அலுவலக பணி நிமித்தமாக ஷர்மி என்ற ஷர்மிளா மடிக்கணினியின் விசைப்பலகையை தட்டிக்கொண்டிருக்க, "ஏய் ஷர்மி, ரொம்ப போர் அடிக்குது டி" என்றபடி வந்து டீவிக்கு உயிர் கொடுத்தான் ஷங்கி என்ற ஷங்கர். "டேய் கொஞ்ச நேரம் அத ஆஃப் பண்ணுடா, வேல நெறய இருக்கு. சனிக்கெழம கூட எங்க ஆபீஸ்ல படுத்தறாங்க" என்றபடி ரிமோட்டில் ஆஃப் பட்டனை தட்டிவிட்டு வேலையை தொடர்ந்தாள். அவர்களுக்கு திருமணம் ஆகி ஒன்றரை வருடம் தான் ஆகியிருந்தது. ஷர்மி ஒரு ஐடி கம்பெனியிலும், ஷங்கி கார் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையிலும் வேலை பார்க்கிறார்கள். அவர்களது ஒற்றை படுக்கையறை கொண்ட மிக சிறிய வீடு. ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து டேபிள்மேட்டில் வசமில்லாமல் உட்கார்ந்து வேலைபார்த்து, கழுத்து வலிக்கு ஐயோடெக்ஸ்'ஐ தடவிக்கொண்டு வேலையை செய்து கொண்டிருந்தாள்.
"ஏய் பாதாம் அல்வா சாப்பிடணும் போல இருக்கு டி, ச்ச இந்த ஸ்விக்கி இல்லாம அவசர ஆத்திரத்துக்கு ஒன்னும் சாப்பிட முடிய மாட்டேங்குது" என்றான் ஓர பார்வை பார்த்தபடி. "நானெல்லா இப்ப செஞ்சு தருவேன்னு கனவுல கூட நினைக்காத" என்றாள் அந்த பார்வையின் அர்த்தம் புரிந்தவளாக. "உன்ன யாரு இப்ப கேட்டா, இன்னைக்கு ஐயா உனக்கு செஞ்சு தரேன் பாரு. நீ சாப்பிட்டுக்கிட்டே கூலா உன் வேலைய முடிச்சிரலாம்".
"உனக்கு பாதாம் அல்வா செய்ய தெரியுமா?" சந்தேகத்துடன் அவள் கேட்ட தோனிக்கு "ஹே ஹே என்ன பத்தி என்ன நெனச்ச, நா கிச்சனுக்குள்ள புகுந்தேன் நளபாகம் தான். "வெயிட் எ நிமிட் ஃபார் ஃபைவ் மினிட்ஸ் (wait a nimit for 5 minites), ரெசிபி எடுத்துட்டு வேலைய எப்படி ஜரூரா ஆரம்பிக்கிறேன்னு பாரு" என்றபடி "ஹே கூகிள்" என்று கூகிளை துணைக்கு அழைத்தான். "அப்படியா இரு, தோ நானும் ஒரு அஞ்சு நிமிஷத்துல ஒரு வேலைய முடிச்சிட்டு நீ அல்வா செய்யற அழக கண்குளிர ரசிக்க வரேன்" என்றாள் நக்கலாக.
"புருஷன ரொம்ப நக்கலடிக்கறே மேன், ஓவர் கலாய் ஒடம்புக்கு ஆகாது" என்று எம் ஆர் ராதா குரலில், ஹிந்தி பட ஹீரோயின் தமிழ் பேசும் தோனியில் மிமிக்கிரி செய்தான். "ஆ ஆ பேச்ச கொர பேச்ச கொர, போயி வேலைய ஆரம்பி" என்று ஷர்மியும் திருப்பி கொடுக்க அங்கே ஷங்கர் ஏப்ரானை (Apron) எடுத்து கழுத்தில் கட்டிக்கொண்டிருந்தான். "டேய் இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரில?" என்றபடி கிச்சனுக்குள் நுழைந்தாள் ஷர்மி. "எதை செஞ்சாலும் பிளான் பண்ணி டெக்னீக்கா செய்யணும் மை டியர்" என்று சொல்லிக்கொண்டே கைபேசியில் செய்முறை விளக்கத்தை திரையில் ஓடவிட்டு அதை வாகாக பார்க்கும்படி அங்கிருந்த உயரமான டப்பாவின் மேல் நிற்க வைத்தான்.
"ம்ம் ஆரம்பிக்கலாமா" என்று ரெண்டு கைகளையும் பர பரவென தேய்த்தபடி கைபேசியை பார்த்தவன் "அரை கப் பாதாம் எடுக்கணும்.. ஷர்மி பாதாம் எங்கருக்கு, ஒரு அரை கப் எடும்மா" என்றான். "டேய்ய்" என்றாள் ஷர்மி, "இல்லடா, பொண்டாட்டி கையால பிள்ளையார் சுழி போடனும்ல, அதுக்கு தான் டா" என்றான். போனால் போகிறது என்று பாதாமை அளந்து எடுத்துக் கொடுத்தாள். "ஐயோ இதென்ன ராத்திரி முழுக்க ஊற வைக்கணும்னு போட்டுருக்கு.. ஆ நல்ல வேளை கொதிக்கற தண்ணில கொஞ்ச நேரம் போட்டு தோலை உரிக்கலாம்னும் போட்ருக்கு. அப்படியே கொஞ்சம் தண்ணிய கொதிக்க வச்சு தோலை மட்டும் உரிச்சு குடுத்துரு டார்லிங்" என்று வழிந்தான். அவள் முறைக்க "டேய் கொதிக்கற தண்ணில கைய கிய்ய சுட்டுக்கிட்டேன்னா அப்புறம் எப்படி உனக்கு அல்வா செஞ்சு தர்றது? தவிர கைல நகம் வேற இல்ல, தோலை எப்படி உரிக்கறது, கொஞ்சம் ஹெல்ப் பண்ணும்மா ப்ளீஸ்" என்றான் கொஞ்சலாக.
அவனை முறைத்தபடியே ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விட்டு, அதில் பாதாமை போட்டு அதன் தோலை உரித்து கொடுத்தாள். "அப்படி தான், வெரி குட். அதை அப்படியே கால் கப் பால் சேர்த்து மைய்ய அரைச்சு குடுத்துரு பாப்போம்" என்றான். ஷர்மி கடுப்புடன் அங்கிருந்த கரண்டியை கையில் எடுக்க, "ஹே ஹே எந்த பதத்துல அரைக்கணும்னு எல்லாம் உனக்கு தான்பா நல்லா தெரியும், அப்புறம் அல்வா கொர கொரன்னு பால்கோவா மாதிரி ஆகிரும் பாத்துக்கோ" என்றான். "நீ பேசற வசனத்தை கேக்கறதுக்கு இந்த மிக்ஸி சத்தமே பரவால்ல" என்றபடி பாலை சேர்த்து பாதாமை அரைத்து எடுத்தாள். "சூப்பர் டி பொண்டாட்டி, அப்படியே ஒரு வாணலில் கால் கப் தண்ணிய சூடு பண்ணிட்டு அடுப்பை அணைச்சிட்டு அரை கப் சக்கரையை அதுல கரைச்சிடு பாக்கலாம்". அவள் முறைப்பதற்குள் முந்திக்கொண்டு "சக்கர பதம் போச்சுன்னா அப்புறம் பாதாம் சவ்வு மிட்டாய் தான் கிடைக்கும், அதான் ஹெல்ப் கேக்கறேன்" என்றான் இரண்டு கைகள் உயர்த்தியபடி, தயவுசெய்து உதவி செய் என்பதற்கான body language அது.
"உன்ன.... " என்று நற நறவென பல்லை கடித்தபடி சக்கரையை கரைத்தாள். "இப்ப என்ன?" என்றாள் முறைத்தபடி "அப்படி கேளுடி என் தங்க கட்டி, அந்த அரைச்ச பாதாமையும் இதோ இந்த செய்முறைல சொல்லி இருக்கற மத்த பொருட்களையும் சேர்த்து போட்டு நல்லா கெளரினா பாதாம் அல்வா ரெடி, அவ்ளோ தான்" என்றான் கண்ணடித்தபடி. அவன் கழுத்தை நெறிப்பதை போல ஜாடை காட்டிவிட்டு தேவையான சாமானை எடுத்து அல்வாவை கிண்ட ஆரம்பித்தாள். "நெய் இன்னும் கொஞ்சம் ஊத்து, நெறையா சேர்த்தாதான் அல்வா நல்லா தொண்டைக்குள்ள வழுக்கிகிட்டு உள்ள இறங்கும்" என்றான் அடுப்பு மேடையில் ஏறி அமர்ந்தபடி. "வெக்கமே இல்லையா உனக்கு, இப்படி மொத்த வேலையும் என்ன வாங்கற" என்று பொய்க் கோபம் காட்டியபடி மீதி வேலையையும் ஒருவழியாக செய்து முடித்தாள்.
"வாவ் வாவ் என்ன ஒரு வாசனை" என்றபடி ஒரு ஸ்பூனில் சூடு பறக்கும் அல்வாவை எடுத்து, அதை அளவாக ஊதி, அலேக்காக வாயில் வைத்து, "ம்ம்ம் என்னா ருசி என்னா ருசி. நா பண்ணின அல்வாவை டேஸ்ட் பண்றியா டார்லிங்" என்று அவன் கேட்குமுன் பூரிக்கட்டை பறந்து வந்தது என்று சொல்ல வேண்டுமா என்ன.
No comments:
Post a Comment