Thursday, June 13, 2019

ஒன் ஸ்டாப் ஷாப்!!

 "அப்பாடா! இன்று வேலையெல்லாம் ஒரு வழியா சீக்கிரமா முடிஞ்சிருச்சு" என்று நினைத்தவாறே கிச்சனை விட்டு வெளியில் வரும்போது கண்ணில் பட்டது நியூஸ்பேப்பரில் பழுப்பதற்கு என்று சுற்றி வைத்திருந்த அந்த பப்பாளி பழம். அதானே பாத்தேன், அதெப்படி அதுக்குள்ள வேல முடியறது என்ற சின்ன சலிப்புடன் பழத்தை கழுவி, தோல் சீவி, அதன் குறுக்காக கத்தியை சொருகி இரண்டாக வெட்டினேன். என் கண்களை என்னாலேயே  நம்ப முடியவில்லை. உள்ளே ஒன்றல்ல, இரண்டல்ல, நிறைய நிறைய விதைகள். இப்ப வாங்கற பப்பாளியில் எல்லாம் எங்க விதை இருக்கு? நானும் ஒவ்வொரு தடவையும் கடைகாரர்கிட்ட கேட்பேன், இதில் விதை இருக்குமான்னு, அவரும் கண்டிப்பா இருக்கும்மா அப்படீம்பார். ஆனால் அத்தி பூத்தார் போல எப்பவாச்சும் ஒன்னு இல்ல ரெண்டு விதை இருக்குமே தவிர இன்று போல இருந்ததில்லை. நாமளும் இப்பலாம் சீட்லெஸ் பழங்களை தான் விரும்பறோம்.

எப்பவும் போல் இல்லாமல் இந்த முறை வீட்டிற்கு பக்கத்தில் இருந்த ஒரு சிறிய கடையில் தான் அந்த பப்பாளியை வாங்கினேன். பொதுவாகவே பெரிய பெரிய கடைகளில் பளபளப்பாக இருக்கும் காய்கறிகள் பழங்கள் வாங்குவதில் எனக்கு அவ்வளவு நாட்டம் இருந்ததில்லை. ஓரளவு சிறிய கடைகளில் தான் பார்த்து பார்த்து வாங்குவேன். எங்கள் அபார்ட்மெண்ட் இருப்பது ஒரு கிராமத்திற்கு நடுவில் தான் என்பதால் எப்பவும் சிறு வியாபாரிகள் அவர்கள் தோட்டத்தில் விளைந்த காய்களை கூறு வைத்து விற்பது வழக்கம். அதே போல தேங்காய், எலுமிச்சை, முருங்கைக்காய் போன்றவற்றை அபார்ட்மென்டுக்கே எடுத்து கொண்டும் வருவார்கள். நாலு எலுமிச்சை பத்து ரூவாய், ஐந்து முருங்கை பத்து ரூவாய் என மலிவாகவும் இருக்கும். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களிடம் இருந்த முருங்கைக்காயை வாங்கினேன். அதிலிருந்த அந்த சதைப்பத்தும், சுவையும் காய்கறி கடையில் வாங்கும் போது இருந்ததில்லை. அதிலிருந்து எப்பவெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் இது போன்ற சிறு வியாபாரிகளிடம் இருந்து நேரடியாக வாங்க ஆரம்பித்து விட்டேன்.  ஓரளவுக்கேனும் பிரெஷான காய்களை சாப்பிடுகிறோமே என்ற திருப்தி. 

சொத்தையான கத்தரி, புழு இருக்கும் வெண்டை, இதெல்லாம் ஒரு காலத்தில் பார்த்தால் என்ன காயெல்லாம் புழுவா இருக்கு என முகம் சுழித்து இருக்கிறேன். அதிலும் பள்ளி பருவத்தில் அம்மா செய்யும் காலிஃளாரில் எனக்கு என்று தேடி பிடித்து வரும் புழுவினாலேயே பல வருடங்கள் காலிஃளார் சாப்பிடாமல் இருந்திருக்கிறேன்.  பூச்சி மருந்துகளின் நச்சு தன்மை பற்றி சில வருடங்கள் வரை அவ்வளவாக தெரிந்ததில்லை, அப்போதெல்லாம் காய்கறிகளில் புழு இல்லையே என்று மனம் திருப்தி பட்டுக்கொள்ளும். அதை பற்றி தெரிந்த பிறகு பார்க்கும் சொத்தை கத்தரியும், புழுவிருக்கும் வெண்டையும் மனதிற்கு மிகப்பெரிய ஆறுதலை தருகிறது என்பதை மறுக்கவே முடியாது.

சிறு பிள்ளையாக இருக்கும் போது கறிகாய் வாங்க என் அம்மாவுடன் கடைக்கு செல்லும் போது ஒவ்வொரு காயாக முத்தலில்லாமல், சொத்தையிலாமல் பொறுக்கி வாங்குவதற்கு அவ்வளவு நேரம் ஆகும். அதுவும் ஒரே கடையில் வாங்கி விட முடியாது, நாலு கடை பார்த்து தான் வாங்குவார்கள். அந்த பொறுமை இன்று நமக்கு மிகவும் குறைந்து விட்டது. ஒரு ஒன் ஸ்டாப் ஷாப்க்கு போனோமா, ட்ராலியை எடுத்தோமா, காய்கள், பழங்கள், மளிகை சாமான்கள், உடைகள் என மட மடன்னு எல்லாத்தையும் எடுத்து போட்டோமா, பில்லை கட்டினோமானு கெளம்பி வந்துகிட்டே இருக்கணும்ங்கறது தான் இப்ப நம்மளோட லைப் ஸ்டைல். இருந்தாலும் நெறய பேருக்கு இந்த லைப் ஸ்டைலோட விளைவுகள் என்னனு புரிய ஆரம்பிச்சிருச்சு. முடிந்த வரையில் சிறு சிறு மாற்றங்களை ஏற்படுத்திக்கறோம். சிறிய அளவிலான முயற்சியாக இருந்தால் கூட "முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்" தானே?

Sunday, June 9, 2019

சிபாரிசு!

 "அட, ஏன் தான் இந்த மெஸ்ஸில் இப்படி ஒரு சாப்பாடு போடுகிறார்களோ", என துளசி தன் மனதிற்குள்ளயே நினைத்து கொண்டாள்.  சுடச்சுட சாதம், நெய், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், அப்பளம், மோர் என வகையாக, அதுவும் அவ்வளவு ருசியாக இருந்தால் யாராயிருந்தாலும் எக்ஸ்ட்ரா ரெண்டு கவளம் உள்ளே போகதானே செய்யும். அப்புறம் எப்படி கிளாசில் உட்கார்ந்து பாடத்தை கவனிக்கறதாம்?

மதிய வேளை முதல் பீரியட், முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் அந்த பாஸ்கல் (அது ஒரு சப்ஜெக்ட்) கிளாசில் துளசி உட்பட நாற்பது மாணவிகளும்  உண்ட மயக்கத்தில் டீச்சர் என்ன நடத்துகிறார் என்பதே புரியாமல் மண்டையை மட்டும் ஆட்டி கொண்டிருந்தார்கள். "ஐ ஹோப் எவெரிஒன் அண்டர்ஸ்டூட்,  நவ் லெட் மீ அஸ்க் யு குவெஸ்டின்ஸ்" என பார்வையை சுழல விட்டபடி அந்த டீச்சர் ஆட்காட்டி விரலை உயர்த்தி "யு கெட் அப்" என துளசியை பார்த்து கூறினாள்.  ஐயோ, இவ்ளோ பேர் இருக்கும் இந்த கிளாசில் இவர்கள் கண்ணுக்கு நான் மட்டும் தான் பட வேண்டுமா, கடவுளே!!

கல்லூரி ஆரம்பித்து ஒரு வாரம் ஆகி இருந்தபோதும், துளசிக்கு அது தான் இரண்டாவது நாள். பிளஸ் டூவில் எண்பத்தைந்து சதவீதம் வாங்கி இருந்தாலும் சைகாலஜி அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் படிக்க போவதாகவும், ஹாஸ்டலில் தங்கி தான் படிக்க வேண்டும் என்றும்   பெற்றோரிடம் பெர்மிஷன் வாங்கி இருந்தாள். சென்னையில் WCC'ல் அப்ளை பண்ணியிருந்த  சைகாலஜி  சீட் கடைசி நிமிஷத்தில் காலை வாரி விட, "பக்கத்தில் இருக்கும் காலேஜ் எதிலாவது சேர்த்துக்கோயேன்" என சொன்ன அவளது பெற்றோரிடம் திருச்சியில் ஏதாவது காலெஜ்ல் அப்ளை பண்ணலாம் என கெஞ்சி அவர்களிடம் சம்மதம் வாங்குவதற்குள் அந்த காலேஜிலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் கோர்ஸ்கு அட்மிஷன் முடிந்து விட்டது என்று சொல்லி விட்டார்கள். பின்பு அவளது அப்பா தான் தெரிந்தவர்கள் மூலமாக ட்ரை பண்ணி ரெகமெண்டஷனில்  சீட் வாங்கி கொடுத்தார். ஹாஸ்டலில் தங்கி படிக்கிறேன் என ஜம்பமாக சொல்லிவிட்டாலும் முதலில் வீட்டையும், பெற்றோரையும் மிகவும் மிஸ் பண்ணினாள். கிளாஸ்சிலும் யாரும் அவ்வளவு பரிச்சயம் ஆகவில்லை. அப்படி இருக்கையில் தான் "இன்று டீச்சரிடம் நன்றாக வசை வாங்க போகிறோம் என கீழ் உதடை கடித்தபடி என்ன கேள்வி கேட்க போகிறாரோ" என்று தயங்கிய வண்ணம் எழுந்து நின்றாள்.

கேட்ட கேள்விக்கு தத்து பித்து என உளறுகிறோம் என்று தெரிந்தே ஏதோ உளறி வைத்தாள். "யு ஆர் தி ஒன், ரைட்? ஹூ கேம் பார் அட்மிஷன் லாஸ்ட் வீக்?" என்று அவர் கேட்ட தொனி,  ரெகமெண்டஷனில்  வந்ததெல்லாம் இப்படி தானே இருக்கும் என்பது போல இருந்தது. "காலேஜ் வந்து விட்டோம் என்று லதார்ஜிகா இருந்தீங்கனா லாஸ் உங்களுக்கு தான், சிட் டவுன்" என்றவர் அடுத்த டாபிக்கை  நடத்த ஆரம்பித்து விட்டார். துளசிக்கு மிகுந்த அவமானமாகி விட்டது. அம்மாவிடம் உடனே சொல்லி அழ வேண்டும் போல் ஆகி விட்டது. அன்று முழுவதும் அவள் யாரிடமும் சரியாக பேசவில்லை.

அடுத்த நாள் காலை முதல் பீரியட்டே பாஸ்கல் மேமோடது தான் என்று டைம் டேபிள் சொல்ல, வயிற்றுக்குள் ஒரு மிக்ஸியே ஓடியது. ஊரில் உள்ள எல்லா கடவுளையும் துணைக்கு கூப்பிட்ட படி பெஞ்சில் உட்கார்ந்திருந்தாள். அன்று வந்ததும் வராததுமாக "குட் மார்னிங் எவெரிபடி,  லேட்ஸ் சி ஹொவ் மச் யு ஆல் ஹவ் ஸ்கோர்ட் இன் யுவர் பிளஸ் டூ" என்றபடி "90  பெர்ஸண்டெஜ் அண்ட் அபவ்" என்று சொல்ல யாருமே எழுந்திரிக்கவில்லை, "85 அண்ட் அபவ்" என்று கூற துளசியும் இன்னொரு மாணவியும் எழுந்தார்கள். துளசி எழுந்ததை பார்த்த டீச்சர் கண்ணில் சிறிதாய் ஒரு ஆச்சரியம் வந்து போனதை அவள் கவனிக்க தவறவில்லை. "வெரி குட், சிட் டவுன்" என்றவரை பார்த்து  "தாங் யு, மேம்" என்று சிறு புன்னகையுடன் கூறினாள். டீச்சரும் அவளை பார்த்து முறுவலித்த போது துளசி ஆல்ரெடி வானத்தில் பறந்து கொண்டிருந்தாள், கற்பனையில்!!! 

Tuesday, May 14, 2019

கனவு மெய்பட்ட தருணம், பரிதவித்த மனம்!!

 (22-11-09 அன்று என்னுடைய பர்சனல் blog'ல் பதியப்பட்ட பதிவின் தமிழாக்கம்)

2009'ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் 11'ஆம் நாள், இரவு 12.30 மணி. மனம் அமைதியின்றி தவித்தது. அம்மா, அப்பா, அக்கா மற்றும் அக்கா பிள்ளைகள் ஏதோ படம் ஒன்றை பார்த்து கொண்டிருந்தனர். கிடைத்த சில மணி நேரங்களில் ஒரு குட்டி தூக்கம் போட வேண்டிய கட்டாயம் எனக்கு, புரண்டு புரண்டு படுத்தும் உறக்கம் வர மறுத்தது. இன்னும் 3 மாதம், இன்னும் 3 மாதம் என மனது அரற்றிக்கொண்டே இருந்தது. 

இதே சில மாதங்களுக்கு முன்னால் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால் நிலைமையே வேறு. வானத்துக்கும் பூமிக்கும் குதித்திருந்திருப்பேன். மேற் படிப்பு முடித்து, நல்ல வேலையில் சேர்ந்து, ஒரே ஒரு முறையாவது விமானத்தில் வெளி நாட்டிற்கு வேலை நிமித்தமாக பயணித்திட வேண்டும் என்பது என் 5 வருட கனவு. அந்த கனவு தான் அன்று நிறைவேறியிருந்தது. இன்னும் சிறுது நேரத்தில் விமான நிலையத்திற்கு புறப்பட வேண்டும். 

இன்றைய தேதிக்கு இது சாதாரண விஷயமாக தோன்றலாம், பத்து வருடத்திற்கு முன் அது அவ்வளவு எளிதான காரியமில்லை. அதுவும் ஒரு சிறிய ஊரில், வரையறுக்க பட்ட ஒரு சூழலில் வளர்ந்த ஒரு பெண்ணுக்கு, அது மிகவும் பெரிய விஷயம் தான். பள்ளி படிப்பு முடித்த போது ஏதோ ஒரு கட்டு பெட்டிக்குள் இருப்பது போன்ற ஒரு உணர்வு. வெளி உலகத்தின் அனுபவமும், தனித்து நிற்கும் தைரியமும் கிடைக்க வேண்டுமெனில் கல்லூரி படிப்பை ஹோஸ்டலில் தங்கி படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது. அம்மாவும் அப்பாவும் அதற்கு சரி என்றது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். 8 வருட கால விடுதி வாழ்க்கை நிறைய அனுபவங்களையும், தன்னம்பிக்கையையும் கொடுத்தது. 

ஆனால், அன்று அந்த தன்னம்பிக்கை எங்கே போய் ஒளிந்து கொண்டது என்றே தெரியவில்லை. திருமணமாகி 9 மாதங்கள் ஆகி விட்டிருந்த போதும், ஒரு ரோடீன் செட் செய்து, அதற்கு நாங்கள் அட்ஜஸ்ட் ஆவதற்கு ஆறு ஏழு மாதங்கள் ஆகி விட்டன. கணவருக்கு நைட் ஷிப்ட் அல்லது விடியற்காலை ஷிப்ட் என  மாறி கொண்டே இருக்கும் ஆதலால் மாதத்தில் பாதி நாட்கள் நாங்கள் பார்த்துக்கொள்வதே கடினம். தொலைபேசியிலும் ஆபீஸ் ஈமெயிலிலும் தான் எங்களது பேச்சு வார்த்தை நடக்கும். அப்படி இருக்கும் போது தான் அந்த ஆன்சைட் ப்ராஜெக்ட் கிடைத்தது.

மனதிற்குள், இன்னும் நூறு நாட்கள் நேரில் பார்க்க முடியாது, அவ்வப்போது phone'ம், வீடியோ சாட்டும் தான் என்று ஓடிக்கொண்டே இருந்தது. பத்து வருடத்திற்கு முன் இருந்த டயல் அப் connection'ல் இன்டர்நெட் கனெக்ட் ஆகி வீடியோ சாட் செய்வதற்குள் விடிந்து விடும். கண்ணில் முட்டிக்கொண்டு வந்த கண்ணீர் எங்கே வெளியே வந்து விடுமோ என்று மிகவும் கவனமாக இருந்தேன். அப்படியும் கட்டுக்கடங்காமல் பொங்கி வந்த ஒரு துளி சிறுதுளி கண்ணீரை அந்த பக்கம் இந்த பக்கம் வேடிக்கை பார்ப்பது போல திரும்பி நாசூக்காக கைக்குட்டையில் துடைத்து கொண்டேன். எங்கே நான் அழுது அது காதல் கணவருக்கு சங்கடமாகி விடுமோ என்று அஞ்சி வலிய ஒரு புன்னகையை வரவழைத்து கொண்டு எல்லோரிடமும் பேசிக்கொண்டு இருந்தேன்.

சிறிது நேரத்திற்கெல்லாம் என்னுடைய flight'ற்கான அழைப்பு ஒலிப்பெட்டியில் ஒலித்தது. அனைவரிடமும் சொல்லிக்கொண்டு, கணவருடன் பார்வை பரிமாற்றங்கள் நடந்தேறியபின் செக் இன் கவுண்டருக்கு நோக்கி ட்ராலியை தள்ளி கொண்டு எந்த விதமான உற்சாகமும் இன்றி நடக்கலானேன்.

என்னுடன் சேர்ந்து மூன்று பேர் பயணித்ததாலும், அமெரிக்காவில் தங்குவதற்கு நண்பர்களுடன் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்ததால் பெரிதாக கவலை படுவதற்கு ஒன்றுமில்லை. இருப்பினும் மனம் வீட்டையும் அன்பு கணவரையும் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. விமானத்தில் காலடி எடுத்து வைக்கும் அந்த தருணத்திற்காக அவ்வளவு வருடம் காத்திருந்த போதும் அன்று அந்த நொடி இனிக்கவில்லை. டேக் ஆப் ஆகும் அந்த தருணம் எந்த வித சலனத்தையும் உண்டு பண்ணவில்லை.

ட்ரான்சிட்'ல் இருக்கும் போதும் நண்பர்களுடன் பளிங்கு போன்ற தோஹா விமான நிலையம் முழுவதும் சுற்றி திரிந்த போதும் எதிலும் லயிக்காமல் மனம் 22 மணி நேரத்திற்கு பிறகு கேட்கபோகிற 'ஹலோ குட்டிமா' என்ற அந்த ஒரு வார்த்தைக்காக பரிதவித்துக்கொண்டிருந்தது. 

(எப்பவும் போல 3 மாதம் ப்ராஜெக்ட் என்பது 6 மாதமாக ஆனது என்பதை சொல்லவா வேண்டும்? துவக்கத்தில் இப்படி இருந்தாலும் போக போக அங்கே நண்பர்களுடன் கொட்டமடித்தது தனிக்கதை :) 


Saturday, May 4, 2019

குழந்தை வளர்ப்பில் இன்றைய பெற்றோர்களாகிய நாம் நம் கடமையை சரி வர செய்கிறோமா?

 சில நாட்களுக்கு முன் முகநூலின் அன்னையர்களுக்கான ஒரு குரூப்பில் கண்ட ஒரு பதிவு, குழந்தை வளர்ப்பில் இன்றைய பெற்றோர்களாகிய நாம் நம் கடமையை சரி வர செய்வதிலேயோ என யோசிக்க வைத்தது.  "இன்றைய அம்மாக்களின் நிலைமை - நம் பெற்றோர் சொல்வதை மறு வார்த்தை சொல்லாமல் கேட்டுக்கொண்டோம், நம் குழந்தைகள் சொல்வதையும் அதே போல கேட்க வேண்டியிருக்கிறது" என்பது தான் அந்த பதிவு. நிறைய பேர் அதை ஆமோதித்து கருத்து தெரிவித்து இருந்தனர். டீவி பார்ப்பதிலிருந்து, மொபைலில் கேம்ஸ் விளையாடுவது, வீடியோஸ் பார்ப்பது, கடைக்கு போகும் போது சாக்லேட்ஸ், பிஸ்கட்ஸ், சிப்ஸ் வாங்க அடம் பிடிப்பது என ஒவ்வொருவரும் தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து கொண்டிருந்தனர்.

ஆனால் யோசித்து பார்த்தால்,  நாம் தான் நம் குழந்தைகளின் மீது பாசத்தை பொழிகிறேன் என்ற பெயரில் மேற்கூறிய அனைத்தையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தியிருப்போம். அல்லது "சோஷியல் பிரஷர்",  அதாவது மற்ற பெற்றோர்கள் எல்லாம் அவர்கள் பிள்ளைகளுக்கு ஐபாட் வாங்கி தருகிறார்கள், வித விதமான சாக்லேட்ஸ் வாங்கி தருகிறார்கள் நம்ப அதை விட இன்னும் பெட்டெரா  கொடுக்க வேண்டும் என்கிற உந்துதலினால் செய்திருப்போம்.  அப்படி என்றால் இதெல்லாம் என் பிள்ளைக்கு கொடுக்கவே கூடாதா என நினைக்க தோன்றும். "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு", அப்படி இருக்க துளி அளவும் நன்மை இல்லாத இவற்றை அளவோடு பயன்படுத்த கற்று கொடுக்க வேண்டுமே.. எப்படி?

எதையுமே நாம் அவர்களிடம் இருந்து முழுமையாக ஒதுக்கி வைக்க கூடாது, அப்படி வைக்கவும் முடியாது.  ஒரு விஷயம் பற்றிய நல்லது கெட்டதை அவர்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துரைக்க வேண்டும். அந்த புரிதல் வந்து விட்டாலே ஒரு வயதிற்கு பின் ஒரு குழந்தை தானே யோசித்து ஒரு விஷயம் சரியா, அதை செய்யலாமா என திடமான முடிவெடுக்க ஆரம்பித்து விடும். அந்த நிலைக்கு அவர்களை கொண்டு போவது பெற்றோராகிய நமது கடமை அல்லவா?

உதாரணத்திற்கு ஒரு குழந்தைக்கு ஒரு வயது ஆகும் வரை கண்டிப்பாக டீவியோ, மொபைல் போனோ கொடுக்க கூடாது என்பது தான் மருத்துவர்களே கூறும் அறிவுரை. அதற்கு பிறகும் கூட ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கு மேல் கூடாது, அதுவும் தொடர்ச்சியாக 30-40 நிமிடங்கள் மட்டுமே பார்க்கலாம் போன்ற பரிந்துரைகளை நாம் கண்டிப்பாக பின்பற்றலாம். பள்ளி நாட்களில் மாலையில் மட்டுமே டீவி பார்க்கலாம், விடுமுறை நாட்களில் காலையில் சிறிது நேரம் மாலையில் சிறிது நேரம் என ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவர்களுக்கு ஒதுக்கலாம்.

இதை படிக்கும் பெரும்பாலான பெற்றோர் மனதில் ஒரு எண்ணம் தோன்றலாம், அவர்கள் எங்கே நம்மிடம் பர்மிஷன் கேட்கிறார்கள், டீவியை நினைத்த நேரத்தில் அவர்களே போட்டு கொள்கிறார்கள் என்று. வீட்டில் உள்ள பெரியவர்களிடமோ அல்லது பெற்றோர்களிடமோ அனுமதி பெற்று தான் டீவி, மொபைல் போன், கேம்ஸ் போன்றவற்றை உபயோகப்படுத்த வேண்டும் என்று பழக்க வேண்டும்.

அப்படி அவர்கள் பயன் படுத்தும் போதும் அவர்கள் பார்க்கும் கார்டூன்/வீடியோ அவர்கள் வயதிற்கு ஏற்புடையது தானா என்பதை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். அதே போல கேம்ஸ் விளையாடும் குழந்தைகள் எனில் பிளே ஸ்டோரிலிருந்து அவர்களே டவுன்லோட் செய்ய விடுவதை தவிர்ப்பது நல்லது.

அதே போல இப்போதெல்லாம் வித விதமாக பாக்கெட்களில் ஸ்னாக்ஸ் வர ஆரம்பித்து விட்டன. கடைக்கு போகும் போதெல்லாம் குழந்தை ஒன்று மாற்றி ஒன்று கேட்டு கொண்டே இருக்கும்.  அவை எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பது நமக்கு தெரிந்தாலும் குழந்தை கேட்கின்றதே என்பதற்காக வாங்கி கொடுத்து விடுவோம். நாம் கொடுக்க கொடுக்க அவர்கள் கேட்டு கொண்டே தான் இருப்பார்கள், பிறகு எப்படி அவர்களை குறை சொல்லலாம்? அடிக்கடி வாங்கி கொடுக்காமல் தின்பண்டங்களுக்கும் கூட சிறிய விதிமுறைகளை வைக்கலாம். சாக்லேட்ஸ் என்றால் வாரத்திற்கு ஒன்று தான், கிரீம் பிஸ்கட்ஸ் மாதம் ஒரு முறை தான் என்று அவரவர்க்கு தகுந்தாற் போல வரைமுறைகள் சொல்லி குடுக்கலாம்.

குழந்தை வளர்ப்பில் இவ்வளவு ரூல்ஸ் தேவையா என  தோணலாம். "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" இல்லையா? சிறு வயதில் நாம் என்ன சொல்லி குடுத்தாலும் அவர்கள் எளிமையாக பழகி கொள்வார்கள்.  மேற்கூறிய அனைத்துமே உடலுக்கும், கண்களுக்கும், எண்ணங்களுக்கும் எவ்வாறு தீங்கு விளைவிக்கும் என்பதை மீண்டும் மீண்டும் அவர்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துரைக்க வேண்டும்.  இவற்றை எல்லாம் ஒரே நாளில் பழக்க படுத்தி விட முடியாது, கொஞ்சம் கொஞ்சமாக தான் நடைமுறை படுத்த முடியும். பிற குழந்தைகளை பார்த்து நம் பிள்ளைகள் அடம் பிடித்தால் அவர்களை அந்த இடத்தில் இருந்து டைவர்ட் செய்ய முயற்சிக்கலாம். அவர்களுடன் விளையாடி அவர்களை சிரிக்க வைத்து அப்படியே நைசாக அந்த சூழலை மாற்றலாம். "நம் வீட்டில் நாம் இப்படி தான் செய்வோம், அது நம் நன்மைக்காக தான்" என அன்பாக எடுத்துரைக்கலாம்.  நாம் சொல்லி கொடுக்காமல் அவர்களுக்கு எப்படி தெரியும்?

நான் எப்பொழுதும் சொல்வது போல எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு ஒரு விதமாக சொன்னால் தான் புரியும். எனவே பெற்றோர் ஆகிய நாம் தான், நம் பிள்ளைகளுக்கு எது சரி, எது தவறு, அதை எப்படி சொல்லி புரிய வைக்க வேண்டும் என்பதை அறிந்து அவர்களை வளர்க்க வேண்டும் இல்லையா?

Saturday, April 27, 2019

மீண்டும் ஓர் ஜன்னல் ஓர பயணம் !!

 தாம்பரம் ஸ்டேஷனிலிருந்து ரயில் மெதுவாக நகரத்தொடங்கியது. குதூகலத்துடன் வைபவ் "பை'ப்பா, வீக்எண்டு ஊர்ல மீட் பண்ணுவோம்" என்று பெரிய மனுஷ தோரணையில் சொன்னான். கோடை விடுமுறை ஆரம்பித்திருந்ததால் கூபே முழுவதும் குழந்தைகளும் அவர்களது பெற்றோர்களும் நிறைந்திருந்தனர். புதிய கோச் ஆதலால் பளிச்சென்று இருந்தது, ஜன்னல் கூட ஸ்லைடிங் டைப்பாக இருந்தது.  பொதுவாகவே  வைபவிற்கு பயணங்கள் மிகவும் பிடிக்கும், இன்று அதிகப்படியான உற்சாகத்துடன் இருந்தான். அதற்கு காரணம் அவனுக்கு என்று தனி பெர்த் புக் பண்ணி இருந்தது தான்.

வைபவிற்கு 8 வயது ஆகிறது, எனினும் எப்பொழுதும் ரயில் பயணத்தின் போது அவன் தன் அம்மாவுடன் ஒரே பெர்த்தில் தான் படுத்துக்கொள்வான். கடந்த இரண்டு முறையும் கூட அவனுக்கு தனி பெர்த் புக் செய்திருந்த போதும் அவனை தனியே படுக்க விட அனுவிற்கும், தருணிற்கும் மிகவும் பயமாக இருந்ததால் அவன் அனுவுடனே படுக்க வேண்டியதாயிற்று. இந்த முறை கண்டிப்பாக அவனை தனி பெர்த்தில் விடுவதாக வீட்டிலேயே அனு சொல்லி இருந்தாள்.

வண்டி நகரத்தொடங்கியதுமே "எப்பம்மா பெர்த் போடலாம்? நா மிடில் பெர்த்ல போயி உக்காந்து வேடிக்கை பாக்கணுமே" என்று கேட்கத் தொடங்கியவனை  "இப்பவே முடியாது அப்பு, செங்கல்பட்டு வரட்டும் அப்புறம் போட்டுக்கலாம். அது வரைக்கும் இந்த சீட்லேயே உக்காந்து வேடிக்கை பாரு" என்று ஒருவாறாக சமாளித்து வைத்தாயிற்று. சிறிது நேரத்திற்கெல்லாம் அருகில் இருந்த குடும்பமும் பெர்த்தை போடுவதற்கு தயாரானார்கள். ஊதி வைத்திருந்த ஏர் பில்லோ, போர்வை சகிதமாக மிடில் பெர்த்தில் ஏறிய வைபவின் முகத்தில் இமயமலையில் ஏறி உட்கார்ந்து விட்டதோர் பெருமிதம். "அம்மா, ஸ்டோரி புக்.." என்றவனிடம் கைப்பையை திறந்து ஒரு ஹாரிட் ஹென்றி புத்தகத்தை கொடுத்துவிட்டு தனக்கான படுக்கையை  இடலானாள். பார்வையை மீண்டும் ஒரு முறை கூபே முழுவதும் ஓட விட்டாள், நிறைய குழந்தைகள் இருந்ததால், பெற்றோர் யாராவது ஒருவர் மாற்றி ஒருவர் கண்டிப்பாக நைட் முழுவதும் முழித்து இருப்பார்கள். கொஞ்சம் பயமின்றி இருக்கலாம் என தேற்றி கொண்டாள். இன்றைய கால கட்டத்தில் குழந்தை வளர்ப்பில் அவ்வளவு விழிப்புடன் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோமே! 

கொண்டு வந்திருந்த பையை அவன் கீழே விழுந்து விடாமல் இருப்பதற்கு ஏதுவாக முட்டு கொடுத்து வைத்து விட்டு அவனுக்கு குட் நைட் சொல்லி தன் பெர்த்தில் படுத்தாள். 8 வருடமாக குறுக்கி கொண்டு, காற்று கூட புக இடமில்லாமல் இருந்த பெர்த் இன்று மிகவும் விசாலமாக இருப்பது போன்று தோன்றியது அனுவிற்கு. மணி பத்து தான் ஆகி இருந்தது, எப்படியும் உடனே தூக்கம் வராது, எனவே மொபைலை எடுத்து நோண்டி கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து வைபவ் உறங்கி விட்டானா என அவன் பக்கம் திரும்பி பார்த்தாள். அவன் உறங்காமல் விழித்து கொண்டே அசையாமல் கண்ணை மூடி படுத்திருப்பதில் கில்லாடி, எனவே அவள் படுத்திருந்த இடத்தில் இருந்து அவன் உறங்கி விட்டானா என கண்டு பிடிக்க முடியவில்லை. பேசாமல் இன்றிரவு அவனை கண்டு கொள்ளாமல் விட்டு விட வேண்டியது தான் என நினைத்து கொண்டாள்.

சில்லென்று வீசிய தென்றலும், ரயிலின் மெல்லிய தட தட ஓசையும் அனுவை மெல்ல மெல்ல அதன் வசப்படுத்த துவங்கின. மொபைலை பைக்குள் வைத்துவிட்டு குப்புற படுத்து வேடிக்கை பார்க்கலானாள். அது சித்ரா பௌர்ணமியின் முந்தின நாள், ரம்மியம்மான நிலவொளி, தெளிவான வானம், அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மினுக்கிய நட்சத்திரங்கள், அவ்வப்போது ஒரு சிறிய கீற்றாய் மின்னலின் ஒளி, ரயிலின் வேகத்திற்கு ஈடு கொடுத்து எதிர் திசையில் ஓடிய காட்சிகள்!! காட்சிகள் மாறினாலும் ரம்மியம் மாறவில்லை. அவ்வப்போது ரயில் ஸ்டேஷனில் நிற்கும் போது கேட்ட பால், டீ, சாயா என்ற குரல் அனுவை பல வருடங்கள் பின்னோக்கி அழைத்து சென்றது.

பள்ளி, கல்லூரி படிக்கும் காலங்களில் இரவு நேர பேருந்து பயணங்களின் போது, பேருந்து நிலையங்களில் நிறுத்தும் சமயம் அவளது தந்தை சூடான வேகவைத்த கடலை அல்லது வறுகடலை வாங்கி தருவார். இரவு நேர உலகிற்கு என்று ஒரு அழகு உண்டு, எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், நிதானமாக இருப்பது போல தோன்றும். அதிலும் இது போன்ற ஒரு இரவு நேர ஜன்னலோர பயணம், அத்தி பூத்தார் போல என்றோ ஒரு நாள் கிடைக்கும் தருணம். அதை துளி கூட விடாமல் மொத்தமாக வாரி கொள்ள மனம் எத்தனித்தது, கண்கள் இமைக்க மறந்தன.  இந்த ஒரு இரவிற்கு மட்டும் நான் ஒரு மினியானாக  மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும். இந்த பெர்த்தில் உட்கார்ந்து கொண்டு வர முடியுமே என சிறு பிள்ளைதனமாக தோன்றினாலும் ஏசி காரும், ஸ்லீப்பர் பஸ்ஸும் தர முடியாத சுகமல்லவா அது!!!

Monday, April 22, 2019

பம்பரம் - பகுதி 1

 "அப்பா என் பிரெண்ட் ஒரு பம்பரம் வச்சிருக்கான், அது ரொம்ப சூப்பர்'ஆ இருக்கு. எனக்கும் அது மாதிரி ஒண்ணு வாங்கி தருவீங்களா?"  என ஆஃபீஸிலிருந்து வீட்டிற்குள் நுழைவதற்கு முன்னே காலை கட்டி கொண்டு கேட்ட மகனை வாரி அணைத்தபடி "வாங்கித்தறேனே" என்றான் தருண்.  பொதுவாக தருண் மிகவும் தாமதமாக தான் அலுவலகத்தில் இருந்து வருவான். அன்று தலை வலி மண்டையை பிளந்து கொண்டிருந்ததால் சீக்கிரமே கிளம்பி வந்திருந்தான். பசி வேறு வயிற்றை கிள்ளியது. "மதியத்தில் இருந்து மாறி மாறி மீட்டிங், கால்ஸ் னு பயங்கர வேலை இன்னைக்கு. காபி குடிக்க கூட நேரமில்லை அனு" என சொன்னவனிடம் "சப்பாத்தி சூடாக போட்டு வைத்திருக்கிறேன், சீக்கிரம் ரெப்பிரெஷ் பண்ணிட்டு வாங்க" என்றாள்.

"இன்னைக்கு டின்னர்  டைம்  ஜாலியா இருக்குப்பா நீங்க சீக்கிரமே வந்துட்டதால" என்று சொன்ன வைபவ்'ன் தலையை செல்லமாக வருடியபடி பேசிக்கொண்டே இரவு உணவை சாப்பிட்டு முடித்தனர் மூவரும்.  தருணின் தலை வலியும் சற்றே தேவலாம் போலிருந்தது. அன்று அவனும் வைபவுடன் சேர்ந்து சீக்கிரமே உறங்கி விட்டான். மறுநாள் மறக்காமல் அவன் சொன்னபடி வைபவ்'ஐ கூட்டி போய் அவன் கேட்ட பம்பரத்தை வாங்கி கொடுத்தான். அது ஒரு பிளாஸ்டிக் பம்பரம், நூல் போன்ற ஒன்றை இழுத்து விட்டால் மேலிருக்கும் பம்பரம் சுற்றும். தான் கேட்ட பம்பரம் கிடைத்ததில் வைபவ்'ற்கு மட்டற்ற மகிழ்ச்சி. "நா இப்பவே போய் என் பிரெண்ட் கூட விளையாடவாம்மா ப்ளீஸ்" என ஆசையாக கேட்டவனை "சரி போய் காரிடோரில் விளையாடுங்கள்" என்று அனுப்பி விட்டு அன்றிரவு ஊருக்கு போவதற்கு தேவையானவற்றை எடுத்து பேக் செய்ய ஆரம்பித்தாள்.

சிறிது நேரத்திற்கெல்லாம் வைபவ் "அப்பா இந்த பம்பரத்தின் நூல் சிக்கி விட்டது, சரியாகவே விட முடியவில்லை" என சிணுங்கியபடி வந்தான். அதை சரி செய்து கொடுத்து விட்டு "இந்த பம்பரம் இப்படி தான் டா ஆகும்.  வேற ஒரு டைப் ஆப்  பம்பரம் இருக்கு, அது இன்னும் சூப்பர்'ஆ இருக்கும். "நாம இந்த வீக்எண்டு ஊரில் வாங்குவோம்" என்று சொல்லி  சமாதான படுத்தி வைத்தான். அனுவும், வைபவும் முதலில் கிளம்பி செல்ல இரண்டு நாள் கழித்து தருண் கிளம்பி வந்தான். காலையில் கண் விழித்து தருணை பார்த்ததுமே "பம்பரம் வாங்க நாம எப்ப போலாம்பா?" என்று வைபவ் கேட்டான். "போலாம் டா, இன்னைக்கு எப்ப டைம் கிடைக்குதோ அப்ப போலாம்" என சொன்னாலும் அன்று நாள் முழுவதும் பிஸி'யாகவே போனதால் மாலை 5 மணிக்கு மேல் தான் கடைக்கு கூட்டி போக முடிந்தது. வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் 2 கடைகளில் கேட்ட போதும் "பம்பரமெல்லாம் இப்ப யாருங்க கேக்கறாங்க, பஜார் ல கெடைக்குதான்னு பாருங்க"  என்று பதில் வந்தது. 

"சரி டா, நம்ம 7.30 மணிக்கு அண்ணாவை பஸ் ஸ்டாண்டில் டிராப் செய்ய போகும்போது வாங்குவோம்" என மறுபடி தருண் சொன்னான். "வேணும்னா பைக் எடுத்துட்டு போய் வாங்கிட்டு வந்துருங்க மாப்பிளை, நா கொஞ்ச நேரம் கழிச்சு கெளம்பிக்கறேன்" என அனுவின் அண்ணா சொல்ல, "பரவால்ல மச்சான், எப்படியும் கொஞ்ச நேரத்துல வெளில போகணும்ல அப்ப போய் வாங்கிக்கறேன். உங்களுக்கு டைம் ஆச்சுல நீங்க கிளம்புங்க" என தருண் சொன்னான்.  "ஆ, இப்பவே எனக்கு விளையாடனும் போல இருக்கே" என கேட்ட மகனை சமாதான படுத்துவது அவ்வளவு கஷ்டமாக இல்லை.  அவனது ஆச்சி வீடு அந்த காலத்து மச்சி வீடு. வைபவிற்கு அந்த வீடு மிகவும் பிடிக்கும், மாடி அறை, மரத்திலான படிக்கட்டுகள், கார் பார்க்கிங், திறந்த வெளி,  மாடியிலிருந்து பார்த்தால் முற்றம் வழியாக கீழே இருப்பவர்களை பார்க்கலாம், பக்கத்திலேயே மாமா வீடு என இங்கும் அங்கும் ஓடி கொண்டே இருப்பான். அதனால் அன்றும் அவன் பம்பரத்தை மறந்து விட்டு விளையாட போய் விட்டான்.  சிறிது நேரத்தில் காலிங்க் பெல் சத்தம் கேட்க, கதவை திறக்க சென்ற அனுவின் அண்ணண் மகன் ஒரு பம்பரத்தோடு உள்ளே வந்தான். அதை பார்த்த அனு "வைபவ் பாருடா, மாமா உனக்காக பம்பரம் வாங்கி கொண்டு வந்து குடுத்துட்டு போயிருக்காரு என சந்தோஷத்தில் கூவ", வைபவ் துள்ளி குதித்து ஓடி வந்தான்.  வாயெல்லாம் பல்லாக "தாங்க் யு மாமா" என்று கூறியபடி புது பம்பரத்தை பார்கலானான்.

Part - 2

பம்பரம் - பகுதி 2

  Part 1

பளிங்கு போன்ற வெள்ளை நிறத்தில், கூம்பு வடிவத்தில் இருந்த அந்த பம்பரம் பிளாஸ்டிக்கால் ஆனது. பல வருடங்களுக்கு பிறகு பம்பரத்தை பார்த்த தருணும், முதன் முதலாக பம்பரத்தை பார்த்த வைபவும் நான் தான் முதலில் விடுவேன் என போட்டி போட்டு கொள்ள, வீடு விளையாட்டு மைதானமானது. தருண் எவ்வளவு முயற்சி செய்தும் சரியாக விட முடியவில்லை. "உங்களுக்கே வர மாட்டேங்குதே குட்டி பையனுக்கு எப்படி இதெல்லாம் பொறுமையாக செய்ய முடியும்" என அனு அங்கலாய்த்துக்கொண்டாள். "இது ஒன்றும் அவ்வளவு கடினம் இல்லை, அவன் ஈஸியா கத்துக்குவான்" என சொல்லி கொண்டே மீண்டும் முயற்சித்தான். "ஒரு வேளை டைல்ஸ்ல வராதோ, கார் பார்க்கிங்ல போயி ட்ரை பண்ணுவோம் சித்தப்பா" என ஜெகன் கேட்டான்.

ஜெகன் அனுவின் அக்கா பையன், பெங்களூரில் தங்கி வேலை பார்க்கிறவன். இப்போது ஜெகன் லாவகமாக பம்பரத்தை விட அது மிக அழகாக சுற்றியது. "அட அப்ப தரை தான் காரணம்" என்றவாறே தருண் மீண்டும் முயற்சித்தான். ஆனால் சரியாக வரவில்லை. "என்னப்பா இது இப்படி ஆட்டங்காட்டுது, நான் விடுவதாக இல்லை" என மறுபடி விட்டான். இந்த முறை டைல்ஸ்'லேயே அழகாக சுற்றியது. நானும் ட்ரை பன்றேன் என வைபவ் வர, அவனது பிஞ்சு கைகள் அந்த பம்பரத்தையும் கயிறையும் எப்படி பிடிக்க வேணும் என்று கற்று கொண்டிருந்தன. "நீயும் ட்ரை பண்ணு சக்தி" என அனுவின் அண்ணன் மகனிடம் தருண் பம்பரத்தை கொடுத்தான். இரண்டு முறை முயற்சித்து பார்த்தான், சரியாக வரவில்லை.  அனுவிற்கும் ஆசையாக இருந்தது, கயிற்றை சுற்றி எப்படி விட வேண்டும் என்று கவனமாக கேட்டுக்கொண்டு அதே மாதிரி செய்தாள், பம்பரம் மிகவும் அருமையாக 'தலை கீழாக' சுற்றியது. "சூப்பர் அனு, பக்கா... உன்னால் மட்டும் தான் இப்படி அருமையாக செய்ய முடியும்" என தருண் அவளை கலாய்த்தான்.

அவனை பொய் கோபத்துடன் முறைத்தபடி "அப்பா, நீங்க ட்ரை பண்ணுங்க" என அவள் தந்தையிடம் கொடுத்தாள்.  "இல்லடா, நானெல்லாம் விட்டு பல வருடம் ஆகிவிட்டது, நான் வேடிக்கை பார்க்கிறேன்" என்றவரை "பரவால்லப்பா, ஒரு தரம் ட்ரை பண்ணுங்கள்" என கூறி பம்பரத்தை அவர் கையில் அனு கொடுத்தாள். அவருக்கும் அந்த பம்பரம் டிமிக்கி கொடுத்தது. ஆனால் ஒருவரும் விடுவதாயில்லை, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஒருவர் மாற்றி ஒருவர் முயற்சித்து கொண்டே இருந்தனர். "டேய் ஜெகன் உனக்கு பஸ்ஸுக்கு டைம் ஆகிருச்சு பாரு, சீக்கிரம் கெளம்பு" என ஜெகனின் அம்மா கூற இன்னும் ஒரு தடவ, இன்னும் ஒரு தடவ என்று பல தடவைகள் போய் கொண்டே இருந்தன. வைபவ் பைக் ஹார்ன் அடித்தபடி "அண்ணா சீக்கிரம் வாங்க நேரமாச்சு" என்று கூப்பிட, ஜெகன் "சரி நம்ம சென்னைல மீட் பண்ணும்போது ஆட்டத்தை தொடருவோம்" என்று சொல்லிவிட்டு எல்லாருக்கும் பை சொல்லி புறப்பட்டான்.

அன்றிரவே அனுவும் புறப்பட வேண்டியிருந்ததால், சாப்பிட்டு விட்டு பேக்கிங்கை முடிக்கலாம் என அவளும் பிற வேலைகளை பார்க்கலானாள். வீடு திரும்பிய தருண் இம்முறை மேலும் 4 பம்பரங்களை வாங்கி கொண்டு வந்திருந்தான். இந்த முறை மரத்தினாலான பம்பரம் தேடி கண்டு பிடித்து வாங்கிவிட்டேன் என வெற்றி களிப்போடு சொன்னான். "அது சரி எதுக்கு 4?" என அனு கேட்டதற்கு, "இருக்கட்டுமே என்ன இப்ப? அவன் நண்பர்களுக்கும் கொடுக்கட்டும்" என்றவாறே மரத்திலான பம்பரத்தில் கயிற்றை சுற்றலானான். "சாப்பிட வரலையா, ட்ரெயினுக்கு நேரமாகிருமே" என்றாள் அனு.  "ஒரே ஒரு தடவை" என்று சொல்லிவிட்டு விட அந்த வழவழப்பான தரையில், எந்த ஆர்ப்பாட்டமும் ஆரவாரமும் இல்லாமல், ஒரே சீராக, தங்கு தடையின்றி, அந்த பம்பரம் சுற்றியது. ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த வைபவ் ஒரு நிமிடம் அப்படியே அதன் அருகில் உட்கார்ந்து இரண்டு கன்னங்களிலும் கை வைத்துக்கொண்டு அதை ரசித்து பார்கலானான்.

"நா இப்ப தான் முதல் தடவையா ஒரு பம்பரம் சுத்தறத பாக்கறேன், எவ்வளவு அழகா இருக்கு. அந்த பிளாஸ்டிக் பம்பரம் கூட டைல்ஸ் நடுல இருக்க கோடுல எல்லாம் தட்டு தடுமாறி சுத்துச்சு. ஆனா இது எவ்ளோ அழகா சுத்துதுல! ஓல்ட் இஸ் கோல்ட்... அதுல மாற்று கருத்தே இல்ல" என்று வியந்தாள். "சரி சரி, மட மடன்னு சாப்டுட்டு கிளம்பலாம். ஆட்டோ 8.40க்கு வர சொன்னா சரியா இருக்கும்ல" என்றபடியே வைபவிற்கு தோசையை ஊட்டி விடலானாள். கிச்சனில் இருந்து வந்த அம்மாவும் பம்பரத்தை கையில் எடுத்து கயிறை சுற்றி ஒரு முறை முயற்சி செய்ததும், வீடே அன்று 'பம்பர'களை கட்டியிருந்தது. "பேக் எல்லாம்  ரெடியா இருக்கா?" என அப்பா கேட்க "எல்லாம் ரெடீப்பா, ஆட்டோ வர 10 நிமிஷம் இருக்கு. இன்னும் கொஞ்ச நேரம் பம்பரம் விடலாம்" என்று அனு சிரித்தபடி கூற, பம்பர களேபரம் தொடர்ந்தது.

அடுத்த நாள் வீட்டிற்கு சென்று ரிபிரெஷ் ஆனதும், தருண் பம்பரத்தை மீண்டும் எடுத்தான். "வைபவ் இது உனக்கு, என்கிட்ட இருக்கத கேட்ட பாத்துக்கோ" என செல்லமாக கூற.. மீண்டும் பம்பரம்...

இப்போது வைபவும் பம்பரம் விட கற்று கொண்டான். "அப்பா, சுத்துது" என மகிழ்ச்சியில் குதித்தான். "ஏய், நானும் ஒருக்க ட்ரை பன்றேன் டா" என அனு கேட்டாள்.  4, 5 முறை முயற்சித்தும் எப்போதும் போலவே தலை கீழாக தான் சுத்தியது. "நீ உன் கையை லேசாக திருப்பனும், அப்ப தான் அது நேராக சுற்றும்" என்று தருண் மீண்டும் பொறுமையாக சொல்லி குடுத்தான். இதோ, அவளுக்கும் பம்பரம் வெற்றிகரமாக சுற்றிவிட்டது. "ஹே.." என மூவரும் ஒரே நேரத்தில் உற்சாக குரல் எழுப்பினர். இப்போது வைபவ் மறுபடியும் அதே கேள்வியை கேட்டான். "அம்மா, நா பம்பரம் எடுத்துட்டு போயி காரீடோர்ல  விளையாடட்டுமா". அவனது நண்பனும் சேர்ந்து கொள்ள, "இந்தாடா, இது உனக்கு என்று கூறியபடி வைபவ் நண்பனுக்கும் ஒன்று கொடுக்க, அவர்களது மகிழ்ச்சி இரட்டிப்பானது.

நம்மில் பலரும் இந்த சந்ததியினருக்கு பாரம்பரியம் தெரியவில்லை, விட்டு கொடுப்பதில்லை, வெளியில் சென்று விளையாடுவதில்லை  என குறை பட்டு கொள்கிறோம். உண்மையில் அவர்களுக்கு டிவியையும், மொபைல் போனையும், சினிமாவையும் சிறு வயதிலேயே பெற்றோராகிய நாம் தானே அறிமுகப்படுத்தினோம்? அவர்களுடன் செலவிட நமக்கு தான் நேரமும் பொறுமையும் இருப்பதில்லை என்பது தானே உண்மை. முடிந்த வரையில் நம்மாலான முயற்சி செய்து குழந்தைகளை குழந்தைகளாகவே வளர விடுவோமே.  

Learning Beyond Textbooks - Life Skills - Child Growth

#Learning_Beyond_Textbooks #Life_Skills A home is the first environment where children can playfully learn a plenty. Traditional textbook le...