Thursday, March 2, 2023

My E-Books - எனது மின் புத்தகங்கள்

 சிறார்களுக்காக நான் எழுதியிருக்கும்  சில சிறுகதை புத்தகங்களும், ஒரு குறு நாவலும் இதோ இங்கே. கிண்டில் App'ல் படிக்கலாம்.


1. வாஷிங் மெஷினுக்குள் சிக்கு சுண்டெலியின் சாகசம் 

2ஜெர்ரி ஸ்டூவர்ட் கேட்ச் அப் - டாம் நாக் அவுட்:  Jerry Stuart Catch Up - Tom Knock Out 

3குரங்கின் நூடுல்ஸ் ஆசை

4. சிறுவன் கற்றுக்கொண்ட பாடம் 

5. உன்னருகே நான் இருந்தால்!!!

காற்றுக்கு வேலி!

 அந்த மார்கழி மாதத்தின் காலை பொழுதில் எல்லா வீட்டு அடுக்களையில் இருந்து குக்கர்களும், வாணலியுடன் கரண்டியும் இசைக்கச்சேரி நடத்திக்கொண்டிருக்க, மிக்சிகள் உறுமிக்கொண்டும்  கர்ஜித்துக்கொண்டும் இருந்தன. "டைம் ஆகிருச்சு, சீக்கிரம்.... இன்னும் குளிக்கலையா? யூனிபார்ம் போட இவ்வளவு நேரமா? மட மடன்னு சாப்பிடு..." என்று வசனங்கள் வித விதமான மாடுலேஷனில் அம்மாக்களிடம் இருந்து கேட்டுக்கொண்டிருந்தன. மாடர்ன் அப்பாக்கள்  சிலர் அம்மாக்களுக்கு துணையாக கோதாவில் இறங்கியிருக்க, சில வீடுகளில் கந்தசஷ்டி கவசமும், தின பலன்களும், செய்திகள் என்ற பெயரில் விளம்பரங்களும் தன் பங்குக்கு காலைப் பரபரப்பை மெருகேற்றிக்கொண்டிருந்தன. 

அந்த அடுக்கு மாடி குடியிருப்பின் எட்டாவது தளத்தில் ரம்மியமாக அமைந்திருந்த "மகிழ்வகம்" என பெயரிடப்பட்ட அந்த வீட்டில் அருணா பருப்பு சாதத்தை நன்கு மசித்து அதனுடன் சிறிது ரசத்தையும் சேர்த்து கிளறி, குழந்தை ஆத்யாவின் டிபன் பாக்ஸை நிரப்பி மூடினாள். ஆத்யாவிற்கு பிடித்த வெண்டைக்காய் பொரியலையும் தனி டப்பியில் போட்டு லன்ச் பேகில் அடுக்கினாள். பள்ளி பேருந்து வரும் நேரமாகிவிட, மின்னல் வேக தாரகையாக மாறி ஆத்யாவிற்கு ஷூ மாட்டி, குளிருக்கு தோதாக ஸ்வெட்டர் போட்டு, ஐடி கார்டு போட்டு விட்டு கபிலனிடம் குழந்தையை பஸ் ஏற்றிவிடுமாறு சொன்னாள். "ஏங்க அப்படியே வரும்போது ஒரு கட்டு பாலக் கீரையும், 2 வாழைக்காயும் வாங்கிட்டு வந்துடுங்க " என்றாள்.

பிள்ளைகள் பள்ளிக்கு கிளம்பியதும், சிறிது நேரத்திற்கு முன்னர் இருந்த களேபரம் எல்லாம் அடங்கி எல்லா வீடுகளும் நிசப்தமாகியிருந்தன.  கதவுகள் படார் படார் என சாத்தப்பட்டன.  அருணா கபிலனுக்கு ஆபீசுக்கு கொடுத்து விட சுண்டைக்காய் குழம்பு சமைக்க மறுபடி கிச்சனுக்குள் நுழைவதற்குள், டீவியில் யூடியூப்பில் பாடலை ஒலிக்க விட்டாள். சில பல நேரங்களில் காலை பரபரப்பில் வீட்டில் ஏதோ பூகம்பம் வந்ததை போல பொருள்கள் இங்கும் அங்கும் சிதறி கிடக்கும். அருணா கண்களை சுழல விட்டாள். பெரிதாக ஒதுக்க எதுவும் இல்லை, அடுக்களையும் கூட சுத்தமாகவே இருந்தது. தனக்குத் தானே ஒரு ஷொட்டு போட்டுக்கொண்டு வேலையை ஆரம்பித்தாள். 

ஆத்யாவை பள்ளி பேருந்தில் அனுப்பிவிட்டு கையில் கீரையுடன் கபிலன் வீட்டு கதவை திறந்து உள்ளே நுழைந்தான். "பள்ளம் இன்றி உயரம் இல்லை... புவனம் எங்கும் பாடங்களே..." என்று பேப்பர் ராக்கெட்டுடன் சேர்ந்து அருணாவும் கையில் கரண்டியுடன் நளினமாக உடலை அசைத்து ஆடிக்கொண்டிருந்தாள். சின்ன வெங்காயமும், பூண்டும், மணத்தக்காளியுடன் கைகோர்த்து வீட்டை கமகமக்க செய்து கொண்டிருந்தன. ஆடிக்கொண்டிருந்த அருணாவை பார்த்து "நீ என்ன இன்னும் சின்ன குழந்தையா? தைய தக்க தைய தக்கான்னு குதிச்சிட்டு இருக்க" என்றான் கபிலன் எரிச்சல் கலந்த தொனியில். "இதுல என்ன இருக்கு. எனக்கு பாட்டு கேட்டுட்டே வேலை செய்ய பிடிக்கும். தானா ஆட ஆரம்பிச்சிடறேன் அது என்ன அவ்வளவு பெரிய விஷயமா" என்றவள் கை தன்னிச்சையாக ரிமோட்டை எடுத்தது.  அவள் முகத்தில் இருந்த உற்சாகம் வற்றிப் போனது. அதன் பிறகு அவர்கள் இருவரும் பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை.  அருணாவிற்கு இது ஒன்றும் புதிது இல்லை.  அவளுக்கு  வரைவதில் ஆர்வம் அதிகம். திருமணத்திற்கு முன் கிளாஸ் பெயிண்ட்டிங் பேசிக் கோர்ஸ் முடித்திருந்தாள். திருமணம் ஆன புதிதில் சின்ன சின்னதாக வரைந்து கபிலனுக்கு ஆசையாக பரிசளித்தாள், "எதுக்கு தேவையில்லாம நேரத்தையும் பணத்தையும் விரயம் பண்ற" என்ற அவன் பதில் அவளுக்கு வினோதமாக இருந்தது. "நான் ஏதாவது வேலைக்கு போகட்டுமா, வீட்டில் ரொம்ப போர் அடிக்குது" என்று மெல்ல ஒருநாள் அருணா பேச்செடுக்க "நீ வேலைக்கு போனா வீட்டை எப்படி பாக்கறது. அதெல்லாம் ஒன்னும் வேணாம். அதான் நான் சம்பாதிக்கறேன்ல" என்றான் வெடுக்கென. கபிலன் அன்பானவன் தான் என்றாலும் கொஞ்சம் கட்டுப்பெட்டி. அருணாவிற்கு அவன் குணம் புரிந்தது, ஆசைகளை அடக்க பழகிக்கொண்டாள்.  அவள் செய்யும் எந்த ஒரு வேலைக்கும் சிறு பாராட்டோ அங்கீகாரமோ கபிலனிடம் இருந்து கிடைக்காது என்பதை புரிந்து கொண்டாள்

 கபிலன் குளித்து முடித்து, சாப்பிட்டு, லேப்டாப் பையோடு லன்ச் பேக்கையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான். பார்க்கிங்கில் இருந்த சியாஸின் இன்ஜினை உசுப்பி எழுப்பி, ஸ்டியரிங்கை வளைத்தான். வண்டி சாலையில் வேகம் எடுக்கவும் கைபேசி சிணுங்கியது. டாஷ்போர்டு தொடு திரை ஆஷிஷ் காலிங் (Aashish Calling) என காட்டியது. ஆஷிஷ் கபிலனின் மேலதிகாரி. அவன் குடியிருக்கும் அதே அபார்ட்மென்ட்டில் வேறு ஒரு பிளாக்கில் தான் அவரும் குடியிருந்தார். ஸ்டியரிங்கில் இருந்த ஆன்ஸர் பட்டனை தட்டி ஆஷிஷுடன் பேசலானான். "என்ன கபிலன் கெளம்பியாச்சா? உங்களிடம் ஒரு உதவி கேட்கலாம்னு தான் கூப்பிட்டேன். உங்கள் மனைவி நல்லா டான்ஸ் ஆடுவாங்களாமே, என் பொண்ணு ஸ்ருதிக்காவின் தோழியோட அம்மா சொன்னதா என் மனைவி சொன்னாங்க.  அவங்க பொண்ணோட டான்ஸ் காம்பெடிஷனுக்கு  உங்க மனைவி அருணா ஒரு முறை டான்ஸ் சொல்லி கொடுத்தாங்களாமே. ரொம்ப அருமையா ஆடினாங்க, அத விட ரொம்ப பொறுமையா சொல்லிக்கொடுத்தாங்கன்னு புகழ்ந்து தள்ளிட்டாங்களாம்.  ஆடறத விட அத சொல்லிக்கொடுக்க தெரியறது தனி கலை.  அடுத்த வாரம் ஸ்ருதிக்காவுக்கும் ஒரு டான்ஸ் காம்பெடிஷன் இருக்கு. அதான் அருணா டான்ஸ் சொல்லிக் குடுப்பாங்களான்னு என் மனைவி உங்க கிட்ட கேக்க சொன்னாங்க. நமக்கெல்லாம் ஆட வருமா? ரெண்டு ஸ்டெப் போட்டாலே கையும் காலும் சுளுக்கிக்கும். உங்க மனைவியோட திறமையை என் பொண்ணுக்கும் கொஞ்சம் சொல்லி குடுக்க சொல்லுங்க கபிலன் " ஆஷிஷ் பேசப் பேச கபிலனுக்கு ஏதோ உறுத்தியது.

Saturday, December 3, 2022

ஈரக் காற்றும் இரவு பயணமும்!!

 இருள் போர்த்திய இரவு நேரம்,

ஜன்னலோர பயணம்,

வருடிய குளிர் காற்றில் நிலா மகள் இளைப்பாற சென்று விட்டாளோ!!

பஞ்சு பொதி மேகக்கூட்டங்கள், 

மினுக் மினுக் என கண்சிமிட்டும் நட்சத்திரங்கள், 

சொல் பேச்சு கேளா பிள்ளை போல எதிர்திசையில்  ஓடும் மௌன காட்சிகள்,

காதில் ரம்மியமாக ரசனையான ராஜாவின் இசைச் சாரல்;

ஆர்ப்பாட்டமில்லாத இரவு உலகின் அழகில் லயிக்க மெய்மறக்க,   

வேறென்ன வேறென்ன வேண்டும்!!

Friday, May 13, 2022

பசியா ருசியா - 2

முதல் பாகம் 

 ஒரு சனிக்கிழமையின் மதிய நேரம். அந்த வங்கியே மந்தமாக செயல்பட்டது. உண்ட மயக்கம் எல்லோர் வேலையிலும்  தெரிந்தது.  நடராஜன் அங்கே கிளெர்க்காக இருந்தார். தலைமை மேலாளர் கூப்பிடுவதாக பியூன் வந்து சொல்ல. வெளிவந்த கொட்டாவியை உதடை இருக்க மூடி அடக்கி வைத்தார். அடக்கிய கொட்டாவி கண்ணில் நீராக எட்டி பார்க்க, கைக்குட்டையால் சட்டென துடைத்து விட்டு மேலாளரின் அறைக்கு சென்றார். "உக்காருங்க நடராஜன். நீங்க ஒரு உதவி பண்ணணுமே" என்று கொக்கி போட்டார். மனுஷன் தேவை இல்லாம பீடிகை போட மாட்டாரே என்று மனதிற்குள் நினைத்தபடியே "சொல்லுங்க சார்" என்றார் பவ்யமாக. "திங்கட்கிழமை டெபுடி மேனேஜர் வர்றாராம். ஏதோ சம்பிரதாய வருகையாம். இப்ப தான் தகவல் வந்தது. நம்ம பாங்க் உள்ள வெளில எல்லாம் கொஞ்சம் ஆட்கள் வச்சு சுத்தம் செய்யணும். ரொம்ப மோசமா இருக்கு. நீங்க கொஞ்சம் சிரமம் பாக்காம நாளைக்கு வந்து சூப்பர்வைஸ் பண்ணிடுங்க. வேற ஒரு நாள் கூட அதுக்கு லீவு எடுத்துக்கோங்க. வாட்ச்மேன் கிட்ட சொன்னா ஆள் ஏற்பாடு பண்ணிடுவான். ஆனா நம்ம யாராவது நின்னு வேலை வாங்கினா தான் சரியா இருக்கும். அதுக்கு நீங்க தான் சரியான ஆள்" என்று இடைவெளி விடாமல் பேசி நயமாக அந்த வேலையை அவர் தலையில் கட்டினார்.

"சரி சார், நான் பாத்துக்கறேன்" என்று வேற வழியின்றி ஒத்துக்கொண்டார். மாலை வீட்டிற்கு வந்து மதியிடம் சொல்ல "என்னங்க இப்படி ஞாயித்துக்கிழமை அதுவுமா ஆபீஸ் போகணுங்கறீங்க" என்று சலித்துக்கொண்டாள். "என்ன பண்றது, மேலதிகாரி சொன்னா மறுத்து பேச முடியாது. அடுத்த வாரத்துல ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கறேன்" என்று சமாதானம் சொல்லி வைத்தார். ஞாயிறு பத்து மணிக்கு வேலையாள் வந்துவிடுவார்கள் என்று வாட்ச்மேன் சொல்லியிருந்தார். நடராஜனும் ஒன்பதரை வாக்கில் பாங்க்கிற்கு போய்விட்டார். உள்ளே வெளியே என்னவெல்லாம் செய்யணும் என்று நாலு முறை எல்லா பக்கமும் பார்த்து குறித்துக்கொண்டார். ஒன்பது ஐம்பதிற்க்கே வேலையாள் வந்து நின்றார்கள். மணி என்கிற மணியன், அவனோட இரண்டு பொம்பளையாள் வந்திருந்தார்கள். ஒரு பொடியன் சுவரோரமாக நின்று பார்த்துக்கொண்டிருக்க "அதாரு?" என்றார் நடராஜன். "எம்மவன் தானுங்க. கூடமாட ஒத்தாசைக்கு இருக்கட்டுமேனு கூட்டியாந்தேன்" என்றாள் அந்த இரண்டு பெண்மணிகளின் ஒருத்தியான ராணி.  

"சரி சரி, உள்ளாற வெளில ரெண்டு இடத்துலயும் ஒட்டற அடிக்கணும்.  ஃபைல் எல்லாம் தூசி தட்டி அடுக்கணும். டேபிள் தொடைக்கணும்.... " என்று இருந்த வேலையெல்லாம் ஒரு முறை சொல்லிவிட்டு வேலையை ஆரம்பிக்க சொன்னார் நடராஜன். ஆளுக்கொரு பக்கம் வேலையை செய்ய நடுநடுவே அந்த சிறுவன் சிறு சிறு உதவிகள் செய்தான்.  பதினோரு மணி வாக்கில் மணியன் அந்த பொடியனை "டேய் பாய் கடைல போயி நாலு டீ வாங்கியா" என்று சுருட்டி வைத்திருந்த ரூபாய் நோட்டை கொடுத்தனுப்பினான்.  சிறிது நேரத்தில் வந்த சிறுவன் "ண்ணா, ஒரு ரூபா கம்மியா இருந்தது. அப்புறமா தரேன்னு சொல்லியாந்துருக்கேன்" எனவும் "இன்னாது, ஒரு ரூபா தரணுமா? ஒரு டீ அஞ்சு ரூபா தானடா" என்றான் மணியன் "இல்லண்ணா, ஏழு ரூபாயாம்" என்று சிறுவன் சொல்ல "ஐயோ ஐயோ ஏழு ரூபாயா.. என்னா கொள்ளையடிக்கறான் அந்த பாயி" என்று அடுத்த ஒரு மணி நேரத்திற்கு புலம்பிக்கொண்டே வேலை செய்தான்.

ஒரு ரூபாய் கூட இவர்களுக்கு எவ்வளவு பெரிய விஷயமாக இருக்கிறது என்று நடராஜன் நினைத்துக்கொண்டார். "என்னப்பா மத்தியானத்துக்கு சாப்பாடு கொண்டு வந்துருக்கீங்களா" என்று நடராஜன் கேட்க "இன்னா சார், சாப்பாடு வாங்கி தருவாங்கன்னு வாட்ச்மேன் சொன்னானே. இல்லாட்டி குடுக்கற சம்பளத்துல பாதி சாப்பாட்டுக்கே போயிரும் சார்" என்றான் மணியன். "சரி சரி, வாங்கிட்டு வரேன். வேலைய பாத்துட்டு இருங்க" என்று அவர் சொல்ல "சார், பிரியாணி வாங்கிக்கொடேன்" என்றான் மணியன் தலையை சொரிந்தபடி. "அது சரி" என்று சொல்லிக்கொண்டே பஜாஜை கிக் செய்தார்.  பக்கத்து  தெருவில் நான்கைந்து பிரியாணி கடைகள் இருந்தது. நடராஜன் அசைவம் சாப்பிடுவது இல்லை. அதனால் எங்கே நன்றாக இருக்கும் என்று அவருக்கு தெரியவில்லை. கூட்டம் அதிகமாக இருந்த கடை ஒன்றில் ஸ்கூட்டரை ஸ்டான்ட் போட்டு நிறுத்தினார். "பிரியாணி எவளோப்பா?" என்றார். "நாப்பது ரூவா சார், நல்ல ருசியா இருக்கும். எத்தினி வேணும்?" என்றான் கடைக்காரன். அலுவலத்தில் தலைக்கு இருபத்தைந்து ரூபாய் வீதம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொருத்தருக்கும் மீதம் பதினைந்து ரூபாய் கைக்காசு போட்டு வாட்ச்மேனுக்கும் சேர்த்து ஐந்து பொட்டலம் வாங்கிக்கொண்டார்.  பொட்டலத்தை மணியனிடம் கொடுத்து "எல்லாரும் சாப்பிட்டு வேலைய பாருங்க" என்று சொல்ல "அய்.. நிசமாவே பிரியாணி வாங்கியாந்துட்டியா சார். ரொம்ப நன்றி சார்" என்றான் மணியன் வாயெல்லாம்  பல்லாக.  உடன் வேலை பார்த்த பொம்பளையாள்களும் அந்த சிறுவனும் ஆவலாக வந்து நிக்க "வாட்ச்மேன் உங்களுக்கும் இருக்கு வாங்க" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று அவருடைய தயிர் சாத டப்பாவை திறந்து சாப்பிட துவங்கினார். அங்கே வெளியே ஐந்து பெரும் சப்பு கொட்டி அந்த பிரியாணியை ரசித்துக் கொண்டிருந்தார்கள். "இன்னாடா எழிலு, நல்லாகீதா" என மணியன் கேட்டது காதில் விழுந்தது.  நாற்பது நிமிட நேரத்திற்கு பின் ராணி நடராஜனிடம் வந்து "சார், யாரும் சாப்பாடெல்லாம் வாங்கி தர மாட்டாங்க. அப்படியே தந்தாலும் தயிர் சாதம் தான் தருவாங்க. நீ மனசா பிரியாணி வாங்கி குடுத்துருக்க. எம் புள்ள உன் தயவுல மொத தடவையா பிரியாணி சாப்ட்ருக்கான். ரொம்ப சந்தோசம்யா" என்றாள் நெகிழ்வோடு. சிறுவனின் முகம் மலர்ந்திருந்தது.

"என்னடா படிக்கற" என்ற நடராஜனிடம் "நாலாப்பு சார்" என்றான் பவ்யமாக. "நல்லா படிக்கணும், புரியுதா. படிச்சு வேலைக்கு போயி அம்மாவை நல்லா பாத்துக்கோ" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். எழில் கண்ணுக்கு அவர் பிரம்மாண்டமாய் தெரிந்தார். அதன் பிறகு அவர் சொல்லாமலே வேலைகள் மடவென முடிந்தன.

 நடராஜன் பன்னிரண்டு வருடத்திற்கு முன் நடந்த நிகழ்வுகளை மனக்கண்ணில் பார்த்துக்கொண்டிருக்க, எழில் அவற்றை சிலாகித்து சொல்லிக்கொண்டிருந்தான்.  "பசியோட இருக்கவங்களுக்கெல்லாம் சிறு பருக்கை கூட அமிர்தம் அப்படியிருக்கும் போது எங்களுக்கு பிரியாணி வாங்கி குடுத்த ஹீரோ சார் நீங்க.  உங்கள மாறியே ஒரு ஆபீஸராகணும்னு சின்ன வயசுலயே எனக்கு ஆசை வந்துருச்சு சார். வேலைக்கு சேர்ந்த நாளைல இருந்து உங்கள பாக்கணும்னு முயற்சி பண்ணிட்டு இருக்கேன். இன்னைக்கு தான் விலாசம் கெடச்சது" என்று அவன் சொல்ல, நகுல் வாயடைத்து போயிருந்த அதே சமயம் மறுபடியும் காலிங் பெல் அடித்தது. வெயிலில் டெலிவரி செய்ய வந்திருந்த ஸ்விக்கி ஆளிடம் "அண்ணா நீங்க சாப்டீங்களா?" என்றான் நகுல் "இல்ல தம்பி" என்றவரிடம் "இந்தாங்க, இதை சாப்பிட்டுட்டு அடுத்த டெலிவரிக்கு போங்க. எனக்கு அம்மா சமச்சிட்டாங்க" என்று அவர் கைகளில் பார்ஸலை  திணித்த வேளையில் அனைவரின் அகமும் முகமும் மலர்ந்திருந்தது.

பசியா ருசியா - 1

 சந்திரமதி செய்வதறியாது கணவரையும் மகனையும் பார்த்துக்கொண்டிருந்தாள். நடராஜன் "நீ சாப்பிடு மதி" என்று சொல்லிவிட்டு, எதுவுமே நடக்காதது போல அவரது தட்டில் இருந்த உணவை வாய்க்கு கொடுத்துக்கொண்டிருந்தார். அந்த தேக்கு மரமேசையில், நடராஜனுக்கு எதிர்புறம் நகுல் உட்கார்ந்திருந்தான். நகுல் சந்திரமதி நடராஜனின் ஒரே மகன்.

ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் நான்கு வருடமாக வேலை பார்த்து வந்தான். அன்று ஞாயிற்றுக்கிழமை, மதிய உணவிற்கு உளுந்து சாதமும், எள்ளு துவையலும், பாகற்காய் வறுவலும்  சமைத்திருந்தாள் மதி என்கிற சந்திரமதி. நகுலுக்கு கல்லூரி நாட்களில் இருந்தே ஒரு வழக்கம் ஏற்பட்டது, தினமும் கிளம்பும் போது "அம்மா இன்னைக்கு லஞ்ச்க்கு என்ன?" என்று கேட்பான். அவனுக்கு பிடிக்காத உணவு என்றால் "நான் கேன்டீனில் சாப்பிட்டுக்கறேன்" என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவான். அல்லது டிபன் பாக்ஸை நண்பர்கள் யாரிடமாது கொடுத்துவிட்டு அவன் கேன்டீனில் வாங்கிக்கொள்வான்.

இது வேலைக்கு சேர்ந்த பிறகும் தொடர்ந்தது. அந்த ஞாயிறு அன்றும் அப்படி தான், அவர்கள்  அனைவரும் சாப்பிட உட்கார்ந்த பிறகு "ஐயோ பாகற்காயா, எனக்கு வேண்டாம். நீங்களே சாப்பிடுங்கள்" என்று சொல்ல, நடராஜன் "நகுல், அதென்ன சாப்பாடை வேண்டாம்னு சொல்றது. அம்மா என்ன சமைக்கராங்களோ அதை மனதார சாப்பிடு. சாப்பாடுனா பிடிச்சதும் இருக்கும், பிடிக்காததும் இருக்கும். அட்ஜஸ்ட் பண்ணி சாப்டுக்கணும்" என்று சொல்ல. "போங்கப்பா, சும்மா அட்வைஸ் பண்ணாதீங்க. நா என்ன இன்னும் குழந்தையா. எனக்கு என்ன வேணும்னு எனக்கு தெரியும். நான் ஸ்விக்கில பட்டர் நானும் பன்னீர் லபாப்தாரும் ஆர்டர் பண்ணி சாப்டுக்கறேன்" என்று சொல்லியபடி கைபேசியில் ஸ்விக்கியை தட்டினான். 

நடராஜன் ஒன்றும் கண்டிப்பான அப்பா இல்லை தான், என்றாலும் உணவை வீணாக்குவதை என்றும் ஏற்றுக்கொள்ள மாட்டார். என்ன சமைத்தாலும், சுவை எப்படி இருந்தாலும் சாப்பிட்டுக்க வேண்டும் என்பார்.  கறாராக அவர் சொல்லும் தோரணையிலேயே நகுலும் சாப்பிட்டு விடுவான். இன்று அவனும் பதிலுக்கு பேசியதில் மதி செய்வதறியாமல் உட்கார்ந்திருந்தாள். "நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க, நா ஆர்டர் பண்ணிட்டேன். இன்னும் ஒரு இருபது நிமிடத்தில் வந்திடும்" என்று சொல்லியபடி நகுல் டிவியில் நீயா நானாவை ஓடவிட்டான். கண்டிப்பான அப்பாக்கள், அதை விரும்பாத இந்த காலத்து பிள்ளைகள் என்று கோபிநாத் தலைப்பை சொல்ல நகுல் நமட்டு சிரிப்பை உதிர்த்தான்.

நகுல் டிவியில் மூழ்கியிருக்க நடராஜனும் மதியும் அமைதியாக சாப்பிட்டு முடித்து கை கழுவிய போது காலிங் பெல் அழைத்தது. "அதுக்குள்ள ஸ்விக்கி வந்தாச்சா, பரவால்லயே.. ரொம்ப சீக்கிரம் வந்துட்டான்" என்று சொல்லியபடியே நகுல் கதவை திறக்க, அங்கே நின்றிருந்த எழிலரசை பார்த்து வியந்தான். "எழில், நீ எப்படி இங்க?" என்றான் ஆச்சரியத்துடன். எழிலரசன் அவன் உடன் வேலை பார்ப்பவன். வேலைக்கு சேர்ந்து இரண்டு வருடம் கூட ஆகவில்லை, ஆனால் அயராது உழைப்பவன், செய்யும் வேலையை திருத்தமாக செய்வான்; அதனால் அவனை எல்லோருக்கும் பிடிக்கும்.  வேலைக்கு சேர்ந்த நாளிலிருந்து ஒவ்வொரு மாதமும் சம்பளம் வந்த அன்று, ஐம்பது உணவு பொட்டலம் வாங்கிக்கொண்டு போய் அவனது அலுவலகம் அருகில் இருக்கும் ஒரு குடிசை பகுதிக்கு போய் கொடுப்பது வழக்கம். 

அதனால் அவன் மீது அனைவருக்கும் கூடுதல் அபிப்பிராயம் உண்டு. எழிலரசனும், கதவை திறந்த நகுலை வியப்புடன் பார்த்து "நகுல் இது உங்க வீடா? பத்து வருடம் முன்னாடி பாங்க்ல கிளெர்க்கா வேலை பாத்த நடராஜன் சார் வீடு அட்ரஸ்னு கேட்டேன், இந்த அட்ரஸ் தான் குடுத்தாங்க" என்று சொல்லிக்கொண்டிருந்த போதே உள்ளேயிருந்து நடராஜன் எட்டி பார்க்க, "தோ... சார் இருக்காரே. சார், வணக்கம் சார். உங்கள தான் ரொம்ப வருஷமா பாக்கணும்னு நெனச்சேன் சார்"  என்று பரவசத்துடன் சொன்ன எழில், நகுலை பார்த்து, "அப்ப நீங்க சாரோட பையனா? இவ்ளோ நாள் தெரியாம போச்சே" என்று மூச்சு விடாமல் பேசிக்கொண்டிருக்க, நடராஜன் "உள்ளே வா தம்பி" என்று அழைத்தார். நகுல் ஒன்றும் புரியாமல் "உள்ள வா" என்று அழைத்து சென்றான். வெய்யிலில் வந்தவனுக்கு சந்திரமதி மோர் கொடுத்தார். "பன்னிரண்டு வருடத்துக்கு முன்னாடி அய்யா கொடுத்த பிரியாணி, இன்னைக்கு அம்மா கொடுத்த மோர்; ரெண்டுமே தேவாமிர்தம்" என்று எழில் சொல்ல நடராஜன் அவனை அடையாளம் கண்டு கொண்டார். 

அவரது நினைவுகள் பின்னோக்கி சென்றது. இரண்டாம் பாகம் 

Thursday, March 3, 2022

கதை கேட்கலாம் - Kadhai Ketkalaam

 கதைகள் குழந்தைகளோடு நமக்கு வலுவான ஒரு உறவை ஏற்படுத்தும். அவர்களது வளர்ச்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குழந்தைகளுக்காக நான் கூறிய, வாசித்த இரு நூறுக்கும் மேற்பட்ட கதைகள் இதோ இங்கே


Learning Beyond Textbooks - Life Skills - Child Growth

#Learning_Beyond_Textbooks #Life_Skills A home is the first environment where children can playfully learn a plenty. Traditional textbook le...