Friday, September 27, 2019

சிறுவன் கற்றுக்கொண்ட நேரம் தவறாமை பாடம்!!! - பாகம் 1

 இந்த கதையை கதைகேட்கலாம் பகுதியில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்.

ஒரு ஊர்ல ஒரு குட்டி பையன் இருந்தான். அவன் பெயர் அர்ஜுன். அர்ஜுன் ரொம்ப நல்ல பையன், எல்லார்கிட்டேயும் ரொம்ப அன்பா இருப்பான். ஆனால் அவனுடைய ஒரு வழக்கம் அவன் பெற்றோருக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது. எதையும் நேரத்திற்கு செய்யாத அவனுடைய குணத்தை எப்படி மாற்றுவது என்றே அவர்களுக்கு தெரியவில்லை.

தினமும் காலையில் அவனை எழுப்பி, பள்ளிக்கு கிளப்புவதற்குள் அவனது அம்மாவிற்கு போதும்போதும் என்று ஆகிவிடும். படுக்கையில் இருந்து எந்திரிக்க, பல் துலக்க, குளிக்க என்று எல்லாவற்றிற்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்வான்.  குளிக்கும் போதும், சாப்பிடும் போதும் தண்ணீரிலும், தட்டிலும் விளையாடிக் கொண்டே இருந்தால் எப்படி பள்ளிக்கு ரெடி ஆவது? தினமும் ஸ்கூல் பஸ் வந்து, டிரைவர் ஹார்ன் அடித்துக்கொண்டே இருப்பார். அடித்துபிடித்து அர்ஜுனை பஸ்சில் ஏற்றிவிடுவாள் அவனது அம்மா.

இதுபற்றி ஒரு நாள் அவனது அப்பாவிடம் புலம்பிக்கொண்டிருந்த போது, நீ ஏன் இதைபற்றி  அவனுடைய டீச்சரிடமே பேசக்கூடாது? அவர்கள் ஏதாவது யோசனை சொல்லக்கூடும் என்று அவர் சொல்ல, அது நல்ல யோசனையாக அவனது அம்மாவிற்கு தோன்றியது. மறுநாள் அர்ஜூனுடன் அவனது டீச்சரை சந்திக்க சென்று, அவரிடம் அர்ஜுனை பற்றிய கவலைகளை சொல்ல, டீச்சரோ, எனக்கும் அதே கவலை தாங்க, கிளாஸ்லயும் நோட்ஸ் முடிக்க மாட்டேங்கறான், எல்லாத்தயும் ரொம்ப ஸ்லொவா செய்யறான். எவ்வளவு சொன்னாலும் அவனுக்கு புரியவே மாட்டேங்குது என்று அவரும் குறைபட்டுக்கொண்டார்.

அப்போது டீச்சர், "எனக்கு ஒரு யோசனை தோணுது" என்றபடி அர்ஜுன் அம்மாவின் காதை கடித்தார். அதை கேட்டதும் அவன் அம்மாவின் முகம் மலர்ந்தது. இது கண்டிப்பா ஒர்கவுட் ஆகிறும்னு நினைக்கறேன் என்றபடி டீச்சருக்கு நன்றி சொல்லி வீட்டிற்கு கிளம்பி சென்றார்.

மறுநாள் அர்ஜுனுக்கு பீல்ட் ட்ரிப். அன்று மட்டும் எப்போதுமே அர்ஜுன் வேக வேகமாக கிளம்பி விடுவான். அன்று காலை அவனை அம்மா எழுப்பிய உடனே எழுந்து விட்டான், அம்மா சொல்வதற்கு முன்னமே பல் துலக்கி, குளித்து சீருடை அணிந்து சாப்பிட வந்தவன், அம்மா எதுவுமே இன்னும் தயார் செய்யாமல் இருப்பதை பார்த்து, "ஐயோ, என்னமா, இன்னும் ரெடி பண்ணலயா? பஸ் வந்துரும், சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பணுமே" என்று கவலையாக கேட்டான். "இதோ இருடா, டூ மினிட்ஸ்ல ரெடி பண்ணிடறேன், போன்ல வீடியோ பாத்துட்டு இருந்தேன், நேரம் போவதே தெரியலை" என்று சொல்லி ஆடி அசைந்து சமையற்காட்டிற்குள் நுழைந்தாள். அவன் சாப்பிட அமர்வதற்குள் பள்ளிப்பேருந்து வந்து ஹார்ன் அடிக்க, உணவை வேக வேகமாக விண்டு விழுங்கி, சாக்ஸ்'ஐ தேடினால் ஒன்று தான் கிடைத்தது, முந்தைய நாள் கழட்டி இங்கொன்றும் அங்கொன்றுமாக வீசியதை வீடு முழுவதும் தேடி கடைசியில் சோஃபாவிற்கு அடியில் அம்மாவும் மகனும் தேடிபிடித்து எடுப்பதற்குள் பஸ் கிளம்பி விட்டது.

அர்ஜுன் அப்பாவிடம் கெஞ்சி கூத்தாடி அன்று மட்டும் ஸ்கூலில் ட்ராப் செய்ய பெர்மிஷன் வாங்கினான். காலனி, ஐடி கார்டு, ஸ்கூல் பேக் என ஒன்றொண்ரையும்  தேடி எடுக்க என்று வேறு நேரம் விரயம் ஆனது. இதற்குள் அவனது அப்பாவும் காரின் சாவியை எங்கே வைத்தேன் என்று தெரியவில்லை, என்று வீட்டையே தலைகீழாக புரட்டிப் போட்டுக்கொண்டிருந்தார். "எங்கேப்பா வச்சீங்க நேத்து?" என்று பொறுமை இழந்தவனாக அர்ஜுன் கேட்க.

தொடரும்...

பாகம் - 2

Monday, September 23, 2019

தலைவலி!!

 "விஷ்ணு, எனக்கு தலை ரொம்ப வலிக்குது. நீ கொஞ்சம் எந்திரிச்சு வருணை பாத்துக்கறியா? ப்ளீஸ். ஏம்மா, என்னாச்சு? நைட் சரியா தூங்கலையா? ஆமாப்பா, வருண் நைட் முழுசும் இருமிக்கிட்டே இருந்தான், அவனை பாத்துக்கவே சரியா இருந்துச்சு. சரி, நீ ரெஸ்ட் எடு, நா எந்திரிச்சு பாத்துக்கறேன்" என்று சொன்ன அடுத்த நிமிடம் விஷ்ணு குறட்டை விட்டு தூக்கத்தை தொடர, அனு எப்போதும் போல கிச்சனுக்குள் நுழைந்து வேலையை தொடங்கினாள். குளித்து முடித்து, காலை, மதியம் இருவேளைக்கும் சமைத்து முடித்து, வீட்டை கிளீன் செய்து, மெஷினில் துணியை போட்டு, உலர்த்திக்கொண்டிருக்கையில் எழுந்து வந்த விஷ்ணு, "அனு தலை ரொம்ப வலிக்குது சூடா காபி கொடேன். இன்னைக்கு முழுசும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா தான் நாளைக்கு ஆபீஸ்க்கு பிரெஷா போகமுடியும்னு நினைக்கறேன்" என்றான்.  கையில் இருந்த அம்ருதாஞ்சனை நெற்றியில் தேய்த்தவாறே பாலை அடுப்பில் வைத்து சூடு பண்ணலானாள் அனு.  

நானிருக்கேன் கண்மணியே!!

 ரொம்ப நேரம் தூங்கிவிட்டோமோ என்று எண்ணியவாறே கடிகாரத்தை பார்த்த விஷ்ணு, அட எட்டு மணியாகிருச்சா என்றபடி பக்கத்திலிருந்த அனுவை மெதுவாக தட்டி எழுப்பினான். அனு நன்றாக அசந்து தூங்குவதை கண்டு சத்தம் போடாமல் கட்டிலை விட்டு இறங்கி, காலை வேளைக்கு என்ன டிபன் செய்யலாம் என்று யோசித்தபடியே  ரூம் கதவை சாத்திவிட்டு சென்றான். சிறுது நேரத்தில் "என்னை ஏன் எழுப்பல" என்று கேட்டபடியே அனு வந்தாள். "நல்லா அசந்து தூங்கிட்டு இருந்த, சரி டிபன் ரெடி பண்ணிட்டு எழுப்பலாமேன்னு விட்டுட்டேன்" என்றபடி சட்னிக்குத்தேவையான தேங்காயை சில்லு எடுக்கலானான். "நைட் சரியா தூக்கமே வரல, அதான் அசந்து தூங்கிட்டேன், லேசா தலையை வேற வலிக்குது" என்றபடி நெற்றியை அழுத்தி விட்டுக்கொண்டாள் அனு. "இன்னைக்கு முழுசும் நீ ரெஸ்ட் எடு. லஞ்ச் வேலையும் நானே பாத்துக்கறேன்" என்றபடி அக்கறையாய் அவளை சோஃபாவில் கூட்டிப்போய் உட்காரவைத்துவிட்டு, சூடான ஒரு காஃபியை அவள் கையில் கொண்டுபோய் கொடுத்தான். 

Sunday, September 22, 2019

இமைக்கா நொடிகள்!!! (ஒரு குரங்கின் பிடியில் )

 இது என்ன லப் டப், லப் டப்பா; திக் திக், திக் திக்கா!! 

ஸ்டெதெஸ்கோப் இல்லாமலேயே இதயம் துடிக்கும் ஓசை கேட்கிறேன்;

இமைகள் படபடக்க, கைகள் வெலவெலக்க, 

வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டை உருள;

ஒரு சப்போர்ட்க்கு என் கைப்பையையும், கைப்பேசியையும் இறுக்கிப்பிடித்துக்கொண்டேன்

எங்கே என்னருகில் நீ நெருங்கி வந்து விடுவாயோ என்ற அச்சத்தில்!

இருப்பினும் 

அந்த ஸ்ப்ரைட்டயும், பொவொண்டோவையும், ஸ்லைசையும்  

லாவகமாக நீ குடித்த அழகுக்கு ஈடு இணை தான் உண்டோ!! 

என் ராசாவின் மனசிலே ராஜ்கிரணை, மீனா பார்ப்பது போல 

விழியகலாமல் உன்னையே பார்க்கிறேன்.

இதையெல்லாம் குடித்த பிறகும் 

இன்னும் என்ன இருக்கு என்பது போல கைப்பையை இழுக்க வந்தாயே 

அடக் "குரங்கே"!!!

நீ ஸ்ப்ரைட்டயும், பொவொண்டோவையும், ஸ்லைசையும் குடிக்க 

5 நிமிடத்திற்கு நான் கைதியா?

மனதிற்குள் பொருமினாலும், சிறிது கூட அசையாமல் உட்கார்ந்து இருக்கிறேன் 

போனால் போகுது, போய்த்தொலை என்று விட்டு விடுவாய் 

என்ற நம்பிக்கையில்!!! 


Thursday, September 19, 2019

ஏட்டுச் சுரைக்காய்!!

 வழக்கம் போல பள்ளியில் மகனை ட்ராப் பண்ணிவிட்டு வீட்டிற்கு வந்தபின்,  பாத்ரூமிற்குள் சென்றேன், அவன் குளித்துவிட்டு வைத்த பக்கெட், மக்கை ஒதுக்கி வைப்பதற்காக. பொதுவாக காலையில் அவனே முழுதும் ரெடி ஆகிக்கொள்வான். எனவே, அவனை பள்ளியில் விட்டு விட்டு வந்து குழாயெல்லாம் சரியாக மூடி இருக்கிறானா, வேறு எதுவும் ஒதுக்க வேண்டுமா என்று மட்டும் ஒரு தரம் போய் சரி பார்த்துக் கொள்வேன். அன்றும் அப்படி பாத்ரூமிற்குள் நுழையும் போது தான் குழாயில் கட்டி வைத்திருந்த அந்த கர்சீஃப்பை கவனித்தேன்.  அபார்ட்மெண்ட் டேங்கில் தண்ணீர் முழுவதும் காலியாகவிட்டு மோட்டார் போட்டதால், டேங்கில் இருந்த தூசி மற்றும் மண் எல்லாம் சேர்ந்து தண்ணியோடு வந்து கொண்டிருந்தது. அதை பில்டர் பண்ணுவதற்கு தான் எங்க வீட்டு குட்டி ஜீனியஸ் அந்த ஐடியா பண்ணி இருக்கிறான். 

அதே போல சில நேரங்களில் அவசரத்திலோ மறதியினாலோ, குடிப்பதற்கு தண்ணீர் பிடித்து வைத்திருக்கும் செம்பு பாத்திரத்தை மூடாமல் விட்டு விடுவேன். தண்ணீர் குடிக்க செல்லும் என் மகன் பொறுப்பாக கப்போர்டில் இருந்து அதற்கு பொருத்தமான ஒரு மூடியை எடுத்து அதை மூடி வைத்து விட்டு வருவான். இது எதுவுமே நான் அவனுக்கு சொல்லி கொடுக்கவில்லை. நம்மை சுற்றி இருக்கும் ஒரு விஷயம் சரி இல்லையென்றால் யாரோ ஒருவர் வந்து அதை சரி செய்து கொள்ளட்டும், நமக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை என்று இருக்காமல், நம்மால் முடிந்த அளவுக்கு அதை சரி செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கு. இதை லீடெர்ஷிப் அல்லது ஓனர்ஷிப் (ஆளுமைத்திறன்) என்பார்கள். என் கணவரும், தந்தையும் கூட அதே ரகம் தான்.  ஏட்டுக்கல்வி கற்றுக்கொடுக்க முடியாத பாடங்களில் இதுவும் ஒன்று.

நான் படித்த பள்ளியில் ஒரு விதிமுறை உண்டு. தினமும் பள்ளி முடிந்தவுடன் மாணவர்கள் தான் அவர்களது வகுப்பறையை பெருக்கி, பெஞ்சையெல்லாம் அடுக்கி வைக்க வேண்டும். தினமும் ஒரு பெஞ்ச் ஸ்டுடென்ட்ஸ் என்று  வரைமுறை படுத்திக்கொள்வோம். அதே போல லஞ்ச் டைமில்  இப்போது இருக்கும் பள்ளிகளில் நான்கு சுவர்களுக்குள் அடைத்து வைத்து சாப்பிடுவது போல இல்லாமல், விசாலமான மைதானத்தில், இயற்கையான காற்றை சுவாசித்தபடியே, மரத்தடியில் அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டே சாப்பிடுவோம். சாப்பிட்டு முடித்த பிறகு கீழே போட்ட மிளகாய், கறிவேப்பிலை முதற்கொண்டு எல்லாவற்றையும் நாங்களே கிளீன் செய்து விட வேண்டும்.  கீழே இருக்கும் பேப்பர், கவர் போன்ற குப்பைகளை பொறுக்கி குப்பைத்தொட்டியில் போட வேண்டும். இதுவும் ஒரு வகையான சுய ஒழுக்கம் தானே. அப்படியே குப்பையை போட்டேன், அதற்கு நடுவிலேயே உட்கார்ந்து கொள்வேன் என்ற பழக்கம் அறவே தவறானது என்பதை அனுபவப்பூர்வமாக கற்றுக்கொடுத்தது எங்கள் பள்ளி. புத்தகத்தில் கற்ற பாடங்கள் நிச்சயமாக அவ்வளவு நினைவில் இல்லை, என் மகனுடன் சேர்ந்து தான் ரீகால் பண்ணிக்கொள்கிறேன். ஆனால் பள்ளியும் கல்லூரியும் கொடுத்த அனுபவங்கள், கட்டுப்பாடோடு கிடைத்த சுதந்திரம் ஒவ்வொரு நாளிலும் உடன் பயணிக்கின்றன. வேலைகளை நேர்த்தியாகவும் செம்மையாகவும் செய்ய துணை நிற்கின்றன. 

ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகள் வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்று தானே நினைப்போம். வெற்றி என்பது போட்டியில்/பரிட்சையில் முதலில் வருவது அல்ல, புரிதலோடு வாழ்க்கையை எதிர்கொள்வது. ஒரு இக்கட்டான சூழ்நிலை என்று வரும்போது அதை எப்படி எதிர்கொள்வது என்று சிந்தித்து செயல்படும் திறன். அப்படியானால் நாமும் நம் பிள்ளைகளுக்கு அப்படிப்பட்ட அனுபவங்களை தானே கொடுக்க வேண்டும்? அது தானே அவர்கள் வளர்ந்த பிறகு பக்கபலமாக இருக்கும்? நிறைய நேரங்களில் நாம் சொல்லுவது, "டெய்லி ஸ்கூல் பேக்கில் வேணும்கற புக்ஸை எடுத்து வச்சுக்கோ, விளையாடிவிட்டு டாய்ஸை எடுத்து வை" என்று கரடியாய் கத்தினாலும் கேட்கவே மாட்டேங்கறாங்க என்பது தான். நாம் சொல்வதை செய்யாமல் எஸ்கேப் ஆகி, அவர்கள் ஜெயிக்கவில்லை. அவர்களுக்கு தேவையான லைஃப் ஸ்கில்ஸை அவர்களுக்கு பழக்கப்படுத்த முடியாமல் அல்லது எப்படி பழக்கப்படுத்துவது என்று தெரியாமல் பெற்றோராகிய நாம் தான் தோற்கிறோம்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்ன ஒரு பழமொழி, "ஆறு வயது குழந்தைக்கு விளக்க முடியாவிட்டால், அதை நாமே புரிந்து கொள்ளவில்லை" என்பது தான் அது. நம் குழந்தைகளை இன்னும் கொஞ்சம் புரிந்து கொள்ள முற்பட்டால், அவர்கள் எப்படி சொன்னால் கேட்பார்கள் என்ற நேக் புரிந்துவிடும். இதை பாசிட்டிவ் பேரன்டிங் (Positive Parenting) என்பார்கள். 

நம் குழந்தைகளுக்கு புத்தக அறிவு கண்டிப்பாக வேண்டும் தான். கல்வியினால் அறிவு பெருகும். அந்த அறிவை எங்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள அனுபவம் தான் வேண்டும். எனவே பிள்ளைகளுக்கு அறிவோடு சேர்ந்து நிறைய நிறைய அனுபவங்களையும் கொடுப்போம், புத்தகப்படிப்பை விட அவர்கள் இரண்டாவதை மிகவும் விரும்பி கற்பார்கள், சரியான வழியில் கொடுத்தால்!! 

Tuesday, September 17, 2019

சாரி, ஐ ஆம் நாட் அவைலபில்!! (Sorry, I Am Not Available)

 பத்தாம் வகுப்பு ஆங்கிலத்தாள்  பொதுத்ததேர்வின் முந்தைய நாள், 

தியேட்டர் சென்று காதல் கோட்டை படம் பார்த்த நான்..

கல்லூரியின் செமஸ்டர் தேர்வின் போது, தூர்தர்ஷனில் ஒளிபரப்பிய, 

பிளாக் அண்ட் ஒயிட்   படத்தை கூட மிஸ் பண்ணாமல் பார்த்த நான்..

எக்ஸாமின் போது எந்த டென்ஷனும் இல்லாமல், கூலாக, ஹாயாக 

பேப்பர் படித்துக்கொண்டும், அரட்டையடித்துக்கொண்டும் இருந்த நான்..

இன்று 

"சண்டே வீட்டுக்கு வர்றியா?" என்ற அக்காவிடம்,

"வீக்கெண்ட் ஃபிரீயா, மீட் பண்ணலாமா?" என்ற நண்பரிடம்,

"அப்படியே ஒரு டிரைவ் போலாமா?" என்ற கணவரிடம்,

"எங்கடி, ஒரு வாரமா ஃபோனே காணோம்", என்ற அம்மாவிடம்,

"ஈவினிங் கொஞ்ச நேரம் வாக்கிங் போலாமா?" என்ற தோழியிடம்,

சொன்னேன்,

"சாரி, ஐ ஆம் நாட் அவைலபில்"

மூன்றாம் வகுப்பு படிக்கும் என் மகனின் பரீட்சைக்காக!!

Learning Beyond Textbooks - Life Skills - Child Growth

#Learning_Beyond_Textbooks #Life_Skills A home is the first environment where children can playfully learn a plenty. Traditional textbook le...