Thursday, June 13, 2019

ஒன் ஸ்டாப் ஷாப்!!

 "அப்பாடா! இன்று வேலையெல்லாம் ஒரு வழியா சீக்கிரமா முடிஞ்சிருச்சு" என்று நினைத்தவாறே கிச்சனை விட்டு வெளியில் வரும்போது கண்ணில் பட்டது நியூஸ்பேப்பரில் பழுப்பதற்கு என்று சுற்றி வைத்திருந்த அந்த பப்பாளி பழம். அதானே பாத்தேன், அதெப்படி அதுக்குள்ள வேல முடியறது என்ற சின்ன சலிப்புடன் பழத்தை கழுவி, தோல் சீவி, அதன் குறுக்காக கத்தியை சொருகி இரண்டாக வெட்டினேன். என் கண்களை என்னாலேயே  நம்ப முடியவில்லை. உள்ளே ஒன்றல்ல, இரண்டல்ல, நிறைய நிறைய விதைகள். இப்ப வாங்கற பப்பாளியில் எல்லாம் எங்க விதை இருக்கு? நானும் ஒவ்வொரு தடவையும் கடைகாரர்கிட்ட கேட்பேன், இதில் விதை இருக்குமான்னு, அவரும் கண்டிப்பா இருக்கும்மா அப்படீம்பார். ஆனால் அத்தி பூத்தார் போல எப்பவாச்சும் ஒன்னு இல்ல ரெண்டு விதை இருக்குமே தவிர இன்று போல இருந்ததில்லை. நாமளும் இப்பலாம் சீட்லெஸ் பழங்களை தான் விரும்பறோம்.

எப்பவும் போல் இல்லாமல் இந்த முறை வீட்டிற்கு பக்கத்தில் இருந்த ஒரு சிறிய கடையில் தான் அந்த பப்பாளியை வாங்கினேன். பொதுவாகவே பெரிய பெரிய கடைகளில் பளபளப்பாக இருக்கும் காய்கறிகள் பழங்கள் வாங்குவதில் எனக்கு அவ்வளவு நாட்டம் இருந்ததில்லை. ஓரளவு சிறிய கடைகளில் தான் பார்த்து பார்த்து வாங்குவேன். எங்கள் அபார்ட்மெண்ட் இருப்பது ஒரு கிராமத்திற்கு நடுவில் தான் என்பதால் எப்பவும் சிறு வியாபாரிகள் அவர்கள் தோட்டத்தில் விளைந்த காய்களை கூறு வைத்து விற்பது வழக்கம். அதே போல தேங்காய், எலுமிச்சை, முருங்கைக்காய் போன்றவற்றை அபார்ட்மென்டுக்கே எடுத்து கொண்டும் வருவார்கள். நாலு எலுமிச்சை பத்து ரூவாய், ஐந்து முருங்கை பத்து ரூவாய் என மலிவாகவும் இருக்கும். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களிடம் இருந்த முருங்கைக்காயை வாங்கினேன். அதிலிருந்த அந்த சதைப்பத்தும், சுவையும் காய்கறி கடையில் வாங்கும் போது இருந்ததில்லை. அதிலிருந்து எப்பவெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் இது போன்ற சிறு வியாபாரிகளிடம் இருந்து நேரடியாக வாங்க ஆரம்பித்து விட்டேன்.  ஓரளவுக்கேனும் பிரெஷான காய்களை சாப்பிடுகிறோமே என்ற திருப்தி. 

சொத்தையான கத்தரி, புழு இருக்கும் வெண்டை, இதெல்லாம் ஒரு காலத்தில் பார்த்தால் என்ன காயெல்லாம் புழுவா இருக்கு என முகம் சுழித்து இருக்கிறேன். அதிலும் பள்ளி பருவத்தில் அம்மா செய்யும் காலிஃளாரில் எனக்கு என்று தேடி பிடித்து வரும் புழுவினாலேயே பல வருடங்கள் காலிஃளார் சாப்பிடாமல் இருந்திருக்கிறேன்.  பூச்சி மருந்துகளின் நச்சு தன்மை பற்றி சில வருடங்கள் வரை அவ்வளவாக தெரிந்ததில்லை, அப்போதெல்லாம் காய்கறிகளில் புழு இல்லையே என்று மனம் திருப்தி பட்டுக்கொள்ளும். அதை பற்றி தெரிந்த பிறகு பார்க்கும் சொத்தை கத்தரியும், புழுவிருக்கும் வெண்டையும் மனதிற்கு மிகப்பெரிய ஆறுதலை தருகிறது என்பதை மறுக்கவே முடியாது.

சிறு பிள்ளையாக இருக்கும் போது கறிகாய் வாங்க என் அம்மாவுடன் கடைக்கு செல்லும் போது ஒவ்வொரு காயாக முத்தலில்லாமல், சொத்தையிலாமல் பொறுக்கி வாங்குவதற்கு அவ்வளவு நேரம் ஆகும். அதுவும் ஒரே கடையில் வாங்கி விட முடியாது, நாலு கடை பார்த்து தான் வாங்குவார்கள். அந்த பொறுமை இன்று நமக்கு மிகவும் குறைந்து விட்டது. ஒரு ஒன் ஸ்டாப் ஷாப்க்கு போனோமா, ட்ராலியை எடுத்தோமா, காய்கள், பழங்கள், மளிகை சாமான்கள், உடைகள் என மட மடன்னு எல்லாத்தையும் எடுத்து போட்டோமா, பில்லை கட்டினோமானு கெளம்பி வந்துகிட்டே இருக்கணும்ங்கறது தான் இப்ப நம்மளோட லைப் ஸ்டைல். இருந்தாலும் நெறய பேருக்கு இந்த லைப் ஸ்டைலோட விளைவுகள் என்னனு புரிய ஆரம்பிச்சிருச்சு. முடிந்த வரையில் சிறு சிறு மாற்றங்களை ஏற்படுத்திக்கறோம். சிறிய அளவிலான முயற்சியாக இருந்தால் கூட "முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்" தானே?

No comments:

Post a Comment

Learning Beyond Textbooks - Life Skills - Child Growth

#Learning_Beyond_Textbooks #Life_Skills A home is the first environment where children can playfully learn a plenty. Traditional textbook le...