Monday, April 22, 2019

பம்பரம் - பகுதி 2

  Part 1

பளிங்கு போன்ற வெள்ளை நிறத்தில், கூம்பு வடிவத்தில் இருந்த அந்த பம்பரம் பிளாஸ்டிக்கால் ஆனது. பல வருடங்களுக்கு பிறகு பம்பரத்தை பார்த்த தருணும், முதன் முதலாக பம்பரத்தை பார்த்த வைபவும் நான் தான் முதலில் விடுவேன் என போட்டி போட்டு கொள்ள, வீடு விளையாட்டு மைதானமானது. தருண் எவ்வளவு முயற்சி செய்தும் சரியாக விட முடியவில்லை. "உங்களுக்கே வர மாட்டேங்குதே குட்டி பையனுக்கு எப்படி இதெல்லாம் பொறுமையாக செய்ய முடியும்" என அனு அங்கலாய்த்துக்கொண்டாள். "இது ஒன்றும் அவ்வளவு கடினம் இல்லை, அவன் ஈஸியா கத்துக்குவான்" என சொல்லி கொண்டே மீண்டும் முயற்சித்தான். "ஒரு வேளை டைல்ஸ்ல வராதோ, கார் பார்க்கிங்ல போயி ட்ரை பண்ணுவோம் சித்தப்பா" என ஜெகன் கேட்டான்.

ஜெகன் அனுவின் அக்கா பையன், பெங்களூரில் தங்கி வேலை பார்க்கிறவன். இப்போது ஜெகன் லாவகமாக பம்பரத்தை விட அது மிக அழகாக சுற்றியது. "அட அப்ப தரை தான் காரணம்" என்றவாறே தருண் மீண்டும் முயற்சித்தான். ஆனால் சரியாக வரவில்லை. "என்னப்பா இது இப்படி ஆட்டங்காட்டுது, நான் விடுவதாக இல்லை" என மறுபடி விட்டான். இந்த முறை டைல்ஸ்'லேயே அழகாக சுற்றியது. நானும் ட்ரை பன்றேன் என வைபவ் வர, அவனது பிஞ்சு கைகள் அந்த பம்பரத்தையும் கயிறையும் எப்படி பிடிக்க வேணும் என்று கற்று கொண்டிருந்தன. "நீயும் ட்ரை பண்ணு சக்தி" என அனுவின் அண்ணன் மகனிடம் தருண் பம்பரத்தை கொடுத்தான். இரண்டு முறை முயற்சித்து பார்த்தான், சரியாக வரவில்லை.  அனுவிற்கும் ஆசையாக இருந்தது, கயிற்றை சுற்றி எப்படி விட வேண்டும் என்று கவனமாக கேட்டுக்கொண்டு அதே மாதிரி செய்தாள், பம்பரம் மிகவும் அருமையாக 'தலை கீழாக' சுற்றியது. "சூப்பர் அனு, பக்கா... உன்னால் மட்டும் தான் இப்படி அருமையாக செய்ய முடியும்" என தருண் அவளை கலாய்த்தான்.

அவனை பொய் கோபத்துடன் முறைத்தபடி "அப்பா, நீங்க ட்ரை பண்ணுங்க" என அவள் தந்தையிடம் கொடுத்தாள்.  "இல்லடா, நானெல்லாம் விட்டு பல வருடம் ஆகிவிட்டது, நான் வேடிக்கை பார்க்கிறேன்" என்றவரை "பரவால்லப்பா, ஒரு தரம் ட்ரை பண்ணுங்கள்" என கூறி பம்பரத்தை அவர் கையில் அனு கொடுத்தாள். அவருக்கும் அந்த பம்பரம் டிமிக்கி கொடுத்தது. ஆனால் ஒருவரும் விடுவதாயில்லை, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஒருவர் மாற்றி ஒருவர் முயற்சித்து கொண்டே இருந்தனர். "டேய் ஜெகன் உனக்கு பஸ்ஸுக்கு டைம் ஆகிருச்சு பாரு, சீக்கிரம் கெளம்பு" என ஜெகனின் அம்மா கூற இன்னும் ஒரு தடவ, இன்னும் ஒரு தடவ என்று பல தடவைகள் போய் கொண்டே இருந்தன. வைபவ் பைக் ஹார்ன் அடித்தபடி "அண்ணா சீக்கிரம் வாங்க நேரமாச்சு" என்று கூப்பிட, ஜெகன் "சரி நம்ம சென்னைல மீட் பண்ணும்போது ஆட்டத்தை தொடருவோம்" என்று சொல்லிவிட்டு எல்லாருக்கும் பை சொல்லி புறப்பட்டான்.

அன்றிரவே அனுவும் புறப்பட வேண்டியிருந்ததால், சாப்பிட்டு விட்டு பேக்கிங்கை முடிக்கலாம் என அவளும் பிற வேலைகளை பார்க்கலானாள். வீடு திரும்பிய தருண் இம்முறை மேலும் 4 பம்பரங்களை வாங்கி கொண்டு வந்திருந்தான். இந்த முறை மரத்தினாலான பம்பரம் தேடி கண்டு பிடித்து வாங்கிவிட்டேன் என வெற்றி களிப்போடு சொன்னான். "அது சரி எதுக்கு 4?" என அனு கேட்டதற்கு, "இருக்கட்டுமே என்ன இப்ப? அவன் நண்பர்களுக்கும் கொடுக்கட்டும்" என்றவாறே மரத்திலான பம்பரத்தில் கயிற்றை சுற்றலானான். "சாப்பிட வரலையா, ட்ரெயினுக்கு நேரமாகிருமே" என்றாள் அனு.  "ஒரே ஒரு தடவை" என்று சொல்லிவிட்டு விட அந்த வழவழப்பான தரையில், எந்த ஆர்ப்பாட்டமும் ஆரவாரமும் இல்லாமல், ஒரே சீராக, தங்கு தடையின்றி, அந்த பம்பரம் சுற்றியது. ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த வைபவ் ஒரு நிமிடம் அப்படியே அதன் அருகில் உட்கார்ந்து இரண்டு கன்னங்களிலும் கை வைத்துக்கொண்டு அதை ரசித்து பார்கலானான்.

"நா இப்ப தான் முதல் தடவையா ஒரு பம்பரம் சுத்தறத பாக்கறேன், எவ்வளவு அழகா இருக்கு. அந்த பிளாஸ்டிக் பம்பரம் கூட டைல்ஸ் நடுல இருக்க கோடுல எல்லாம் தட்டு தடுமாறி சுத்துச்சு. ஆனா இது எவ்ளோ அழகா சுத்துதுல! ஓல்ட் இஸ் கோல்ட்... அதுல மாற்று கருத்தே இல்ல" என்று வியந்தாள். "சரி சரி, மட மடன்னு சாப்டுட்டு கிளம்பலாம். ஆட்டோ 8.40க்கு வர சொன்னா சரியா இருக்கும்ல" என்றபடியே வைபவிற்கு தோசையை ஊட்டி விடலானாள். கிச்சனில் இருந்து வந்த அம்மாவும் பம்பரத்தை கையில் எடுத்து கயிறை சுற்றி ஒரு முறை முயற்சி செய்ததும், வீடே அன்று 'பம்பர'களை கட்டியிருந்தது. "பேக் எல்லாம்  ரெடியா இருக்கா?" என அப்பா கேட்க "எல்லாம் ரெடீப்பா, ஆட்டோ வர 10 நிமிஷம் இருக்கு. இன்னும் கொஞ்ச நேரம் பம்பரம் விடலாம்" என்று அனு சிரித்தபடி கூற, பம்பர களேபரம் தொடர்ந்தது.

அடுத்த நாள் வீட்டிற்கு சென்று ரிபிரெஷ் ஆனதும், தருண் பம்பரத்தை மீண்டும் எடுத்தான். "வைபவ் இது உனக்கு, என்கிட்ட இருக்கத கேட்ட பாத்துக்கோ" என செல்லமாக கூற.. மீண்டும் பம்பரம்...

இப்போது வைபவும் பம்பரம் விட கற்று கொண்டான். "அப்பா, சுத்துது" என மகிழ்ச்சியில் குதித்தான். "ஏய், நானும் ஒருக்க ட்ரை பன்றேன் டா" என அனு கேட்டாள்.  4, 5 முறை முயற்சித்தும் எப்போதும் போலவே தலை கீழாக தான் சுத்தியது. "நீ உன் கையை லேசாக திருப்பனும், அப்ப தான் அது நேராக சுற்றும்" என்று தருண் மீண்டும் பொறுமையாக சொல்லி குடுத்தான். இதோ, அவளுக்கும் பம்பரம் வெற்றிகரமாக சுற்றிவிட்டது. "ஹே.." என மூவரும் ஒரே நேரத்தில் உற்சாக குரல் எழுப்பினர். இப்போது வைபவ் மறுபடியும் அதே கேள்வியை கேட்டான். "அம்மா, நா பம்பரம் எடுத்துட்டு போயி காரீடோர்ல  விளையாடட்டுமா". அவனது நண்பனும் சேர்ந்து கொள்ள, "இந்தாடா, இது உனக்கு என்று கூறியபடி வைபவ் நண்பனுக்கும் ஒன்று கொடுக்க, அவர்களது மகிழ்ச்சி இரட்டிப்பானது.

நம்மில் பலரும் இந்த சந்ததியினருக்கு பாரம்பரியம் தெரியவில்லை, விட்டு கொடுப்பதில்லை, வெளியில் சென்று விளையாடுவதில்லை  என குறை பட்டு கொள்கிறோம். உண்மையில் அவர்களுக்கு டிவியையும், மொபைல் போனையும், சினிமாவையும் சிறு வயதிலேயே பெற்றோராகிய நாம் தானே அறிமுகப்படுத்தினோம்? அவர்களுடன் செலவிட நமக்கு தான் நேரமும் பொறுமையும் இருப்பதில்லை என்பது தானே உண்மை. முடிந்த வரையில் நம்மாலான முயற்சி செய்து குழந்தைகளை குழந்தைகளாகவே வளர விடுவோமே.  

No comments:

Post a Comment

Learning Beyond Textbooks - Life Skills - Child Growth

#Learning_Beyond_Textbooks #Life_Skills A home is the first environment where children can playfully learn a plenty. Traditional textbook le...