் கேட்ட பம்பரம் கிடைத்ததில் வைபவ்'ற்கு மட்டற்ற மகிழ்ச்சி. "நா இப்பவே போய் என் பிரெண்ட் கூட விளையாடவாம்மா ப்ளீஸ்" என ஆசையாக கேட்டவனை "சரி போய் காரிடோரில் விளையாடுங்கள்" என்று அனுப்பி விட்டு அன்றிரவு ஊருக்கு போவதற்கு தேவையானவற்றை எடுத்து பேக் செய்ய ஆரம்பித்தாள்.
சிறிது நேரத்திற்கெல்லாம் வைபவ் "அப்பா இந்த பம்பரத்தின் நூல் சிக்கி விட்டது, சரியாகவே விட முடியவில்லை" என சிணுங்கியபடி வந்தான். அதை சரி செய்து கொடுத்து விட்டு "இந்த பம்பரம் இப்படி தான் டா ஆகும். வேற ஒரு டைப் ஆப் பம்பரம் இருக்கு, அது இன்னும் சூப்பர்'ஆ இருக்கும். "நாம இந்த வீக்எண்டு ஊரில் வாங்குவோம்" என்று சொல்லி சமாதான படுத்தி வைத்தான். அனுவும், வைபவும் முதலில் கிளம்பி செல்ல இரண்டு நாள் கழித்து தருண் கிளம்பி வந்தான். காலையில் கண் விழித்து தருணை பார்த்ததுமே "பம்பரம் வாங்க நாம எப்ப போலாம்பா?" என்று வைபவ் கேட்டான். "போலாம் டா, இன்னைக்கு எப்ப டைம் கிடைக்குதோ அப்ப போலாம்" என சொன்னாலும் அன்று நாள் முழுவதும் பிஸி'யாகவே போனதால் மாலை 5 மணிக்கு மேல் தான் கடைக்கு கூட்டி போக முடிந்தது. வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் 2 கடைகளில் கேட்ட போதும் "பம்பரமெல்லாம் இப்ப யாருங்க கேக்கறாங்க, பஜார் ல கெடைக்குதான்னு பாருங்க" என்று பதில் வந்தது.
"சரி டா, நம்ம 7.30 மணிக்கு அண்ணாவை பஸ் ஸ்டாண்டில் டிராப் செய்ய போகும்போது வாங்குவோம்" என மறுபடி தருண் சொன்னான். "வேணும்னா பைக் எடுத்துட்டு போய் வாங்கிட்டு வந்துருங்க மாப்பிளை, நா கொஞ்ச நேரம் கழிச்சு கெளம்பிக்கறேன்" என அனுவின் அண்ணா சொல்ல, "பரவால்ல மச்சான், எப்படியும் கொஞ்ச நேரத்துல வெளில போகணும்ல அப்ப போய் வாங்கிக்கறேன். உங்களுக்கு டைம் ஆச்சுல நீங்க கிளம்புங்க" என தருண் சொன்னான். "ஆ, இப்பவே எனக்கு விளையாடனும் போல இருக்கே" என கேட்ட மகனை சமாதான படுத்துவது அவ்வளவு கஷ்டமாக இல்லை. அவனது ஆச்சி வீடு அந்த காலத்து மச்சி வீடு. வைபவிற்கு அந்த வீடு மிகவும் பிடிக்கும், மாடி அறை, மரத்திலான படிக்கட்டுகள், கார் பார்க்கிங், திறந்த வெளி, மாடியிலிருந்து பார்த்தால் முற்றம் வழியாக கீழே இருப்பவர்களை பார்க்கலாம், பக்கத்திலேயே மாமா வீடு என இங்கும் அங்கும் ஓடி கொண்டே இருப்பான். அதனால் அன்றும் அவன் பம்பரத்தை மறந்து விட்டு விளையாட போய் விட்டான். சிறிது நேரத்தில் காலிங்க் பெல் சத்தம் கேட்க, கதவை திறக்க சென்ற அனுவின் அண்ணண் மகன் ஒரு பம்பரத்தோடு உள்ளே வந்தான். அதை பார்த்த அனு "வைபவ் பாருடா, மாமா உனக்காக பம்பரம் வாங்கி கொண்டு வந்து குடுத்துட்டு போயிருக்காரு என சந்தோஷத்தில் கூவ", வைபவ் துள்ளி குதித்து ஓடி வந்தான். வாயெல்லாம் பல்லாக "தாங்க் யு மாமா" என்று கூறியபடி புது பம்பரத்தை பார்கலானான்.
No comments:
Post a Comment