ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.30 மணியாதலால் ஹாரிங்டன் சாலை எப்போதும் இருக்கும் பரபரப்பை இழந்திருந்தது. வாகன நெரிசல் இல்லாததால் துளசி அந்த சாம்பல் நிற ஃபோர்ட் ஃபிகோவை 70 கிமீ வேகத்தில் விரட்டிக்கொண்டிருந்தாள். உனக்கென்ன வேணும் சொல்லு என்று மயக்கும் குரலில் பென்னி தயாளும் மஹதியும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடிக்கொண்டிருந்தார்கள். "கனவுகள் தேய்ந்ததென்று கலங்கிட கூடாதென்று" அவர்கள் பாடிக்கொண்டிருக்க விழியோரம் எட்டிப்பார்த்த துளி கண்ணீரை அம்மாவுக்கு தெரியாமல் நாசூக்காக விரல் நுனியால் துடைத்த வைஷாலியை துளசி கண்ணாடி வழியே கவனிக்க தவறவில்லை. ஏதும் பேசாமல் சாலையிலேயே கவனம் செலுத்தினாலும் வீட்டில் நடந்த விஷயங்கள் காட்சி மாறாமல் கண் முன்னே தோன்றின.
"அப்பா, நா வசந்த்னு ஒருத்தர விரும்பறேன். ரொம்ப நல்ல டைப். நீங்க தான்.." என்று வைஷாலி அவள் அப்பாவிடம் சொல்ல ஆரம்பிக்க, அவள் முடிக்கும் முன் அவர் உச்ச ஸ்தானியில் கத்த ஆரம்பித்து விட்டார். "இதற்க்கு தான் உன்னை படிக்க அனுப்பினோமா, நீ வேலைக்கு எல்லாம் ஒன்னும் போயி கிழிக்க வேணாம், வீட்லயே இரு போதும். சீக்கிரமே உனக்கு ஒரு நல்ல வரனா பாக்கறேன்; வாய தொறக்காம போயி மேடைல உக்காரு" என்று ருத்ரதாண்டவம் ஆடி விட்டார். கணவரின் இத்தகைய கோபம் துளசிக்கே ஆச்சர்யாமாயிருந்தது. ஆனால் அவளும் வைஷாலி இப்படி சொல்லுவாள் என்று நினைக்கவில்லை.
ஏதோ கொஞ்ச நேரத்தில் கணவர் சாந்தமாகிவிடுவார், என்ன ஏதுவென்று விசாரிக்கலாம் என நினைத்தால், அவர் உடனே தரகருக்கு கால் பண்ணுவதை பார்த்து வேகமாக தடுத்தாள். "அவ லவ் பண்ற பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கறோமோ இல்லையோ. ஆனா அவசரத்துல எடுத்தோம் கவுத்தோம்னு ஒரு இடத்தை பாத்து முடிச்சி வைக்கறதுக்கு நா சம்மதிக்க மாட்டேன். அதுக்காகவா நாம அவளோ பாசத்தை கொட்டி அவளை வளத்தோம். கொஞ்சம் ஆறப்போட்டு நிதானமா யோசிப்போம், அவ இன்னைக்கு பிளான் படி பெங்களூர் கெளம்பட்டும். ஒரு வாரத்துல எதுவும் மாறிராது" என்று வலுக்கட்டாயமாக அவரை சம்மதிக்க வைத்தாள்.
அரை மனதாக சரி என்று சொன்ன போதும் அதன் பிறகு அவர் வைஷாலியிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. "நா போயிட்டு வரேன்பா" என்று அவள் சொன்ன போதும் கூட முகத்தை கூட பார்க்காமல் தலையை மட்டும் அசைத்தார். துளசியும் வேறு எதுவும் பேசாமல் "சரி கெளம்பு, நா வந்து உன்ன சென்ட்ரல்ல ட்ராப் பண்றேன்" என்று மட்டும் சொன்னாள். சென்ட்ரலுக்கே உரித்தான ஜன நெரிசலில் நீந்தி மூன்றாம் பிளாட்ஃபாரத்திற்கு துளசியும் வைஷாலியும் வந்து சேர்ந்தனர். பெங்களூர் எக்ஸ்பிரஸ் கிளம்ப இன்னும் இருபது நிமிடங்கள் இருக்கிறது என்று கடிகாரம் காட்டிக்கொண்டிருந்தது. இருவர் மனத்திலும் ஒரு அமைதியற்ற நிலை உருவாகியிருந்தது. துளசிக்கு முப்பது வருஷத்துக்கு முந்தைய காட்சிகள் மீண்டும் திரையில் தோன்றின. தோளில் கைப்பையும், கையில் பெட்டியும் வைத்துக்கொண்டு கூட்டத்தில் மனோவை கண்கள் தேட, சிறிது நேரத்தில் வேர்க்க விறுவிறுக்க மனோ நடந்து வந்து கொண்டிருந்தான். "சாரி துளசி, பஸ் கிடைக்கல, அதான் லேட்டாகிருச்சு" என்று சொல்லியபடி அவள் கையிலிருந்த வாட்டர் பாட்டிலை வாங்கி மடக் மடக் என்று குடித்தான். கலங்கிய கண்களுடன் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்த துளசியை "ப்ளீஸ் அப்படி பாக்காத துளசி, ரொம்ப சங்கடமா இருக்கு" என்ற மனோவும் துளசியும் கல்லூரியில் நெருங்கிய நண்பர்கள். கல்லூரி முடித்து இருவரும் வேறு வேறு நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்த பிறகும் அவர்களுடைய நட்பு தொடர்ந்து கொண்டிருந்தது. சில மாதங்களாகத்தான் அவர்களுடைய நட்பு அதையும் தாண்டி அவர்களது மனதில் வேர் விட ஆரம்பித்துக்கொண்டிருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.
அவர்கள் விஷயம் அரசல் புரசலாக அவர்கள் பெற்றோருக்கு தெரியவர இருவர் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. "துளசி, நம்ம ரெண்டு பேருக்குமே கரியர் ரொம்ப முக்கியம். நம்ம வேலைக்கு போயி சம்பாதிச்சு தான் ஒரு நல்ல நிலைக்கு வர முடியும் அப்படிங்கறது தான் நம்ம ரெண்டு பேரோட குடும்ப நிலையும் கூட; அதனால நம்ம ரொம்ப காம்ப்ளிகேட் பண்ணிக்க வேண்டாம். நண்பர்களாவே இருப்போம், வேலைல கவனம் செலுத்துவோம். கொஞ்ச நாளைக்கு நமக்கு கஷ்டமா தான் இருக்கும், ஆனா நம்ம பெத்தவங்களுக்காக தான, அதுனால அதுவே தன்னால சரியாகிரும்" என்று அவளை சமாதானப்படுத்தியிருந்தான். அவளுக்கும் அது தான் சரி என்று புரிந்தாலும் மனம் ஏனோ ரணமாய் வலித்தது. கடவுளே இதற்க்கு ஒரு நல்ல வழி கிடைக்காதா என்று மனம் பரிதவித்து.
அந்த நிலையில் தான் பெங்களூர் செல்லும் அவளை வழியனுப்ப அன்று மனோ வந்திருந்தான். "வண்டி கிளம்ப போகுது துளசி, ஏறு" என்று சொல்லியபடி அவளது பெட்டியை கொண்டு போய் அவளது சீட்டில் வைத்தான். "எல்லாம் சரி ஆகிரும், மனச போட்டு அலட்டிக்காத" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே வண்டி நகர ஆரம்பிக்க துளசி ரயிலில் ஏறினாள். படியில் நின்றபடியே அந்த நிமிடம் அப்படியே நின்றிடாதா என்று தவித்தபடி மனோவுக்கு பை சொன்னாள். அன்று தான் அவள் மனோவை கடைசியாக பார்த்தது ரயில் வேகமெடுக்க, உள்ளே போய் சீட்டில் அமர்ந்த பிறகு மனது ஒரு நிலையில்லாமல் தவிக்க கண்ணில் பொங்கி வந்த கண்ணீரை யாருக்கும் தெரியாமல் கர்சீப்பில் துடைத்த வண்ணம் இருந்தாள். எவ்வளவு முயற்சித்தும் கட்டுப்படுத்த முடியாததால் பாத்ரூமிற்குள் சென்று பாரம் தீர அழுது முடித்தாள். வெளியில் வந்தவளின் கண்கள் முகம் எல்லாம் வீங்கி இருக்க பக்கத்திலிருந்த வயதில் மூத்த பெண்மணி "என்னம்மா ஆச்சு" என்று பரிவுடன் கேட்ட அந்த நிமிடம் யாரிடமாவது ஆற்றி விட மாட்டோமா என்பது போல எல்லாவற்றையும் அவர்களிடம் சொல்லி அழுது தீர்த்தாள். மனமும் ஏதோ கொஞ்சம் லேசானது போல இருந்தது. நாட்கள் சென்றால் ஏதாவது வழி கிடைக்கும் என்று நினைத்திருந்தாள். ஆனால் அவள் பெற்றோரோ திடீரென்று ஒரு வரன் வந்து விட்டது, மிகவும் நல்ல இடம் என்று சொல்லி இவளது திருமணத்திற்கு ஏற்பாடு பண்ணிவிட்டனர்.
இன்று அதே இடத்தில், கிட்டத்தட்ட அதே நிலையில் மனதில் பாரத்துடன் தவிக்கும் வைஷாலியை பார்த்து, "நிஜமாவே அவன் ரொம்ப நல்ல பையனா?" என்று கேட்ட அம்மாவை சிறிது நம்பிக்கையுடன் பார்த்த வைஷாலி விஷயம் முழுவதும் சொன்னாள். "சரிம்மா, இது பெரிய விஷயம். யோசிச்சு தான் முடிவெடுக்கணும். நா அப்பாகிட்ட பேசி பாக்கறேன். அது வரைக்கும் நீ அமைதியா இரு. உன்னோட காரீயர்ல கான்செண்ட்ரேட் பண்ணு. நிதானமா ஒரு முடிவெடுக்கலாம். எதுவானாலும் உனக்காக நானும் அப்பாவும் இருக்கோம்ங்கறத மறந்துராத" என்று சொன்ன துளசியை "அம்மா..." என்று இறுக்கமாக அணைத்துக்கொண்டாள் வைஷாலி. அங்கே அன்பு மேலும் பலப்பட்டது!!!
No comments:
Post a Comment