ஆனி மாத வெய்யில் கத்தரியை போல சுட்டெரித்துக்கொண்டிருந்தது. "ஸ்ஸ், வெய்யில் என்னமா மண்டைய பொளக்குது" என்றபடியே புல்லெட்டை வீட்டின் முன் நிறுத்திவிட்டு காலை கழுவி விட்டு உள்ளே வந்தான் சேகர். மூன்றாவது படிக்கும் கோகுல் இங்கிலிஷ் ரீடிங்கில் ரொம்ப வீக்கா இருக்கான். வீட்டிலும் நீங்கள் கொஞ்சம் வாசிக்க சொல்லுங்க என்று அவன் கிளாஸ் டீச்சர் சொல்லி இருந்ததால் அப்போது தான் அவனை படிக்க வைக்க அவனுடன் மதுமலர் உட்கார்ந்தாள். கணவன் வரவும், வந்தவனுக்கு சில்லென்று மோரை கொடுத்தபடியே "கழனில களை எடுக்க வேலை ஆள் வர சொல்லி இருந்தீங்களே வந்துட்டாங்களா? டீ போடணும், எத்தனை பேருக்குனு தெரிஞ்சா அதுக்கேத்தமாதிரி போடுவேன்" என்று கேட்டாள். "அப்படியே உங்க கிட்ட இன்னோன்னு கூட கேக்கணும்" என்று தயங்கினவளை "ம்ம் என்ன" என்று ஒற்றை வார்த்தையில் கேட்டான். "TRBExamக்கு ஆன்லைன்ல அப்பிளிகேஷன் குடுக்க ஆரம்பிச்சிட்டாங்களாம். நானும் இந்த வருஷம் அப்ளை பண்ணட்டுமா? கிளீயர் பண்ணி வச்சிக்கிட்டா எப்ப வேணும்னாலும் யூஸ் ஆகும்ல" என்றவளை "அப்படியே மகாராணி எழுதி பாஸ் ஆகிட்டாலும், அதெல்லாம் ஒன்னும் வேணாம். போயி டீயை போடு போ. வயல்லேர்ந்து ஆள் வந்துடுவாங்க. அங்க ஆயிரத்தெட்டு வேல கெடக்கு. வெட்டி பேச்சு பேசி நேரத்தை வீணாக்காத" என்று சிடு சிடுத்தான்.
மதுமலருக்கு இது கல்யாணம் ஆன நாளிலிருந்து பழகிப்போன ஒன்று. M.ed முடித்துவிட்டு ஒரு பள்ளியில் பணியாற்றிக்கொண்டிருந்த போது "ஒரு நல்ல இடம் வந்திருக்கும்மா, பாத்துரலாமா?" என்று அவள் அப்பா அவளிடம் கேட்ட போது குடும்பத்தின் சூழ்நிலை புரிந்து "உங்க விருப்பம்பா" என்று ஒற்றை வார்த்தையில் பணிந்து போனாள். திருமணத்திற்கு பிறகு நிலைமையே மாறி போனது. கணவனும், மாமியாரும் அவளை அவ்வப்போது மட்டம் தட்டி கொண்டே இருப்பார்கள். மதுமலர் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே போய் விடுவாள். இரண்டு பிள்ளைகள், அவர்கள் படிப்பு, வீடு, சமையல்கட்டு என்று தன் உலகம் மிகவும் சுருங்கி போனது அவளுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. அதை மீண்டும் உயிர்த்தெடுக்க அவள் எடுத்த எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை. அன்றும் அப்படி தான் ஆகிபோனது.
அவள் சமயலறைக்குள் புகுந்த அடுத்த நொடி விட்டால் போதும் என்பது போல கோகுல் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு "அப்பா, கிரிக்கெட் ஆடலாமா? நா பால் போடறேன். நீங்க தான் பேட்டிங். அடிக்கற பால் நேரா போயி அம்மா போடற டீ சட்டிக்குள்ள விழணும். சரியா?" என்று அவன் பங்குக்கு அந்த பொடிப்பயலும் அவள் பொறுமையை சோதித்தான். கோகுலும் இப்போதெல்லாம் முன் போல அவள் பேச்சை கேட்பதில்லை. பிள்ளைகள் யாரை பார்க்கிறார்களோ அது போல தானே வளர்வார்கள். பிற்காலத்தில் வீட்டிலிருக்கும் மற்றவர்களையும் கூட அப்படி தானே பேசுவான். இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என நினைத்துக்கொள்வாள்.
அன்று மாலை இரவு உணவு தயாரிக்க மலர் சமயலறையில் இருந்த சமயம், கோகுல் அவன் அப்பாவுடன் சேர்ந்து டீவி பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது ஏழாவது படிக்கும் அவர்களது மகள் செல்வி "அப்பா, எங்க ஸ்கூல்ல 'கல்வியினால் ஆன பயன்' அப்படீங்கர தலைப்புல ஒரு கட்டுரை எழுதிட்டு வர சொன்னாங்க. அதுக்கான கருத்தை யோசிச்சு வைச்சிருக்கேன். சொல்லட்டுமா, கேட்டு அது சரியா இருக்கா இல்ல இன்னும் ஏதாது சேர்க்கணுமான்னு சொல்றீங்களா" என்றபடியே தான் யோசித்து வைத்திருந்த பாய்ண்ட்ஸை சொல்ல ஆரம்பித்தாள்.
"கல்வி என்பது நாம் பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமே என்று இல்லாமல், அதை கற்றவருக்கும் அவரை சுற்றி இருப்பவருக்கும் பயனளிப்பதாக இருக்க வேண்டும். சிறந்த கல்வி என்பது ஒருவருக்கு நற்பண்புகளையும், நல்ல குணங்களையும், எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னிலை மாறாமல் இருக்கும் தன்மையையும் கொடுக்கும்" என்று தான் யோசித்து வைத்திருந்த மேலும் சிலகருத்துகளையும் சொல்லி முடித்தாள். "ரொம்ப அருமையா இருக்குடா. நீயேவா எழுதின?" என்று பெருமையாக கேட்டான் சேகர். "ஆமாம்பா, அம்மாவை மனசுல வச்சு தான் இதை எழுதினேன். அம்மா எனக்கும், தம்பிக்கும் பாடத்தை எவ்ளோ பொறுமையா சொல்லி கொடுக்கறாங்க. ஏதாவது கான்செப்ட் புரியலேனா, எங்களுக்கு புரியற மாதிரி எக்ஸாம்பிள்ஸ் சொல்லி எவ்ளோ டைம் ஆனாலும் நிதானமா சொல்லி கொடுக்கறாங்க. அத வச்சு நா என்னோட பிரெண்ட்ஸ்க்கு கூட ஸ்கூல்ல சொல்லி குடுத்துருக்கேன். நெறய தடவ கிளாஸ்ல மிஸ் 'ஏ என்ன முன்னாடி வந்து எல்லாருக்கும் எக்ஸ்பிளைன் பண்ண சொல்லி இருக்காங்க. அதுக்கெல்லாம் அவங்களோட நாலெட்ஜ் தான காரணம். அவ்ளோ ஏன்? நானோ தம்பியோ ஏதாவது தப்பு பண்ணா கூட அதை பக்குவமா எங்களுக்கு புரிய வைக்கறாங்க. ஸ்கூல்ல என் பிரெண்ட்ஸ்லாம் எவ்ளோ கத சொல்லுவாங்க தெரியுமா, அவங்க அம்மா அடிச்சாங்க, திட்டுனாங்க அப்படி இப்படினு. எங்களுக்கு பிரெண்ட்லியான ஒரு அம்மா கெடச்சதுக்கு நாங்க ரொம்ப லக்கிப்பா. அது மட்டுமில்லாம அவங்களுக்கு வீட்ல எவ்ளோ வேலை இருந்தாலும் அவங்க முகம் சுழிச்சு ஒரு நாள் கூட நா பாத்தது இல்லை. எனக்கும் கூட வளர்ந்து பெரியவளான பிறகு அம்மா மாதிரி ஒரு டீச்சர் ஆகணும்னு தான் ஆசை. என்னால முடிஞ்ச வரைக்கும் நானும் எல்லா பிள்ளைகளுக்கும் சொல்லிகுடுக்கணும். அதான் ஸ்கூல்ல இந்த டாபிக் குடுத்த உடனே எனக்கு அம்மா தான் மனசுல வந்தாங்க. நா சொன்ன பாய்ண்ட்ஸ் எல்லாம் சரி தானப்பா" என மகள் கேட்ட போது தான் சேகருக்கு எதுவோ புரிந்தது. "ரொம்பவே சரி தான் டா" என்ற சேகரின் பதில் மதுமலருக்கே பெரிய ஆச்சரியம் தான். அறிவே ஆற்றல் (knowledge is power) என்பதில் ஐயமே இல்லை!!
No comments:
Post a Comment