சிறிது நேரம் டீவி பார்க்கலாம் என்று அஞ்சனா சுவிட்ச்சை ஆன் செய்த நொடியில் கரண்ட் கட் ஆனது. இரண்டு நாட்களுக்கு முன் தான் யுபிஎஸ் சாதனமும் பழுதாகியிருக்க கரண்ட் வந்தால் தான் ஆச்சு, வேற என்ன செய்யலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த போது, "ஆ சாமிக்கண்ணு, நா வடசேரி பட்டறைல இருந்து பேசறேன். கரண்ட் வர நேரமாகுமா?" என்று ராகவன் லைன் மேன்'க்கு போன் பண்ணி கேட்டுக்கொண்டிருந்தான். சிறிது வினாடிகளில் "அஞ்சு, கரண்ட் வர சாயங்காலமாகுமாம். நீ வேணும்னா ஆபீஸ் ரூம்ல வந்து உட்கார்ந்துக்கறியா? இங்க யுபிஎஸ் வேல செய்யலையே. ஒர்க் ஷாப்ல இப்ப ஜெனெரேட்டர் போட்ருவோம், அங்க ஃபேன் ஓடும்" என்றபடி ராகவன் வீட்டிற்குள் நுழைந்தான். ராகவனுக்கு அஞ்சனாவிற்கும் திருமணம் ஆகி முழுதாக இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. திடீரென ஒரு இரங்கல் செய்தி வர ராகவனின் பெற்றோர் முந்தைய இரவு தான் கிளம்பி சொந்த ஊருக்கு செல்ல நேர்ந்தது. சாயங்காலம் தான் தகவல் வந்தது, அதனால் ராகவன் இரவு பேருந்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்தான்.
அஞ்சனாவிற்கு பெரிதாக இன்னும் சமைக்க தெரியாது, தவிர இன்னும் கிச்சனில் எது எங்கிருக்கிறது என்ற பழக்கமும் வரவில்லை என்பதால் ராகவனின் அம்மா கிடைத்த கொஞ்ச நேரத்தில் அஞ்சனாவை சிறிது காய்கள் நறுக்கி தரும்படி கேட்டு ஒரு சாம்பார், ரசம், தக்காளி குழம்பு மற்றும் முட்டைகோஸ் பொரியல் வைத்து, அதை குளிர்சாதன பெட்டியில் வைத்து விட்டாள். "ஃபிரிட்ஜ்ஜில் தோசை மாவு இருக்கும்மா, இட்லி தோசை ரெண்டுமே வரும், எது வேணுமோ செஞ்சு சாப்பிட்டுக்கோங்க. மாமா ஒர்க் ஷாப்ல வேல நெறய இருக்குனு சொல்லிட்டு இருந்தார், ராகவனுக்கு நைட் லேட்டா கூட ஆகும் போல, அதுனால இட்லி தோசைனா செரிமான பிரச்சனை ஏதும் வராது. சாம்பார் அல்லது குழம்பு விருப்பம் போல எடுத்துக்கோங்க. ஒரு நாளைக்கு பொரியல் இருக்கு இன்னோரு நாளைக்கு அப்பளம் ஏதாவது வறுத்துக்கோங்க" என்று சின்ன சின்ன விஷயங்கள் முதற்கொண்டு சொல்லிவிட்டு சென்றிருந்ததால் அஞ்சனாவிற்கு சிரமம் இல்லாமல் இருந்தது.
மாலையில் தான் மின் இணைப்பு வரும் என்ற தகவலை சொல்ல வந்தவனின் கண்கள் கோவைப்பழம் போல சிவந்திருப்பதை பார்த்து "அய்யயோ என்னங்க கண்ணு ரெண்டும் இப்படி செவந்திருக்கு" என்று பதறினாள். "அது ஒன்னும் இல்ல, வெல்டிங் பண்றத பக்கத்துல இருந்து பாத்துட்டு இருந்தேன்ல, அதான்" என்றான். "கொஞ்சம் தள்ளி நின்னு பாக்க முடியாதா?" என்ற அவள் கேள்விக்கு "இல்ல, பக்கத்துல இருந்தா தான் சரியா பண்றங்களானு நுணுக்கமா பாக்க முடியும். கண்ணுக்கு சொட்டு மருந்து போட்டுக்கிட்டா சரியாகிரும், இது எப்பவும் இருக்கறது தான். ஒன்னும் பயப்படாத. சரி நா ஒர்க் ஷாப்க்கு போறேன்" என்கையில் "வேலை ஆட்களுக்கு டீ போடணுமா? அத்தை தினமும் போடுவாங்களே?" என கேட்டாள். "பன்னெண்டு பேருக்கு போட்ருவியா? இல்லேனா பரவால்ல, பையன அனுப்பி டீ கடைல வாங்கிட்டு வர சொல்லிடறேன்" என்றான். "இல்ல, அத்தை போடும் போது கவனிச்சிருக்கேன், போட்ருவேன்" என்றாள் புன்னகைத்தபடியே. "ஓகே ஊட்டி ஆப்பிள், ரெடி ஆனதும் பெல் அடி, நான் வந்து எடுத்துட்டு போய்க்கறேன்" என்று அவள் கன்னங்களை செல்லமாக தட்டியபடி சொல்லி சென்றான்.
அஞ்சனா சென்னையில் பிறந்து வளர்ந்த பெண், நல்ல நிறம், துரு துரு விழிகள், கூர்மையான நாசி, செவ்விதழ்கள், ஆப்பிள் போன்ற கன்னங்கள் அவள் சிரிக்கும் போதெல்லாம் குழிவிழுந்து பார்ப்பவர்களுக்கு வலை விரிக்கும். அதிர்ந்து பேசாதவள். "நீ ஊட்டி ஆப்பிள் மாதிரி இருக்க, உனக்கு நிஜமாவே என்ன பிடிச்சிருக்கா என்ன?" என்று அடிக்கடி ராகவன் அவளை கிண்டல் செய்வான். டீ போட்டு முடித்ததும் அதை தம்ளர்களில் ஊற்றி, ஒரு பெரிய தட்டில் வைத்து, அந்த பிங்க் வண்ண கிச்சன் சுவற்றில் இருந்த ஒரு கருப்பு நிற பொத்தானை அமுக்கினாள். ராகவனோ அவனது அப்பாவோ ஒர்க் ஷாப்பில் இருக்கும் போது சில நேரங்களில் லேத் அல்லது சானை பிடிக்கும் சத்தத்தில் வீட்டில் இருப்பவர்கள் கூப்பிட்டால் கேட்காது என்பதால் அவனது அப்பா அந்த காலிங் பெல்லை செட் பண்ணியிருந்தார்.
டீ தம்ளர்களை எடுக்க வந்தவனிடம் "காலைல அஞ்சு மணிக்கெல்லாம் வேலைய ஆரம்பிச்சிட்டீங்களே, இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு மோர் கொடுக்கவா? களைப்பு தெரியாம இருக்கும்ல" என்றாள். "இப்ப மணி என்ன பதினொன்னா, ஒரு மணிக்கு சாப்பிட அனுப்பிறலாம், ஒரு மூணு மணி போல மோர் குடுத்துக்கலாம். தயிர் இருக்கா?" என்றான். "இருக்கு, நேத்து நைட் சேர்த்து தான் உரை ஊத்தினேன்" என்றவள் "மொபைலை ஆபீஸ்ல சார்ஜ் போட்டுட்டு கொஞ்ச நேரம் மாடிக்கு போக போறேன், வெயில் இல்லாம கிளைமேட் நல்லாருக்கு, தேடாதீங்க" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது வாசலில் அழைப்பு மணி அடிக்க யார் என்று பார்க்க வெராண்டாவின் மரக்கதவை திறந்தாள்.
வாசலில் தண்ணீர் குடங்களுடன் சில பெண்கள் நிற்க "தண்ணி குழாயை தொறந்து விடுமா" என்றாள் ஒருத்தி. "எத்தனை குடம் இருக்கு? கரண்ட் போயிருச்சு, சாயந்திரம் தான் வருமாம்" என்றாள் அஞ்சனா. "ஆறு கொடம் தா இருக்குதுமா" என்றாள் பின்னாடி நின்றவள். அஞ்சனா சென்று கிச்சனில் இருந்த ஒரு குழாயை திருக வீட்டிற்கு வெளியில் இருந்த குழாயில் விழும் தண்ணீரை குடத்தில் பிடிக்கும் சத்தம் கேட்டது. அவரகளது வீட்டை தாண்டி ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு வருடம் முழுவதும் உண்டு, அவர்களுக்கு பயன்படும் வகையில் ராகவனின் அப்பா வீட்டிற்கு வெளியில் தண்ணீர் குழாய் வைத்திருந்தார். காலையிலும் மாலையிலும் தண்ணீர் பிடித்துக்கொள்ளலாம் என்று அந்த நேரம் மட்டும் குழாயை திறந்தே வைத்திருப்பார் அவனது அம்மா. நடுவில் வருபவர்கள் ஒன்றிரண்டு பேர் அழைப்பு மணி அடித்து, கேட்டு, தண்ணீரை பிடித்து செல்வர்.
கொளுத்தும் வெயில் இருக்கும் கோடை காலத்தில் கூட இவர்களது கிணறு வற்றாது, அவர்களது குழாயிலும் எப்போதும் தண்ணீர் திறந்து விடப்படும் என்று ராகவன் சொல்லியிருந்தான். மோட்டார் போடும் சிரமம் இருக்கக்கூடாது என்று அவனது அப்பா தானியங்கி கட்டுப்படுத்தி (Automatic Motor controller ) பல வருடங்களுக்கு முன்னரே போட்டிருந்தார். தண்ணீர் தொட்டியில் இருக்கும் தண்ணீர் ஓரளவிற்கு கீழ் வரும் போதே மோட்டார் ஆன் ஆகிவிடும், அதே போல தங்க நிரம்பும் அளவிற்கு தண்ணீர் வரும் போது சென்சார் மூலமாக மோட்டார் அதுவே அணைக்கப்படும். இதனால் தண்ணீர் வீணாகாது, கரண்ட் கட் ஆகும்போது டேங்கில் தண்ணீர் இல்லை என்ற நிலை வராது, மோட்டார் போட நியாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கவலை கிடையாது என்பதெல்லாம் தெரிந்து பதினைந்து வருடங்களுக்கு முன்னரே எங்கப்பா அதை செய்தாராம் என்று ராகவன் பெருமையாக சொல்வான். உண்மை தான் அங்கிருக்கும் பல விஷயங்களை பற்றி அவளது மாமாவும் சிலாகித்து பேசியிருக்கிறார்.
தண்ணீர் பிடித்து முடித்ததும் அந்த பெண்கள் மறுபடி பெல் அடித்து, "போதும்மா, கொழாய அடைச்சிரு" என்று சொல்ல, அஞ்சனா அப்படியே செய்துவிட்டு கிணற்றடியில் இருந்த மாடிப்படியில் ஏறி மாடிக்கு சென்றாள். அங்கே குரங்குகள் அதிகம் என்பதால் மாடியில் சுற்றி கம்பி வலை போட்டிருந்தார்கள். மாடியில் ஷெட் போட்டு அதில் ஒரு பெரிய ஊஞ்சலும் இருக்கும். சிலு சிலுவென அடிக்கும் காற்றில் அந்த ஊஞ்சலில் போய் அமர்ந்தால் நேரம் போவதே தெரியாது.
திருமண பேச்சை எடுத்த உடன் அஞ்சனாவிற்கு வந்த முதல் வரன் ராகவனுடையது தான். அங்கே இங்கே விசாரித்ததில் திருப்தியாக இருந்ததால், பையன் வீட்டில் நேரில் சென்று பார்த்து பேசி ஒருமுறை விசாரித்து விட்டு அப்புறம் அடுத்து தொடரலாம் என்று அஞ்சனாவின் அப்பா சொல்ல, "நான் போய் பேசவா? பையன் எப்படி இருக்கான்னு நா ஒருக்க பாக்கணும்" என்று அஞ்சனாவின் அண்ணன் சொல்ல, "இதெல்லாம் பெரியவங்க தாண்டா பண்ணனும். பெரியவங்க போனா அவங்க குடும்பம், சொந்தகாரங்க, தொழில்னு பல விஷயத்தை பத்தி பேசுவோம். பேசும் போது வார்த்தைகளுக்கு நடுல குறிப்பெடுத்துக்கணும். அதுக்கு உன்னோட மாமா தான் சரியான ஆளு. நீ மாப்பிளையை பாக்கணும்னா அது தனியா ஒரு நாள் போயிக்கலாம்" என்றார். அதே போல அவளது மாமா நேரில் பார்த்து பேசிவிட்டு வந்து பையனின் அப்பாவை பற்றி புகழ்ந்து தள்ளி விட்டார்.
"அந்த காலத்து ஆளுன்னாலும் விஷயம் எல்லாம் அப் டு டேட்'ஆ இருக்கார். சென்சார் லைட் அதாவது இருட்டானால் அதுவே ஆன் ஆகி வெளிச்சம் வந்ததும் அதுவே ஆஃப் ஆகிவிடும், அப்புறம் ஆள் நடமாட்டம் இருந்தால் லைட் ஆன் ஆகி சிறிது நேரத்திற்கெல்லாம் ஆஃப் ஆகிருமாம், வீட்டு மாடியில் சோலார் (சூரிய ஒளி) தகடு என அமர்க்களமா வச்சிருக்கார். இதெல்லாம் இப்ப வேணும்னா ரொம்ப சாதாரணமான விஷயமா இருக்கலாம். ஆனா அவர் இதையெல்லாம் பதினஞ்சு வருஷததுக்கு முன்னாடியே பண்ணி இருக்காரு. ரொம்ப தன்மையா பேசறாங்க வீட்ல இருக்கவங்களும். ஒர்க் ஷாப்ல எப்பவும் ரோடு போடற மெஷின், தார் மெஷின், அரிசி ஆலை பாய்லர், கிரில் கேட்னு பிசியா ஏதாவது வேலை இருந்துட்டே இருக்கும்னு அவங்க ரோடு முக்குல இருந்த ஒரு பெட்டி கடைல விசாரிச்சதுல தெரிஞ்சுது. என்ன ஒண்ணே ஒன்னு, அவங்க வீட்டுக்கு பக்கத்துல வீடுகள்னு பெருசா எதுவும் இல்ல. கடை கண்ணினு எதுக்கு போகணும்னாலும் ரெண்டு கிலோமீட்டர் போகணும். தொழில் இரும்பு பட்டறைங்கறதால வாழ்க்கை முறைல நெறைய மாறுதல்கள் இருக்கும், அதை நீங்க யோசிச்சுக்கோங்க" என்றார்.
"அஞ்சு, நீ என்னடா சொல்ற?" என்று அவள் அப்பா அவளிடம் கேட்க "நா என்னப்பா சொல்றது. எனக்கு பெருசா எந்த எதிர்பார்ப்பும் இல்ல. எதுவானாலும் நீங்களே முடிவு பண்ணி சொல்லுங்க. ஆனா இந்த பொண்ணு பாக்க வரேன்னு அடிக்கடி காபி டிரே எடுத்துட்டு போய் நிக்க சொன்னா அது தான் எனக்கு கொஞ்சம் சங்கடமா இருக்கும்" என்றாள் "நம்ம வீட்ல அந்த பழக்கம்லா இல்ல, எல்லாம் பேசி ரெண்டு பக்கமும் மத்த விஷயங்கள் எல்லாம் செட் ஆகுது, போட்டோல பாத்து ஒருத்தருக்கு ஒருத்தர் ஓகேனு சொன்னதுக்கப்புறமும் கோவில் இல்ல காபி ஷாப்னு ஏதாது பொது இடத்துல தான் மொதல்ல பாத்துக்குவீங்க. அதுக்கப்புறம் தான் வீட்டுக்கு வருவாங்க, அதுவும் உறுதி பேசறதாயிருந்தா தான். அப்ப கூட நீ காபி டிரே தூக்க வேண்டியதில்லை, போதுமா?" என்றார் சிரித்தபடி. "ஆனா, அந்த ஊரு அவங்க லைப் ஸ்டைல் எல்லாம் உனக்கு பழகிருமா?" என்றார் யோசனையாக. "நா இப்ப சொன்னது தான் பா, எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்ல. சென்னைலயே வாழ்ந்ததால் இங்க இருக்க வாழ்க்கை முறையை பழகிகிட்டேன். ஒரு வேளை உங்களோடது பல ஊர்களுக்கும் மாறக்கூடிய வேலையா இருந்தா அங்கெல்லாம் பழகியிருப்பேன் தானே? அப்ப ஒரு எடத்துல நாம சங்கடப்படாம இருக்கணும்னா அது எந்த ஊருங்கறது இல்ல, நம்ம கூட இருக்கவங்கள பொறுத்து தான? அத மட்டும் நீங்க பாத்துக்கோங்கப்பா" என்ற போது "சபாஷ் அஞ்சுமா, எதிர்பார்ப்புகள் நெறய இருக்கும் போது தான் ஏமாற்றங்களும் வருது. மனச கிளீன் சிலேட்டா வச்சுக்கிட்டா அதுல எதைவேனா நிரப்பிக்கலாம், நீ ரொம்ப தெளிவா இருக்க. அப்புறம் என்ன மச்சான், பையன் வீட்டுல சட்டு புட்டுன்னு பேசி வேலைய ஆரம்பிக்க வேண்டியது தான" என சொல்கையில் அவளுடைய வாழ்வின் அடுத்தகட்டத்திற்கான வேலைகள் வீட்டில் மங்களகரமாக துவங்கின.
"படித்த பெண் வீட்டில் ஏன் சும்மா இருக்கணும், உனக்கு விருப்பம் இருந்தா சொல்லு, இங்க இருக்கற கவர்மெண்ட் ஸ்கூல் பசங்களுக்கு சாயங்காலம் டியூஷன் சொல்லித்தர ஏற்பாடு பண்ணலாம். இல்லேனா அந்த ஸ்கூலுக்கு ஒரு பிரெஞ்சு நாட்டு அம்மா தன்னார்வ சேவை செய்யறாங்க, அவங்ககிட்ட கேட்கலாம். ஸ்கூல் தலைமை ஆசிரியர் கிட்ட கூட கேட்டுப்பாக்கலாம். நம்ம ராகவனுக்கு அவரை தெரியும்" என்று அத்தை போன வாரம் தான் சொல்லியிருந்தார்கள். இவளும் சரி என்றதால் அவனும் பேசிப்பார்ப்பதாக சொல்லியிருந்தான். வீட்டில் இருப்பவர்கள் ஒவ்வொருத்தர் மீது காட்டும் அக்கறையும், ஒவ்வொரு பொருளின் மீது காட்டும் அக்கறையும் கூட அவளை நெகிழவைக்கும். பட்டறையில் கீழே கிடைக்கும் சின்ன சின்ன ஸ்க்ரூ, ஆணி, போல்ட்டு, நட்டு இதையெல்லாம் கூட ஒவ்வொரு நாளும் வேலை முடிந்தவுடன் ஒரு வலம் வந்து அதை எடுத்து பத்திரப்படுத்தி வைப்பது அவர்கள் அந்த தொழிலின் மீது வைத்திருக்கும் பக்தியை காட்டின. அதே போல் ஏதாவது ஒரு பொருள் பழசாகிவிட்டது அல்லது உடைந்து விட்டது என்றால் அப்பாவும் பிள்ளையும் அதை உடனே தூக்கி போட நினைக்க மாட்டார்கள். அதில் இருக்கும் உதிரி பாகங்களை முடிந்தவரை மறுசுழற்சியோ அல்லது உபயோகப்படுத்தவோ தான் பார்ப்பார்கள். அது போல உயிர் பெற்ற பல சாமான்களை வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும் கவனித்திருக்கிறாள்.
எவ்வளவு நேரம் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தாளோ, கீழே சார்ஜில் போட்டிருந்த அவளது கைபேசி அழைக்க படிகளில் இறங்க ஆரம்பித்தாள். அங்கிருந்து பட்டறையின் ஒரு பகுதி நன்றாக தெரியும். கொஞ்சம் வயதில் முதிர்ந்த தொழிலாளி சம்மட்டியால் (இரும்பினால் ஆன கனமான சுத்தியல்) அடித்து ஒரு இரும்பை உடைக்க முயன்றார். அங்கே வந்த ராகவன் அவரிடம் இருந்து அதை வாங்கி தெம்பை எல்லாம் சேர்த்துவைத்து அடிக்க, நான்கைந்து அடிக்கு பிறகு அந்த இரும்பு இரண்டு துண்டாக உடைந்தது. "முதலாளி என்பவன் ஆட்களை விரட்டி வேலை வாங்க தெரிந்தவன் அல்ல, ஆளோடு ஆளாய் இறங்கி வேலை செய்யத் துணிந்தவன்" என எங்கோ படித்தது நினைவில் வந்தது.
இந்த வீட்ல இருக்க ஒவ்வொருத்தரும் மத்தவங்களுக்காகவும் யோசிக்கராங்க, ஒருத்தர் சிரமப்படும் போது தங்களால் முடிஞ்ச வரைக்கும் உதவராங்க. நா அன்னைக்கு அப்பாகிட்ட சொன்னது சரிதான்; சின்ன ஊரோ, நகரமோ, நம்ம கூட இருக்கவங்க பொறுத்து தான் நம்ம வாழ்க்கை என புன்னகைத்துக் கொண்டாள்.
No comments:
Post a Comment