"அட, ஏன் தான் இந்த மெஸ்ஸில் இப்படி ஒரு சாப்பாடு போடுகிறார்களோ", என துளசி தன் மனதிற்குள்ளயே நினைத்து கொண்டாள். சுடச்சுட சாதம், நெய், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், அப்பளம், மோர் என வகையாக, அதுவும் அவ்வளவு ருசியாக இருந்தால் யாராயிருந்தாலும் எக்ஸ்ட்ரா ரெண்டு கவளம் உள்ளே போகதானே செய்யும். அப்புறம் எப்படி கிளாசில் உட்கார்ந்து பாடத்தை கவனிக்கறதாம்?
மதிய வேளை முதல் பீரியட், முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் அந்த பாஸ்கல் (அது ஒரு சப்ஜெக்ட்) கிளாசில் துளசி உட்பட நாற்பது மாணவிகளும் உண்ட மயக்கத்தில் டீச்சர் என்ன நடத்துகிறார் என்பதே புரியாமல் மண்டையை மட்டும் ஆட்டி கொண்டிருந்தார்கள். "ஐ ஹோப் எவெரிஒன் அண்டர்ஸ்டூட், நவ் லெட் மீ அஸ்க் யு குவெஸ்டின்ஸ்" என பார்வையை சுழல விட்டபடி அந்த டீச்சர் ஆட்காட்டி விரலை உயர்த்தி "யு கெட் அப்" என துளசியை பார்த்து கூறினாள். ஐயோ, இவ்ளோ பேர் இருக்கும் இந்த கிளாசில் இவர்கள் கண்ணுக்கு நான் மட்டும் தான் பட வேண்டுமா, கடவுளே!!
கல்லூரி ஆரம்பித்து ஒரு வாரம் ஆகி இருந்தபோதும், துளசிக்கு அது தான் இரண்டாவது நாள். பிளஸ் டூவில் எண்பத்தைந்து சதவீதம் வாங்கி இருந்தாலும் சைகாலஜி அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் படிக்க போவதாகவும், ஹாஸ்டலில் தங்கி தான் படிக்க வேண்டும் என்றும் பெற்றோரிடம் பெர்மிஷன் வாங்கி இருந்தாள். சென்னையில் WCC'ல் அப்ளை பண்ணியிருந்த சைகாலஜி சீட் கடைசி நிமிஷத்தில் காலை வாரி விட, "பக்கத்தில் இருக்கும் காலேஜ் எதிலாவது சேர்த்துக்கோயேன்" என சொன்ன அவளது பெற்றோரிடம் திருச்சியில் ஏதாவது காலெஜ்ல் அப்ளை பண்ணலாம் என கெஞ்சி அவர்களிடம் சம்மதம் வாங்குவதற்குள் அந்த காலேஜிலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் கோர்ஸ்கு அட்மிஷன் முடிந்து விட்டது என்று சொல்லி விட்டார்கள். பின்பு அவளது அப்பா தான் தெரிந்தவர்கள் மூலமாக ட்ரை பண்ணி ரெகமெண்டஷனில் சீட் வாங்கி கொடுத்தார். ஹாஸ்டலில் தங்கி படிக்கிறேன் என ஜம்பமாக சொல்லிவிட்டாலும் முதலில் வீட்டையும், பெற்றோரையும் மிகவும் மிஸ் பண்ணினாள். கிளாஸ்சிலும் யாரும் அவ்வளவு பரிச்சயம் ஆகவில்லை. அப்படி இருக்கையில் தான் "இன்று டீச்சரிடம் நன்றாக வசை வாங்க போகிறோம் என கீழ் உதடை கடித்தபடி என்ன கேள்வி கேட்க போகிறாரோ" என்று தயங்கிய வண்ணம் எழுந்து நின்றாள்.
கேட்ட கேள்விக்கு தத்து பித்து என உளறுகிறோம் என்று தெரிந்தே ஏதோ உளறி வைத்தாள். "யு ஆர் தி ஒன், ரைட்? ஹூ கேம் பார் அட்மிஷன் லாஸ்ட் வீக்?" என்று அவர் கேட்ட தொனி, ரெகமெண்டஷனில் வந்ததெல்லாம் இப்படி தானே இருக்கும் என்பது போல இருந்தது. "காலேஜ் வந்து விட்டோம் என்று லதார்ஜிகா இருந்தீங்கனா லாஸ் உங்களுக்கு தான், சிட் டவுன்" என்றவர் அடுத்த டாபிக்கை நடத்த ஆரம்பித்து விட்டார். துளசிக்கு மிகுந்த அவமானமாகி விட்டது. அம்மாவிடம் உடனே சொல்லி அழ வேண்டும் போல் ஆகி விட்டது. அன்று முழுவதும் அவள் யாரிடமும் சரியாக பேசவில்லை.
அடுத்த நாள் காலை முதல் பீரியட்டே பாஸ்கல் மேமோடது தான் என்று டைம் டேபிள் சொல்ல, வயிற்றுக்குள் ஒரு மிக்ஸியே ஓடியது. ஊரில் உள்ள எல்லா கடவுளையும் துணைக்கு கூப்பிட்ட படி பெஞ்சில் உட்கார்ந்திருந்தாள். அன்று வந்ததும் வராததுமாக "குட் மார்னிங் எவெரிபடி, லேட்ஸ் சி ஹொவ் மச் யு ஆல் ஹவ் ஸ்கோர்ட் இன் யுவர் பிளஸ் டூ" என்றபடி "90 பெர்ஸண்டெஜ் அண்ட் அபவ்" என்று சொல்ல யாருமே எழுந்திரிக்கவில்லை, "85 அண்ட் அபவ்" என்று கூற துளசியும் இன்னொரு மாணவியும் எழுந்தார்கள். துளசி எழுந்ததை பார்த்த டீச்சர் கண்ணில் சிறிதாய் ஒரு ஆச்சரியம் வந்து போனதை அவள் கவனிக்க தவறவில்லை. "வெரி குட், சிட் டவுன்" என்றவரை பார்த்து "தாங் யு, மேம்" என்று சிறு புன்னகையுடன் கூறினாள். டீச்சரும் அவளை பார்த்து முறுவலித்த போது துளசி ஆல்ரெடி வானத்தில் பறந்து கொண்டிருந்தாள், கற்பனையில்!!!
No comments:
Post a Comment