Sunday, December 1, 2019

மகிஷா - பாகம் 1

 "நெக்ஸ்ட் ஸ்டேஷன் கிண்டி" என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் பெண் குரல் ஒலிக்க, தான் அமர்ந்திருந்த நீல நிற இருக்கையிலிருந்து எழுந்து கம்பியை பிடித்தவாறு நிற்கலானாள் மகி என்ற மகிஷா. ரயில் நிலையத்தில் அலுங்காமல் நின்று, தானியங்கி கதவுகள் திறந்ததும், மகியுடன் சேர்ந்து வேறு சில பயணிகளையும்  உதிர்த்துவிட்டு சிறு குலுங்கலுடன் புறப்பட்டு சென்றது சாம்பல் மற்றும் நீல நிறத்திலான அந்த உலோக ரயில். தன்னிடமிருந்த டோக்கனை தானியங்கி எந்திரத்தின் ஸ்லாட்டில் மகி போட, பகாசுரன் போல டோக்கனை விழுங்கி விட்டு விசிறி போன்ற கதவுகளை திறந்து அது வழி விட்டது.

காலை 8.30 மணி என்று கைக்கடிகாரம் காட்ட, ஒரு ஆட்டோவை நிறுத்தி "ஒலிம்பியா டெக் பார்க்"  என்று கொஞ்சும் தமிழில் கூறினாள் மகி. மார்கழிப் பனியின் குளிரும், இளங்கதிரவனின் வெதுவெதுப்பும் மனதிற்கு இதமளிக்க, பத்து வருடங்களில் சென்னை எவ்வளவு மாறியிருக்கிறது என்று ஆச்சர்யத்தோடு கருப்பு மையிட்ட கயல் போன்ற விழிகள் அகல பார்த்துக்கொண்டிருந்தாள்.  முகத்தில் அறைந்த காற்றில் பறந்த கூந்தலை அநாயசமாக காதின் பின்னால் சொருகி, கையில் இருந்த ஸ்கார்ஃபால் சிறை வைத்தாள். சிணுங்கிய செல்பேசியை தனது வயர்லெஸ் இயர்ஃபோன் மூலம் ஆன் செய்து "யா ஸ்ரீதர், ஐ ஆம் ஆன் தி வே. வில் ரீச் தேர் இன் அனதர் 5 மினிட்ஸ். பை" என்று கூறி கட் செய்தாள். அவள் பேசிய நுனி நாக்கு ஆங்கிலமும், ஒய்யாரமாக கால் மேல் கால் போட்டு அவள் உட்கார்ந்திருந்த தோரணையும், சென்னையின் போக்குவரத்து நெரிசலை புன்னகையோடு அவள் ரசித்து பார்த்த விதமும் அவள்  இந்த இடத்திற்கு புதிது என்று ஆட்டோக்காரனுக்கு காட்டி கொடுக்க வழக்கத்தை விட கூடுதலாக வசூலித்துக்கொண்டு உற்சாகமாக புறப்பட்டு சென்றான்.

அந்த 10 மாடி கட்டிடத்தின் கண்ணாடி கதவை தள்ளிவிட்டு உள்ளே நுழைந்து செக்யூரிட்டி செக் முடித்து விட்டு லிஃப்டை நோக்கி நடந்தாள். ஐந்தாம் தளத்தில் இறங்கி இடதுபுறத்திலிருந்த அந்த கதவு வழியாக நடந்துக்கொண்டே மொபைலிலிருந்த ஸ்ரீதர் என்ற நம்பருக்கு கால் செய்தபடியே விழிகளை அந்த அறை முழுதும் ஓட விட்டாள். அந்த அகண்ட தளத்தின் நடுவே தனித்து இருந்த ஒரு கேபினிலிருந்து ஆறடி உயரத்திலிருந்த அந்த ஸ்ரீதர் கையசைக்க, மகிஷாவும் அதற்க்கு பதிலாக புன்னகையுடன் சேர்ந்த ஒரு தலையசைப்போடு அவரை நோக்கி நடந்தாள். மகிஷா அந்த ப்ரொஜெக்ட்டின் யுஎஸ் கிளையன்ட்  டீமில்  இருப்பவள். ஒரு KT (அறிவு பரிமாற்றம்) செஷனுக்காக ஒரு வார காலத்திற்கு சென்னை வந்திருந்தாள். ஸ்ரீதருடன் பரஸ்பர அறிமுகம், அவளது பயணம், சென்னை போக்குவரத்து நெரிசல் மற்றும் வெதர் என்று மேலோட்டமாக பேசிய பின் டீம், ப்ராஜெக்ட் என டெக்னிகலாக  பேசத்துவங்கினர்.  "ஸ்ரீதர், ஐ டோன்ட் வாண்ட் எனி டிலேஸ்  டியுரிங் தி KT செஷன். ஹோப் தி டீம் வில் பி ஆன் டைம் த்ரூஅவுட்  திஸ் வீக்" (மொழிபெயர்ப்பு: டீம்'ல் இருக்கும் அனைவரும் எந்த கால தாமதமும் செய்யாமல் இந்த வாரம் முழுக்க நேரத்திற்கு வந்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்.) "எஸ் மகிஷா, தே வில்" என்று ஆமோதித்தபடி டீமை அறிமுகப்படுத்த அருகிலிருந்த கேபினை நோக்கி நடந்தனர்.

KT'யின் பிரேக் டைமில் மகிஷா மொபைலை செக் செய்தாள்.  "ஹவ் யு ரீச்ட்?" என்று நரேனின் மெசேஜ் திரையில் மின்ன, "எஸ், வில் மீட் யு  டியுரிங் லஞ்ச்" என்று ரிப்ளை பண்ணிவிட்டு வேலையை தொடரலானாள். லஞ்ச் டைமில் புட் கோர்ட்டின் (food court) ஜூஸ் கவுண்டர் அருகில் நிற்கும்படி நரேன் உரைத்திருந்தான். அங்கிருந்த ஒரு டேபிளில் உட்கார்ந்து வந்திருந்த மெயிலிற்கு ரிப்ளை பண்ணிக்கொண்டிருந்த போது "ஹலோ மேடம்" என்று குரல் கேட்க "ஹேய் எப்படி இருக்க" என்று உற்சாகமாக பதிலளித்தபடி எழுந்து நரேனின் கையை குலுக்கினாள். "வெரி ஃபைன், நீ எப்படி இருக்க" என்ற பொதுவான சம்பாஷணைகள் நடந்தேறின. நரேனும் மகியும் வேரோரு IT  கம்பெனியில் ஒன்றாக வேலைபார்த்தவர்கள். ஃப்ரெஷராக   ஒன்றாக சேர்ந்து, ஒன்றாக ட்ரைனிங் அட்டென்ட் செய்து வேற வேற ப்ரொஜெக்ட்டில் வேலை செய்தவர்கள். வேற கம்பெனி மாறிய பிறகும் வாட்சப்பில் இன்னும் தொடர்பில் இருந்து கொண்டிருப்பவர்கள்.  மகி சென்னை வருவது குறித்து சொன்னதும் மீட் பண்ணலாம் என்று முன்னமே பிளான் பண்ணியிருந்தார்கள்.    

சாப்பிட்டுக்கொண்டே பத்து வருட கதையை அளவளாவிக்கொண்டிருந்தார்கள். "சென்னை எப்படி இருக்கு?" என்று கேட்டவனிடம் "ரொம்பவே மாறிருச்சு, அடையாளமே தெரியல" என்றாள். "ம்ம் உன்னை மாதிரியே.. அப்ப நா பார்த்த மகிக்கும் இப்ப பாக்கற மகிக்கும் எவ்ளோ வித்தியாசம்? எவ்ளோ அமைதியா இருப்ப,  இப்ப அப்படியே துரு துறுனு, நீ ஏதாவது  ஒன்னு சொன்னா எதிர்ல இருக்கறவங்க மறு பேச்சு  பேசாம உடனே அத செஞ்சு முடிச்சுருவாங்க போல" என்று கிண்டலாக சொன்னான். எதுவும் சொல்லாமல் வெற்று புன்னகை பூத்த மகியிடம் "அப்பா அம்மா எப்படி இருக்காங்க? யுஎஸ் செட் ஆகிருச்சா அவங்களுக்கு? எப்படி பொழுது போகுது அவங்களுக்கு அங்க?  அண்ட் நீ இப்படியே எவ்ளோ நாள் இருக்க போற மகி?" என்று அக்கறையாக கேள்விகளை  அடுக்கினான் நரேன்.

அப்பா அம்மா நல்லா இருக்காங்க நரேன். அம்மா அங்க இருக்கற பசங்களுக்கு பாட்டு சொல்லி கொடுக்கறாங்க. அப்பாவும் அம்மாவும் தமிழ் சங்கம்ல ஆக்ட்டிவ் மெம்பெர்ஸ். அதுனால யார் கூடவாவது எப்பவும் ஏதாவது பேசிக்கிட்டும் செஞ்சிகிட்டும் அவங்கள பிஸியா வச்சிக்கறாங்க. ரொம்ப ஹாப்பியா இருக்காங்களான்னு கேட்டா, ஹோனஸ்ட்டா சொல்லனும்னா இல்லனு தான் சொல்லணும். பட் லைப்ஃ அப்படியே போயிட்டு இருக்கு. எந்த மோட்டிவும் இல்ல, அடுத்து என்னனு சத்தியமா தெரியல, என்ன வாழறோம், ஏன் வாழறோம் அப்படிங்கற கேள்வி அடிக்கடி மண்டைக்குள்ள வந்து கொண்டஞ்சிகிட்டே இருக்கும். அதுனால முடிஞ்ச வரைக்கும் ஐடிலா இருக்கறத அவொய்ட் பண்ணிக்குவேன். பட் கொஞ்ச நாள்ல மத்தவங்களுக்கு உறுதுணையா இருக்கற மாதிரி ஏதாவது அக்டிவிட்டீஸ்ல ஈடுபடலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன் நரேன். 

மகிஷா வருவாள்....பாகம் 2 


No comments:

Post a Comment

Learning Beyond Textbooks - Life Skills - Child Growth

#Learning_Beyond_Textbooks #Life_Skills A home is the first environment where children can playfully learn a plenty. Traditional textbook le...