புதியதாய் அரைத்த ஆரஞ்சுதோல் தூளுடன், சிறிது முல்தானிமிட்டி, தயிர் மற்றும் ரோஸ்வாட்டர் சேர்த்து குழைத்து முகத்தில் பூசியிருந்தாள் அனு. அப்படியே காலார மொட்டைமாடியில் நடக்கலாம் என்று கைப்பேசியில் இயற்போனை சொருகி அதை காதுக்கு கொடுத்தவாறே மாடிப்படியேறினாள். கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என எஸ்பிபி இனிக்க இனிக்க பாட, விரல்கள் தாளம் போட்டுக்கொண்டே நடக்கலானாள். எதிரிலிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் அவளின் தோழி தனது இரண்டுவயது குழந்தையோடு இவளுக்கு கையசைத்தபடி சாப்பாடு ஊட்டிவிட்டுக்கொண்டிருந்தாள். அனுவும் அவர்களுக்கு ஹாய் சொல்லிக்கொண்டும், குழந்தைக்கு பறக்கும் முத்தம் கொடுத்துக்கொண்டும் இருந்தாள். கால்மணி நேரம் ஆனதால் முகத்தை கழுவலாம் என்று வீட்டிற்குள் சென்றவளை கணவன் சந்துரு "பேஸ்பேக்(Facepack) போட்டுட்டு மாடிக்கு போயிருந்தியா?" என்று கேட்டபடி, "உன் தோழி உன்னைக்காட்டி தான் பயமுறுத்தி குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு கொண்டிருந்தாளாம், இன்னும் ஒரு ஐந்து நிமிஷம் வந்து நின்னா குழந்தை முழுதும் சாப்பிட்டு முடிச்சிடுவாளாம். உன்கிட்ட சொல்ல சொன்னா" என்றான்.
Tuesday, October 13, 2020
எதை விதைத்தோம்?
ஊஞ்சலில் ஒய்யாரமாக சாய்ந்துகொண்டு, கையில் இருந்த ஐபாடில்(iPad) யூடியுபில்(YouTube) GiggleBellies'இன் வீல்ஸ் ஆன் தி பஸ் கோ ரவுண்டு அண்ட் ரவுண்டு ரைம்ஸ் பார்த்துக்கொண்டே கையசைத்து அதனோடு சேர்ந்து பாடிக்கொண்டிருந்த மூன்று வயது பேத்தியிடம் "குட்டி பாப்பால்லாம் இப்படி உக்காந்து வீடியோ பாக்க கூடாதுமா, நல்ல சூரிய வெளிச்சத்துல போயி விளையாடனும். சமர்த்து குட்டில, போயி வெயில்ல விளையாடுங்க பாப்போம்" என்றாள் கோமளா பாட்டி. "சரி பாட்டி" என்று கொஞ்சும் மழலையில் சொல்லிவிட்டு வேகமாக ஓடிப்போய் அம்மாவின் கைபேசியில் அமேசான் செயலியை (Amazon App) திறந்து, பாட்டியிடம் கொடுத்து "நீங்க சொன்ன வெய்யில் என்கிட்டே இல்ல, அமேசான்ல ஆர்டர் பண்ணுங்க பாட்டி, ரெண்டே நாள்ல வந்துடும்" என்றது வெள்ளந்தியாய்.
Monday, October 12, 2020
பன்முகத்தன்மை!!
வீட்டையே பள்ளிக்கூடமாக,
அலுவலகமாக,
விளையாட்டுத்திடலாக,
உணவகமாக,
உடற்பயிற்சிகூடமாக,
திரையரங்கமாக மாற்றிய பெருமை நமக்கன்றோ!!!
#கொரோனாகாலக்கதை
Saturday, May 16, 2020
கனவே கலையாதே - பாகம் 3
கோர்வையாக தான் எழுதிய மின்னஞ்சலை இரண்டு முறை படித்து, எழுத்துப்பிழை வாக்கியப்பிழை இல்லாமல் இருக்கிறதா என சரி பார்த்தாள். "தேவகி, நான் HR'ரிடம் விடுப்பு குறித்து பேசிவிட்டேன். அதன் படி இன்னும் பத்து நாட்கள் விடுப்பில் போவதற்கான விடுப்பு படிவத்தை சமர்ப்பித்துள்ளேன், தயவு செய்து அதனை அங்கீகரிக்கவும்" என்ற சாராம்சம் கொண்ட அந்த மின்னஞ்சலை தேவகிக்கும், HR மிதுனுக்கும் அனுப்பினாள்.
அப்போது அங்கு வந்த கணேஷ் "என்னங்க, இன்னைக்கு எப்படி இருக்கீங்க" என்றார் சிரித்தபடி. "ஹலோ உங்களுக்கெல்லாம் கிண்டலா போச்சா? பத்து நாள் லீவுல போயிட்டு வந்து கவனிச்சுக்கறேன்" என்றாள் சுழற்நாற்காலியில் சாய்ந்த வண்ணம். "என்ன இன்னும் பத்து நாள் லீவா? அப்ரூவ் பண்ணிட்டாங்களா?" என்றவர் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு, குரலை தாழ்த்தியபடி "அதுவும் தேவகி கிட்ட பேசி வாங்கிட்டீங்களா? பெரிய விஷயம் தான். அவங்களோட யாருக்கும் ஒத்து போகல, லேடி ஹிட்லர்" என்றார். "ஆமா கணேஷ், என்கிட்டயும் கடுமையா தான் பேசினாங்க. எனக்கு ரொம்ப சங்கடமாகிருச்சு" என ஆரம்பித்து நடந்ததை விவரித்தாள். "விடுங்க வந்தனா, உங்களோட வேலை சுத்தம் பத்தி இங்க எல்லாருக்குமே தெரியும். அவங்க பேசினதை மனசுல போட்டு வருத்திக்காதீங்க. HR கிட்ட பேசி நீங்க போல்டு டெஸிஷன் எடுத்துருக்கீங்க, லீவுல போயிட்டு நல்லா ரெஸ்ட் எடுத்து தெம்பா வாங்க. எப்படியும் உங்கள 'வச்சு' செய்வாங்க, அப்ரைசல் (appraisal- மதிப்பீடு) வேற அவங்க கிட்ட தான் போகும். சேர்த்து வச்சு சமாளிக்கற அளவுக்கு ரெடி ஆகிட்டு வாங்க" என்றார், அந்த கியூபிக்கலின் மீது இரண்டு கைகளையும் மடக்கியவாறு வைத்து அதில் தாடையை முட்டுக்கொடுத்தபடி நின்று கொண்டு. "அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் கணேஷ், என் வேலைய நா ஒழுங்கா செஞ்சிட்டு போறேன், நா ஏன் அவங்களுக்கு பயப்படணும்" என்று சொல்லிக்கொண்டிருக்கையில் "Approved" என்ற ஒற்றை வார்த்தையை தாங்கியபடி அந்த மின்னஞ்சல் அவளது உள்பெட்டிக்கு(inbox ) வந்தது. "அப்ரூவ் பண்ணிட்டாங்க" என்றாள் கண்ணடித்தபடி. "கூட உதவிக்கு அம்மா வந்திருக்காங்களா" என்றவரிடம் "இல்லங்க.. அம்மா சிங்கப்பூர் போயிருக்காங்க. அண்ணிக்கு இப்ப தான் டெலிவரி ஆகியிருக்கு. அதுனால அங்க இருக்காங்க, இங்க எப்படியும் வர கொறஞ்சது மூணு மாசம் ஆகும்" என்று வந்தன சொல்லிக்கொண்டிருக்கையில் விவேக்கிடமிருந்து அழைப்பு வர "ஓகே வந்தனா, நீங்க ஒடம்ப பாத்துக்கோங்க. நாம அப்புறம் பேசுவோம். பை" என்று சொல்லிக்கொண்டு கணேஷ் அவரது கியூபிகலுக்கு சென்றார்.
பாட்டு பாடி அழைத்த மொபைலை காதுக்கு கொடுத்தபடி "தாங்கள் அழைத்த வாடிக்கையாளர் பத்து நாட்கள் விடுப்பில் செல்ல இருப்பதால் நீங்கள் விஷயங்களை நிதானமாக நேரில் பேசிக்கொள்ளலாம்" என்று கொஞ்சி கொஞ்சி வந்தனா சொல்ல "அப்பாடா.. நல்லதா போச்சு நா போனை வச்சிடறேன்" என்றான் விவேக்கும் "ஒய், ஒத வாங்குவ.. என்ன விஷயம் சொல்லு" என்றாள் வந்தனா. "சரி எப்ப கெளம்பர சொல்லு, நா கூப்பிட வரேன்" என்றான் "வேணாம்பா, நா ஆபீஸ் பஸ்லயே வந்துடறேன். நீ ஸ்டாப்பிலே பிக் பண்ணிக்கோ. எதுக்கு இவ்ளோ தூரம் அலையணும்" என அவள் சொல்ல "அதெல்லாம் ஒன்னும் அலைச்சல் இல்ல, நீ பஸ்ல எல்லாம் வர வேணாம். நா ஷிப்ட் முடிச்சிட்டு போயி கார எடுத்துட்டு வரேன். நீங்க மகாராணி மாறி உக்காந்து வந்தா போதும்.. நீங்க வந்தா மட்டும் போதும்" என்றான் ராகத்துடன். "அப்படியா.. டிரைவர் லேட் பண்ணாம வந்துருவல.." என்றாள் அவளும். "வந்துடறேன் மேடம்" என்று பவ்யமாக சொல்லிவிட்டு "வந்து உன்ன கவனிச்சுக்கறேன்.. இப்ப போயி நா வேலைய பாக்கறேன். தேவைப்பட்டா டார்மிட்டரி போயி ரெஸ்ட் எடு. பை" என்று சொல்லி போனை வைத்தான்.
மறு நாள் மட்டும் விவேக் வீட்டில் இருந்து பணி செய்தான். வந்தனா காய் மட்டும் நறுக்கிக்கொடுக்க, இடையிடையே சமையலையும் பார்த்துக்கொண்டு, அவளுக்கு சூப், ஜூஸ் என போட்டுக்கொடுத்ததில் அவளுக்கு அயர்ச்சி நன்றாகவே குறைந்திருந்தது. சமையல் எதுவும் அவள் செய்யாததால் வாந்தியும் குறைந்திருந்தது, இரண்டு தரம் மட்டும் எடுத்தாள். மதியம் சாப்பிட்டு விட்டு ஒரு நல்ல தூக்கம் போட்டு எழுந்தாள். "இப்ப தான் உடம்பே கொஞ்சம் பெட்டரா இருக்க மாறி இருக்கு. இப்படியே இருந்தா இன்னும் ஒரு நாலு நாள் மட்டும் ரெஸ்ட் எடுத்துட்டு ஆபீசுக்கு போயிரலாம். உள்ள இருக்க குட்டி என்ன முடிவு பண்ணி இருக்குன்னு தெரிலையே" என்றவளை முறைத்தபடி "இன்னைக்கு தான லீவு அப்ளை பண்ணிட்டு வந்திருக்க, ஆபீஸ பத்தி அப்புறம் யோசிக்கலாம். மொதல்ல மனச ரிலாக்ஸ்சா வையி" என்றவன் "நைட் டின்னருக்கு என்ன பண்ணட்டும்" என்று பேச்சை மாற்றினான். விவேக்கிற்கு தெரியும் தேவகி பேசியது வந்தனாவின் மனதிற்குள் குடைந்து கொண்டே இருக்கும், எப்படியும் அவளை நிரூபிக்க சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருப்பாள் என்று. அதனால் தான் பேச்சை மாற்றினான்.
அடுத்து வந்த மூன்று நாட்களும், வந்தனா முந்தைய இரவே காய்களை நறுக்கி பிரிட்ஜில் வைக்க, விவேக் காலையிலேயே சமைத்து ஹாட் பாக்கில் அவளுக்கு வைத்துவிட்டான். அவளும் நன்கு சாப்பிட்டு உறங்கி எழுந்ததில் சோர்வு முற்றிலுமாக நீங்கியிருந்தது. மார்னிங் சிக்னெஸ், அவள் நிதானமாக எழுந்ததால் அவ்வளவாக இல்லை. வாந்தியும் குமட்டலும் கொஞ்சம் இருந்தது, ஆனால் சமாளிக்க கூடிய அளவில் இருந்ததால் அவளுக்கு ரொம்பவும் சங்கடமில்லாமல் இருந்தது. அவள் விடுப்பு எடுத்த ஆறாவது நாளில் காலையில் ஒரே ஒரு தரம் மட்டும் தான் வாந்தி எடுத்தாள். மாலையில் விவேக்கும் அவளும் சிறிது தூரம் நடந்து விட்டு வந்தார்கள். வீட்டிற்கு திரும்பியவுடன் "நடந்துட்டு வந்தது டையர்டா இருக்கா குட்டிமா" என்றான் பரிவுடன். "ஆக்சுவலி இல்லப்பா, அன்னைக்கெல்லாம் எவ்ளோ அசதியா இருக்குன்னு சொன்னேன். இன்னைக்கு எதுவுமே இல்ல, நார்மலா ஃபீல் பண்றேன். மே பீ வாமிட்டிங் அதிகமா இருந்ததால டீஹைடிரேட் ஆகியிருக்கும் போல" என்றாள். "நீயா யோசிச்சு யோசிச்சு ஏதாவது காரணம் சொல்லிக்கிட்டு இருக்காத. நார்மலா இருக்கீல.. சந்தோஷம். அப்படியே இன்னும் ரெஸ்ட் எடு. ஆபீஸ் கத ஏதாது ஆரம்பிச்ச பாத்துக்கோ" என்று முடிக்கும் முன் "உடனே ஆரம்பிக்கல, இன்னும் ரெண்டு நாள் பாக்கறேன், நல்லா பெட்டரா இருந்தா வியாழக்கிழமையிலிருந்து போறேன். ரெண்டு நாள் முன்னாடியே ஜாயின் பண்ணிடறேன், வீட்ல எனக்கும் கொஞ்சம் போர் அடிக்க தான் செய்யுது".
"நீ எப்படி டைப் டைப்பா யோசிப்பனு எனக்கு தெரியும், அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். நீ போய் கை கால் கழுவிட்டு வா" என்று அவளை அங்கிருந்து கிளப்பி பேச்சை மாற்ற முயற்சித்தான். "ஓகே டியர் புருஷா, நா புதன்கிழமை மதியத்துக்கு மேல டிசைட்பண்றேன் போதுமா" என்று சொல்லிவிட்டு அங்கிருந்தால் அவன் கண்டிப்பாக திட்டுவான் என தெரிந்து பாத்ரூமிற்குள் ஓடினாள். அடுத்த இரண்டு நாட்களில் வாமிட்டிங் சுத்தமாக நின்றிருக்க, விடுப்பை ஏன் வீணாக்கவேண்டும், எப்படியும் நிறைய லீவு வேணும் தானே என்ற அவளின் வாதம் நியாயமாக படவே அவள் அன்று மாலையே தேவகிக்கும் HR'க்கும் மின்னஞ்சல் அனுப்பினாள். தனக்கு உடல் நலம் தேவலாம் போல் இருப்பதால் விடுப்பை ரத்து செய்து இரண்டு நாள் முன்னரே வேலைக்கு திரும்பலாம் என நினைப்பதாகவும், அதில் ஏதும் சிக்கல் இருந்தால் தெரிவிக்கும் படியும் அதில் எழுதியிருந்தாள். அவள் உடல் நிலை ஒத்துழைத்தால் தாராளமாக அவள் வேலைக்குத் திரும்பலாம் என மிதுன் ரிப்ளை செய்ய அவள் வியாழனன்று வேலைக்கு திரும்பினாள்.
வந்தனா அலுவலகத்தில் அவளது தளத்திற்கு செல்ல, கண்ணாடி கதவை தள்ளிக் கொண்டு உள்ளே செல்கையில் நிரூபமாவும் தேவிகாவும் பேசிக்கொண்டிருந்தார்கள். வந்தனா அவளது இடத்தில் கைப்பையை வைத்துவிட்டு அவர்களை நோக்கி சென்றாள். "இதோ வந்தனா இருக்காங்களே, இவங்கள அந்த ப்ராஜெக்ட்க்கு நியமிக்கலாமே" என்று சொன்ன நிருபமா "வாங்க வந்தனா, ஹெல்த் இப்ப எப்படி இருக்கு?" என்றாள். "கம்ப்ளீட்லி ஃபைன் நிருபமா, தாங்க் யு" என்றாள் வந்தனா. "ஒரு புது ப்ராஜெக்ட் வந்துருக்கு, அதுக்கு தான் யாரை அசைன் பண்றதுனு பேசிட்டு இருந்தோம், நீங்க கூட அதுக்கு சரியா இருப்பீங்க. Requirements Gathering, Documentation'னு இனிஷியல் ஸ்டேஜ்ல தான் இருக்கு. டீம்லாம் இனிமே தான் ஃபாம் பண்ணனும். எடுத்துக்கறீங்களா?" என்றாள் நிருபமா. "ஷ்யுர்.. ஆனா அந்த பழைய ப்ராஜெக்ட்ல கணேஷுக்கு பதிலா டேக் ஓவர் பண்ணனும்னு மொதல்ல சொல்லிட்டு இருந்தார்களே, அதுக்கு வேற ஆள் வந்தாச்சா?" என்று வந்தனா கேட்டுக்கொண்டே தேவகியை பார்க்க, தேவகி பதில் ஏதும் சொல்ல வில்லை. நிருபமா தான் "அத கணேஷ் தான் பாத்துக்கறார். அப்படியே இன்னொரு ப்ராஜெக்ட்டும் ஹாண்டில் பண்றார். அதுனால அத பத்தி நம்ம ரொம்ப யோசிக்க வேண்டியதில்லை" என்றாள். இப்படி தான் நிறைய நேரங்களில் நான்கு பேர் செய்ய வேண்டிய வேலை ஒருவரின் தலையிலேயே வந்து விழும். முடியும் முடியாது என்றெல்லாம் சொல்ல முடியாது. பாவம் கணேஷ், என்று நினைத்துக்கொண்டாள்.
அன்றே வந்தனா அந்த ப்ராஜெக்ட்டிற்கான வேலைகளை செய்ய ஆரம்பித்தாள். நிரூபமாவும் அந்த ப்ராஜெக்ட்டில் இருந்ததனால் இவளுக்கு தேவகியிடம் பேச வேண்டிய நிர்பந்தம் இல்லாமல் இருந்தது, அதனால் கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்தது. இவளை பார்த்த போது பேருக்கு கூட புன்னகைக்கவில்லை, உடல் நிலை பத்தி விசாரிக்கவில்லை, ஆனால் நிரூபமாவிடம் மட்டும் "வந்தனா ஒரு ஸ்டேபிள் மனநிலை இல்லாதவங்க. ப்ராஜெக்ட் எடுத்தக்கறேன்னு சொல்லிட்டு அடுத்த நாளே லீவு வேணும்னு கேக்கறாங்க. லீவுல போயிட்டு பாதிலேயே திரும்ப வரேன்னு சொல்றாங்க. இவங்கள நம்பி எப்படி புது ப்ராஜெக்ட்டை குடுக்கறது நிரு" என்று குத்தல் பேச்சு வேற. "இப்ப நமக்கு வேற யாரும் தகுதியான ரிஸோர்ஸ் இல்ல தேவகி. இவங்க ஆரம்பிக்கட்டும், நடுல ஏதாவது ட்ரபிள் இருந்தா நம்ம ஆள மாத்திரலாம்" என்று நிருபமா சொன்னது தேவகியின் வாயை அடைப்பதற்கா அல்லது அவளுக்கும் அதே கருத்து தானா தெரியலையே. என்னவாயிருந்தா என்ன, இப்படி தான் நம்மள நடத்துவார்கள் என்று ஏற்கனவே தெரிந்தது தானே, கண்டுக்காமல் வேலையை பார்க்கலாம் என்று முடிவு பண்ணி வேலையில் மூழ்கினாள்.
இவளுக்கு கீழ் அப்போது தான் புதிதாக சேர்ந்த இரண்டு ஃபிரெஷர்ஸ்'ஐ கொடுக்க, அவர்களுக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்து புரியவைத்து வேலை வாங்குவதற்கு அதிக நேரம் எடுத்தது. அதனால் வீட்டிற்கு சென்றும் வேலை பார்க்க என்று ஒரு லேப்டாப்பை கேட்டு வாங்கிக்கொண்டாள். ஒரு மாதம் ஓடியதே தெரியவில்லை. நடுவில் ஒரு தரம் செக் அப் போன போது, குழந்தையின் வளர்ச்சி ஆராக்கியமாக இருப்பதாகவும், சிறு சிறு உடற்பயிற்சி, சிறிது நடைப்பயணம் எல்லாமே நார்மல் டெலிவரிக்கு உதவும் என்று டாக்டர் சொன்னதால் தினமும் காலையில் பத்து நிமிடம் உடற்பயிற்சியும், மாலையில் அரைமணி நேரம் வாக்கிங்கும் போக ஆரம்பித்தாள். வீட்டு வேலை செய்ய வரும் சாந்தி அக்காவை காய்கள் நறுக்கி தரும்படி சொல்லி, சமையலை வந்தனா பார்த்துக்கொண்டாள். விவேக்கும் முடிந்தவரை எல்லா உதவிகளும் செய்தான். ஆளுக்கொருபுரம் பரபரப்பாக அவர்களது வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அன்று வந்தனா ஆபீசில் வேலை செய்துகொண்டிருந்த போது அவளது இடத்திற்கு வந்த நிருபமா "வந்தனா, மைக்ரோசாப்ட் ப்ராடெக்ட் ட்ரைனிங் ஒன்னு நீங்க எடுக்கறதுக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருந்தோம். வீடியோ கான்பரன்சிங் தான் இத்தனை நாளா சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஆனா அத இப்ப கிளாஸ் ரூம் ட்ரெய்னிங்கா மாத்திட்டாங்க. பெங்களூருல தான் ட்ரைனிங், அஞ்சு நாள் ட்ரைனிங் . ட்ரைனிங் முடிச்சிட்டு அதை டீமுக்கு அறிவு பரிமாற்றம்(KT - Knowledge Transfer) பண்ணனும். உங்களால ட்ராவல் பண்ண முடியுமா? ஹெல்த் எப்படி இருக்கு?" என்றாள்.
"ஹெல்த் ஒன்னும் ப்ராப்ளம் இல்ல, டிராவல் பத்தி டாக்டர் கிட்ட பேசிட்டு சொல்லட்டுமா? என்றாள் வந்தனா. டாக்டர் சரி என்று சொன்னால் கூட விவேக் என்ன சொல்லுவானோ என்ற கவலை இருந்தது. "நோ ப்ராப்ளம் , நீங்க டாக்டர் கிட்டயும் உங்க கணவர் கிட்டயும் பேசிட்டு நாளைக்கு சொல்ல முடியுமா?" என்ற நிரூபமாவிடம் "சரி, நா நாளைக்கு கன்பார்ம் பண்றேன் உங்களுக்கு" என்றவள் எங்கே தங்கணும், மற்றும் வேறு சில விவரங்களை சேகரித்த பிறகு விவேக்கிற்கு கால் செய்தாள். அவனிடம் விவரம் சொன்னவள் அவனது பதிலுக்காக காத்திருந்தாள். பொதுவாக விவேக்கிடம் கேட்டு தான் முடிவெடுக்கணும் என்றெல்லாம் இல்லை. ஆனால் இப்போது டிராவல், சேஃப்டி, வெளி சாப்பாடு என எல்லாம் அவனும் யோசிப்பான் தானே. "நீ என்ன நினைக்கற" என்று அவன் அவளிடமே கேட்பான் என்று எதிர்பார்க்கவில்லை. "எனக்கும் ரெண்டு மனசா தான் இருக்கு கண்ணா. டிராவல் ஒன்னும் பிரச்சனை இல்லேன்னா, பெங்களூருல எல்லாம் ஓகேவா தான் இருக்கணும்னு நினைக்கறேன். MG ரோடுல இருக்க தாஜ் பைவ் ஸ்டார் ஹோட்டல்ல தான் கான்ஃபெரென்ஸ் ரூம், அங்க தான் ட்ரைனிங். ப்ரேக்ஃபாஸ்ட், லஞ்ச் ரெண்டுமே அங்க குடுத்துருவாங்க. நைட் டின்னர்க்கு கெஸ்ட் ஹவுஸ் பக்கத்துல கண்டிப்பா ஏதாவது ரெஸ்டாரண்ட் இருக்கும். அப்படி இல்லேனா இருக்கவே இருக்கு ஸ்விக்கி, ஜோமடோ எல்லாம். கெஸ்ட் ஹவுஸ்ல இருந்து பத்து நிமிஷத்துல தாஜ்க்கு போயிரலாம். சென்னைல வேற ப்ராஜெக்ட்ல இருந்தும் இந்த ட்ரைனிங்க்கு வராங்க. ரொம்ப பரிச்சயம் இல்லேன்னாலும் கொஞ்சம் தெரியும் அவங்கள" என்றாள். ட்ரைனிங்க்கு போறாங்க என்று சொல்லாமல், வராங்க என்று அவள் சொன்னதிலேயே அவளுக்கும் அந்த ட்ரைனிங் அட்டென்ட் பண்ணனும் என்கிற விருப்பம் இருப்பது விவேக்கிற்கு புரிந்தது. "நீயே டாக்டர் கிட்ட போன்ல கேளேன். போன வாரம் தான செக் அப் போனோம். போன்லயே கேட்கலாம்னு நினைக்கறேன்" என்றான். இவ்வளவு தானா உன் ரியாக்ஷன் என்று நினைத்தபடி "சரி நா அவங்களுக்கு பேசறேன்" என்றாள்.
டாக்டரிடம் பேசியவள் மறுபடி விவேக்கிற்கு கூப்பிட்டாள். போனை அட்டென்ட் செய்தவனிடம் "அவங்க, ட்ரெயின் டிராவல் ஏதும் ப்ராப்ளம் இல்ல. பாதுகாப்பா போயிட்டு வந்துக்கலாம்னு சொல்லிட்டாங்க. ட்ரைனும் செகண்ட் கிளாஸ் AC தான் புக் பண்றங்க" என்றாள். "உனக்கு புக் பண்ண வேணாம்னு சொல்லு குட்டி" என்றான். அடப்பாவி இவ்ளோ கதையை கேட்டுட்டு இப்ப வேணாம்னு சொல்ல போறானா என நினைத்தபடி "ஏன்?" என்றாள் குரலில் சுரத்தே இல்லாமல். "வீட்ல இருந்து சென்ட்ரல் போயி, அப்புறம் பெங்களூர் போயி, அங்க ஸ்டேஷன்ல இருந்து MG ரோடு போறதுக்குள்ள விடிஞ்சிரும். நானே உன்ன கூட்டிட்டு போறேன். கூப்பிடவும் நானே வரேன். நம்ம கார்ல போனா அங்கங்க ஸ்டாப் பண்ணி ரெஸ்ட் எடுத்துக்கலாம், எனக்கும் உன்ன தனியா அனுப்பின ஃபீல் இருக்காது" என்றான். அவன் சொல்ல சொல்ல வந்தனாவின் மனம் கரைந்தது "உன்ன மாதிரி யாரும் என் மேல அக்கறை காட்டவே முடியாது டா" என்றாள். "என்னது டா வா?" என்று அவன் கேட்டு முடிக்கும் முன், "சரி சரி நேரமாகுது, நா நிரூபமாகிட்ட போயி கன்பார்ம் பண்ணனும்.. பை" என்று சொல்லி வேண்டுமென்றே போனை வைத்தாள், ஆபீசில் அவள் வெட்கப்படுவதை யாரேனும் பார்த்துவிட்டால்?
ஞாயிறு மதியம் இரண்டரை வாக்கில் வந்தனா தங்க ஏற்பாடு பண்ணியிருந்த கெஸ்ட் ஹௌஸிற்கு அவர்கள் சென்றார்கள். அதற்கு இரண்டு கட்டிடங்கள் தள்ளி A2B ரெஸ்டாரண்ட் இருந்தது. சாப்பாட்டிற்கு பிரச்சனை இல்லை. ஆட்டோ ஸ்டான்ட், மெடிக்கல்ஸ், டிபார்ட்மென்டல் ஸ்டோர் என எல்லாமே நடக்கும் தூரத்தில் இருந்தது. "சரி, பாத்து இருந்துக்கோ குட்டிமா, அப்பப்ப கால் பண்ணு. நா கிளம்பறேன்" என்றவரிடம் "தனியா டிரைவ் பண்ணனும், நீங்களும் பாத்து போங்க. நேரத்திற்கு சாப்பிடுங்க. நானும் கால் பண்றேன்" என்று சொல்லி அவன் வண்டியை கிளப்பியதும் பை சொல்லிவிட்டு அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றாள். ஒவ்வொன்றும் மூன்று அறைகள் கொண்ட வீடுகள் தான். அறைக்கு ஒருவர் விகிதம் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காமன் கிச்சன், யார் வேண்டுமானாலும் உபயோகப்படுத்திக்கொள்ளலாம். ரூமிலேயே டீவீ, பாத்ரூம் எல்லாம் இருந்தது. சிறிது நேரம் டீவீ பார்த்துக்கொண்டிருந்தவள், சாயங்காலம் அங்கிருந்த கிச்சனில் க்ரீன் டி போட்டுக்கொண்டு வந்து உட்கார்ந்து வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
மறுநாள் எட்டு மணிக்கெல்லாம் ரெடி ஆகி ஆட்டோ எடுத்துக்கொண்டு, தாஜில் அவளது ட்ரைனிங் நடக்க இருக்கும் கான்பெரென்ஸ் ரூமை தேடி சென்றாள். சென்னையிலிருந்த வந்த மற்ற இருவரும் அப்போது தான் அங்கு வர அவர்களுடன் இணைந்து கொண்டாள். பயிற்றுவிப்பாளர் அவர்களை ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டு வரும்படி சொல்ல அவர்கள் பஃபே இருந்த அறையை நோக்கி சென்றார்கள். அளவாக குளிரூட்டப்பட்ட அந்த அறையின் ஒரு ஓரத்தில் உணவுகள் சூடாக பரிமாறப்பட, அங்கங்கே டேபிள்களும் சேர்களும் நேர்த்தியாக போடப்பட்டிருந்தன. பல தரப்பட்ட மொழிகளை பேசும் மக்கள் அவரவர்க்கு விருப்பமான உணவுகளை தட்டில் எடுத்து வந்து அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். எல்லாருமே பேசிக்கொண்டு தான் இருந்தனர், எனினும் அங்கே அமைதி நிலவியதை போல் இருந்தது. அவ்வளவு மெதுவாக பேசிக்கொண்டிருந்தனர். வந்தனா அவளது தட்டில் சிறிது பழங்களையும் ஒரு பிரட் ஆம்லெட்டையும் எடுத்துக்கொண்டு எலுமிச்சையும் புதினாவும் கலந்து செய்திருந்த ஒரு மோக்டைல் ஜூஸ் தம்ளரையும் எடுத்துக்கொண்டு அவளது இடத்திற்கு வந்து அமர்ந்தாள். அங்கே பரிமாறப்படும் மசால் தோசையும் கிச்சடியும் மிக அருமையாக இருக்கும் என கேள்விப்பட்டதால் அடுத்து அதையும் வேணும்ங்கிற அளவிற்கு எடுத்துக்கொண்டாள். சாப்பிட்டு முடித்ததும் ட்ரைனிங்கில் அறிமுகப்படலம் ஆரம்பித்து, செஷன் ஆரம்பித்தாள் அந்த பயிற்சியாளர். இரண்டு மணி நேரம் விறு விறுவென நடந்தது. காபி பிரேக் போது விவேக்கிடம் பேசிக்கொண்டே அங்கிருந்த ஸ்ட்ராபெர்ரி குக்கீஸை கொறித்தாள். அவள் போனை வைத்த சமயம் அங்கே வந்த பயிற்சியாளரை பார்த்து வந்தனா புன்னகைக்க "செஷன் எப்படி போகுது" என்றாள் அவள் நுனிநாக்கு ஆங்கிலத்தில். இருவரும் உரையாடிக்கொண்டிருக்க ட்ரைனிங் மறுபடி தொடர்ந்தது. ட்ரைனிங் முடித்து கெஸ்ட் ஹௌஸிற்கு சென்றதும் அதை டீமிற்கு பயிற்சி அளிப்பதற்கு ஏதுவாக ப்ரெசென்ட்டேஷன் வேலையை அன்றன்றே செய்து முடித்தாள். வெள்ளியன்று இரவே விவேக் வர, அவர்கள் இரவு அங்கிருந்த விடுதியில் தங்குவதற்கு அறை புக் செய்திருந்தான். மறுநாள் காலை கிளம்பி அவர்கள் சென்னை வந்து சேர்ந்தனர்.
திங்களன்றிலிருந்து ஒரு வாரம் டீமிற்கு அவள் அந்த பயிற்சியை கொடுக்க, ப்ராஜெக்ட்டில் வேலை மிக மும்முரமாக போய்க்கொண்டிருந்தது. மூன்று மாத காலம் முடிந்திருந்த நிலையில் ஷங்கரிடம் இருந்து ஒரு ஈமெயில் வந்திருந்தது. நிருபமா, தேவகி, வந்தனா மூவரையும் அன்று மதியம் இரண்டரை மணிக்கு அவரது அறையில் சந்திக்க வரும்படி அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டரை மணிக்கு ஷங்கரின் அறையில் இருந்த நாற்காலியில் மூவரும் அமர, புன்னகைத்தபடி ஷங்கர் "கிரேட் ஜாப் லேடீஸ். உங்க ப்ராஜெக்ட் ரொம்ப நல்லா போய்க்கிட்டிருக்கு. புது டெக்னாலஜி , நமக்கு குடுத்துருக்க டைம்ல முடிக்க முடியுமா அப்படீன்னேல்லாம் எவ்ளோ குழப்பங்கள் இருந்தது? வந்தனா நீங்க மறுபடி உங்கள நிரூபிச்சிட்டீங்க. ப்ரெக்நன்ஸி டைம்ல ட்ராவல் பண்ணி ட்ரைனிங் அட்டென்ட் பண்ணினது உங்களோட கம்மிட்மெண்ட காமிக்குது. நீங்க கண்டிப்பா டீமுக்கு ஒரு இன்ஸ்பிரஷன்" என்ற போது அவரது குரலில் இருந்த உற்சாகம் வந்தனாவின் முகத்திலும் அப்பிக்கொண்டது.
முற்றும்.
Sunday, May 10, 2020
உனக்காக ஒரு கவிதை!!
எனக்காக உருகும் இதயம்
எந்நேரமும் சாய்ந்திட இடம் கொடுக்கும் தோள்கள்
குழந்தையாய் மாறி உறங்கிட மடிதனிலே கிடைத்திடும் இடம்
விழிகளை தாண்டும் முன்னே கண்ணீரை
துடைத்திட விழையும் கரங்கள்
முகம் பார்த்தே மனதின் கலக்கம் அறிந்திடும் உன் திறன்
இதெல்லாம் தான் அன்னையின் தனித்தன்மை எனில்
நீயும் எந்தன் அன்னை தான்
நானும் உந்தன் பிள்ளை தான்!!!
Friday, April 24, 2020
கனவே கலையாதே - பாகம் 2
அயர்ச்சியினால் அலுவலத்தில் இருந்து மதியமே வந்து அசந்து உறங்கியவள் மாலை ஐந்து மணிக்கு தான் எழுந்தாள். "இப்ப பரவாயில்லையா குட்டி?" என அனுசரணையாக கேட்டபடி கையில் பூஸ்ட் எடுத்துக்கொண்டு வந்தான் விவேக். "இப்ப ரொம்பவே தேவலாம். அப்பா அந்த மாத்திரையை அவங்க அன்னைக்கே குடுத்துருக்கலாம்" என்றாள். "மே பீ அத அதிகமா எடுத்துக்க கூடாதா இருக்கும், அதுனால தான் குடுத்துருக்க மாட்டாங்க. நீ இன்னும் கொஞ்ச நாள் லீவு எடுத்துக்கறியா? முடியுமா?" என்றான் "பாக்கலாம் பா, கொஞ்சம் செட்டில் ஆகிட்டா சமாளிச்சுக்குவேன். வெயிட் பண்ணி பாப்போம்" என்றாள். "சரி நீ இதை குடி, நா சூடா ரெண்டு தோசை வார்த்து எடுத்துட்டு வரேன்" என்றபடி கிச்சனுக்குள் சென்றான். அடுத்தநாள் விவேக் காலையில் சீக்கிரமே கிளம்ப வேண்டியிருந்ததால் முந்தைய இரவே காலைக்கும் மதியத்துக்கும் சமைத்து பிரிட்ஜ்ஜில் வைத்துவிட்டிருந்தான். வந்தனா வேணுங்கிற பழங்களை நறுக்கி டப்பாவில் போட்டுக்கொண்டு காலை உணவை முடித்தாள். ரெடி ஆவதற்குள் வயிற்றை பிரட்ட ஆரம்பிக்க முந்தின நாள் டாக்டர் சொன்ன மாத்திரையை போட்டுக்கொண்டாள். பொதுவாக MTC பஸ்ஸில் தான் ஆபீசுக்கு செல்வது வழக்கம். அதற்க்கு அவளுடைய வீட்டில் இருந்து சில தூரம் நடக்க வேண்டும். இன்றைக்கு இருக்கும் நிலைமைக்கு அதெல்லாம் முடியாது, பேசாமல் ஆபீஸ் பஸ்ஸிலேயே போய்விடலாம் என வீட்டின் முக்கில் இருந்த ஸ்டாப்பிற்கு சென்றாள். கால் மணி நேர காத்திருப்பின் பிறகே பஸ் வந்தது. ஆபீசில் பஸ் பார்க்கிங்கில் இருந்து அவளது இருப்பிடத்திற்கு செல்வதற்குள் அசதியாக உணர ஆரம்பித்தாள். அந்த ஏசியிலும் முத்து முத்தாக வேர்த்திருக்க, கொண்டு வந்திருந்த ஜூஸ்'ஐ கொஞ்சம் குடித்தாள். சிறிது இடைவெளி விட்டு கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு முறை குடித்ததில் அசதி கொஞ்சம் குறைந்தது. ஆனால் உறக்கம் வருவது போல் இருந்தது. விவேக்கிடமிருந்து அழைப்பு வர மாத்திரை போட்டு கொண்டதையும், அசதியாக இருப்பதையும் சொன்னாள். "இதுக்கு தான் லீவு போடறியான்னு கேட்டேன். டார்மிட்டரி போய் வேணும்னா ரெஸ்ட் எடேன்" என்றான். "தேவைப்பட்டா போய்க்கறேன், நீ என்னை பத்தி கவலை படாம வேலைய பாரு" என சொல்லிவிட்டு பேசாமல் டார்மிட்டரி போலாமா என நினைத்து எழுந்து சென்றாள். அவள் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து லிஃப்ட் வரை செல்வதற்குள் திரும்பவும் அசதி வர, டார்மிட்டரி வரை போக அரை கிலோமீட்டர்க்கு மேல் நடக்கணும், முடியுமா என யோசித்து இடத்திற்கே வந்து உட்கார்ந்துவிட்டாள்.
இப்படி இருந்தால் எப்படி வேலை செய்வது? எடுக்கும் வேலையை நேரத்திற்கு சரிவர செய்ய முடியாமல் போகலாம். பேசாமல் இன்னும் சில தினங்கள் விடுப்பு எடுப்பது தான் சரியாக இருக்கும் என முடிவெடுத்து விவேக்கிற்கு மெசேஜ் பண்ணினாள். "லீவு எடுக்க கேட்கபோகிறேன்" என அவள் அனுப்பிய மேசேஜ்க்கு, "சரியான முடிவு, ப்ளீஸ் கேளு. நா கொஞ்சமேனும் நிம்மதியா வேலை செய்ய முடியும், நீ வீட்ல பாதுகாப்பா ரெஸ்ட் எடுத்தா" என ரிப்ளை பண்ணினான்.
தேவிகாவின் இடத்திற்கு சென்று உபாதைகள் அதிகமாக இருப்பதால் இன்னும் சில தினங்கள் விடுப்பு எடுக்க விரும்புவதாக சொல்ல, "நேத்து தான ஜாயின் பண்ணீங்க, அதுக்குள்ள விடுப்புல போறேன்னு சொல்றீங்க" என்றார். "வாமிட்டிங் இவ்ளோ அதிகமா இருக்கும்னு எதிர்பாக்கல தேவிகா. தவிர வீட்டிலும் உதவிக்கு யாரும் இல்ல. இன்னைக்கெல்லாம் நடக்க கூட முடியல. நா ஆபீஸ் வரதுக்கே சிறிது தூரம் நடந்து வந்து தான் பஸ் ஏறணும். அது மட்டுமில்லாம ப்ராஜெக்ட்ல போய்ட்டா, இது மாறி உபாதைகளுடன் சரி வர வேலை செய்ய முடியலனா நல்லா இருக்காது" என வந்தனா சொல்ல, "ஏற்கனவே உங்கள பத்தி எனக்கு கம்பளைண்ட்ஸ் வந்துருக்கு, வேலைல நீங்க அவளோ பொறுப்பும் அக்கறையும் காட்டறது இல்லேனு. நா தான் உங்கள இந்த ப்ரொஜெக்ட்க்கு தேர்ந்தெடுத்தேன். அவர்கள் சொல்வது சரி தான் என நிருபீச்சிடீங்க" என குரலை கடுமையாக்கி கொண்டு தேவிகா சொல்ல சொல்ல "வந்தனாவுக்கு கிறு கிறுத்தது. அவள் எந்த வேலையையும் நிதானமாக பொறுப்புடன் கையாளக்கூடியவள். அவளை யாருமே இப்படி முகத்திலடித்தாற்போல் பேசியதில்லை. இன்று தேவிகா சொன்னதற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை அவளுக்கு "எனக்கு தெரிந்தவரை நான் கொடுக்கப்பட்ட வேலைகளை சரியாகவே செய்திருக்கிறேன் தேவிகா" என பொறுமையாகவே சொல்ல, "நீங்க HR கிட்ட பேசிக்கோங்க, எனக்கு வேல இருக்கு" என முகத்திலடித்தார் போல சொல்லிவிட்டாள்.
கார்ப்பரேட் கம்பெனிகளின் உண்மையான முகம் இது தான், செய்த நூறு நல்ல விஷயங்கள் எதுவுமே கண்ணுக்கு தெரியாது. வந்தனாவுக்கு மிகவும் அவமானமாகிவிட்டது. பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர்களுக்கு எல்லாம் கேட்டிருக்கும், அவர்கள் என்ன நினைப்பார்கள் என நினைத்துக்கொண்டிருந்த போதே விவேக் கால் பண்ண, உணர்ச்சிவசப்பட்டவளாக தேவகி சொன்னதை அப்படியே சொன்னாள். "எனக்கு அவர்களுக்கு எப்படி திருப்பி கொடுப்பது என்று கூட தெரியவில்லை, அவள் எப்படி என்னை அப்படி பேசலாம்? ஒவ்வொரு வேலையையும் பாத்து பாத்து செய்வேன் நான்" என சொல்லும்போதே அவள் குரல் கமர "குட்டி கேளு, இப்ப இது எதுவுமே முக்கியம் இல்ல. உன்னோட ஹெல்த், நம்ம குழந்தையோட நலம், இது தான் ரொம்ப ரொம்ப முக்கியம். அவ பேசினதை விட்டு தள்ளு. நீ HR கிட்ட பேசி லீவு அப்ளை பண்ணு. இல்லையா வேலைய கூட ரிசைன் பண்ணிரு. என்ன கேட்டா அது தான் பெட்டெர்" என முடிக்குமுன் "ஏய் விளையாடறியா? அவளுக்காக நா ஏன் வேலைய விடணும்? நமக்கு இந்த வேல வேணும். இன்னும் எவ்ளோ கடன் இருக்கு? அப்படியெல்லாம் விட்ர முடியாது. அதும் இப்ப ஹாஸ்பிடல் செலவுகள் வேற அதிகமா வர ஆரம்பிக்கும்.
விவேக்கிற்கு திருமணம் ஆவதற்கு ஒரு வருடம் முன்னர் தான் அவன் அப்பா பார்த்து வந்த பிசினஸ்ஸில் ஏகப்பட்ட சரிவு வர, அதை ஈடுகட்ட விவேக் நிறைய லோன் அடுக்க வேண்டியதாகியது. அதன் பிறகு இவர்களது கல்யாண பேச்சு வர, அதற்காகவும் செலவுகள் சேர்ந்து கொண்டன. பெற்றோர் சம்மதத்துடன் நடந்தேறிய திருமணம் என்றாலும் வீட்டிற்கு தேவையானவற்றை எல்லாம் நானே வாங்குறேன் என வந்தனாவின் பெற்றோரிடம் சொல்லிவிட்டான். இதையெல்லாம் சமாளிக்க வந்தனா பெயரிலும் லோன் எடுக்க வேண்டியதாகிவிட்டது. திருமணம் முடிந்து பதிவு செய்யும் போது போட்ட முதல் கையெழுத்தோடு, உடனடியாக அவள் கையெழுத்து போட்டது, லோன் பத்திரத்தில் தான். அவர்களது வாழ்க்கையே பத்து லட்சம் லோன் மீது தான் ஆரம்பம் ஆனது. அதனால் தான் வந்தனா அந்த வேலையை விட கூடாது என நினைத்தாள். அதுமட்டுமில்லை, ஒரு நல்ல கம்பெனியில் வேலை அதில் பதவி உயர்வு என அவளுக்கும் நிறைய குறிக்கோள்கள் இருந்தது.
"என்ன பேசற குட்டிமா நீ? இவ்ளோ நாள் நீ சம்பாதிச்சதெல்லாம் ஒரு வார்த்தை கூட கேட்காம மொத்தமா என்கிட்டே தான குடுத்துருக்க. அது என் மேல இருக்கற நம்பிக்கை தான. அத நா காப்பாத்தணும்னா இதை விட ஒரு நல்ல முடிவு இருக்க முடியாது. மூணு வருஷம் காத்திருந்தோம், நம்ம குழந்தைக்காக. யாருக்காகவோ உங்க ரெண்டு பேரோட நலனை நா விட்டு குடுக்க முடியாது. நீ HR கிட்டயே பேசி விடுப்பு வாங்கினாலும், திரும்ப அந்த ப்ராஜெக்ட்ல போனா அவங்கள சமாளிக்கணும். பாலிடிக்ஸ் பண்ணுவாங்க, இந்த டைம்ல அதை ஹாண்டில் பண்ற டென்ஷன் உனக்கு எதுக்கு? டெலிவரி முடிஞ்சு கொஞ்ச நாள் கழிச்சு வேற கம்பெனில கூட சேர்ந்துக்கலாம். இந்த நாட்கள் ஒரு முறை தான். அதோட சந்தோஷத்தை நாம முழுசா அனுபவிக்கலாம்மா" என்றான். அவன் சொல்வதெல்லாம் முழுக்க சரி தான், ஆனால் எவ்வளவு ஆசையாக சேர்ந்த வேலை? இன்னும் சில மாதங்களில் ப்ரோமோஷன் வரும் என காத்துக்கொண்டிருக்கும் வேளையில், எங்கிருந்தோ சில மாதங்களுக்கு முன் வந்து இங்கே சேர்த்துவிட்டு என்னுடைய நிம்மதியை குலைக்கிறாளே இந்த தேவகி.
அவளுக்காக என்னுடைய கனவை நான் விடணுமா? விவேக்கிற்கு மட்டும் ஆபீசில் பிரச்சனை இல்லாமலா இருக்கிறது? அதை சமாளிக்க தானே பார்க்கிறான், நினைத்தபடி வேலையை அவன் விட்டுவிட முடியுமா என்ன? ஆனால் என்னால் கண்டிப்பாக பாலிடிக்ஸ் பண்ணி எதிர்த்து பேசி, அதெல்லாம் வரவே வராதே எனக்கு, என வருத்தமாக நினைத்துக்கொண்டாள். மாறி மாறி எண்ணங்கள் ஓட, ஒரே குழப்பமாக இருந்தது அவளுக்கு. சரி HR'இடம் பேசிப்பார்க்கலாம் என HR என பதிக்கப்பட்டிருந்த அறையின் கதவை ஆட்காட்டி விரலை மடக்கி நாசுக்காக மெல்ல தட்டி, "எக்ஸ்கியூஸ் மீ மிதுன், உள்ள வரலாமா" என கேட்டபடி கதவை லேசாக திறந்து தலையை மட்டும் நீட்டினாள்.
புருவங்களை உயர்த்தி புன்னகைத்தபடி "ஹேய் வந்தனா வாங்க, உங்க ஹெல்த் இப்ப எப்படி இருக்கு? அண்ட் காங்கிராட்ஸ்" என சொல்லி அவளது கையை குலுக்கினான். "பாக்கவே ரொம்ப டல்லா இருக்கீங்களே" என்றான். "தாங்க் யு மிதுன், அது பத்தி பேச தான் வந்தேன். நேத்து தான் ஜாயின் பண்ணேன், பட் சமாளிக்க முடியல. மார்னிங் சிக்னஸ், ட்ராவல் டயர்ட்னஸ் எல்லாமே ரொம்ப அதிகமா இருக்கு. சம்பளமில்லா விடுப்புல இன்னும் கொஞ்சம் நாள் போகலாமான்னு யோசிக்கறேன்" என ஆரம்பித்து தேவகிக்கும் அவளுக்கும் நடந்த உரையாடல்கள் பற்றியும் ஒரு ப்ரொஜெக்ட்டிற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது பற்றியும் சொல்லி முடித்தாள். "கம்பெனி பாலிசி படி நீங்க விடுப்பு எடுக்கறதுக்கு தகுதி உடையவங்க தான். பில்லிங்ல இன்னும் போகல, உங்களுக்கு இன்னும் ரொம்ப பிளான் பண்ணலேன்னா ப்ரொஜெக்ட்க்கு வேற யாராவது கூட ஆள் பார்த்துக்கலாம். என் சைடுல எந்த ப்ராப்ளமும் இல்ல, ப்ராஜெக்ட்க்கு தேவகி தான் சொல்லணும். இல்லேனா ஷங்கர் கிட்ட பேசுங்க (ஷங்கர், டெலிவரி மேனேஜர்). உடம்ப பாத்துக்கோங்க" என மிக சாமர்த்தியமாக HR பாணியில் பேசி அவளுக்கு விடை கொடுத்தான்.
இங்கே அவரவர்க்கு அவங்க சேப்டி முக்கியம். அப்ப எனக்கும் அப்படி தான இருக்கும்? முப்பது பேரில் இருந்து இரண்டு பேராக வேலை செய்த வரை அந்த ப்ராஜெக்ட்டில் நான் இருந்திருக்கிறேன், திரும்பவும் அதே ப்ராஜெக்ட்டிற்கு தனி ஆளாக கவனித்துக்கொள்வதற்கு என்னை பரிந்துரைத்ததிலேயே என்னுடைய திறன் வெளிப்பட்டிருக்கிறது தானே. இவ்வளவு நாட்கள் நான் எந்த காரணங்களும் சொல்லியதில்லை. எனக்கு ஒரு தேவை என்று வரும் போது நானே தான் எனக்காக பேச வேண்டும், கம்பெனி எனக்காக என்று தானாக முன் வந்து யோசிக்காது. அவர்கள் பேசும் சில வார்த்தைகளை மனதில் ஏற்றிக்கொள்ளாமல் இருக்கவும் பழகிக்க தான் வேணும். எப்படியும் இன்னும் சில நாட்கள்ல இந்த சிக்னெஸ் சரி ஆகிரும். ரெண்டு மூணு மாசத்துல அம்மாவும் கூட வந்துருவாங்க. அப்புறம் எதுக்கு நா வேலைய ரிசைன் பண்ணனும்? அவனவனுக்கு வேலை கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிற காலகட்டத்தில் யாரோ ஏதோ சொன்னார்கள் என்பதற்காக வேலையை விடுவது சரியா என்ன? தவிர இப்போது நான் வேலையை விட்டால் அவர்கள் சொன்னது உண்மை என்றாகி விடும். பின்னாளில் ரொம்ப முடியவில்லை என்று ஒரு நிலைமை வந்தால், வந்தால் அன்றைய தினத்தில் முடிவு செய்து கொள்ளலாம்.
ஒரு தீர்மானத்திற்கு வந்தவளாக அவளது இருக்கைக்கு சென்று, முகத்தில் அரும்பியிருந்த வியர்வை துளிகளை கைக்குட்டையால் துடைத்து கொண்டாள். பின்னர் சிறிது சாத்துக்குடி பழச்சாறை அருந்தி ஆசுவாசப்படுத்திக்கொண்டு தேவகிக்கு விடுப்பு ஈமெயில் அனுப்புவதற்கு விசைப்பலகையில் விசைகளை தட்டலானாள்.
Thursday, April 23, 2020
கனவே கலையாதே - பாகம் 1
வந்தனாவும் விவேக்கும் அந்த செவ்வக வெள்ளை நிறத்திலான, பரிசோதனை சாதனத்தையே உற்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். சில வினாடிகள் காத்திருந்த பின் "இல்ல போல கண்ணா, ஒரு பிங்க் கோடு தான் காட்டுது" என்று குரலில் சுரத்தே இல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கும் போதே இரண்டாவது கோடு லேசாக தெரிய ஆரம்பிக்க "ஹேய்ய் இருக்கு கண்ணா" என்று கண்கள் விரிய உற்சாகத்தில் கத்தினாள். உடலெல்லாம் சிலிர்க்க, கண்கள் மகிழ்ச்சியில் பனித்துவிட்டது அவளுக்கு.
"குட்ட்டீடீடீ..." என்று விவேக் அவளை இறுக அணைத்துக்கொண்டான். இருவருக்கும் திருமணமாகி மூன்று வருடங்களுக்கு மேலாகி விட்டது. இருவர் வீட்டிலும் சம்மதித்து நடந்தேறிய காதல் திருமணம். திருமணம் ஆகி ஒரு வருடம் வரை கருவுருவாகாததால், பெரியவர்களின் அறிவுறுத்தலின் பேரில், தெரிந்தவர்களிடம் விசாரித்து ஒரு மகப்பேறு மருத்துவரிடம் காண்பித்தனர். உடலளவில் எந்த பிரச்சனையும் இல்லாததால் மேலும் சில மாதங்கள் காத்திருக்கலாம் என முதலில் அவர் கூறினார். ஒன்றரை வருடங்கள் ஆன பிறகு கொஞ்சம் சப்ளிமெண்ட்ஸ் கொடுக்க ஆரம்பித்தார், பிறகு அதுவே நிறைய சோதனைகள் மற்றும் மருந்துகள் என மாறியது. காரணங்கள் பெரிதாக கண்டுபிடிக்கபடவில்லை. ஒவ்வொரு மாதமும் எஞ்சும் ஏமாற்றத்தை இந்த இரண்டாவது கோடு இன்று மிஞ்சி விட்டது. அன்று மாலையே அவர்களுடைய மருத்துவரை சந்தித்தனர்.
அந்த அறையின் வெளிர் பச்சை நிறத்திலான சுவர்கள் முழுக்க புன்னகை பூக்கும் குழந்தைகள் மற்றும் அம்மாக்களின் படங்கள் ஒட்டப்பட்டிருக்க, தண்ணீர் நிறைந்த அந்த பித்தளை கிண்ணத்தில் வைக்கப்பட்டிருந்த ரோஜா மலர்களின் மெல்லிய நறுமணம் இதமாய் சுவாசத்தை நிறைத்தது. "வாழ்த்துக்கள் வந்தனா, இப்ப ஹாப்பியா?" என்றார் புன்னகையுடன். "ரொம்ப ரொம்ப சந்தோஷம் மேடம், சொல்ல வார்த்தையே இல்ல" என்றான் விவேக். "ஃபோலிக் ஆசிட் டேப்ளெட்ஸ் மட்டும் இப்ப போட்டுக்கிட்டா போதும், அடுத்த மாசம் செக் அப்'க்கு வந்தா போதும்" என்றபடியே பரிந்துரை சீட்டில் எழுதினார்.
"ஆபீஸ் போலாமா மேடம்? பஸ்ல தான் போகணும், பரவாலயா?" என தன் சந்தேகத்தை முன் வைத்தான். "எவ்ளோ நேரம் ஆகும் ட்ராவல் டைம்? வீட்ல கூட ஹெல்ப்புக்கு யாரவது இருக்காங்களா?" என விவரங்கள் கேட்க "இருபது நிமிட ட்ராவல் டைம், முன்னாடியும் பின்னாடியும் ஒரு ஏழு அல்லது எட்டு நிமிடம் நடக்கணும். இப்ப தான் அண்ணிக்கு டெலிவரி ஆச்சு, அதுனால எங்கம்மா அண்ணன் கூட சிங்கப்பூர்ல இருக்காங்க. விவேக்கோட அம்மாக்கு கீழ விழுந்ததுல ஒரு சின்ன அடி, பெட் ரெஸ்ட்ல இருக்காங்க. எப்படியும் இன்னும் ரெண்டு மூணு மாசத்துக்கு நாங்களே தான் சமாளிக்க வேண்டியதிருக்கும் மேடம்" என்றாள் வந்தனா.
"பொதுவா நார்மலா இருக்கவங்களுக்கு ரொம்ப ரெஸ்ட்லாம் தேவைபடாது, ஆனா உனக்கு இவ்ளோ நாள் கழிச்சு கன்பார்ம் ஆனதுனால, லீவு கெடைக்கும்னா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா பெட்டெர்" என்று சொல்லி முடிக்குமுன் "சாப்பாடெல்லாம் எப்படி குடுக்கணும், வாமிட்டிங் இருந்தா என்ன பண்ணனும், இப்பவே வாக்கிங் போகணுமா? சில்லியா இருந்தா சாரி மேடம், முதல் குழந்தைங்கறதால எதுவும் கோட்டை விட்டுற கூடாதேன்னு கேட்டுக்கறேன்" என்றான் விவேக், சிறிது பதட்டமும் அக்கறையும் ஒன்று சேர.
"உங்க அக்கறை எனக்கு புரியுது மிஸ்டர் விவேக், இப்போதைக்கு எல்லாமே நார்மலா செஞ்சா போதும், அப்புறம் போக போக பாத்து நம்ம டிசைட் பண்ணிக்கலாம்" என்றார் கொஞ்சமும் பொறுமை மாறாமல். அவருக்கு நன்றி சொல்லி அறையை விட்டு வெளியேற, "நீ இங்க உக்கார்ந்திரு, நா போய் மெடிக்கல்ஸ்ல மாத்திரை வாங்கிட்டு வந்துடறேன்" என அங்கிருந்த நாற்காலியை அவளுக்கு காட்டிவிட்டு, மருந்தகம் என எழுதியிருந்த அந்த சிறிய கண்ணாடி அறையை நோக்கி நடந்தான். ஒரு பத்து நிமிட காத்திருத்தலின் பின் மாத்திரையை வாங்கிக்கொண்டு வந்தவன், பார்க்கிங்கில் இருந்த அவர்களது நீல நிற டியாகோவில் வந்தனா அமர்வதற்கு ஏதுவாக முன்னிருக்கை கதவை திறந்து பிடித்தான். அவள் அமர்ந்த பிறகு காரின் கதவை அதிராமல் சாத்திவிட்டு அவனது இருக்கையில் உட்கார்ந்து, சாவியை திருகி இக்னிஷனுக்கு உயிர் கொடுத்தான்.
"ப்ப்பா, என்னா ஒரு பதுசு, என்னைக்காது எனக்கு கார் கதவை தெறந்து விட்ருக்கியா நீ? உன் வாரிசுக்கு மட்டும் இவ்ளோ அக்கறையா?" என வம்பிழுத்தாள். "ஏய் மண்டு, அது என் வாரிசை பத்திரமா பாத்துக்க போற என் பொண்டாட்டிக்கு குடுக்கற மரியாதை" என செல்லமாக காதை திருகினான். "குட்டி, நீ ஆபீஸ்க்கு லீவு சொல்லிரு. கால் பண்ணி சொன்னா போதும்ல?" என சீரியஸாக பேச்சை மாற்றினான். "போதும்னு தான் நினைக்கறேன், இன்னும் இந்த புது ப்ராஜெக்ட்ல எனக்கு வேலை ஒதுக்கவில்லை, அடுத்த வாரத்துல இருந்து தான் பில்லிங். அதுனால பேசிக்கலாம்" என்றாள்.
வீட்டிற்கு சென்ற உடன் நிரூபமாவிற்கு கால் பண்ணினாள். நிருபமா அவளது புது ப்ரொஜெக்ட்டின் மேனேஜர். கன்சீவ் ஆன விஷயத்தையும் ட்ராவல் பண்ணாமல் இருக்க டாக்டர் பரிந்துரைத்திருப்பதாகவும் சொல்லி தான் ஒரு மாதகாலம் விடுப்பில் போக விரும்புவதாக சொன்னாள். "அடுத்த வாரத்தில் இருந்து பில்லிங், இல்லையா நிருபமா? எனக்கு என்று பிளான் பண்ணி இருப்பீங்க, சாரி திடீர்னு விடுப்பு எடுக்கற மாதிரி ஆகிருச்சு" என்றவளுக்கு "ஆக்ச்சுவலி ஒன்னும் பிரச்சனை இல்ல, இன்னும் உங்க பில்லிங் கன்பார்ம் ஆகல. அதுனால நீங்க வந்ததுக்கப்புறம் கூட பிளான் பண்ணிக்கலாம்" என்றாள் அவள். ஃபோனை வைத்த பிறகு "இந்த நிருபமா இப்படி பேசற டைப் இல்லையே, எதுவானாலும் விதண்டாவாதம் தான் செய்வா, இன்னைக்கு என்ன சொன்னதும் சரினு சொல்லிட்டா" என சந்தேகமாக விவேக்கிடம் சொன்னாள்.
"லீவுக்கு அப்ரூவல் கெடச்சிருச்சுல, ஒரு மாசம் ஆபீஸ மறந்துரு. ரிலாக்ஸ்ட்டா இரு" என்றான் விவேக். அடுத்து வந்த சில வாரங்கள் எப்போதும் போல இருந்தாலும், ஐம்பதாவது நாளை நெருங்க நெருங்க வந்தனாவிற்கு மார்னிங் சிக்னெஸ் ஆரம்பித்தது. உணவை சமைத்தாலும், பார்த்தாலும், சாப்பிட்டாலும் என என்ன செய்தாலும் வயிற்றை பிரட்டி பிரட்டி வாந்தி எடுத்தாள். ஒவ்வொரு முறை வாந்தி எடுத்ததும் துவண்டு சுருண்டு படுத்துக்கொண்டவளுக்கு விவேக் சாத்துக்குடி ஜூஸ் பிழிந்து கொடுத்தான். ஆபீஸ் செல்வதாக இருந்தால் பழங்கள் எல்லாம் உரித்து டபபாவில் போட்டு வைத்து, ஜூஸ் பிழிந்து வைத்துவிட்டு செல்லுவான். முடிந்தவரை சமையல் அவனே செய்து விடுவான். ஒரு மாதகாலம் முடிந்து செக் அப்பிற்கு சென்ற போது "வாமிட்டிங் இருக்கிறதே என்று சாப்பிடாமல் இருந்தால் வீக் ஆகிடுவ, ஒழுங்கா சாப்பிடு. வாமிட்டிங் கொஞ்ச வாரங்கள்ல அதுவே சரி ஆகிரும். ஆபீஸ் போறதானால் பாத்து போய்க்கொள்ளலாம்" என்றும் சொல்லிவிட்டார்.
முதல் நாள் விவேக்கே அவளை காரில் கூட்டி போய் ஆபீசில் விட்டான். விவேக்கிற்கு பணி செய்யும் நேரம் ஒவ்வொரு வாரமும் மாறும். சில வாரங்கள் காலையில் நான்கு மணிக்கெல்லாம் கிளம்பி மாலையில் நான்கு மணிக்கு வருவான். சில வாரங்களில் மதியம் பதினோரு மணிக்கு கிளம்பி இரவு பதினொன்று அல்லது பன்னிரண்டு என வருவான். இந்த வாரம் முழுக்க மார்னிங் ஷிஃட், அன்றைக்கு மட்டும் வந்தனாவிற்காக பர்மிஷன் போட்டிருந்தான். செக்யூரிட்டி செக் முடித்து அங்கிருந்த ஒரு குடையை எடுத்துக்கொண்டு அவளது பில்ட்டிங்கை நோக்கி நடந்தாள். மூன்றாவது தளத்தில் இருந்த அவளது இடத்திற்கு சென்ற போது அந்த கியூபிக்கலில் அவளது இடத்தை தவிர மற்ற கம்பியூடர்களில் பழைய ஆட்கள் யாரும் இல்லை.
இரண்டு வருடங்களுக்கு முன் இந்த இடம் எப்படி இருந்தது. அவர்களது பழைய ப்ரொஜெக்ட்டில் முப்பது பேர், இந்த இடம் அவர்கள் ராஜ்ஜியம் தான். எப்போதும் களை கட்டும். வேலைக்கு வேலையும் ஆகும், சிரிப்புக்கும், அரட்டைக்கும் குறைவிருக்காது. சில மாதங்கள் தொடர்ச்சியாக சனி ஞாயிறு எல்லாம் ஆபீஸ் வந்த தினங்களும் உண்டு. இரவு இரண்டு மணி மூன்று மணி வரைக்கும் கூட வேலை பார்த்திருந்தார்கள். ஆனாலும் அலுத்ததில்லை. ஒருத்தருக்கொருத்தர் துணையாக, சந்தேகங்களும் கருத்து பரிமாற்றங்களும் என மிக ஆரோக்கியமான டீம் அவர்களுடையது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் குறைந்து, கடைசியில் இவளோடு சேர்த்து ஒரு ஆறு பேர் தான் இருந்தார்கள். அதுவும் பின்னர் மாறி இவளும் கணேஷும் என்று ஆனது. கணேஷ் இவளை விட சீனியர். மிகவும் தன்மையானவர். வந்தனாவிற்கு யூஎஸ் விசா இருந்ததால் ஒரு ப்ரொஜெக்ட்டிற்காக ஆறு மாதம் ஆன்சைட் செல்ல வாய்ப்பு கிடைத்தது. கணேஷ் மட்டும் தனியாளாக அந்த ப்ரொஜெக்ட்டை தாங்கி பிடித்துக்கொண்டிருந்தார். யூஎஸ்ஸில் இருந்து ப்ராஜெக்ட் முடிந்து வந்த பிறகு கூட வந்தனா வேற பில்டிங்கில் இருந்து தான் வேலை பார்க்க நேர்ந்தது. அங்கெல்லாம் அனுபவம் வேறு மாதிரி இருந்தது, இங்கே போல கலகலப்பு அரட்டையெல்லாம் அவ்வளவு இல்லை. அந்த ப்ரொஜெக்ட்டும் முடிந்து வந்தனா அவளுடைய பழைய பில்டிங்கிர்க்கே வந்த போது, அவர்களது யூனிட்டிற்காக ஒரு சிறிய வலைத்தளம் உருவாக்கவேண்டியிருந்தது. அதன் பணி நிமித்தமாக அவள் பல ப்ராஜெக்ட் மேனேஜர்களுடனும் உரையாடி ஒருங்கிணைத்து தகவல்களை பெற வேண்டியிருந்தது. இதன் காரணமாக வந்தனா அந்த யூனிட்டில் நிறைய பேருக்கு பரிச்சயமாயிருந்தாள். அதனால் தெரிந்த தலைகள் எல்லாம் அவளை பார்த்து இப்போது நலம் விசாரித்து கொண்டிருந்தார்கள்.
அப்போது தான் அந்த தளத்தின் கதவை தள்ளிக்கொண்டு உள்ளே வந்த கணேஷ் அவளை பார்த்ததும் கையசைத்துக்கொண்டே பக்கத்தில் வந்து "ஹாய் வந்தனா, கங்கிராட்ஸ். ஹெல்த் இப்ப எப்படி இருக்கு?" என விசாரித்தார். "ஹெல்த் எல்லாம் ஃபைன், இந்த மார்னிங் சிக்னஸ் தான் கண்ணா பின்னான்னு இருக்கு" என சிரித்தாள். "ஓ வாமிட்டிங் அதிகமா இருக்கா?" என்றார் அக்கறையாக. "ஆமா கணேஷ்... ம்ம் நிருபமா எங்க உக்காந்துருக்காங்க, இனிமே தான் அவங்கள போயி பாக்கணும்" என கேட்டு நிரூபமாவின் இருப்பிடம் நோக்கி நடந்தாள்.
ஏதோ ஈமையிலை படித்துவிட்டு தாடையில் கட்டைவிரலால் கோடு போட்டபடி யோசித்துக்கொண்டிருந்தவளிடம் "ஹாய் நிருபமா" என்றாள். "ஹேய்.. ஹாய், இப்ப ஹெல்த் ஓகேவா" என்ற வழக்கமான உரையாடல்கள் முடிந்த பிறகு "ஆக்ச்சுவலி அந்த ப்ராஜெக்ட் நமக்கு கிடைக்கற மாறி இல்ல. உங்கள கணேஷ்க்கு பதிலா பழைய ப்ரொஜெக்ட்லயே போடலாமான்னு பிளான் பண்ணிட்டு இருக்கோம். நீங்க போயி தேவிகா கிருஷ்ணனை மீட் பண்ணுங்க. அவங்க தான் இப்ப அந்த ப்ரொஜெக்ட்டை பாத்துக்கறாங்க" என்றாள். "சரி நிருபமா, நா போய் அவங்கள பாக்கறேன்" என சொல்லிவிட்டு தேவிகாவின் இருப்பிடத்திற்கு சென்றாள். யாருடனோ ஃபோனில் பேசிக்கொண்டிருந்தவள் இவளை பார்த்ததும் தலையை மட்டும் அசைத்து, ஒரு நிமிடம் என்பது போல விரலால் சைகை காட்டினாள். சில வினாடிகள் முடிவில் "சொல்லுங்க வந்தனா, லீவு முடிஞ்சு வந்தாச்சா? உங்கள பழைய ப்ராஜெக்ட்லேயே போடலாம்னு இருக்கோம், கணேஷுக்கு பதிலா. அது பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு உங்களுக்கு சொல்றேன்" என்றாள். தேவிகா அப்படி தான் கறாராக பேசுகிற ரகம், விஷயம் என்னவோ அதை மட்டும் தான் பேசுவாள், அதுக்குன்னு ஒரு கங்கிராட்ஸ் கூட சொல்லலையே என நினைத்துக்கொண்டே "சரி தேவிகா" என சொல்லிவிட்டு வந்தனா அங்கிருந்து நகன்றாள்.
இவ்வளவு நேரம் ஒவ்வொருவரிடமும் பேசிக்கொண்டிருந்ததில் இப்போது தான் வந்தனாவுக்கு அசதியாக இருந்தது. நாக்கை வறட்டிக்கொண்டு வந்தது, கொண்டு வந்திருந்த ஜுசை எடுத்து ஒரு கால் பாட்டில் குடித்தாள். சில நொடிகளில் பிரட்டிக்கொண்டு வர, வேக வேகமாக வாஷ்ரூம் சென்று ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் வெளியில் எடுத்தாள். கை, காலெல்லாம் வெல வெலத்தது போல் ஆக, பையிலிருந்து புளிப்பு மிட்டாய் ஒன்றை எடுத்து வாயில் ஒதுக்கி கொண்டாள். கணேஷின் கியூபிகலில் வேறு யாரும் இல்லாமல் காலியாக இருந்ததால் அங்கே சென்று உட்காரலாம் என அங்கே சென்றாள். சென்றவள் முகம் மாறியிருப்பதை பார்த்த கணேஷ் "என்னங்க திரும்ப முடியலையா?" என்றார். "ஆமா கணேஷ், வாமிட் பண்ணேன், டையர்ட் ஆகிருச்சு. அங்க எல்லாரும் புதுசா இருக்காங்க, சங்கடமா இருந்தது, அதான் இங்க இடம் இருக்கேனு வந்துட்டேன்" என்றபடி அங்கிருந்த ஒரு கம்ப்யூட்டரை ஆன் செய்தாள். நடுவில் விவேக்கிடம் இருந்து மெசேஜ் வர அவனுக்கு ரிப்ளை பண்ணிவிட்டு ஈமெயில் செக் பண்ணிக்கொண்டிருந்தாள். சிறிது நேரத்திற்கெல்லாம் மறுபடி வயிற்றை பிரட்ட மறுபடி வாந்தி எடுத்தாள். மிகவும் அயற்சியாக வாஷ்ரூமில் இருந்து வந்தவளை பார்த்த கணேஷ் "என்னாச்சுங்க, இளநீர் ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா? இல்ல டாக்டர் கிட்ட ஏதும் போகணுமா? " என கேட்டார். "வேணாம் கணேஷ், கொஞ்ச நேரத்துல சரி ஆகிரும்" என்றாள். சிறிது நேரம் ஆகியும் சரியாகாததால் விவேக்கிற்கு கால் செய்தாள். "எதுவும் சாப்பிட முடியாம ஆபீஸ்ல எவ்ளோ நேரம் இருப்ப, நா வந்து உன்ன பிக் அப் பண்ணிக்கறேன்" என்று சொன்னான். இவளும் சரி என்றுவிட்டாள். கணேஷ், தான் கேட் வரைக்கும் துணைக்கு வருவதாக சொல்லி, விவேக் வந்த பிறகு அவளுடன் அவளுக்கு குடையை பிடித்தபடி கூட்டி சென்றார். "ரொம்ப தேங்க்ஸ் கணேஷ், எப்படி இருக்கீங்க" என விவேக் அவரிடம் ஓரிரு நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு காரை கிளப்பினான். "நிரூபமாவோ இல்ல தேவிகாவோ என்ன தேடினா சொல்லிடுங்க கணேஷ், இல்லேன்னா எனக்கு கால் பண்ணுங்க, நா அவங்களுக்கு கூப்டு பேசிக்கறேன்" என்றவளுக்கு வியர்த்து ஊற்றியது. "ஏன் உனக்கு இப்படி வேர்க்குது? எதுக்கும் டாக்டர்க்கு பேசலாம்" என்று சொல்லிக்கொண்டே அவரின் நம்பரை டயல் செய்தான். விவரம் சொல்ல, வாமிட்டிங் ரொம்ப அதிகமா இருக்கும் போது மட்டும் போடுவதற்கு என்று ஒரு மாத்திரையை பரிந்துரைத்தார். போகும் வழியிலேயே அதை வாங்கிக்கொண்டு மிச்சமிருந்த ஜுசை குடித்து அதை போட்டுக்கொண்டாள். அதன் பிறகு கொஞ்சம் தேவலாம் போலிருந்தது. வீட்டிற்கு சென்ற உடன் பசியில் நன்றாக சாப்பிட்டு விட்டு அசதியில் உடனே உறங்கிவிட்டாள். படுத்திருந்தவளின் தலையை கோதியபடி உட்கார்ந்திருந்த விவேக் இப்படி வாமிட் இருந்தால் எப்படி சமாளிக்க முடியும் ஆபீசில் என கவலையுடன் யோசித்துக்கொண்டிருந்தான்.
Learning Beyond Textbooks - Life Skills - Child Growth
#Learning_Beyond_Textbooks #Life_Skills A home is the first environment where children can playfully learn a plenty. Traditional textbook le...
-
How often do we give importance to the feelings of others? Be it a known person or a stranger. Are we socially aware? Social awareness is no...
-
#Learning_Beyond_Textbooks #Life_Skills A home is the first environment where children can playfully learn a plenty. Traditional textbook le...
-
மேகலா பொறுமை இழந்தவளாக மணிக்கட்டில் இருக்கும் கடிகாரத்தை பார்த்தாள். இரவு பத்து மணியை கடந்திருந்தது. சென்னையில் திருவான்மியூரின் பிரதானமான ...