ஒட்டிக்கொண்டிருந்த கண்ணிமைகளை கஷ்டப்பட்டு பிரித்து, கண்ணிடுக்கு வழியே மொபைலை எடுத்து சாரு மணி பார்த்தாள். மொபைல் திரை 10:40 என மணி காட்ட, பதறியடித்து கொண்டு எழுந்து ஹாலுக்கு வந்தாள். தோசை கல்லில் மாவை ஊற்றும் ஸ்ஸ்ஸ் சத்தமும், நெய்யின் நறுமணமும் அவளது பசியைத் தூண்டியது. நேராக கிச்சனுக்கு சென்றவளை கண்டதும் "குட் மார்னிங் மா, நல்லா தூங்கினீங்களா?" என்று விச்சு அக்கறையுடன் கேட்க, "நல்லா தூங்கினேன் போ, இன்னைக்கு பாட்டி ஊர்லேர்ந்து வராங்கனு தெரியும்ல, என்னை கொஞ்சம் சீக்கிரமா எழுப்பி இருக்க கூடாதா? நைட் ப்ராஜெக்ட்ல ஒரு இஷ்யு, அப்படி இப்படினு முடிஞ்சு நா வீட்டுக்கு வந்து படுக்கறதுக்கே 4 மணி ஆகிருச்சு. இனிமே போயி நா குளிச்சு, ரெடியாகிட்டு வந்து சமைச்சு முடிக்கணும். அப்பா ஸ்டேஷன்க்கு போயாச்சா? சாப்பிட்டாரா? என்ன சாப்பிட்டாரு?" என கேள்வி மேல் கேள்வி கேட்டவளை பார்த்து விச்சு சிரிக்க, "உனக்கு சிரிப்பா தான் இருக்கும்" என்று முறைத்த படியே பாத்ரூமிற்குள் புகுந்தாள்.
அடுத்த ஐந்து நிமிடங்களில் குளித்து ரெடி ஆகி வந்து நின்ற அம்மாவிற்கு தட்டில் சூடாக தோசையும், சட்னியும் பறிமாறியபடியே "டோன்ட் ஒர்ரி மா, இன்னைக்கு சமையலை நா பாத்துக்கறேன், நீங்க ரெஸ்ட் எடுங்க. மெனு கூட பிளான் பண்ணியாச்சு" என விச்சு சொல்ல "என்ன விளையாடறியா? உங்க பாட்டிய பத்தி தெரியும்ல, சாப்பாடு சுவை கொஞ்சம் மாறினாலும் வாயில வைக்க மாட்டாங்க. அதுனால ஒழுங்கா கிச்சனை விட்டு வெளில போ, நா பாத்துக்கறேன்" என தோசையை வேகமாக விழுங்கி விட்டு அவசரமாக எந்திரிக்க போனவளை மொபைல் சிணுங்கி சிணுங்கி அழைத்தது. "எப்படியும் உங்க ஆபீஸ்ல இன்னைக்கு உங்கள விட மாட்டாங்க, மதியம் எல்லாருக்கும் போஜனம் என் கையால் தான்" என கிண்டலாக சொன்ன விச்சுவை தர்மசங்கடத்துடன் பார்த்தபடியே போன் பேச ஆரம்பித்தாள்.
அடுத்த ஒரு மணி நேரம் முழுக்க சாரு போனிலும், மணக்கும் தக்காளி குழம்பு, முருங்கைகாய் கூட்டு, பெருங்காயம் மணக்க மணக்க ரசம், அப்பளம் என விச்சு கிச்சனிலும் பிசியாக இருந்தனர். இருவரும் அவரவர் வேலையை முடித்த தருணத்தில் வாசலில் கார் சத்தம் கேட்க, ஊரிலிருந்த வந்த அத்தையை வரவேற்க சாரு வேகமாக வாசலுக்கு ஓடினாள். சாருவிற்கு எப்பவுமே அவளது மாமியார் மீது மிகுந்த மரியாதை உண்டு, இவர்கள் அனைவர் மீதும் அலாதி பிரியம் கொண்டவர், அதே சமயம் கண்டிப்பும் உடையவர். சாருவும் அவர் மணம் கோணாதவாறு நடந்து கொள்வாள். இன்று தான் என்ன ஆக போகிறதோ என கொஞ்சம் பயந்து கொண்டே இருந்தாள்.
"பாட்டி இப்படி பேசிக்கொண்டே இருந்தால் எப்ப சாப்பிடுவதாம்? எனக்கு ரொம்ப பசிக்குது" என அம்மாவை பார்த்து கண்ணடித்து கொண்டே விச்சு சொல்ல. "எடுத்து வைம்மா சாரு எனக்கும் கூட பசிக்குது" என்றவரிடம் "எல்லாம் ரெடியா இருக்கு அத்தை, வாங்க சாப்பிடலாம்" என்றாள் சாரு. "இதென்ன முருகைக்காயில் கூட்டா, புதுசா இருக்கே" என்றவரிடம், "பாட்டி இது எங்க ஆபீஸ் கான்டீன்ல செய்வாங்க. ரொம்ப சூப்பரா இருக்கும். இன்னைக்கு தான் முதல் தடவையா ட்ரை பண்ணேன். சாப்பிட்டு பாத்து எப்படி இருக்குனு சொல்லுங்க" என்று சொன்ன நிமிடம் பாட்டியின் முகம் மாறியது. "என்ன நீ சமச்சியா? ஏன் சாருவுக்கு என்னாச்சு?" என கொஞ்சம் கடுமையான தொனியில் கேட்க "பாட்டி, பாட்டி நேத்து நைட் அம்மாவுக்கு ஆபீஸ்ல நெறைய வேலை, விடியற்காலைல தான் வீட்டுக்கே வந்தாங்க. அதான் அவங்க ரெஸ்ட் எடுக்கட்டுமேனு நா இன்னைக்கு சமைச்சேன்" என விச்சு சொல்லி முடிக்குமுன் "அதுக்குன்னு ஒரு ஆம்பளபுள்ளய சமைக்க விட்டுட்டு உங்கம்மா தூங்கிட்டு இருந்தாளா? அநியாயமால இருக்கு" என்று கோவமாக சாரு பக்கம் திரும்புவதற்குள் "அதுனால என்ன பாட்டி, பெங்களூருல டெய்லி நானே தான எனக்கு சமைச்சிக்கறேன், இன்னைக்கு நம்ம வீட்ல எல்லாருக்காகவும் செஞ்சது எவ்வளவு ஹாப்பியா இருந்துச்சு தெரியுமா" என்றான் விச்சு என்கிற விஸ்வநாதன்.
"ஏன் உங்க ஆபீஸ்ல தான் கான்டீன் இருக்குமே, நீ ஏன் அங்க சாப்பிடாம வீட்ல நீயே... அட ராமா.. நானெல்லாம் உங்க தாத்தாவை கிச்சனுக்குள்ள விட்டுருப்பேனா, ஒரு வேலை தான் செய்ய விட்டுருப்பேனா? இங்கேன்னாடானா, ஏண்டா ராமு இதெல்லாம் நீ ஏன்னு கேக்க மாட்டியா?" என்று தன் மகனை கடிந்துகொண்டவரை, "அது அப்படி இல்லை பாட்டி, டெய்லி மூணு வேளையும் வெளில சாப்பிட்டா என் நாக்கு செத்து போகுது. அதுல இருக்க எண்ணையும் காரமும் வயிர ரணமாக்கிருது. அம்மா எனக்கு சமையல் சொல்லி குடுத்ததால தான் என்னால அங்க வயிறார சாப்பிட முடியுது. வீக்கென்ட் ஆனா என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் கூட எங்க வீட்டுக்கு வந்துருவாங்க என் சமையலுக்காக, தெரியுமா. அவனவன் அவ்ளோ காஞ்சு கெடக்கரான் நல்ல சாப்பாடு சாப்பிட. சமையல் மட்டுமில்லை, என்னோட வேலைகள் எல்லாமே செய்யறதுக்கு அம்மா சின்ன வயசுல இருந்தே எனக்கு சொல்லி கொடுத்துட்டாங்க. அது எனக்கு எவ்ளோ உபயோகமா இருக்கு தெரியுமா. இன்னும் ரெண்டு மாசத்துல நா ஒரு ஆன்சைட் ட்ரிப் போக வேண்டியிருக்கும். அப்பல்லாம் நானும் சரி, அப்பா அம்மாவும் சரி எதை பத்தியும் கவலை பட வேண்டியதில்லை. என்னையும் என் வேலைகளையும் நானே பாத்துக்குவேன்" என நிதானமாக சொன்ன பேரனிடம் "நீ என்ன தான் சொல்லு, ஒரு ஆம்பளபிள்ளையை வீட்டு வேலையெல்லாம் செய்ய விடறதை என்னால ஜீரணிசிக்கவே முடியல" என்றார். "அட என்ன பாட்டி நீங்க, தாத்தாவே எத்தனை தடவ வேலை விஷயமா வெளி ஊருக்கு போனா சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டிருக்கார், அவர் கொண்டு போன துணிமணியை கூட பத்திரமா சில நேரம் கொண்டு வர மாட்டாருனு நீங்க சொல்லும்போது நா கேட்டுருக்கேன். அவ்வளவு ஏன், சின்ன வயசுல நீங்க சொன்ன ஒரு கதை எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. ஒருவனுக்கு ஒரு வேளை சோறு போடுவதை விட, அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுத்தால் வாழ்நாள் முழுதும் அவனுக்கு அது உபயோகப்படும் என்று நீங்க தானே பாட்டி அன்னிக்கு சொல்லி குடுத்தீங்க. அப்ப அம்மா செஞ்சது சரி தான" என்று மடக்கி மடக்கி கேள்வி கேட்கும் பேரனிடம் "உன்னை நான் பேசி சமாளிக்க முடியாது. என்னவோ போ, எல்லாரும் நல்லா இருந்தா சரி. ஆனாலும்..." என்று ஆரம்பித்தவரை "ஐயோ, பாட்டி மறுபடியுமா" என்று விச்சு கேட்க "அட, ஆனாலும் முருங்கைக்காய் கூட்டு நல்லா தான் இருக்குனு சொல்ல வந்தேன் டா" என்று சிரித்துகொண்டே பாட்டி சொன்னார்.
No comments:
Post a Comment