வழக்கம் போல பள்ளியில் மகனை ட்ராப் பண்ணிவிட்டு வீட்டிற்கு வந்தபின், பாத்ரூமிற்குள் சென்றேன், அவன் குளித்துவிட்டு வைத்த பக்கெட், மக்கை ஒதுக்கி வைப்பதற்காக. பொதுவாக காலையில் அவனே முழுதும் ரெடி ஆகிக்கொள்வான். எனவே, அவனை பள்ளியில் விட்டு விட்டு வந்து குழாயெல்லாம் சரியாக மூடி இருக்கிறானா, வேறு எதுவும் ஒதுக்க வேண்டுமா என்று மட்டும் ஒரு தரம் போய் சரி பார்த்துக் கொள்வேன். அன்றும் அப்படி பாத்ரூமிற்குள் நுழையும் போது தான் குழாயில் கட்டி வைத்திருந்த அந்த கர்சீஃப்பை கவனித்தேன். அபார்ட்மெண்ட் டேங்கில் தண்ணீர் முழுவதும் காலியாகவிட்டு மோட்டார் போட்டதால், டேங்கில் இருந்த தூசி மற்றும் மண் எல்லாம் சேர்ந்து தண்ணியோடு வந்து கொண்டிருந்தது. அதை பில்டர் பண்ணுவதற்கு தான் எங்க வீட்டு குட்டி ஜீனியஸ் அந்த ஐடியா பண்ணி இருக்கிறான்.
அதே போல சில நேரங்களில் அவசரத்திலோ மறதியினாலோ, குடிப்பதற்கு தண்ணீர் பிடித்து வைத்திருக்கும் செம்பு பாத்திரத்தை மூடாமல் விட்டு விடுவேன். தண்ணீர் குடிக்க செல்லும் என் மகன் பொறுப்பாக கப்போர்டில் இருந்து அதற்கு பொருத்தமான ஒரு மூடியை எடுத்து அதை மூடி வைத்து விட்டு வருவான். இது எதுவுமே நான் அவனுக்கு சொல்லி கொடுக்கவில்லை. நம்மை சுற்றி இருக்கும் ஒரு விஷயம் சரி இல்லையென்றால் யாரோ ஒருவர் வந்து அதை சரி செய்து கொள்ளட்டும், நமக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை என்று இருக்காமல், நம்மால் முடிந்த அளவுக்கு அதை சரி செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கு. இதை லீடெர்ஷிப் அல்லது ஓனர்ஷிப் (ஆளுமைத்திறன்) என்பார்கள். என் கணவரும், தந்தையும் கூட அதே ரகம் தான். ஏட்டுக்கல்வி கற்றுக்கொடுக்க முடியாத பாடங்களில் இதுவும் ஒன்று.
நான் படித்த பள்ளியில் ஒரு விதிமுறை உண்டு. தினமும் பள்ளி முடிந்தவுடன் மாணவர்கள் தான் அவர்களது வகுப்பறையை பெருக்கி, பெஞ்சையெல்லாம் அடுக்கி வைக்க வேண்டும். தினமும் ஒரு பெஞ்ச் ஸ்டுடென்ட்ஸ் என்று வரைமுறை படுத்திக்கொள்வோம். அதே போல லஞ்ச் டைமில் இப்போது இருக்கும் பள்ளிகளில் நான்கு சுவர்களுக்குள் அடைத்து வைத்து சாப்பிடுவது போல இல்லாமல், விசாலமான மைதானத்தில், இயற்கையான காற்றை சுவாசித்தபடியே, மரத்தடியில் அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டே சாப்பிடுவோம். சாப்பிட்டு முடித்த பிறகு கீழே போட்ட மிளகாய், கறிவேப்பிலை முதற்கொண்டு எல்லாவற்றையும் நாங்களே கிளீன் செய்து விட வேண்டும். கீழே இருக்கும் பேப்பர், கவர் போன்ற குப்பைகளை பொறுக்கி குப்பைத்தொட்டியில் போட வேண்டும். இதுவும் ஒரு வகையான சுய ஒழுக்கம் தானே. அப்படியே குப்பையை போட்டேன், அதற்கு நடுவிலேயே உட்கார்ந்து கொள்வேன் என்ற பழக்கம் அறவே தவறானது என்பதை அனுபவப்பூர்வமாக கற்றுக்கொடுத்தது எங்கள் பள்ளி. புத்தகத்தில் கற்ற பாடங்கள் நிச்சயமாக அவ்வளவு நினைவில் இல்லை, என் மகனுடன் சேர்ந்து தான் ரீகால் பண்ணிக்கொள்கிறேன். ஆனால் பள்ளியும் கல்லூரியும் கொடுத்த அனுபவங்கள், கட்டுப்பாடோடு கிடைத்த சுதந்திரம் ஒவ்வொரு நாளிலும் உடன் பயணிக்கின்றன. வேலைகளை நேர்த்தியாகவும் செம்மையாகவும் செய்ய துணை நிற்கின்றன.
ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகள் வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்று தானே நினைப்போம். வெற்றி என்பது போட்டியில்/பரிட்சையில் முதலில் வருவது அல்ல, புரிதலோடு வாழ்க்கையை எதிர்கொள்வது. ஒரு இக்கட்டான சூழ்நிலை என்று வரும்போது அதை எப்படி எதிர்கொள்வது என்று சிந்தித்து செயல்படும் திறன். அப்படியானால் நாமும் நம் பிள்ளைகளுக்கு அப்படிப்பட்ட அனுபவங்களை தானே கொடுக்க வேண்டும்? அது தானே அவர்கள் வளர்ந்த பிறகு பக்கபலமாக இருக்கும்? நிறைய நேரங்களில் நாம் சொல்லுவது, "டெய்லி ஸ்கூல் பேக்கில் வேணும்கற புக்ஸை எடுத்து வச்சுக்கோ, விளையாடிவிட்டு டாய்ஸை எடுத்து வை" என்று கரடியாய் கத்தினாலும் கேட்கவே மாட்டேங்கறாங்க என்பது தான். நாம் சொல்வதை செய்யாமல் எஸ்கேப் ஆகி, அவர்கள் ஜெயிக்கவில்லை. அவர்களுக்கு தேவையான லைஃப் ஸ்கில்ஸை அவர்களுக்கு பழக்கப்படுத்த முடியாமல் அல்லது எப்படி பழக்கப்படுத்துவது என்று தெரியாமல் பெற்றோராகிய நாம் தான் தோற்கிறோம்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்ன ஒரு பழமொழி, "ஆறு வயது குழந்தைக்கு விளக்க முடியாவிட்டால், அதை நாமே புரிந்து கொள்ளவில்லை" என்பது தான் அது. நம் குழந்தைகளை இன்னும் கொஞ்சம் புரிந்து கொள்ள முற்பட்டால், அவர்கள் எப்படி சொன்னால் கேட்பார்கள் என்ற நேக் புரிந்துவிடும். இதை பாசிட்டிவ் பேரன்டிங் (Positive Parenting) என்பார்கள்.
நம் குழந்தைகளுக்கு புத்தக அறிவு கண்டிப்பாக வேண்டும் தான். கல்வியினால் அறிவு பெருகும். அந்த அறிவை எங்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள அனுபவம் தான் வேண்டும். எனவே பிள்ளைகளுக்கு அறிவோடு சேர்ந்து நிறைய நிறைய அனுபவங்களையும் கொடுப்போம், புத்தகப்படிப்பை விட அவர்கள் இரண்டாவதை மிகவும் விரும்பி கற்பார்கள், சரியான வழியில் கொடுத்தால்!!
No comments:
Post a Comment