"பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத் தேடிப்பார்த்தேன்" எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் எனக்கு இது. அதுவும் இரவு நேர பயணம், இசையில் நனையும் நேரம்... கேட்கவும் வேண்டுமா என்ன? இரண்டு மூன்று வாரங்களாகவே ஏதோ வேலை பளு அதிகமாக இருப்பதாக உணர்ந்தேன். ஆனால் எதையும் குறைக்க முடியவில்லை. இரவில் எனக்கு என்று ஒதுக்கும் சில நிமிடங்கள் கூட கிடைக்கவில்லை. அதனால் இன்று காலை முதலே மனதில் ஒரு இறுக்கம் குடி கொண்டிருந்தது. இரவு உணவு முடித்து பையனும் கணவரும் உறங்க சென்று விட்டால் சிறிது நேரம் கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். "அப்பு ரொம்ப நாளா லேட் நைட் டிரைவ் போகணும்னு கேட்டுட்டு இருக்கானே இன்னைக்கு போலாமா" என்று கணவர் கேட்க, வார நாட்களில் நாங்கள் மூவருமாக சேர்ந்திருப்பதே அபூர்வம், அதனால் அவனது ஆசையை மறுக்க மனமின்றி "போலாமாடா?" என்று பல் துலக்கி உறங்குவதற்கு தயாராகிக்கொண்டிருந்த வாண்டை நான் கேட்க, அடுத்த நொடி கார் சாவியை எடுத்துக்கொண்டு ரெடியாக நின்றான்.
நான் தயாராவதற்கு எடுத்துக்கொண்ட இரண்டு நிமிடம் கூட காத்திருக்காமல், வேகமாக கார் பார்க்கிங்கிற்கு சென்று கார் ஸ்டிரியோவை ஆன் செய்து, பாட்டு போட்டு எபக்ட்டாக ரெடி பண்ணி வைத்திருந்தான். கார் கிளம்பியதும் அப்பாவும் பிள்ளையும் ஏதேதோ பற்றி பேசிக்கொண்டிருந்தனர், அவ்வப்போது பாஸ்ட்டேக், ஏலியன், கவர்ன்மென்ட் என்று அரைகுறையாக என் காதில் விழுந்தாலும், பூங்காற்றிலே, சந்தோஷ கண்ணீரே, தையா தையா, புத்தம் புது பூமி வேண்டும், சந்திரலேகா என்று ஒன்றன் பின் ஒன்றாக வந்த பாடல்களும், இரவின் ரம்மியமும் என்னை முழுவதுமாக ஆட்கொண்டிருந்தன. மனதின் இறுக்கம் குறைந்து, பாடல்களில் லயித்துகொண்டிருந்த போது "ஏன் ஒண்ணுமே பேசாம அமைதியா வர்ற?" என்று கணவர் கேட்க, "அப்படியே ஒரு பஸ்ஸுல, ஜன்னலோர சீட்ல உக்காந்து, ஹெட்செட் போட்டு பாட்டு கேட்டுட்டே ஒரு நைட் ட்ராவல் பண்ணனும். எவ்ளோ ஆனந்தமா இருக்கும்? ரொம்ப நாள் ஆச்சு அப்படி போயி" என்றேன்.
இடது பக்கம் திரும்புவதற்கான இண்டிகேட்டரை கணவர் போட, "அப்பா.... இங்க ஏன் திரும்பறீங்க?" என்று மகன் கேட்டான். "ஏன்டா, வீட்டுக்கு போக வேண்டாமா?" என்று கேட்டவரிடம், "இப்படி போக வேண்டாம், கேளம்பாக்கம் போயி, நாவலூர் போயி போலாம். அப்ப தான் இன்னும் நெறய நேரம் டிரைவ் போலாம்" என்று உற்சாகம் பொங்க சொன்னான். "டேய் அப்படி போனா தேவை இல்லாம டோல் பே பண்ணனும்" என்று கணவர் கூற, "நம்ம டோல் வழியா போக வேண்டாம். அதுக்கு முன்னாடி சிறுசேரி வழியா போயிரலாம்" என்று புத்திசாலித்தனமாக சொல்லுபவனிடம் என்னத்த சொல்ல.. உனக்கு எல்லா ஏரியா பேரும் சொல்லி குடுத்தா நீ அத எனக்கே திருப்பி விடறியா என்பது போல், போட்ட இண்டிகேட்டரை ஆப் செய்து விட்டு, பிப்த் கியூரில் வண்டியை நேராக செலுத்தினார் டிரைவர் சீட்டிலிருந்த கணவர்.
"ஐ எக்ஸ்பெக்டெட் திஸ்" என்று நக்கலாக சொல்லிவிட்டு, உற்சாகமாக பிடித்த பாடல்களை தேடி தேடி ப்ளே பண்ண ஆரம்பித்தேன். அந்த பரபரப்பான ஐடி பார்க், அந்த நேரத்திலும் தனது களை இழக்காமல் ஜே ஜே என்றிருக்க, அதிலிருந்து வெளிவந்தவர்கள் மட்டும் களைப்பாக எப்படா வீடு போயி சேருவோம் என்பது போல பேருந்திலும், டூ வீலரிலும், ஆட்டோவிலும், காரிலும் வீடு நோக்கி அவரகளது பயணத்தை தொடங்கினர். சிறிது தூரத்தில் இருந்த தள்ளு வண்டியில், சுட சுட ஆவி பறக்க இட்லி வாங்கி கையிலேந்தி ஒரு சிலர் சாப்பிட்டுகொண்டிருக்க, ரோட்டோரமாக இருந்த பரோட்டா கடையில், கொத்து பரோட்டா போடும் டங் டங் டங் என்ற சத்தத்திற்கிடையே ஒரு சிலர் பரோட்டாவை சால்னாவில் முக்கி எடுத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.
ஒடுக்கமான சாலையில் காரின் சக்கரங்கள் மிதமான வேகத்தில் சுழன்று கொண்டிருக்க, கொட்டகையிலிருந்து அவிழ்த்து விடப்பட்ட மாடுகள் கூட்டம் கூட்டமாக அங்கங்கே படுத்திருந்தன. வண்டியில் வைத்து பழங்கள் விற்கும் சிறு வியாபாரிகள் ஷீட் போட்டு அவர்களது கடைகளை மூடிக்கொண்டிருந்தார்கள். அங்கங்கே திறந்திருந்த கடைகளின் ஷட்டர்கள் இறக்கி விடப்பட்டுக்கொண்டிருந்தன. தெரு விளக்குகள் சில வேலை செய்யாமல் மக்கர் செய்ய அங்கங்கே இருள் கவ்வியிருந்தது. எஞ்சிய சில விளக்குகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மினுக்கிக்கொண்டிருந்தன. பெய்திருந்த சொற்ப மழையில் பள்ளமும் மேடுமாய் அந்த சாலை மாறியிருந்ததால் வாகனங்கள் குலுங்கி குலுங்கி ஊர்ந்து கொண்டிருந்தன.
தார் ரோடு வந்த பின்னே கார் மீண்டும் வேகமெடுத்து, நாங்கள் குடியிருக்கும் அபார்ட்மெண்டிற்குள் நுழைந்து, கார் பார்க்கிங்கிற்குள் போய் அலுங்காமல் குலுங்காமல் நின்றது. தனது நெடு நாள் ஆசை நிறைவேறிய திருப்தியில் மகன் மறுபடி உறங்குவதற்கு தயாராக, கணவரையும் அவனுடன் சேர்த்து அனுப்பி விட்டு, இன்னைக்கு என்ன ஆனாலும் சரி, கொஞ்ச நேரமாச்சும் பாட்டு கேட்டே ஆகணும் என்று வெறித்தனத்துடன் ஹெட்செட்டை காதுக்கு கொடுத்தவாறே, சோபாவில் கண்ணை மூடி அமர்ந்தேன். இசை சாரல் மழையாக மாற, இரவின் மடியில் இனிமையாக நனையத்துவங்கினேன்!!
No comments:
Post a Comment