Thursday, April 23, 2020

கனவே கலையாதே - பாகம் 1

 வந்தனாவும் விவேக்கும் அந்த செவ்வக வெள்ளை நிறத்திலான,  பரிசோதனை சாதனத்தையே உற்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். சில வினாடிகள் காத்திருந்த பின் "இல்ல போல கண்ணா, ஒரு பிங்க் கோடு தான் காட்டுது" என்று குரலில் சுரத்தே இல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கும் போதே இரண்டாவது கோடு லேசாக தெரிய ஆரம்பிக்க "ஹேய்ய் இருக்கு கண்ணா" என்று கண்கள் விரிய உற்சாகத்தில் கத்தினாள். உடலெல்லாம் சிலிர்க்க, கண்கள் மகிழ்ச்சியில் பனித்துவிட்டது அவளுக்கு.

"குட்ட்டீடீடீ..." என்று விவேக் அவளை இறுக அணைத்துக்கொண்டான். இருவருக்கும் திருமணமாகி மூன்று வருடங்களுக்கு மேலாகி விட்டது. இருவர் வீட்டிலும் சம்மதித்து நடந்தேறிய காதல் திருமணம். திருமணம் ஆகி ஒரு வருடம் வரை கருவுருவாகாததால், பெரியவர்களின் அறிவுறுத்தலின் பேரில்,  தெரிந்தவர்களிடம் விசாரித்து ஒரு மகப்பேறு மருத்துவரிடம் காண்பித்தனர். உடலளவில் எந்த பிரச்சனையும் இல்லாததால் மேலும் சில மாதங்கள் காத்திருக்கலாம் என முதலில் அவர் கூறினார். ஒன்றரை வருடங்கள் ஆன பிறகு கொஞ்சம் சப்ளிமெண்ட்ஸ் கொடுக்க ஆரம்பித்தார், பிறகு அதுவே நிறைய சோதனைகள் மற்றும் மருந்துகள் என மாறியது. காரணங்கள் பெரிதாக கண்டுபிடிக்கபடவில்லை. ஒவ்வொரு மாதமும் எஞ்சும் ஏமாற்றத்தை இந்த இரண்டாவது கோடு இன்று மிஞ்சி விட்டது. அன்று மாலையே அவர்களுடைய மருத்துவரை சந்தித்தனர்.

அந்த அறையின் வெளிர் பச்சை நிறத்திலான சுவர்கள் முழுக்க புன்னகை பூக்கும் குழந்தைகள் மற்றும் அம்மாக்களின் படங்கள் ஒட்டப்பட்டிருக்க, தண்ணீர் நிறைந்த அந்த பித்தளை கிண்ணத்தில் வைக்கப்பட்டிருந்த ரோஜா மலர்களின் மெல்லிய நறுமணம் இதமாய் சுவாசத்தை நிறைத்தது. "வாழ்த்துக்கள் வந்தனா, இப்ப ஹாப்பியா?" என்றார் புன்னகையுடன். "ரொம்ப ரொம்ப சந்தோஷம் மேடம், சொல்ல வார்த்தையே இல்ல" என்றான் விவேக். "ஃபோலிக் ஆசிட் டேப்ளெட்ஸ் மட்டும் இப்ப போட்டுக்கிட்டா போதும், அடுத்த மாசம் செக் அப்'க்கு வந்தா போதும்" என்றபடியே பரிந்துரை சீட்டில் எழுதினார்.

"ஆபீஸ் போலாமா மேடம்? பஸ்ல தான் போகணும், பரவாலயா?" என தன் சந்தேகத்தை முன் வைத்தான். "எவ்ளோ நேரம் ஆகும் ட்ராவல் டைம்? வீட்ல கூட ஹெல்ப்புக்கு யாரவது இருக்காங்களா?" என விவரங்கள் கேட்க "இருபது நிமிட ட்ராவல் டைம், முன்னாடியும் பின்னாடியும் ஒரு ஏழு அல்லது எட்டு நிமிடம் நடக்கணும். இப்ப தான் அண்ணிக்கு டெலிவரி ஆச்சு, அதுனால எங்கம்மா அண்ணன் கூட சிங்கப்பூர்ல இருக்காங்க. விவேக்கோட அம்மாக்கு கீழ விழுந்ததுல ஒரு சின்ன அடி, பெட் ரெஸ்ட்ல இருக்காங்க. எப்படியும் இன்னும் ரெண்டு மூணு மாசத்துக்கு நாங்களே தான் சமாளிக்க வேண்டியதிருக்கும் மேடம்" என்றாள் வந்தனா.

"பொதுவா நார்மலா இருக்கவங்களுக்கு ரொம்ப ரெஸ்ட்லாம் தேவைபடாது, ஆனா உனக்கு இவ்ளோ நாள் கழிச்சு கன்பார்ம் ஆனதுனால, லீவு கெடைக்கும்னா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா பெட்டெர்" என்று சொல்லி முடிக்குமுன் "சாப்பாடெல்லாம் எப்படி குடுக்கணும், வாமிட்டிங் இருந்தா என்ன பண்ணனும்,  இப்பவே வாக்கிங் போகணுமா? சில்லியா இருந்தா சாரி மேடம், முதல்  குழந்தைங்கறதால எதுவும் கோட்டை விட்டுற கூடாதேன்னு கேட்டுக்கறேன்" என்றான் விவேக், சிறிது பதட்டமும் அக்கறையும் ஒன்று சேர.

"உங்க அக்கறை எனக்கு புரியுது மிஸ்டர் விவேக், இப்போதைக்கு எல்லாமே நார்மலா செஞ்சா போதும், அப்புறம் போக போக பாத்து நம்ம டிசைட் பண்ணிக்கலாம்" என்றார் கொஞ்சமும் பொறுமை மாறாமல். அவருக்கு நன்றி சொல்லி அறையை விட்டு வெளியேற, "நீ இங்க உக்கார்ந்திரு, நா போய் மெடிக்கல்ஸ்ல மாத்திரை வாங்கிட்டு வந்துடறேன்" என அங்கிருந்த நாற்காலியை அவளுக்கு காட்டிவிட்டு, மருந்தகம் என எழுதியிருந்த அந்த சிறிய கண்ணாடி அறையை நோக்கி நடந்தான். ஒரு பத்து நிமிட காத்திருத்தலின் பின் மாத்திரையை வாங்கிக்கொண்டு வந்தவன், பார்க்கிங்கில் இருந்த அவர்களது நீல நிற டியாகோவில் வந்தனா அமர்வதற்கு ஏதுவாக முன்னிருக்கை கதவை திறந்து பிடித்தான்.  அவள் அமர்ந்த பிறகு காரின் கதவை அதிராமல் சாத்திவிட்டு அவனது இருக்கையில் உட்கார்ந்து, சாவியை திருகி இக்னிஷனுக்கு உயிர் கொடுத்தான்.

"ப்ப்பா, என்னா ஒரு பதுசு, என்னைக்காது எனக்கு கார் கதவை தெறந்து விட்ருக்கியா நீ? உன் வாரிசுக்கு மட்டும் இவ்ளோ அக்கறையா?" என வம்பிழுத்தாள். "ஏய் மண்டு, அது என் வாரிசை பத்திரமா பாத்துக்க போற என் பொண்டாட்டிக்கு குடுக்கற மரியாதை" என செல்லமாக காதை திருகினான். "குட்டி, நீ ஆபீஸ்க்கு லீவு சொல்லிரு. கால் பண்ணி சொன்னா போதும்ல?" என சீரியஸாக பேச்சை மாற்றினான். "போதும்னு தான் நினைக்கறேன், இன்னும் இந்த புது ப்ராஜெக்ட்ல எனக்கு வேலை ஒதுக்கவில்லை, அடுத்த வாரத்துல இருந்து தான் பில்லிங். அதுனால பேசிக்கலாம்" என்றாள்.

வீட்டிற்கு சென்ற உடன் நிரூபமாவிற்கு கால் பண்ணினாள். நிருபமா அவளது புது ப்ரொஜெக்ட்டின் மேனேஜர். கன்சீவ் ஆன விஷயத்தையும் ட்ராவல் பண்ணாமல் இருக்க டாக்டர் பரிந்துரைத்திருப்பதாகவும் சொல்லி தான் ஒரு மாதகாலம் விடுப்பில் போக விரும்புவதாக சொன்னாள். "அடுத்த வாரத்தில் இருந்து பில்லிங், இல்லையா நிருபமா? எனக்கு என்று பிளான் பண்ணி இருப்பீங்க, சாரி திடீர்னு விடுப்பு எடுக்கற மாதிரி ஆகிருச்சு" என்றவளுக்கு "ஆக்ச்சுவலி ஒன்னும் பிரச்சனை இல்ல, இன்னும் உங்க பில்லிங் கன்பார்ம் ஆகல. அதுனால நீங்க வந்ததுக்கப்புறம் கூட பிளான் பண்ணிக்கலாம்" என்றாள் அவள். ஃபோனை வைத்த பிறகு "இந்த நிருபமா இப்படி பேசற டைப் இல்லையே, எதுவானாலும் விதண்டாவாதம் தான் செய்வா, இன்னைக்கு என்ன சொன்னதும் சரினு சொல்லிட்டா" என சந்தேகமாக விவேக்கிடம் சொன்னாள்.

"லீவுக்கு அப்ரூவல் கெடச்சிருச்சுல, ஒரு மாசம் ஆபீஸ மறந்துரு. ரிலாக்ஸ்ட்டா இரு" என்றான் விவேக். அடுத்து வந்த சில வாரங்கள் எப்போதும் போல இருந்தாலும், ஐம்பதாவது நாளை நெருங்க நெருங்க வந்தனாவிற்கு மார்னிங் சிக்னெஸ் ஆரம்பித்தது. உணவை சமைத்தாலும், பார்த்தாலும், சாப்பிட்டாலும் என என்ன செய்தாலும் வயிற்றை பிரட்டி பிரட்டி வாந்தி எடுத்தாள். ஒவ்வொரு முறை வாந்தி எடுத்ததும் துவண்டு சுருண்டு படுத்துக்கொண்டவளுக்கு விவேக் சாத்துக்குடி ஜூஸ் பிழிந்து கொடுத்தான். ஆபீஸ் செல்வதாக இருந்தால் பழங்கள் எல்லாம் உரித்து டபபாவில் போட்டு வைத்து, ஜூஸ் பிழிந்து வைத்துவிட்டு செல்லுவான். முடிந்தவரை சமையல் அவனே செய்து விடுவான். ஒரு மாதகாலம் முடிந்து செக் அப்பிற்கு சென்ற போது "வாமிட்டிங் இருக்கிறதே என்று சாப்பிடாமல் இருந்தால் வீக் ஆகிடுவ, ஒழுங்கா சாப்பிடு. வாமிட்டிங் கொஞ்ச வாரங்கள்ல அதுவே சரி ஆகிரும். ஆபீஸ் போறதானால் பாத்து போய்க்கொள்ளலாம்" என்றும்  சொல்லிவிட்டார்.

முதல் நாள் விவேக்கே அவளை காரில் கூட்டி போய் ஆபீசில் விட்டான். விவேக்கிற்கு பணி செய்யும்  நேரம் ஒவ்வொரு வாரமும் மாறும். சில வாரங்கள் காலையில் நான்கு மணிக்கெல்லாம் கிளம்பி  மாலையில் நான்கு மணிக்கு வருவான். சில வாரங்களில் மதியம் பதினோரு மணிக்கு கிளம்பி இரவு பதினொன்று அல்லது பன்னிரண்டு என வருவான். இந்த வாரம் முழுக்க மார்னிங் ஷிஃட், அன்றைக்கு மட்டும் வந்தனாவிற்காக பர்மிஷன்  போட்டிருந்தான். செக்யூரிட்டி செக் முடித்து அங்கிருந்த ஒரு குடையை எடுத்துக்கொண்டு அவளது பில்ட்டிங்கை நோக்கி நடந்தாள். மூன்றாவது தளத்தில் இருந்த அவளது இடத்திற்கு சென்ற போது அந்த கியூபிக்கலில் அவளது இடத்தை தவிர மற்ற கம்பியூடர்களில் பழைய ஆட்கள் யாரும் இல்லை.

இரண்டு வருடங்களுக்கு முன் இந்த இடம் எப்படி இருந்தது. அவர்களது   பழைய ப்ரொஜெக்ட்டில் முப்பது பேர், இந்த இடம் அவர்கள் ராஜ்ஜியம் தான். எப்போதும் களை கட்டும். வேலைக்கு வேலையும் ஆகும், சிரிப்புக்கும், அரட்டைக்கும் குறைவிருக்காது. சில மாதங்கள் தொடர்ச்சியாக சனி ஞாயிறு எல்லாம் ஆபீஸ் வந்த தினங்களும் உண்டு. இரவு இரண்டு மணி  மூன்று மணி வரைக்கும் கூட வேலை பார்த்திருந்தார்கள். ஆனாலும் அலுத்ததில்லை. ஒருத்தருக்கொருத்தர் துணையாக, சந்தேகங்களும் கருத்து பரிமாற்றங்களும் என மிக ஆரோக்கியமான டீம் அவர்களுடையது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் குறைந்து, கடைசியில் இவளோடு சேர்த்து ஒரு ஆறு பேர் தான் இருந்தார்கள். அதுவும் பின்னர் மாறி இவளும் கணேஷும் என்று ஆனது. கணேஷ் இவளை விட சீனியர். மிகவும் தன்மையானவர். வந்தனாவிற்கு யூஎஸ் விசா இருந்ததால் ஒரு ப்ரொஜெக்ட்டிற்காக ஆறு மாதம் ஆன்சைட் செல்ல வாய்ப்பு கிடைத்தது. கணேஷ் மட்டும் தனியாளாக அந்த ப்ரொஜெக்ட்டை தாங்கி பிடித்துக்கொண்டிருந்தார். யூஎஸ்ஸில் இருந்து ப்ராஜெக்ட் முடிந்து வந்த பிறகு கூட வந்தனா வேற பில்டிங்கில் இருந்து தான் வேலை பார்க்க நேர்ந்தது. அங்கெல்லாம் அனுபவம் வேறு மாதிரி இருந்தது, இங்கே போல கலகலப்பு அரட்டையெல்லாம் அவ்வளவு இல்லை. அந்த ப்ரொஜெக்ட்டும் முடிந்து வந்தனா அவளுடைய பழைய பில்டிங்கிர்க்கே வந்த போது, அவர்களது யூனிட்டிற்காக ஒரு சிறிய வலைத்தளம் உருவாக்கவேண்டியிருந்தது. அதன் பணி நிமித்தமாக அவள் பல ப்ராஜெக்ட் மேனேஜர்களுடனும் உரையாடி  ஒருங்கிணைத்து தகவல்களை பெற வேண்டியிருந்தது. இதன் காரணமாக வந்தனா அந்த யூனிட்டில் நிறைய பேருக்கு பரிச்சயமாயிருந்தாள். அதனால் தெரிந்த தலைகள் எல்லாம் அவளை பார்த்து இப்போது நலம் விசாரித்து கொண்டிருந்தார்கள். 

அப்போது தான் அந்த தளத்தின் கதவை தள்ளிக்கொண்டு உள்ளே வந்த கணேஷ் அவளை பார்த்ததும் கையசைத்துக்கொண்டே பக்கத்தில் வந்து "ஹாய் வந்தனா, கங்கிராட்ஸ். ஹெல்த் இப்ப  எப்படி இருக்கு?" என விசாரித்தார். "ஹெல்த் எல்லாம் ஃபைன், இந்த மார்னிங் சிக்னஸ் தான் கண்ணா பின்னான்னு இருக்கு" என சிரித்தாள். "ஓ வாமிட்டிங் அதிகமா இருக்கா?" என்றார் அக்கறையாக. "ஆமா கணேஷ்... ம்ம் நிருபமா எங்க உக்காந்துருக்காங்க, இனிமே தான் அவங்கள போயி பாக்கணும்" என கேட்டு நிரூபமாவின் இருப்பிடம் நோக்கி நடந்தாள்.

ஏதோ ஈமையிலை படித்துவிட்டு தாடையில் கட்டைவிரலால் கோடு போட்டபடி யோசித்துக்கொண்டிருந்தவளிடம் "ஹாய் நிருபமா" என்றாள். "ஹேய்..  ஹாய், இப்ப ஹெல்த் ஓகேவா" என்ற வழக்கமான உரையாடல்கள் முடிந்த பிறகு "ஆக்ச்சுவலி அந்த ப்ராஜெக்ட் நமக்கு கிடைக்கற மாறி இல்ல. உங்கள கணேஷ்க்கு பதிலா பழைய ப்ரொஜெக்ட்லயே போடலாமான்னு பிளான் பண்ணிட்டு இருக்கோம். நீங்க போயி தேவிகா கிருஷ்ணனை மீட் பண்ணுங்க. அவங்க தான் இப்ப அந்த ப்ரொஜெக்ட்டை பாத்துக்கறாங்க" என்றாள். "சரி நிருபமா, நா போய் அவங்கள பாக்கறேன்" என சொல்லிவிட்டு தேவிகாவின் இருப்பிடத்திற்கு சென்றாள். யாருடனோ ஃபோனில் பேசிக்கொண்டிருந்தவள் இவளை பார்த்ததும் தலையை மட்டும் அசைத்து, ஒரு நிமிடம் என்பது போல விரலால் சைகை காட்டினாள். சில வினாடிகள் முடிவில் "சொல்லுங்க வந்தனா, லீவு முடிஞ்சு வந்தாச்சா? உங்கள பழைய ப்ராஜெக்ட்லேயே போடலாம்னு இருக்கோம், கணேஷுக்கு பதிலா. அது பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு உங்களுக்கு சொல்றேன்" என்றாள். தேவிகா அப்படி தான் கறாராக பேசுகிற ரகம், விஷயம் என்னவோ அதை மட்டும் தான் பேசுவாள், அதுக்குன்னு ஒரு கங்கிராட்ஸ் கூட சொல்லலையே என நினைத்துக்கொண்டே "சரி தேவிகா" என சொல்லிவிட்டு வந்தனா அங்கிருந்து நகன்றாள்.         

இவ்வளவு நேரம் ஒவ்வொருவரிடமும் பேசிக்கொண்டிருந்ததில் இப்போது தான் வந்தனாவுக்கு அசதியாக இருந்தது. நாக்கை வறட்டிக்கொண்டு வந்தது, கொண்டு வந்திருந்த ஜுசை எடுத்து ஒரு கால் பாட்டில் குடித்தாள். சில நொடிகளில் பிரட்டிக்கொண்டு வர, வேக வேகமாக  வாஷ்ரூம் சென்று ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் வெளியில் எடுத்தாள். கை, காலெல்லாம் வெல வெலத்தது போல் ஆக, பையிலிருந்து புளிப்பு மிட்டாய் ஒன்றை எடுத்து வாயில் ஒதுக்கி கொண்டாள். கணேஷின் கியூபிகலில் வேறு யாரும் இல்லாமல் காலியாக இருந்ததால் அங்கே சென்று உட்காரலாம் என அங்கே சென்றாள். சென்றவள் முகம் மாறியிருப்பதை பார்த்த கணேஷ் "என்னங்க திரும்ப முடியலையா?" என்றார். "ஆமா கணேஷ், வாமிட் பண்ணேன், டையர்ட் ஆகிருச்சு. அங்க எல்லாரும் புதுசா இருக்காங்க, சங்கடமா இருந்தது, அதான் இங்க இடம் இருக்கேனு வந்துட்டேன்" என்றபடி அங்கிருந்த ஒரு கம்ப்யூட்டரை ஆன் செய்தாள். நடுவில் விவேக்கிடம் இருந்து மெசேஜ் வர அவனுக்கு ரிப்ளை பண்ணிவிட்டு ஈமெயில் செக் பண்ணிக்கொண்டிருந்தாள். சிறிது நேரத்திற்கெல்லாம் மறுபடி வயிற்றை பிரட்ட மறுபடி வாந்தி எடுத்தாள்.  மிகவும் அயற்சியாக வாஷ்ரூமில் இருந்து வந்தவளை பார்த்த கணேஷ் "என்னாச்சுங்க, இளநீர் ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா? இல்ல டாக்டர் கிட்ட ஏதும் போகணுமா? " என கேட்டார். "வேணாம் கணேஷ், கொஞ்ச நேரத்துல சரி ஆகிரும்" என்றாள். சிறிது நேரம் ஆகியும் சரியாகாததால் விவேக்கிற்கு கால் செய்தாள். "எதுவும் சாப்பிட முடியாம ஆபீஸ்ல எவ்ளோ நேரம் இருப்ப, நா வந்து உன்ன பிக் அப் பண்ணிக்கறேன்" என்று சொன்னான். இவளும் சரி என்றுவிட்டாள். கணேஷ், தான் கேட் வரைக்கும் துணைக்கு வருவதாக சொல்லி, விவேக் வந்த பிறகு அவளுடன் அவளுக்கு குடையை பிடித்தபடி கூட்டி சென்றார்.  "ரொம்ப தேங்க்ஸ் கணேஷ், எப்படி இருக்கீங்க" என விவேக் அவரிடம் ஓரிரு நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு காரை கிளப்பினான். "நிரூபமாவோ இல்ல தேவிகாவோ என்ன தேடினா சொல்லிடுங்க கணேஷ், இல்லேன்னா எனக்கு கால் பண்ணுங்க, நா அவங்களுக்கு கூப்டு பேசிக்கறேன்" என்றவளுக்கு வியர்த்து ஊற்றியது. "ஏன் உனக்கு இப்படி வேர்க்குது? எதுக்கும் டாக்டர்க்கு பேசலாம்" என்று சொல்லிக்கொண்டே அவரின் நம்பரை டயல் செய்தான். விவரம் சொல்ல, வாமிட்டிங் ரொம்ப அதிகமா இருக்கும் போது மட்டும் போடுவதற்கு என்று ஒரு மாத்திரையை பரிந்துரைத்தார். போகும் வழியிலேயே அதை வாங்கிக்கொண்டு மிச்சமிருந்த ஜுசை குடித்து அதை போட்டுக்கொண்டாள். அதன் பிறகு கொஞ்சம் தேவலாம் போலிருந்தது. வீட்டிற்கு சென்ற உடன் பசியில் நன்றாக சாப்பிட்டு விட்டு அசதியில் உடனே உறங்கிவிட்டாள். படுத்திருந்தவளின் தலையை கோதியபடி உட்கார்ந்திருந்த விவேக் இப்படி வாமிட் இருந்தால் எப்படி சமாளிக்க முடியும் ஆபீசில் என கவலையுடன் யோசித்துக்கொண்டிருந்தான். 

பாகம் 2

No comments:

Post a Comment

Learning Beyond Textbooks - Life Skills - Child Growth

#Learning_Beyond_Textbooks #Life_Skills A home is the first environment where children can playfully learn a plenty. Traditional textbook le...