Tuesday, October 15, 2019

நான் வளர்கிறேனே, மம்மியாக!!!

 "ஃபீவர் இருக்கு, கண்ணெல்லாம் எரியுதுன்னு சொல்லிட்டு ரெஸ்ட் எடுக்காம லேப்டாப்ல என்ன பண்ற?" என்று கேட்டபடியே கிச்சனிலிருந்து கரண்டியுடன் வெளிவந்த கணவரிடம் "இல்லப்பா, ஒரு வாரமா நா நெறய விஷயம் நிலுவையில் வச்சிருக்கேன். அப்புவுக்கு வேற செவ்வாய்க்கிழமை ஸ்கூல்ல ஒலிம்பியாட் எக்ஸாம் இருக்கு, அவனாவே ஏதோ ப்ரிப்பேர் பண்ணியிருக்கான், நா கொஞ்சம் ஹெல்ப் பண்ணனும். கொஞ்ச நேரம் கழிச்சு ரெஸ்ட் எடுத்துக்கறேன்" என்று சொன்னேன். "டெம்பரேச்செர் பாத்தியா?" என்ற கேள்விக்கு ஈஈஈஈஈ என்ற இளிப்பை பதிலாக கொடுத்துவிட்டு வேலையை தொடர்ந்தேன். "உன்னை எல்லாம் திருத்தவே முடியாது, அத பாக்கறதுக்கு ரெண்டு நிமிஷம் ஆகுமா" என்று பொய்க்கோபம் காட்டி கடிந்து கொண்டு பாதியில் விட்டு விட்டு வந்த சமையலை தொடர கிச்சனிற்குள் சென்றார். ஒரு வாரமாகவே வீட்டில் கணவர், அம்மா, அக்கா, அப்பா, அப்புறம் மகன் என ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஜுரம் இருந்துகொண்டிருந்தது. ரெண்டு நாளாக என்னையும் விட்டு வைக்கவில்லை. டெம்பரேச்செர் பார்த்தால் மென்டலி சிக் ஆகிவிடுவேன் என்று எண்ணி பார்க்காமலேயே அவ்வப்போது ரெஸ்ட் எடுத்து வேலைகளை எப்போதும் போல செய்து கொண்டிருந்தேன். அன்று சனிக்கிழமை ஆனதால் கணவர் சமையலை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்ல, கொஞ்சம் எக்ஸ்ட்ரா நேரம் கிடைத்தது.

இது போன்ற சம்பவம் எனக்கு மட்டுமல்ல எல்லா அன்னையர்களுக்கும் நடக்கக்கூடியது தான். வீட்டில் மற்றவர்களுக்கு முடியவில்லை என்றால் அவர்களுக்கு பார்த்து பார்த்து சூப், ஜூஸ், கஞ்சி என வைத்துக்கொடுக்கும் நாம் நமக்கு உடல்நிலை சரியில்லாத போது, முடிந்தவரை சமாளிப்போம், என்று வேலைகளை செய்துகொண்டிருப்போம். ஒரு குழந்தை என்று வந்த பிறகு நமக்கு எங்கிருந்து தான் அந்த தைரியமும் வைராக்கியமும் வருமோ தெரியாது.

நானெல்லாம் அதற்கு முன் சின்ன தலைவலி வயிற்று வலிக்கெல்லாம் சுருண்டு படுத்துக்கொள்ளுகிற டைப். பள்ளி, கல்லூரி, மற்றும் அலுவலகத்திற்கு தூசு பெறாத காரணத்திற்கெல்லாம் லீவு போட்டிருக்கிறேன். சில நேரங்களில் மட்டம் போடுவதற்கென்றே போலி காய்ச்சல் வரவைத்திருக்கிறேன்.

அன்னையான பிறகு நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஒன்றா, ரெண்டா.. எல்லாம் சொல்லவே ஒரு போஸ்ட் போதுமா... கல்யாணத்திற்கு முன் எனக்கு ஏதோ ஓரளவிற்கு சமைக்க தெரியும் என்று  தான் நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், கல்யாணம் ஆன பிறகு தான் என் லட்சணம் புரிந்தது. ஒரு தோசையோடு நான் நடத்திய யுத்தம்.. இன்றும் சொல்லி சொல்லி சிரித்துக்கொள்வோம் நானும் என் கணவரும். அதன் பிறகும், ஏதோ எங்கள் இருவருக்கும் வேண்டியதை செய்து கொள்ளும் அளவுக்கு பழகிக்கொண்டேனே தவிர மெனக்கெட்டு எந்த வேலையும் செய்ததில்லை. ஒரு குழந்தை என்று வந்த சில வருடங்களில் தான் அவ்வளவு மாற்றங்களும்..  இப்பலாம் "நீயே நல்ல டேஸ்ட்டா சமைக்கறியா, அதுனால ஹோட்டல் உணவு அவ்வளவு பிடிக்கறதில்லை" என்பார். பிறந்து முதல் சில வருடங்களில் எங்களை அவ்வளவு ட்ரெயின் பண்ணியிருக்கிறான். தூக்கத்தில் தட்டி எழுப்பி கேட்டாலும் சிறு வயதில் அவன் செய்த டார்ச்சர் எல்லாம் ஒன்று விடாமல் ஒப்பிப்பேன்.

முன்னெல்லாம், நேரம் கிடைக்கும் போதெல்லாம் தூங்கிய நான், இப்போது தொடர்ச்சியாக ஒரு ஐந்து மணி நேரம் தூங்கினால் போதும் என்று பழகிக்கொண்டேன். 

வீட்டில் யாரேனும் ஒருவருக்கு லேசாக உடம்புக்கு வருவது போல் இருந்தாலும் உடனே அது இது என்று கைப்பக்குவமாக ஏதாவது மாற்றி மாற்றி செய்து, கொஞ்சம் ஓவரா தான் பண்றோமோனு எனக்கே சில நேரங்களில் தோன்றினாலும், அலர்ட்டா இரு, அலார்ட்டா இருன்னு எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். 

ஒரே பிள்ளை என்பதால் அடிக்கடி போர் அடிக்குது என்ற வசனம் காதிலிருந்து ரத்தம் வருமளவிற்கு கேட்டுக்கொண்டே இருக்கும். வீட்டிலும் வெளியிலும் கிடைக்கும் துரும்பை கூட எப்படி துருப்பாக்கி குழந்தையை எங்கேஜ் செய்வது என்று நிறையவே கற்றுக்கொண்டேன்.

எனக்கு பாடல்கள் கேட்பது ரொம்ப பிடிக்கும். ஆனால் என் மகனுக்கு லிமிடெட் ஸ்கிரீன் டைம், அதாவது குறிப்பிட்ட நேரம் மட்டுமே டிவி பார்க்க அனுமதி. எனவே நாங்களும் அதையே பின்பற்ற ஆரம்பித்து விட்டோம். சிறிது நேரம் பார்த்து விட்டு டிவியை ஆஃப் செய்து விடுவோம். அவன் பள்ளிக்கு சென்றிருக்கும் சமயங்களில் எனக்கு நேரமிருந்தால் ஃபுல் வால்யுமில் பாடல்கள் தவறாமல் ஒலிக்கும்.  அவனுக்காக இது போல் நிறைய விருப்பு வெறுப்புகள் மாறின.

ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் எப்படி வீட்டிற்கும், குழந்தைக்கும் தேவையான விஷயங்களை செய்வது, அது போக என்னுடைய வேலைக்கு எப்படி நேரம் ஒதுக்கி கொள்வது (planning ), அதை எப்படி செயல் படுத்துவது (executing) என்பதையும் படிப்படியாக கற்றுக்கொண்டேன். நிறைய நேரங்களில் நான் செய்ய நினைக்கும் ஒரு விஷயத்தை செய்து முடிக்க நாட்கள், வாரங்கள், மாதங்கள் கூட ஆகும். சில நேரங்களில் பொறுமை இழந்தாலும், வாழ்க்கையில் ஒவ்வொரு தருணத்திலும் நமக்கான ப்ரையாரிட்டி மாறிக்கொண்டே இருக்கும். அதற்கேற்ப நாமும் வளைந்து நெளிந்து காரியங்களை செய்துகொள்ள வேண்டும் என்பதை இன்னும் பழகிக்கொண்டே இருக்கிறேன்.  திரும்பிப் பார்க்கும்போது என் மகனுடன் சேர்ந்து நானும் வளர்ந்து கொண்டிருக்கிறேன்.  நிறைய நிறைய விஷயங்கள், அது சிறிதோ, பெரிதோ, கற்றுக்கொண்டே இருக்கிறேன்.

இதையெல்லாம் சொல்வதற்கு எளிதாக இருந்தாலும் நடைமுறையில் சவாலாகவே இருக்கும். சலிப்புகளும், சவால்களும், சந்தோஷங்களும் நிறைந்தது தான் வாழ்க்கை. ஆணோ பெண்ணோ, ஒரு வயதிற்கு பிறகு விருப்பு வெறுப்பை தாண்டி தான் எல்லாமே செய்துகொண்டிருப்போம். நாம் செய்வது எல்லாமே நமக்கும் நம் குழந்தைகளுக்காகவும் தான். நம் குடும்பத்திற்காக செய்யும் எதுவும் தியாகமில்லை, நம் குடும்பத்தின் ஆரோக்யத்திற்காகவும், மகிழ்ச்சிக்காகவும் நாம் செய்யும் முதலீடு என்று எங்கோ படித்த ஞாபகம். படித்தது பிடித்திருந்ததால் அதை பின்பற்ற முயற்சிக்கிறேன்.

பி.கு இப்படிலாம் எழுதறதுக்கு கூட என்னை டியுன் பண்ணி வச்சியிருக்கறது எதுன்னு உங்களுக்கே நல்லா புரிஞ்சிருக்கும்.


No comments:

Post a Comment

Learning Beyond Textbooks - Life Skills - Child Growth

#Learning_Beyond_Textbooks #Life_Skills A home is the first environment where children can playfully learn a plenty. Traditional textbook le...