Monday, April 20, 2020

யாதும் ஊரே

 சிறிது நேரம் டீவி பார்க்கலாம் என்று அஞ்சனா சுவிட்ச்சை ஆன் செய்த நொடியில் கரண்ட் கட் ஆனது. இரண்டு நாட்களுக்கு முன் தான் யுபிஎஸ் சாதனமும் பழுதாகியிருக்க கரண்ட் வந்தால் தான் ஆச்சு, வேற என்ன செய்யலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த போது, "ஆ சாமிக்கண்ணு, நா வடசேரி பட்டறைல இருந்து பேசறேன். கரண்ட் வர நேரமாகுமா?" என்று ராகவன் லைன் மேன்'க்கு  போன் பண்ணி கேட்டுக்கொண்டிருந்தான். சிறிது வினாடிகளில் "அஞ்சு, கரண்ட் வர சாயங்காலமாகுமாம். நீ வேணும்னா ஆபீஸ் ரூம்ல வந்து உட்கார்ந்துக்கறியா? இங்க  யுபிஎஸ் வேல செய்யலையே. ஒர்க் ஷாப்ல இப்ப ஜெனெரேட்டர் போட்ருவோம், அங்க ஃபேன் ஓடும்" என்றபடி ராகவன் வீட்டிற்குள் நுழைந்தான். ராகவனுக்கு அஞ்சனாவிற்கும் திருமணம் ஆகி முழுதாக இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை.  திடீரென ஒரு இரங்கல் செய்தி வர ராகவனின் பெற்றோர் முந்தைய இரவு தான் கிளம்பி சொந்த ஊருக்கு செல்ல நேர்ந்தது. சாயங்காலம் தான் தகவல் வந்தது, அதனால் ராகவன் இரவு பேருந்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்தான். 

அஞ்சனாவிற்கு பெரிதாக இன்னும் சமைக்க தெரியாது, தவிர இன்னும் கிச்சனில் எது எங்கிருக்கிறது என்ற பழக்கமும் வரவில்லை என்பதால்  ராகவனின் அம்மா கிடைத்த கொஞ்ச நேரத்தில் அஞ்சனாவை சிறிது காய்கள் நறுக்கி தரும்படி கேட்டு ஒரு சாம்பார், ரசம்,  தக்காளி குழம்பு மற்றும் முட்டைகோஸ் பொரியல் வைத்து, அதை குளிர்சாதன பெட்டியில் வைத்து விட்டாள். "ஃபிரிட்ஜ்ஜில் தோசை மாவு இருக்கும்மா, இட்லி தோசை ரெண்டுமே வரும், எது வேணுமோ செஞ்சு சாப்பிட்டுக்கோங்க. மாமா ஒர்க் ஷாப்ல வேல நெறய இருக்குனு சொல்லிட்டு இருந்தார், ராகவனுக்கு நைட் லேட்டா கூட ஆகும் போல, அதுனால இட்லி தோசைனா செரிமான பிரச்சனை ஏதும் வராது. சாம்பார் அல்லது குழம்பு விருப்பம் போல எடுத்துக்கோங்க. ஒரு நாளைக்கு பொரியல் இருக்கு இன்னோரு நாளைக்கு அப்பளம் ஏதாவது வறுத்துக்கோங்க"  என்று சின்ன சின்ன விஷயங்கள் முதற்கொண்டு சொல்லிவிட்டு சென்றிருந்ததால் அஞ்சனாவிற்கு சிரமம் இல்லாமல் இருந்தது.

மாலையில் தான் மின் இணைப்பு வரும் என்ற தகவலை சொல்ல வந்தவனின் கண்கள் கோவைப்பழம் போல சிவந்திருப்பதை பார்த்து "அய்யயோ என்னங்க கண்ணு ரெண்டும் இப்படி செவந்திருக்கு" என்று பதறினாள். "அது ஒன்னும் இல்ல, வெல்டிங் பண்றத பக்கத்துல இருந்து பாத்துட்டு இருந்தேன்ல, அதான்" என்றான். "கொஞ்சம் தள்ளி நின்னு பாக்க முடியாதா?" என்ற அவள் கேள்விக்கு "இல்ல, பக்கத்துல இருந்தா தான் சரியா பண்றங்களானு நுணுக்கமா பாக்க முடியும். கண்ணுக்கு சொட்டு மருந்து போட்டுக்கிட்டா சரியாகிரும், இது எப்பவும் இருக்கறது தான். ஒன்னும் பயப்படாத. சரி நா ஒர்க் ஷாப்க்கு போறேன்" என்கையில் "வேலை ஆட்களுக்கு டீ போடணுமா? அத்தை தினமும் போடுவாங்களே?" என கேட்டாள். "பன்னெண்டு பேருக்கு போட்ருவியா? இல்லேனா பரவால்ல, பையன அனுப்பி டீ கடைல வாங்கிட்டு வர சொல்லிடறேன்" என்றான். "இல்ல, அத்தை போடும் போது கவனிச்சிருக்கேன், போட்ருவேன்" என்றாள் புன்னகைத்தபடியே. "ஓகே ஊட்டி ஆப்பிள், ரெடி ஆனதும் பெல் அடி, நான் வந்து எடுத்துட்டு போய்க்கறேன்" என்று அவள் கன்னங்களை செல்லமாக தட்டியபடி சொல்லி சென்றான். 

அஞ்சனா சென்னையில் பிறந்து வளர்ந்த பெண், நல்ல நிறம், துரு துரு விழிகள், கூர்மையான நாசி, செவ்விதழ்கள், ஆப்பிள் போன்ற கன்னங்கள் அவள் சிரிக்கும் போதெல்லாம் குழிவிழுந்து பார்ப்பவர்களுக்கு வலை விரிக்கும்.  அதிர்ந்து பேசாதவள். "நீ ஊட்டி ஆப்பிள் மாதிரி இருக்க, உனக்கு நிஜமாவே என்ன பிடிச்சிருக்கா என்ன?" என்று அடிக்கடி ராகவன் அவளை கிண்டல் செய்வான். டீ போட்டு முடித்ததும் அதை தம்ளர்களில் ஊற்றி, ஒரு பெரிய தட்டில் வைத்து, அந்த பிங்க் வண்ண கிச்சன் சுவற்றில் இருந்த ஒரு கருப்பு நிற பொத்தானை அமுக்கினாள்.  ராகவனோ அவனது அப்பாவோ ஒர்க் ஷாப்பில் இருக்கும் போது சில நேரங்களில் லேத் அல்லது சானை பிடிக்கும் சத்தத்தில் வீட்டில் இருப்பவர்கள் கூப்பிட்டால் கேட்காது என்பதால் அவனது அப்பா அந்த காலிங் பெல்லை செட் பண்ணியிருந்தார்.

டீ தம்ளர்களை எடுக்க வந்தவனிடம் "காலைல அஞ்சு மணிக்கெல்லாம் வேலைய ஆரம்பிச்சிட்டீங்களே, இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு மோர் கொடுக்கவா? களைப்பு தெரியாம இருக்கும்ல" என்றாள். "இப்ப மணி என்ன பதினொன்னா, ஒரு மணிக்கு சாப்பிட அனுப்பிறலாம், ஒரு மூணு மணி போல மோர் குடுத்துக்கலாம். தயிர் இருக்கா?" என்றான். "இருக்கு, நேத்து நைட் சேர்த்து தான் உரை ஊத்தினேன்" என்றவள் "மொபைலை ஆபீஸ்ல சார்ஜ் போட்டுட்டு கொஞ்ச நேரம் மாடிக்கு போக போறேன், வெயில் இல்லாம கிளைமேட் நல்லாருக்கு, தேடாதீங்க" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது வாசலில் அழைப்பு மணி அடிக்க யார் என்று பார்க்க வெராண்டாவின் மரக்கதவை திறந்தாள்.

வாசலில் தண்ணீர் குடங்களுடன் சில பெண்கள் நிற்க "தண்ணி குழாயை தொறந்து விடுமா" என்றாள் ஒருத்தி. "எத்தனை குடம் இருக்கு? கரண்ட் போயிருச்சு, சாயந்திரம் தான் வருமாம்" என்றாள் அஞ்சனா. "ஆறு கொடம் தா இருக்குதுமா" என்றாள் பின்னாடி நின்றவள். அஞ்சனா சென்று கிச்சனில் இருந்த ஒரு குழாயை திருக வீட்டிற்கு வெளியில்  இருந்த குழாயில் விழும் தண்ணீரை குடத்தில் பிடிக்கும் சத்தம் கேட்டது. அவரகளது வீட்டை தாண்டி ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு வருடம் முழுவதும் உண்டு, அவர்களுக்கு பயன்படும் வகையில் ராகவனின் அப்பா வீட்டிற்கு வெளியில் தண்ணீர் குழாய் வைத்திருந்தார். காலையிலும் மாலையிலும் தண்ணீர் பிடித்துக்கொள்ளலாம் என்று அந்த நேரம் மட்டும் குழாயை திறந்தே வைத்திருப்பார் அவனது அம்மா. நடுவில் வருபவர்கள் ஒன்றிரண்டு பேர் அழைப்பு மணி அடித்து, கேட்டு, தண்ணீரை பிடித்து செல்வர்.

கொளுத்தும் வெயில் இருக்கும் கோடை காலத்தில் கூட இவர்களது கிணறு வற்றாது, அவர்களது குழாயிலும் எப்போதும் தண்ணீர் திறந்து விடப்படும் என்று ராகவன் சொல்லியிருந்தான். மோட்டார் போடும் சிரமம் இருக்கக்கூடாது என்று அவனது அப்பா தானியங்கி கட்டுப்படுத்தி (Automatic  Motor  controller )  பல வருடங்களுக்கு முன்னரே போட்டிருந்தார். தண்ணீர் தொட்டியில் இருக்கும் தண்ணீர் ஓரளவிற்கு கீழ் வரும் போதே மோட்டார் ஆன் ஆகிவிடும், அதே போல தங்க நிரம்பும் அளவிற்கு தண்ணீர் வரும் போது சென்சார் மூலமாக மோட்டார் அதுவே அணைக்கப்படும். இதனால் தண்ணீர் வீணாகாது, கரண்ட் கட் ஆகும்போது டேங்கில் தண்ணீர் இல்லை என்ற நிலை வராது, மோட்டார் போட நியாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கவலை கிடையாது என்பதெல்லாம் தெரிந்து பதினைந்து வருடங்களுக்கு முன்னரே எங்கப்பா அதை செய்தாராம் என்று ராகவன் பெருமையாக சொல்வான். உண்மை தான் அங்கிருக்கும் பல விஷயங்களை பற்றி அவளது மாமாவும் சிலாகித்து பேசியிருக்கிறார்.

தண்ணீர் பிடித்து முடித்ததும் அந்த பெண்கள் மறுபடி பெல் அடித்து, "போதும்மா, கொழாய அடைச்சிரு" என்று சொல்ல, அஞ்சனா அப்படியே செய்துவிட்டு கிணற்றடியில் இருந்த மாடிப்படியில் ஏறி மாடிக்கு சென்றாள். அங்கே குரங்குகள் அதிகம் என்பதால் மாடியில் சுற்றி கம்பி வலை போட்டிருந்தார்கள். மாடியில் ஷெட் போட்டு அதில் ஒரு பெரிய ஊஞ்சலும் இருக்கும். சிலு சிலுவென அடிக்கும் காற்றில் அந்த ஊஞ்சலில் போய் அமர்ந்தால் நேரம் போவதே தெரியாது.

திருமண பேச்சை எடுத்த உடன் அஞ்சனாவிற்கு வந்த முதல் வரன் ராகவனுடையது தான். அங்கே இங்கே விசாரித்ததில் திருப்தியாக இருந்ததால், பையன் வீட்டில் நேரில் சென்று பார்த்து பேசி ஒருமுறை விசாரித்து விட்டு அப்புறம் அடுத்து தொடரலாம் என்று அஞ்சனாவின் அப்பா  சொல்ல, "நான் போய் பேசவா? பையன் எப்படி இருக்கான்னு நா ஒருக்க பாக்கணும்" என்று அஞ்சனாவின் அண்ணன் சொல்ல, "இதெல்லாம் பெரியவங்க தாண்டா பண்ணனும். பெரியவங்க போனா அவங்க குடும்பம், சொந்தகாரங்க, தொழில்னு பல விஷயத்தை பத்தி பேசுவோம். பேசும் போது வார்த்தைகளுக்கு நடுல குறிப்பெடுத்துக்கணும். அதுக்கு உன்னோட மாமா தான் சரியான ஆளு. நீ மாப்பிளையை பாக்கணும்னா அது தனியா ஒரு நாள் போயிக்கலாம்" என்றார். அதே போல அவளது மாமா நேரில் பார்த்து பேசிவிட்டு வந்து பையனின் அப்பாவை பற்றி புகழ்ந்து தள்ளி விட்டார்.

"அந்த காலத்து ஆளுன்னாலும் விஷயம் எல்லாம் அப் டு டேட்'ஆ இருக்கார். சென்சார் லைட் அதாவது இருட்டானால் அதுவே ஆன் ஆகி வெளிச்சம் வந்ததும் அதுவே ஆஃப் ஆகிவிடும், அப்புறம் ஆள் நடமாட்டம் இருந்தால் லைட் ஆன் ஆகி சிறிது நேரத்திற்கெல்லாம் ஆஃப் ஆகிருமாம், வீட்டு மாடியில் சோலார் (சூரிய ஒளி) தகடு என அமர்க்களமா வச்சிருக்கார். இதெல்லாம் இப்ப வேணும்னா ரொம்ப சாதாரணமான விஷயமா இருக்கலாம். ஆனா அவர் இதையெல்லாம் பதினஞ்சு வருஷததுக்கு முன்னாடியே பண்ணி இருக்காரு. ரொம்ப தன்மையா பேசறாங்க  வீட்ல இருக்கவங்களும். ஒர்க் ஷாப்ல எப்பவும் ரோடு போடற மெஷின், தார் மெஷின், அரிசி ஆலை பாய்லர், கிரில் கேட்னு பிசியா ஏதாவது வேலை இருந்துட்டே இருக்கும்னு அவங்க ரோடு முக்குல இருந்த ஒரு பெட்டி கடைல விசாரிச்சதுல தெரிஞ்சுது. என்ன ஒண்ணே ஒன்னு, அவங்க வீட்டுக்கு பக்கத்துல வீடுகள்னு பெருசா எதுவும் இல்ல. கடை கண்ணினு எதுக்கு போகணும்னாலும் ரெண்டு கிலோமீட்டர் போகணும். தொழில் இரும்பு பட்டறைங்கறதால வாழ்க்கை முறைல நெறைய மாறுதல்கள் இருக்கும், அதை நீங்க யோசிச்சுக்கோங்க" என்றார்.

"அஞ்சு, நீ என்னடா சொல்ற?" என்று அவள் அப்பா அவளிடம் கேட்க "நா என்னப்பா சொல்றது. எனக்கு பெருசா எந்த எதிர்பார்ப்பும் இல்ல. எதுவானாலும் நீங்களே முடிவு பண்ணி சொல்லுங்க. ஆனா இந்த பொண்ணு பாக்க வரேன்னு அடிக்கடி காபி டிரே எடுத்துட்டு போய் நிக்க சொன்னா அது தான் எனக்கு கொஞ்சம் சங்கடமா இருக்கும்" என்றாள் "நம்ம வீட்ல அந்த பழக்கம்லா இல்ல, எல்லாம் பேசி ரெண்டு பக்கமும் மத்த விஷயங்கள் எல்லாம் செட் ஆகுது, போட்டோல பாத்து ஒருத்தருக்கு ஒருத்தர் ஓகேனு சொன்னதுக்கப்புறமும் கோவில் இல்ல காபி ஷாப்னு ஏதாது பொது இடத்துல தான் மொதல்ல பாத்துக்குவீங்க. அதுக்கப்புறம் தான் வீட்டுக்கு வருவாங்க, அதுவும் உறுதி பேசறதாயிருந்தா தான். அப்ப கூட நீ காபி டிரே தூக்க வேண்டியதில்லை, போதுமா?" என்றார் சிரித்தபடி. "ஆனா, அந்த ஊரு அவங்க லைப் ஸ்டைல் எல்லாம் உனக்கு பழகிருமா?" என்றார் யோசனையாக. "நா இப்ப சொன்னது தான் பா, எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்ல. சென்னைலயே வாழ்ந்ததால் இங்க இருக்க வாழ்க்கை முறையை பழகிகிட்டேன். ஒரு வேளை உங்களோடது பல ஊர்களுக்கும் மாறக்கூடிய வேலையா இருந்தா அங்கெல்லாம் பழகியிருப்பேன் தானே? அப்ப ஒரு எடத்துல நாம சங்கடப்படாம இருக்கணும்னா அது எந்த ஊருங்கறது இல்ல, நம்ம கூட இருக்கவங்கள பொறுத்து தான? அத மட்டும் நீங்க பாத்துக்கோங்கப்பா" என்ற போது "சபாஷ் அஞ்சுமா,  எதிர்பார்ப்புகள் நெறய இருக்கும் போது தான் ஏமாற்றங்களும் வருது. மனச கிளீன் சிலேட்டா வச்சுக்கிட்டா அதுல எதைவேனா நிரப்பிக்கலாம், நீ ரொம்ப தெளிவா இருக்க. அப்புறம் என்ன மச்சான், பையன் வீட்டுல சட்டு புட்டுன்னு பேசி வேலைய ஆரம்பிக்க வேண்டியது தான" என சொல்கையில் அவளுடைய வாழ்வின் அடுத்தகட்டத்திற்கான வேலைகள் வீட்டில் மங்களகரமாக துவங்கின.

"படித்த பெண் வீட்டில் ஏன் சும்மா இருக்கணும், உனக்கு விருப்பம் இருந்தா சொல்லு, இங்க இருக்கற கவர்மெண்ட் ஸ்கூல் பசங்களுக்கு சாயங்காலம் டியூஷன் சொல்லித்தர ஏற்பாடு பண்ணலாம். இல்லேனா அந்த ஸ்கூலுக்கு ஒரு பிரெஞ்சு நாட்டு அம்மா தன்னார்வ சேவை செய்யறாங்க, அவங்ககிட்ட கேட்கலாம். ஸ்கூல் தலைமை ஆசிரியர் கிட்ட கூட கேட்டுப்பாக்கலாம். நம்ம ராகவனுக்கு அவரை தெரியும்" என்று அத்தை போன வாரம் தான் சொல்லியிருந்தார்கள். இவளும் சரி என்றதால் அவனும் பேசிப்பார்ப்பதாக சொல்லியிருந்தான். வீட்டில் இருப்பவர்கள் ஒவ்வொருத்தர் மீது காட்டும் அக்கறையும், ஒவ்வொரு பொருளின் மீது காட்டும் அக்கறையும் கூட அவளை நெகிழவைக்கும். பட்டறையில் கீழே கிடைக்கும் சின்ன சின்ன ஸ்க்ரூ, ஆணி, போல்ட்டு, நட்டு இதையெல்லாம் கூட ஒவ்வொரு நாளும் வேலை முடிந்தவுடன் ஒரு வலம் வந்து அதை எடுத்து பத்திரப்படுத்தி வைப்பது அவர்கள் அந்த தொழிலின் மீது வைத்திருக்கும் பக்தியை காட்டின. அதே போல் ஏதாவது ஒரு பொருள் பழசாகிவிட்டது அல்லது உடைந்து விட்டது என்றால் அப்பாவும் பிள்ளையும் அதை உடனே தூக்கி போட நினைக்க மாட்டார்கள். அதில் இருக்கும் உதிரி பாகங்களை முடிந்தவரை மறுசுழற்சியோ அல்லது உபயோகப்படுத்தவோ தான் பார்ப்பார்கள். அது போல உயிர் பெற்ற பல சாமான்களை வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும் கவனித்திருக்கிறாள்.

எவ்வளவு நேரம் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தாளோ, கீழே சார்ஜில் போட்டிருந்த அவளது கைபேசி அழைக்க படிகளில் இறங்க ஆரம்பித்தாள். அங்கிருந்து பட்டறையின் ஒரு பகுதி நன்றாக தெரியும். கொஞ்சம் வயதில் முதிர்ந்த தொழிலாளி சம்மட்டியால் (இரும்பினால் ஆன கனமான சுத்தியல்) அடித்து ஒரு இரும்பை உடைக்க முயன்றார். அங்கே வந்த ராகவன் அவரிடம் இருந்து அதை வாங்கி தெம்பை எல்லாம் சேர்த்துவைத்து அடிக்க,  நான்கைந்து அடிக்கு பிறகு அந்த இரும்பு இரண்டு துண்டாக உடைந்தது. "முதலாளி என்பவன் ஆட்களை விரட்டி வேலை வாங்க தெரிந்தவன் அல்ல, ஆளோடு ஆளாய் இறங்கி வேலை செய்யத் துணிந்தவன்" என எங்கோ படித்தது நினைவில் வந்தது.  

இந்த வீட்ல இருக்க ஒவ்வொருத்தரும் மத்தவங்களுக்காகவும் யோசிக்கராங்க, ஒருத்தர் சிரமப்படும் போது தங்களால் முடிஞ்ச வரைக்கும் உதவராங்க. நா அன்னைக்கு அப்பாகிட்ட சொன்னது சரிதான்; சின்ன ஊரோ, நகரமோ, நம்ம கூட இருக்கவங்க பொறுத்து தான் நம்ம வாழ்க்கை என புன்னகைத்துக் கொண்டாள்.


Sunday, April 19, 2020

பாதாம் அல்வா!!

 அலுவலக பணி  நிமித்தமாக ஷர்மி என்ற ஷர்மிளா மடிக்கணினியின் விசைப்பலகையை தட்டிக்கொண்டிருக்க, "ஏய் ஷர்மி, ரொம்ப போர் அடிக்குது டி" என்றபடி வந்து டீவிக்கு உயிர் கொடுத்தான் ஷங்கி என்ற ஷங்கர். "டேய் கொஞ்ச நேரம் அத ஆஃப்  பண்ணுடா, வேல நெறய இருக்கு. சனிக்கெழம கூட எங்க ஆபீஸ்ல படுத்தறாங்க" என்றபடி ரிமோட்டில்  ஆஃப் பட்டனை தட்டிவிட்டு வேலையை தொடர்ந்தாள். அவர்களுக்கு திருமணம் ஆகி ஒன்றரை வருடம் தான் ஆகியிருந்தது. ஷர்மி ஒரு ஐடி கம்பெனியிலும், ஷங்கி கார் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையிலும் வேலை பார்க்கிறார்கள். அவர்களது ஒற்றை படுக்கையறை கொண்ட மிக சிறிய வீடு. ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து டேபிள்மேட்டில் வசமில்லாமல் உட்கார்ந்து வேலைபார்த்து, கழுத்து வலிக்கு ஐயோடெக்ஸ்'ஐ தடவிக்கொண்டு வேலையை செய்து கொண்டிருந்தாள்.

"ஏய் பாதாம் அல்வா சாப்பிடணும் போல இருக்கு டி, ச்ச இந்த ஸ்விக்கி இல்லாம அவசர ஆத்திரத்துக்கு ஒன்னும் சாப்பிட முடிய மாட்டேங்குது" என்றான் ஓர பார்வை பார்த்தபடி. "நானெல்லா  இப்ப செஞ்சு தருவேன்னு கனவுல கூட நினைக்காத" என்றாள் அந்த பார்வையின் அர்த்தம் புரிந்தவளாக. "உன்ன யாரு இப்ப கேட்டா, இன்னைக்கு ஐயா உனக்கு செஞ்சு தரேன் பாரு. நீ சாப்பிட்டுக்கிட்டே கூலா உன் வேலைய முடிச்சிரலாம்".

"உனக்கு பாதாம் அல்வா செய்ய தெரியுமா?" சந்தேகத்துடன் அவள் கேட்ட தோனிக்கு "ஹே ஹே என்ன பத்தி என்ன நெனச்ச, நா கிச்சனுக்குள்ள புகுந்தேன் நளபாகம் தான். "வெயிட் எ நிமிட் ஃபார் ஃபைவ் மினிட்ஸ் (wait a nimit for 5 minites), ரெசிபி எடுத்துட்டு வேலைய எப்படி ஜரூரா   ஆரம்பிக்கிறேன்னு பாரு" என்றபடி "ஹே கூகிள்" என்று கூகிளை துணைக்கு அழைத்தான்.  "அப்படியா இரு, தோ நானும் ஒரு அஞ்சு நிமிஷத்துல ஒரு வேலைய முடிச்சிட்டு நீ அல்வா செய்யற அழக கண்குளிர ரசிக்க வரேன்" என்றாள் நக்கலாக.

"புருஷன ரொம்ப நக்கலடிக்கறே மேன், ஓவர் கலாய் ஒடம்புக்கு ஆகாது"  என்று எம் ஆர் ராதா குரலில், ஹிந்தி பட ஹீரோயின் தமிழ் பேசும் தோனியில் மிமிக்கிரி செய்தான். "ஆ ஆ பேச்ச கொர பேச்ச கொர, போயி வேலைய ஆரம்பி" என்று ஷர்மியும் திருப்பி கொடுக்க அங்கே ஷங்கர் ஏப்ரானை (Apron) எடுத்து கழுத்தில் கட்டிக்கொண்டிருந்தான். "டேய் இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரில?" என்றபடி கிச்சனுக்குள் நுழைந்தாள் ஷர்மி. "எதை செஞ்சாலும் பிளான் பண்ணி டெக்னீக்கா செய்யணும் மை டியர்" என்று சொல்லிக்கொண்டே கைபேசியில் செய்முறை விளக்கத்தை திரையில் ஓடவிட்டு அதை வாகாக பார்க்கும்படி அங்கிருந்த உயரமான டப்பாவின் மேல் நிற்க வைத்தான். 

"ம்ம் ஆரம்பிக்கலாமா" என்று ரெண்டு கைகளையும் பர பரவென தேய்த்தபடி கைபேசியை பார்த்தவன் "அரை கப் பாதாம் எடுக்கணும்.. ஷர்மி பாதாம் எங்கருக்கு, ஒரு அரை கப் எடும்மா" என்றான்.  "டேய்ய்" என்றாள் ஷர்மி, "இல்லடா, பொண்டாட்டி கையால பிள்ளையார் சுழி போடனும்ல, அதுக்கு தான் டா" என்றான். போனால் போகிறது என்று பாதாமை அளந்து எடுத்துக் கொடுத்தாள். "ஐயோ இதென்ன ராத்திரி முழுக்க ஊற வைக்கணும்னு போட்டுருக்கு.. ஆ நல்ல வேளை கொதிக்கற தண்ணில கொஞ்ச நேரம் போட்டு தோலை உரிக்கலாம்னும் போட்ருக்கு. அப்படியே கொஞ்சம் தண்ணிய கொதிக்க வச்சு தோலை மட்டும்   உரிச்சு குடுத்துரு டார்லிங்" என்று வழிந்தான். அவள் முறைக்க "டேய் கொதிக்கற தண்ணில கைய கிய்ய சுட்டுக்கிட்டேன்னா அப்புறம் எப்படி உனக்கு அல்வா செஞ்சு தர்றது? தவிர கைல நகம் வேற இல்ல, தோலை எப்படி உரிக்கறது,  கொஞ்சம் ஹெல்ப் பண்ணும்மா ப்ளீஸ்" என்றான் கொஞ்சலாக.

அவனை முறைத்தபடியே ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விட்டு, அதில் பாதாமை போட்டு அதன் தோலை உரித்து கொடுத்தாள். "அப்படி தான், வெரி குட். அதை அப்படியே கால் கப் பால் சேர்த்து மைய்ய அரைச்சு குடுத்துரு பாப்போம்" என்றான். ஷர்மி கடுப்புடன் அங்கிருந்த கரண்டியை கையில் எடுக்க, "ஹே ஹே எந்த பதத்துல அரைக்கணும்னு எல்லாம் உனக்கு தான்பா நல்லா தெரியும், அப்புறம் அல்வா கொர கொரன்னு பால்கோவா மாதிரி ஆகிரும் பாத்துக்கோ" என்றான். "நீ பேசற வசனத்தை கேக்கறதுக்கு இந்த மிக்ஸி சத்தமே பரவால்ல" என்றபடி பாலை சேர்த்து பாதாமை அரைத்து எடுத்தாள். "சூப்பர் டி பொண்டாட்டி, அப்படியே ஒரு வாணலில் கால் கப் தண்ணிய சூடு பண்ணிட்டு அடுப்பை அணைச்சிட்டு அரை கப் சக்கரையை அதுல கரைச்சிடு பாக்கலாம்". அவள் முறைப்பதற்குள் முந்திக்கொண்டு "சக்கர பதம் போச்சுன்னா அப்புறம் பாதாம் சவ்வு மிட்டாய் தான் கிடைக்கும், அதான் ஹெல்ப் கேக்கறேன்" என்றான் இரண்டு கைகள் உயர்த்தியபடி, தயவுசெய்து உதவி செய் என்பதற்கான body language அது.

"உன்ன.... " என்று நற நறவென பல்லை கடித்தபடி சக்கரையை கரைத்தாள். "இப்ப என்ன?" என்றாள் முறைத்தபடி "அப்படி கேளுடி என் தங்க கட்டி, அந்த அரைச்ச பாதாமையும் இதோ இந்த செய்முறைல சொல்லி இருக்கற மத்த பொருட்களையும் சேர்த்து போட்டு நல்லா கெளரினா பாதாம் அல்வா ரெடி, அவ்ளோ தான்" என்றான் கண்ணடித்தபடி. அவன் கழுத்தை நெறிப்பதை போல ஜாடை காட்டிவிட்டு தேவையான சாமானை எடுத்து அல்வாவை கிண்ட ஆரம்பித்தாள். "நெய் இன்னும் கொஞ்சம் ஊத்து, நெறையா சேர்த்தாதான் அல்வா நல்லா தொண்டைக்குள்ள வழுக்கிகிட்டு உள்ள இறங்கும்" என்றான் அடுப்பு மேடையில் ஏறி அமர்ந்தபடி.  "வெக்கமே இல்லையா உனக்கு, இப்படி மொத்த வேலையும் என்ன வாங்கற" என்று பொய்க் கோபம் காட்டியபடி மீதி வேலையையும் ஒருவழியாக செய்து முடித்தாள்.  

"வாவ் வாவ் என்ன ஒரு வாசனை" என்றபடி ஒரு ஸ்பூனில் சூடு பறக்கும் அல்வாவை எடுத்து, அதை அளவாக ஊதி, அலேக்காக வாயில் வைத்து, "ம்ம்ம் என்னா ருசி என்னா ருசி. நா பண்ணின அல்வாவை  டேஸ்ட் பண்றியா டார்லிங்" என்று அவன் கேட்குமுன் பூரிக்கட்டை பறந்து வந்தது என்று சொல்ல வேண்டுமா என்ன.                 

Friday, April 10, 2020

வாட்ஸாப், ஃபேஸ்புக் - இவற்றில் நாம் பகிரும் தகவல்களை எப்படி பாதுகாப்பாக பகிர்வது?

 வீட்டிலேயே நாம் அனைவரும் முடங்கிக்கிடக்கும் இந்த நாட்களில் இணையதளம் மட்டுமே பெரும்பாலாக நமக்கு கைகொடுக்கிறது. நம் குடும்பத்தினருடனும், நட்பு வட்டத்துடனும் தொடர்பில் இருக்கவும், நம் தனிமையை போக்கவும்  வாட்ஸாப்பும்,  ஃபேஸ்புக்கும் பெரும் பங்கு வகிக்கின்றன. பெரும்பாலும் நம்முடைய Photos'ம் Videos'ம் நமக்குத் தெரிந்தவருடன் மட்டுமே ஷேர் செய்ய நினைத்து தான் அப்லோட் பண்ணுவோம். அதை வெளியாட்கள் பார்க்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று எனக்கு தெரிந்தவற்றை இங்கே பகிர்கிறேன். முதலில் Facebook Settings  பற்றி பார்க்கலாம்.

1 .  நாம் ஒரு பதிவை போடும் பொழுது, அதை Post  செய்வதற்கு முன், அது Public  என்று இல்லாமல்  Friends  என்று இருக்க வேண்டும். அதாவது, அந்த போஸ்ட்டை நம்முடைய Friends லிஸ்ட்டில் இருப்பவர்கள் மட்டும் தான் பார்க்க முடியும். Public  என்று வைத்தால், அந்த போஸ்ட்டை யார் வேண்டுமென்றாலும், அவர்கள் ஃபேஸ்புக்கில் இருந்தாலும் இல்லையென்றாலும், நம்முடைய Friend  List'ல் இல்லாதவர்கள் கூட பார்க்க முடியும். 

2 . சில பதிவை நம்முடைய Friend List'ல் இருக்கும் ஒரு சிலர் மட்டும் பார்க்க வேண்டாம் என்று நினைத்தால், அதிலேயே "Friends  Except "   என்று இருக்கும். அதில் சென்று யாரெல்லாம் அந்த பதிவை பார்க்க வேண்டாம் என்று நினைக்கிறோமோ அவர்களின் பெயர்களை அங்கே சேர்த்து விடலாம். 

3 .  நமக்கு பரிச்சயம் இல்லாத நபர்களிடம் இருந்து நிறைய  Friend  Request  வரும். நமக்கு தெரியாதவர்கள் என்றால் அந்த Request 'ஐ  ஏற்காமல் இருக்கலாம், தவறில்லை. நம்முடைய Friend  List'ல் யாரை சேர்க்கலாம் யாரை சேர்க்க வேண்டாம் என்று தீர்மானிக்கும் முழு உரிமை நமக்கு உள்ளது, அது தான் பாதுகாப்பும் கூட. நம்மை பற்றியும் நம் குடும்பத்தினர் பற்றியும் நாம் பகிரும் தகவல்களை யாரோ ஒருவர் எதற்க்காக பார்க்க வேண்டும்?

4 .  சில நேரங்களில் மரியாதை நிமித்தமாக நமக்கு தெரியாத ஒருவரின் Friend  Request 'ஐ நாம் ஏற்க வேண்டியதிருக்கும். அப்போது அவர்கள் நம்முடைய பதிவுகளை பார்க்க வேண்டாம் என்று எண்ணினால், அவர்களை Restricted List 'ல்  வைக்கலாம். அப்படி வைத்தால் அவர்கள் நம்முடைய Friend  List 'ல்   இருப்பார்கள், ஆனால் நம்முடைய Public  போஸ்ட்'ஐ மட்டும் தான் பார்க்க முடியும். இதை செய்வதற்கு அவர்களுடைய Friend  Request  Accept  செய்த பின், அவர்களுடைய profile 'ல்  (அதாவது அவர்களுடைய பக்கத்திற்கு சென்று)  Message option பக்கத்தில் இருக்கும் ...'ஐ  (மூன்று புள்ளிகள் இருக்கும்)  கிளிக் செய்யவும். அப்படி செய்தால் வேறு சில options'ஓடு Block என்ற option'உம் வரும். அதை கிளிக் செய்தால் "Confirm Block" என்று ஒரு சிறிய box  வரும். அதில்  "take a break" என்று இருக்கும் லிங்க்கை கிளிக் செய்யவும். "Limit what PersonX will see" என்று இருப்பதை தேர்வு செய்தால் "Hide your post from PersonX" என்ற option'ஐ செலக்ட் செய்யவும். அவ்வளவு தான் இப்போது அந்த நபர் Restricted List'ற்கு போய் விடுவார்.  5 . Facebook'ல் நிறைய Groups இருக்கும். நாம் அதில் சேர வேண்டும் என நினைத்தால், முடிந்தவரை "Public Groups"ல் சேராமல் இருக்கலாம். ஏனெனில் நாம் "Public Groups"'ல் பகிரும் தகவல்களை Group'ல் இல்லாதவர்கள் கூட பார்க்கலாம். அதே போல் "Public Groups"'ல் தேவை  இல்லாமல் கமென்ட் செய்யாமல் இருப்பது நல்லது. அதுவும் நமக்கு safety  கிடையாது. 

இப்போது WhatsApp Status'ல் எப்படி பாதுகாப்பாக பகிரலாம் என்று பார்ப்போம். நம்முடைய கைபேசியில் நிறைய நம்பர்களை சேமித்து இருப்போம்.  Facebook'ஐ காட்டிலும் Whatsapp'ல் தான் Photos, Videos எல்லாம் instant upload செய்கிறோம். அதிலும் இப்போது Saree Challenge, Couple Challenge, Mommy Challenge என்று களைகட்டிக்கொண்டு இருக்கிறது. அதை நமக்கு நெருக்கமானவர்கள் மட்டும் பார்த்தால் போதும் என்று தானே நினைப்போம் மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்ற  அவசியம் இல்லை தானே. மேலும் அது பாதுகாப்பும் இல்லையல்லவா? 

அதை நமக்கு வேண்டியவரிடம் மட்டும் பகிர, Whatsapp Status Window'ல் இருக்கும் Vertical dots (நீளவாக்கில் இருக்கும் மூன்று புள்ளிகள்) கிளிக் செய்தால் Status Privacy என்ற Option வரும், அதை கிளிக் செய்து "Who can see my status update" என்பதில் இருக்கும் "My contacts except" என்ற option'ஐ தேர்ந்தெடுத்தால் அங்கே நாம் யாரெல்லாம் நம்முடைய status பார்க்க வேண்டாம் என நினைக்கிறோமோ அவரைகளை அதில் Add செய்து விடலாம்.

அதிலேயே "Only Share With" என்று ஒரு option இருக்கும், அதை தேர்வு செய்தால் நாம் குறிப்பிட்ட நபர்களுடன் மட்டும் ஒரு status'ஐ ஷேர் செய்ய வேண்டும் என நினைத்தால் அவர்களின் பெயர்களை அதில் add செய்து கொள்ளலாம். 

பிறகென்ன மகிழ்ச்சியாக status'ஐ நண்பர்களோடும் குடும்பத்தினரோடும் பகிர்ந்து கொள்ளலாம் தானே?

  


Tuesday, April 7, 2020

அடுத்தது என்ன?!!

அடுக்களையில் வேலையெல்லாம் முடித்து, முகத்தைஅலம்பிவிட்டு  துடைக்காமல் அப்படியே பால்கனியில், இதமாய் முகத்தில் அறைந்த காற்றை ரசித்தபடி அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தேன். காலை எட்டு மணிக்கு ஆரம்பித்து டிபன், மதியஉணவு, மாலை வேளைக்கும்  சேர்த்து ஒரு சுண்டலோ அல்லது சிம்பிளான ஒரு பதார்த்தமோ  செய்துமுடித்து, அடுக்களையைஒதுக்கி, வீட்டை சுத்தம்செய்து என வரிசையாக ஒவ்வொன்றாக முடிக்கும்போது  பனிரெண்டு ஆகிவிடுகிறது, சாதத்தை குக்கரில் ஏற்றிவிட்டு அப்படியே மகனுடன் எதாவது வார்த்தைவிளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டே சிறிது நேரம் ஊஞ்சலில் உட்கார்ந்தால் மணி  ஒன்று என காட்டுகிறது. சாப்பிட்டு, ஒதுக்கி மதியம் ஒன்றரை மணிநேரம் மகனுடன் சேர்ந்து படம்வரைந்து, சிறிது விளையாடி, அட, மணி நான்கரை, மாலை ஸ்நாக் கொடுத்துவிட்டு மறுபடி ஏழரை வரை போர்டுகேம். அதன்பிறகு டின்னர். இதுக்குமேல் என்ன "அடுத்தது  என்ன" என்று யோசிப்பது. கொஞ்சநாளைக்கு 'என்னுடைய வேலைகளை' செய்யாமல் இருந்தால் தவறில்லை என்று தேற்றிக்கொண்டு பாரதிபாஸ்கரின் "நீ நதிபோல ஓடிக்கொண்டிரு" புத்தகத்தை கையிலெடுத்தேன். 

Monday, March 2, 2020

நல்லதோர் துவக்கம்!!

 "சார், இன்னும் ஒரு பத்துநிமிஷம் காத்திருக்கலாமா?, இன்னொரு ஆதரவாளர்(ஸ்பான்சர்) வந்துகிட்டே இருக்கார். வர்றவழில அவரோட கார் பஞ்சர் ஆகிட்டதால கொஞ்சம் லேட்டாகிருச்சு, சிரமத்துக்கு மன்னிக்கனும்னு உங்ககிட்ட சொல்லசொன்னார். அவரும் இந்த வருடம் நம்ம ஆஸ்ரமத்துல இருக்கற பிள்ளைகளுக்கு இலவசமா வகுப்புகள் எடுக்கறதுக்கு உதவி செய்யறதா சொல்லியிருக்கார் " என்று அந்த ஆதரவற்றோர் இல்லத்தின் செயலாளர் சொல்ல "பரவால்ல, வந்ததும் விழாவை ஆரம்பிச்சிக்கலாம்" என்றார் கமிட்டியின் புதிய உறுப்பினரான   கோவர்தன். காரின் சத்தம் கேட்க, வாயிலை நோக்கிச்சென்றவர்கள் அழைத்து வந்தது, மனக்கசப்பினால்  நான்கு ஆண்டுகளாக பேசாமல் இருக்கும் தம்பி கிரிவர்தனை. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து முகங்கள் கறுக்க நின்ற தருவாயில் செயலாளர் இருவரையும் பரஸ்பர அறிமுகம் செய்துவைக்க, கிரிதரன் "அண்ணா, நீ நான் என்பதை மறந்து நாம் இருவரும் கூட்டாக இந்த குழந்தைகளுக்காக ஒரு அழகான உலகத்தை உருவாக்குவோமா?" என கேட்க, வேற்றுமை மறந்து "கண்டிப்பாக கிரிதரா" என்றார் கோவர்தன். 

Thursday, February 27, 2020

புளிப்பு மிட்டாய்!!

 "ஏய்யா.. ராசா.., கடைத்தெருவுக்கு போகும் போது கொஞ்சம் புளிப்பு மிட்டாய் வாங்கிட்டுவாய்யா" படித்துக்கொண்டிருந்த ராகவனிடம் பாட்டி கேட்டாள்.

"அட போ கெழவி, உனக்கு வேற வேலையே இல்லையா? எப்ப பாரு இதை வாங்கிட்டு வா அத வாங்கிட்டு வான்னு" அலுத்துக்கொண்ட பேரனின் தாடையை பரிவாக தடவியபடியே "எந்தங்கம்ல.. கொஞ்சம் வாங்கிட்டு வந்து தாய்யா. சுருக்கு பைல இருக்கது காலியா போச்சு, அசதியா இருக்கும் போது துளியூண்டு நாக்குல வச்சு ஒனச்சுக்கிட்டா கொஞ்சம் தெம்பாருக்கும்" என்றார்.

"சரி சரி காலேஜ்ல இருந்து வரும் போது வாங்கிட்டு வரேன். தொண தொணங்காம இப்ப என்ன படிக்க விடு" என்று சிடு சிடுத்தான் ராகவன்.

" உஸ்ஸ்.. உஸ்ஸ்.. என்று தன் பொக்கை வாயிலிருந்து பெருமூச்செறிந்தபடி சுவற்றை பிடித்தபடி மெதுவாக நடந்தாள் எழுபத்தெட்டு வயது மிக்க லெச்சுமி பாட்டி.

ராகவன் லெச்சுமி பாட்டியின் மகள் வழிப்பேரன். லெச்சுமி பாட்டியின் கணவர் அவரது இருபத்தைந்தாவது வயதிலேயே இறந்து விட, பெண் குழந்தையை இவள் எப்படி தனியாக வளர்க்க போகிறாளோ என்று போவோர் வருவோர் எல்லோரும் பேசியது அவளை யோசிக்க வைத்தது. முடங்கிக்கொண்டிருந்தால் வாழ்க்கையை ஓட்ட முடியாது, பெண் பிள்ளையை கரை சேர்க்க முடியாது என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வீட்டில் அங்கும் இங்குமாக இருந்த சொற்ப பணத்தில் சிறிதாக ஒரு தொழிலை தொடங்கலாம் என்று முடிவு செய்தாள்.

எவ்வளவு தான் யோசித்தாலும் தன்னால் என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு அவளால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை. "இந்த சமயக்கட்டை தாண்டி ஏதாவது கத்துக்கொண்டிருந்திருக்கலாமோ?" என்று நொந்து கொண்ட போது தான், இதையே தொழிலாக செய்தால் என்ன என்று தோன்றியது. அளவாக சாமான் செட்டுகளை வாங்கி காலை, மதியம் மற்றும் மாலை  என மூன்று வேளையும் உணவு பதார்த்தங்களும், பலகாரங்களும் சிக்கனமாக அதே சமயம் சுத்தமாகவும் செய்தாள்.

அன்றைய நாட்களில் சூரியன் மறையும் நேரத்திற்குள் அவரவர் வீடுகளுக்குள் முடங்கி விடுவர், ஆதலால் இரவு வேளைகளில் அடுத்த நாளைக்கு வேண்டியதை எல்லாம் சரி பார்த்து வைப்பது, வீட்டில் இருக்கும் வேலைகளை செய்வது என்று சக்கரம் கட்டிக்கொண்டு சுழலுவாள். குருவி சேர்ப்பது போல சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தில் மகளுக்கு ஜாம் ஜாம் என்று திருமணமும் செய்து வைத்தாள்.

எழுபத்தைந்து வயது வரையிலும் கூட தளராமல் சமையல் தொழிலை செய்து கொண்டிருந்தவளை அவளது மகளும் மருமகனும் தான் வற்புறுத்தி அவர்களுடன் வந்து தங்குமாறு செய்தனர். வேலைகளை செய்து கொண்டிருந்தவரை வைராக்கியமாக திடமாக இருந்த மனமும் உடலும், சும்மா இருக்க ஆரம்பித்தவுடன் வயதுக்கான முதிர்ச்சியையும் ஆட்டத்தையும் காட்டத்துவங்கின. இருந்தாலும் அவரது துணிகளை அவரே துவைத்து, உலர்த்துவது, மடித்து வைப்பது, சாப்பிட்ட தட்டை தொட்டியில் எடுத்துச்சென்று கழுவி வைப்பது என்று அவரது வேலைகளை அவரே செய்து கொள்வார்.

எப்போதும் ஆரஞ்ஜு நிற புளிப்பு மிட்டாய்களை, கொஞ்சம் கல்லை வைத்து சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு சிறிய கவரில் சுற்றி சுருக்கு பையில் வைத்திருப்பார். அசதியாக தோணும் நேரங்களில், அதில் ஒரு சிறிய துண்டை எடுத்து வாயில் ஒதுக்கிக்கொள்வார். ராகவன் சிறு பிள்ளையாக இருக்கும் போது அவனை பக்கத்தில் அமர்த்திக்கொண்டு கதைகள் சொல்லிக்கொண்டே இந்த உடைத்த புளிப்பு மிட்டாய் துண்டும் தருவார். ராகவனும் அந்த மிட்டாய்க்காகவே லெச்சுமி பாட்டியிடம் ஓடுவான். இன்று பருவ வயதின் தாக்கத்தில் கெழவி என்று சொன்னாலும், சலித்துக்கொண்டாலும் கேட்பதை அவ்வப்போது வாங்கிக்கொடுக்கத்தான் செய்வான்.       

படிப்பு முடித்து ராகவன் வேலை நிமித்தமாக பட்டிணத்தில் சில வருடங்கள் தங்கி இருந்தான். அப்படியே உயர் படிப்பு, வெளிநாட்டு வேலை  என்று வருடங்கள் உருண்டோடின,  திருமணமாகி மனைவியையும் வெளிநாட்டிற்கு கூட்டிச்சென்றவன், அவளது பேறுகால சமயத்தில் வந்தவன் தான்; அதன் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து இப்போது தான் மனைவியையும், இரண்டு வயது மகன் ரிஷியையும் அழைத்து வந்திருந்தான். நல்ல வெய்யில் காலமாதலால் வெக்கை தாளாமல் ரிஷி சுருண்டு சுருண்டு படுத்திருந்தான். எப்பவும் துறு துறுவென்றிருக்கும் மகன் ஏன் இப்படி இருக்கிறான், என்னவோ ஏதோ என்று ராகவன் பதை பதைக்க "ஒண்ணுமில்லியா... நீர் சத்து கொறஞ்சு போயிருக்கும், எஞ்சாமிக்கு இந்த புளிப்பு மிட்டாய கொஞ்சம் குடு, தெம்பாகிருவான்" என்று சுருக்குப்பையிலிருந்து அந்த நொறுக்கிய மிட்டாயை எடுத்து நீட்ட, ராகவன் மறு பேச்சின்றி அதை வாங்கி  ரிஷியின் நாவில் வைத்தான். "சாக்கெட் சூப்பதா இதுக்கு கிராம்மா (Grandma)" என்று மழலை பொங்க லெச்சுமி பாட்டியை கட்டிக்கொள்ள, ராகவன் "பாட்டி, நீ கூட இருந்தா டாக்டரே வேணாம் போ" என்று சொல்லி அவளது தாடையை தடவி முத்தமிட்டான்.         

Wednesday, January 22, 2020

விண்டோ ஷாப்பிங்!!

 கடிகாரக்குயில்  பத்து முறை குக்கூ என கூவி அதன் வீட்டிற்குள் சென்று ஒளிந்துகொள்ள "அய்யோ மணியாச்சு, ஷாப்பிங் பண்ண எல்லாரும் வந்துருவாங்க, உங்களுக்கு காபி ஃபிளாஸ்கில் போட்டுவச்சிருக்கேன், அப்புறம் எடுத்துக்கோங்க, நா போயிட்டு வந்துடறேன்" என்று சாவகாசமாக அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்த கணவரிடம் சொல்லிவிட்டு விறுவிறுவென தோழியின் வீடுநோக்கி நடக்க ஆரம்பித்தாள் மங்களம். "ஓ எல்லாரும் வந்தாச்சா? எனக்கு வேலை முடிய கொஞ்சம் நேரமாச்சு. ஆரம்பிக்கலாமா?" என்றபடி, வாட்ஸ்ஆப்பில் ஆன்லைன் பொட்டிக் உரிமையாளர்கள் அவரவர் ஸ்டேட்டஸ்'ல்  வைத்திருந்த, சேலை மற்றும் ஆபரணங்களின் படங்களையும், வீடியோக்களையும் பார்த்து "இது  கலர் நல்லாயிருக்குல்ல, இந்த டிசைன் எப்படியிருக்கு" என்று அவரவர் மொபைலில் விண்டோ ஷாப்பிங் செய்ய ஆரம்பித்தார்கள், அறுபதுகளின் ஆரம்பத்தில் இருந்த அந்த நால்வரும்.

Learning Beyond Textbooks - Life Skills - Child Growth

#Learning_Beyond_Textbooks #Life_Skills A home is the first environment where children can playfully learn a plenty. Traditional textbook le...