Monday, December 2, 2019

மகிஷா - பாகம் 7

இருபத்து இரண்டு மணி நேர பயணம் முழுக்க மகி மெனக்கெட்டு அவளது எண்ணங்களை வேறு விஷயங்களில் திணித்தாள். ஞாயிறு மதியம் (சிகாகோ நேரம்) 2 .45 க்கு சரியாக அந்த விமானம் தரையிறங்க மகி அவளது கேபின் பேகையும்  லேப்டாப்  பேகையும் எடுத்துக்கொண்டு இறங்குவதற்கு தயாரானாள். ஒவ்வொரு முப்பது செகண்டிற்கும் ஒரு விமானம் டேக் ஆப் அல்லது லேண்டிங் செய்யும் அந்த ஓஹர் இன்டர்நேஷனல் ஏர்போர்ட், யுஎஸ்ஸின் பிஸியான ஏர்போர்ட்களின் வரிசையில் மூன்றாவது இடத்திலிருந்து. கிறிஸ்துமஸ்- நியூ இயர் கொண்டாட்டங்கள் முடிந்து மக்கள் அவரவர் வேலைக்குத்திரும்பி இருந்தனர் போலும். இம்மிகிரேஷனிலும் கஸ்டம்ஸிலும் பெரிய க்யு நின்றது. அதை முடித்து விட்டு அவளது செக் இன் பேக்கை கலெக்ட் செய்வதற்காக சென்றாள். அந்த பேக்கேஜ் பெல்ட் ஓயாமல் சுற்றிக்கொண்டிருக்க அதிலிருந்த அவரவர் சூட்கேஸை எடுப்பதற்காக பலரும் காத்துக்கொண்டிருந்தனர். மகியும் அவளது சிவப்பு நிற ஈகிள் கிரீக் வருவதற்காக காத்திருந்தாள்.  அந்த மார்பிள் தரையில் ட்ராலி வீல்கள் டகடகடக என உருளும் சத்தம் ஓயாமல் கேட்க, எங்கோ ஒரு குழந்தை வீறிட்டு அழுதது. அங்கங்கே வீல் சேரை தள்ளிக்கொண்டு ஏர்போர்ட்  ஸ்டாப்ஸ் சென்றுகொண்டிருந்தார்கள். மகி அவற்றை கவனித்தவாறே அவளது லக்கேஜ்ஜூக்கு சிறிது நேரம் வெயிட் பண்ணினாள். தலை குப்புற கவிழ்ந்து ஊர்ந்து வந்த அவளது  செக்கின்  பேக்கை அதன் ஹாண்டிலை பிடித்து தூக்கி அவள் எடுத்து வைத்திருந்த டிராலியில் வைத்து தள்ளி எக்ஸிட்டை நோக்கி நடந்தாள்.

இன்டர்நேஷனல் அரைவலில் அவளது அப்பா காத்திருப்பதாக கால் செய்ய லாண்ட்மார்க் கேட்டுக்கொண்டு அந்த திசையில் நடந்தாள். அந்த சிவப்பு நிற நிஸ்ஸான் மாக்ஸிமாவின் அருகே அவளது அப்பா நிற்பதை பார்த்ததும் கையசைத்தபடி "ஹாய் அப்பா" என்று சொல்லிக்கொண்டே அவரிடம் சென்றாள். "வா டா, ஜர்னி எல்லாம் எப்படி இருந்துச்சு?" என்று கேட்டபடி அவளை தோளோடு அணைத்துக்கொண்டார். "இண்டியா வாஸ் ஆஸ்ஸம், பட் ஜர்னி வாஸ் வெரி டயர்சம்" என்றாள் சிரித்தபடி.  அவர் காரின் ட்ரைவிங் சீட்டில் அமர்ந்து பூட்டை(boot) ஓபன் செய்ய லக்கேஜ்ஜை உள்ளே வைத்து மூடினாள். பின்னர் காரின் வலது பக்க முன்னிருக்கையில் அமர்ந்து சீட் பெல்ட்டை அணிந்துகொண்டாள். அவளது தலை முடியை கவ்விக்கொண்டிருந்த க்ளட்சரை அவிழ்த்து ஃப்ரீ ஹேர் ஆக்கிவிட்டாள். அவர்களது அபார்ட்மெண்ட் இருந்த  நேபர்வில்லிற்கு செல்வதற்கான அந்த முப்பது நிமிட பயணம்  முழுவதும் அப்பா சென்னையை பற்றி கேட்ட எல்லா கேள்விகளுக்கும் நிதானமாக பதில் சொல்லிக்கொண்டு வந்தாள்.  

அவர்கள் பார்க்கிங்கில் காரை பார்க் செய்த சத்தம் கேட்டு அவளது அம்மா வீட்டின் கதவை திறந்து வைத்து, வீட்டிற்குள் நுழைந்த மகியை அணைத்து முத்தமிட்டாள். "அம்மா மதியம் பாகற்காய் ஃப்ரையா? வாசம் மூக்கு வழிய போயி வயித்தை கிள்ளுது" என்றாள். "அம்மா உனக்கு பிடிச்ச வாழைக்காய் பருப்பு, பாகற்காய் ஃப்ரை, சர்க்கரை பூசணி பொரியல் செஞ்சு உனக்காக ஹாட் பாக்கில் போட்டு வச்சிருக்காங்க" என்றார் அப்பா. "இதோ ரெண்டு நிமிஷத்துல போயி குளிச்சு ஃப்ரெஷ் ஆயிட்டு வரேன், உடம்பெல்லாம் பயங்கரமா வலிக்குது" என்று சொல்லிக்கொண்டே சோபாவில் சரிந்து காலை நீட்டி உட்கார்ந்தாள்.    

"சரி மகி, சாப்டுட்டு நீ இன்னைக்கு சீக்கிரம் தூங்கு. அப்ப தான் நாளைக்கு ஆபீஸ்க்கு போக முடியும்" என்றாள் அம்மா. "ஓகே மா" என்று சொல்லியபடி எழுந்து அவள் அறைக்கு சென்றாள். சிறிது நேரத்தில் குளித்து நைட் சூட்டில் வந்து சாப்பிட உக்கார்ந்தாள். அம்மா பரிமாறிக்கொண்டே "மகி, இந்த வீக் சிகாகோ தமிழ் சங்கம் பொங்கல் செலிப்ரஷன்க்கு நிறைய வேல இருக்கு. ஐம்பதாவது வருஷம்ங்கறதால ரொம்ப க்ராண்டா செலிப்ரேட் பண்ணனும்னு பிளான் பண்ணிக்கிட்டு இருக்கோம். சோ நானும் அப்பாவும் ட்யூஸ்டேவே பிரேமா ஆண்ட்டி வீட்ல போயி ஸ்டே பண்ணலாம்னு இருக்கோம். டிஸ்கஸ் பண்றதுக்கு,  அரேன்ஜ்மெண்ட்ஸ் எல்லாம் பண்றதுக்கு வசதியா இருக்கும். நீயும் அங்க இருந்து ஆபீஸ் போறியா இல்ல இங்கயே மானேஜ் பண்ணிக்குவியா மகி?" என்றாள். "நோ மா, நா இங்கயே மானேஜ் பண்ணிக்குவேன். சாட்டர்டே மார்னிங் நா அங்க வரேன். சொல்ல மறந்துட்டேன், ரதியோட அக்கா எனக்கும் ஒரு சாரீ எடுத்துக்கொடுத்துருக்காங்க. பியுடிஃபுல்லா இருக்கு. நா அத அன்னைக்கு வியர் பண்ணிக்கறேன்" என்றாள். சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த விட்டு தூங்குவதற்கு அவள் ரூமிற்கு சென்றுவிட்டாள். 

 சூட்கேஸில் இருந்த துணிமணிகளை எடுத்து வைப்பதற்கு சோம்பலாக இருந்ததால் அவளது மொபைலையும் கைப்பையிலிருந்த நோக்கியா 1108'ஐயும் எடுத்துக்கொண்டு போய் கட்டிலில் விழுந்தாள். அந்த 1108 எப்போதும் அவளது கைப்பையில் இருக்கும். அதை கையில் வைத்தவாறே அஜியின் நம்பரை ஒருமுறை சொல்லிப்பார்த்தாள். இத்தோடு இந்த நினைப்பை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எண்ணி லைட் சுவிட்ச்சை ஆப் செய்தாள். இருந்த களைப்பில் உடனே உறங்கிவிட்டாள்.

காலை ஆறு மணிக்கு அலாரம் அடிக்க எழுந்து ஜாகிங் போய்விட்டு வந்து  ரெடியாகி ஆபீஸ் கிளம்பிவிட்டாள். அன்றும் அந்த வாரத்தில் அடுத்து வந்த நாட்களும் அவளை பிசியாக வைத்திருந்தன. அவளது அம்மாவும் அப்பாவும் செவ்வாய்க்கிழமையன்று வீட்டில் பொங்கல் வைத்து சாமி கும்பிட்டு விட்டு பிரேமா ஆண்ட்டி வீட்டிற்கு சென்றுவிட்டார்கள். 

சனிக்கிழமை மூன்று மணி முதல் தான் நிகழ்ச்சிகள் ஆரம்பம் என்றாலும் கோலப் போட்டியில் கலந்து கொண்டவர்கள் மட்டும் காலையிலேயே வந்து கோலம் போட ஆரம்பித்திருந்தார்கள். மகி மிக அழகாக ரங்கோலி போடுவாள். அவளும் கோலப்போட்டிக்கு பெயர் கொடுத்திருந்தாள். ரதியும் அவள் கணவன் வெங்கட்டும் அவர்கள் போகும் வழியில் மகியை பிக்கப் பண்ணிக்குவதாக சொல்லியிருந்தார்கள். மகி, ரதியின் அக்கா எடுத்துக்கொடுத்திருந்த புடவையும் அதற்க்கு தோதாக குந்தன் நெக்லஸ் செட்டும் அணிந்து தயாராக இருக்க, ரதியின் கார் வந்ததும் அதில் ஏறிக்கொண்டாள். ரதியும் அதே புடவையில் அதற்க்கு மாட்ச்சிங்காக சில்க் த்ரெட் செட் அணிந்திருந்தாள். "தோழிகள் ரெண்டு பெரும் இன்னைக்கு பயங்கரமா அசத்தறீங்களே" என்று வெங்கட் கலாய்க்க அவர்கள் அடுத்த இருபத்தைந்தாவது நிமிடத்தில் அந்த தமிழ் சங்கம் கட்டிடத்தின் பார்க்கிங்கில் காரை பார்க் செய்துவிட்டு மகியின் கோலத்திற்கான பொருட்கள் இருந்த பேக்கை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றார்கள். பிசியாக இருந்த அவளது அம்மாவையும் அப்பாவையும் பார்த்து தான் உடுத்தியிருந்த புது புடவையை காட்டிவிட்டு கோலம் போடும் இடத்திற்கு சென்று பதினோரு மணி வாக்கில் கோலத்தை ஆரம்பித்தாள்.

இரண்டரை மணிதொட்டே பலரும் வர ஆரம்பிக்க, அந்த சில்வர் நிற ஹோண்டா சிவிக், மேப்ஸ்'ஐ ஃபாலோ செய்து நேபேர்வில்லிற்குள் வந்துகொண்டிருந்தது. அதிலிருந்து பிங்க் லெஹன்கா அணிந்த லாவண்யா அவளுடைய ஐந்து வயது மகனை கார் சீட்டிலிருந்து பெல்ட்டை ரிலீஸ் செய்து இறக்கி விட, முன் சீட்டிலிருந்து குர்த்தா அணிந்த இரண்டு ஆண்கள் இறங்கினார்கள். ஒன்று பிரபு, மற்றொன்று AJ'வாகிய அஜய். ஆறடி உயரத்தில் மெரூன் குர்தாவும் வெள்ளை நிற பாண்டும் அணிந்திருந்த அஜய் "சிக்காகோவோட பிரசித்தி பெற்ற தமிழ் சங்கம் பத்தி நா நெறய கேள்வி பட்டிருக்கேன். லாவண்யாவோட அத்தை இன்வைட் செஞ்சதால இன்னைக்கு இந்த ஈவெண்ட்க்கு வர முடிஞ்சுது. அவங்களுக்கு தான் நன்றி  சொல்லணும்" என்றான். அன்றைய பொங்கல் கொண்டாட்டத்திற்கு அஜய், லாவண்யா, அவளது கணவன் பிரபு, மற்றும்  குழந்தையுடன் இண்டியானாபோலிஸிலிருந்து வந்திருந்தார்கள். பிரபுவும், அஜய்யும் ஒன்றாக வேலை செய்பவர்கள்.

அஜய்க்கு திருமணம் நிச்சயம் செய்து திருமண பத்திரிகை எல்லாம் அடித்து டிஸ்ட்ரிபூட் பண்ண ஆரம்பித்த பிறகு, எல்லாமே ரொம்ப வேகமாக நடப்பது போல உணர்ந்தான். அந்த அவசர திருமணம் சரியாக இருக்குமா என்ற கேள்வி வலுப்பெற்றுக்கொன்டே இருக்க, வீட்டிருந்த எல்லோரின் கோபத்திற்கும் ஆளாகி, ஆபீசில் அவனது மானேஜரிடம் கெஞ்சி ஒரு ஆன்சைட் பொசிஷன் வாங்கி அந்த திருமணத்தை தற்காலிகமாக தள்ளிப்போட்டான். அதில் அவனது அக்காவின் மாமியார் வீட்டில் மிகுந்த கோபம் கொண்டு இந்த சம்பந்தம் வேண்டாம் என்று அந்த பெண்ணிற்கு வேறு சம்பந்தம் பார்த்துவிட்டனர். இதில் அஜய்யின் அக்காவிற்கும் மாமாவுக்கும் அவன் மேல் மிகுந்த கோபம், சிறிது நாள் பேசாமல் கூட இருந்தனர். பிறகு அதெல்லாம் தணிந்தாலும், அதன் பிரதிபலிப்பு அவ்வப்போது இருந்து கொண்டு தான் இருந்தது. அப்படியொரு சமயத்தில் தான் விக்கி அஜய்யின் அக்காவிடம் நம்பர் கேட்க, அவனுக்கு கல்யாணம் ஆகிவிட்டதாக பொய் சொல்லி நம்பர் கொடுத்தார். இந்த பனிரெண்டு வருட யூஎஸ் வாழ்வில் அஜய்யின் ஒரே ஆறுதல் அவனுடன் வேலை பார்த்து பின்னர் நண்பனாக மாறிய பிரபுவும் அவனது குடும்பமும் தான். கிட்டத்தட்ட அஜய்யும் பிரபுவின் குடும்பத்தில் ஒருத்தனாகவே மாறி விட்டான் . எப்போதும் ஒன்றாக தான் இருப்பார்கள். அவர்களுடன் தான் இன்று அந்த பொங்கல் கொண்டாட்டத்திற்கு வந்திருந்தான்.  லாவண்யா அவள் அத்தைக்கு கால் பண்ண, இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவதாக சொன்னார். 

கார் பார்க்கிங்கில் இருந்து ரங்கோலி போட்டி நடந்த இடத்தை தாண்டி தான் அவர்கள் மெயின் ஹாலுக்கு செல்ல வேண்டியிருந்தது. கோலப்போட்டி முடிந்து, கோலங்கள் மட்டும் எல்லோரையும் வரவேற்க்கும் விதமாக நிற்க, சிலர் அந்த கோலங்களின் முன் நின்று போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்கள். கோலத்தை பார்த்துக்கொண்டே சென்ற அஜயின் கண்களை ஒரு கோலம் மிகவும் வசீகரித்தது. வீடு, பொங்கல் பானை, கரும்பு, சூரியன், நெற்பயிர்கள், பசு என்று தத்ரூபமாக இருந்த அந்த கோலத்தை பார்த்ததும் அஜய்க்கு மகிஷாவின் ரங்கோலிகள் நினைவிற்கு வந்தது. லாவண்யாவும் பிரபுவும் அவனை பார்க்க ஒன்றுமில்லை என்பது போல் தோள்களை குலுக்கிக்கொண்டான். அந்த பெரிய ஹாலின் ஒருபுறத்தில் காலியாக இருந்த இருக்கையில் மூவரும் அமர்ந்தார்கள். மைக்கில் யாரோ ஒருவர் பேசிக்கொண்டிருந்தார், அன்றைய நிகழ்ச்சிகள் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார்.  பெரிய ஹால் என்பதால் எல்லாருக்கும் தெரியும் வண்ணமாக அங்கங்கே டிஸ்ப்பிலே வைத்திருந்தார்கள். "டேய், இந்த ஊர்ல இது மாறி ஏதாச்சும் செலெப்ரஷன் அப்ப தான் இப்படி ட்ரடிஷனலா அழகை ரசிக்கலாம்" என்று பிரபு கிசுகிசுக்க, லாவண்யா புருவத்தை உயர்த்தினாள். "அதானே, இதெல்லாம் எவ்ளோ ரகசியமா பேசினாலும் உங்க காதுல கரெக்டா விழுமே!! நா நம்ம அஜய்க்கு உபயோகப்படும்னு சொன்னேன்மா" என்று அசடு வழிந்தான் லாவண்யாவின் கணவனான பிரபு. அஜய் இதெல்லாம் உனக்கு தேவையா என்பது போல நக்கலாக ஒரு பார்வை பார்த்துவிட்டு எல்ஈடி டிஸ்பிலேவை பார்த்தவன் சில கணங்கள் இமைக்க மறந்தான்.

அங்கே கிளோஸ் அப்பில் வெளிர் பச்சை நிற ஜார்ஜ்ஜெட் புடவையில், மகியே தான் அது. நேர்த்தியாக கட்டிய புடவையில், யாருடனோ மலர்ந்த முகத்துடன் கையை ஆட்டி ஆட்டி அவள் பேசிய விதம் ஏதோ அவள் காற்றில் நடனம் ஆடுவதை போல இருந்தது. அனால், மகி இங்கே எப்படி என்று யோசிப்பதற்குள்  ஸ்கிரீனில்  காட்சிகள் மாறின. "டேய் வந்துடறேன் இரு" என்று சொல்லிவிட்டு இந்த ஹாலில் எப்படி தேடுவது என்று யோசித்தபடியே இங்கும் அங்கும் தேட, ஸ்டேஜ்க்கு அருகில் ஸ்கிரீனில் காட்டிய அதே மகி, அவளருகில் அதே டிசைனில் லைட் யெல்லோ கலர் புடவை கட்டிய இன்னொரு பெண். அவர்கள் இருந்த இடத்திற்கு அருகில், ஆனால் அவர்கள் கண்ணுக்கு தெரியாதபடி நின்று கொண்டு கொஞ்ச நேரம் மகியையே பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது கோலப்போட்டிக்கான பரிசுகள் அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. மூன்றாம், இரண்டாம் பரிசுக்கு பிறகு முதல் பரிசு மிகவும் தத்ரூபமாக ஒரு பொங்கல் நாளின் காட்சியை தன் கோலத்தின் மூலம் நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்திய மிஸ் மகிஷா என்று அறிவிக்க மகி மேடையேறி பரிசை வாங்கிக்கொண்டாள்.  டிட் ஐ ஹியர் இட் கரெக்ட்லி, மிஸ் மகிஷாவா? மகி உனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையா? நீ எங்கோ ஹாப்பியா இருக்கேன்ல நெனச்சுக்கிட்டு இருந்தேன், நீ எப்படி இங்க?  போய் பேசலாமா? வேண்டாமா? என்று  தனக்குளேயே கேள்விமேல் கேள்வி கேட்டுக்கொண்டான்.

மகி சிறிது தூரம் சென்ற அடுத்த நொடியில் வேகமாக ஓடி ரதியிடம் "எக்ஸ்க்யுஸ் மீ" என்றான், "எஸ்" என்று புன்னகையோடு திரும்பிய ரதியிடம் "நீங்.. நீங்க மகி.. மகியோட ஃப்ரெண்டா?" என்றான். "யா... பட் நீங்க... வெயிட் எ செகண்ட். ஆர் யு பை எனி சான்ஸ் அஜய்?" என்றாள். "அப்போ மகி என்னை பத்தியும் உங்ககிட்ட சொல்லியிருக்காளா?" என்று சொன்னவனின் முகத்தில் ஏதோ ஒன்றை ரதி பார்த்தாள். அது ஒரு நிம்மதி பெருமூச்சா, சந்தோஷமா? "ஓ மை காட், ஐ கான்ட் பிலிவ் மை ஐஸ்!! பட் நீங்க இண்டியால தான இருக்கறதா மகி சொன்னா?" என்றாள் ஆச்சர்யம் மாறாமல். "ஐ கேம் ஹியர் டுவெல் இயர்ஸ் அகோ. பட் நா மகி இந்தியால இருக்கறதா நெனச்சிட்டு இருந்தேன்" அஜய் சொல்ல, "அவளும் இங்க வந்து பனிரெண்டு வருஷம் ஆச்சு. பை தி பை உங்க வைப்ஃ.." என்று ரதி இழுக்க, "அவங்களை தான் இப்ப தேடிக்கிட்டு இருக்கேன்" என்றான்.  "எக்ஸ்க்யுஸ் மீ" என்று ரதி முடிக்கும் முன் "மகி..." என்றான். "ஹையோ என்னால நம்பவே முடியல. நீங்க ரெண்டு பெரும் ஒரே மாதிரி, ஒருத்தர ஒருத்தர் நெனச்சுக்கிட்டு.. சினிமால பாக்கற மாறி இருக்கு. வெயிட் நா மகிய கூப்பிடரேன். எனக்கு அவளோட சந்தோஷத்தை பாக்கணும்" என்றாள் உணர்ச்சிவசப்பட்டவளாய்.

"நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?" என்றான் அஜய். "தயவு செஞ்சு சொல்லுங்க, என்ன வேணும்னாலும் செய்யறேன்" என்றாள் ரதி. "எனக்கு கொஞ்சம் குங்குமம் வேணும், உங்க போன் நம்பர் வேணும். நா உங்க நம்பர்க்கு கால் பண்றேன், மகிகிட்டே போனை குடுங்க ப்ளீஸ். அப்புறம் இந்த நோக்கியா 1100'வை அவகிட்ட காட்டுங்க" என்றபடி பான்ட் பாக்கெட்டிலிருந்து அந்த போனை எடுத்து அவளிடம் குடுத்தான். அதை பார்த்ததும் ரதியின் உள்ளமே கரைந்து விட்டது. "ரியல்லி, நீங்க ரெண்டு பெரும் மேட் ஃபார் ஈச் அதர் தான்" என்றாள். "அப்புறம் அவளை அந்த சின்ன விநாயகர் கோவில்கிட்ட வரச்சொல்லுங்க" என்று சொல்லி அவளது நம்பர் வாங்கிக்கொண்டான். 

அஜய் ரதிக்கு கால் பண்ண, ரதி மகி இருக்கும் இடம் தேடி சென்று "மகி, உனக்கு போன்" என்றாள். "எனக்கா? உன் நம்பர்ல யாரு கூப்பிடறது?" என்றபடி வாங்கி "hello" என்று சொல்ல பன்னிரெண்டு வருடம் கழித்து கேட்ட மகியின் குரலில் அஜியின் உள்ளம் உருகியது. சிறிது நேரம் பேச்சே வரவில்லை அவனுக்கு. மகி மறுபடி "hello" என்று சொல்ல, அஜியும் "ஹலோ மகி" என்றான். அடுத்த வினாடியே மகியின் மூளைக்குள் கரண்ட் பாய்ந்தது போல ஷாக் அடிக்க, அவளது கண்கள் மகிழ்ச்சியையும் அதிர்ச்சியையும் ஒன்றாக பிரதிபலிக்க, ரதி நோக்கியா 1100'வை மகியின் கையில் கொடுத்தாள். அடுத்த நொடி மகிக்கு ஏதோ புரிந்தது போல் இருக்க, கண்கள் கலங்க, உதடுகள் துடிக்க, கை, கால்கள் எல்லாம் நடுங்க, உடல் சிலிர்க்க,  எங்கே என்பது போல கையால் சைகை செய்தாள். ரதி வெளியிலிருந்து விநாயகர் கோவிலை காட்ட மகி ரதியிடம் போனை குடுத்துவிட்டு கோவிலை நோக்கி ஓடினாள்.

அவள் ஓடுவதை ஒரு சிலர் என்ன ஆச்சு என்பது போல் திரும்பி பார்க்க, ரதி வேகமாக போய் மகியின் அப்பா அம்மாவிடம் விஷயத்தை சொல்லி அவர்களை கோவிலுக்கு அருகில் கூட்டி சென்றாள்.  அங்கே அஜி ஒரு கையில் பூவும், மறு கையில் குங்குமச்சிமிழும் வைத்துக்கொண்டு மகியையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி நின்றான். அவள் அருகில் வர அஜய் முட்டி போட்டபடி "இது தான் ஆண்டவன் நமக்கு எழுதியிருக்கிறார் போல மகி. இந்த பூவையும் குங்குமத்தையும் வாங்கிக்குவியா?" என்றான். அஜியை பார்த்த மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும் அவனுக்கு தான் கல்யாணம் ஆகிவிட்டதாக சொன்னார்களே என்று மகி குழப்பத்தில் பார்க்க, "நானும் இன்னும் 'மிஸ்' தான் மகி,  ஷால் வி கெட் மாரீட்?  சாரி, சாமந்தி பூ கிடைக்கல. ஹால்ல டெகரேஷன்ல இது தான் இருந்துச்சு" என்றான் கண்ணடித்தபடி. "சட்டென நனைந்தது நெஞ்சம், சர்க்கரை ஆனது கண்ணீர்" என்று ஸ்டேஜில் யாரோ மைக்கில் பாட, நீட்டியிருந்த அவன் இரு கைகளையும் பற்றியபடி "இந்த கரங்களை இனி எப்போதும் விட மாட்டேன்" என்று நா தழு தழுக்க சொல்லியபடி அவள் முகத்தை அவன் கைகளில் புதைத்துக்கொண்டாள். மகியின் அம்மா அப்பாவும் உணர்ச்சிவசப்பட்டிருக்க, அப்பா தான் "என்ன மகி, இப்ப அஜய் வீட்ல பேசலாமா?" என்றார். "கண்டிப்பா பேசுங்கப்பா, ப்ளீஸ்" என்றாள் மகி ஆனந்த கண்ணீர் நிறைந்த கண்களுடன்.  இருவரையும் அவள் அப்பா தோளோடு அணைத்து "ஸ்டே ஹாப்பி ஃபாரெவர் மை டியெர்ஸ். இது வரை தொலைத்த உங்கள் சந்தோஷங்களை எல்லாம் சேர்த்து வச்சு மகிழ்ச்சியா இருங்க" என்றார்.  சிறிது நிமிடங்களில் மகி அவளது மொபைலை எடுத்து யாருக்கோ வீடியோ கால் செய்ய "யாருக்கு மகி" என்றான் அஜி. "விக்கிக்கு.. நடு ராத்திரி ஆனாலும் பரவால்ல, நீ மொதல்ல அவன் கிட்ட பேசு, அவன் எவ்ளோ வருத்தப்பட்டானு தெரியுமா?" என்றாள். நடு ராத்திரியில் மகி ஏன் கால் பண்ணுகிறாள் என்று விக்கி பதற்றத்துடன் வீடியோ காலை அட்டென்ட் செய்ய அங்கே மகியும் அஜியும் ஒன்றாக இருப்பது பார்த்து குழப்பமும் ஆச்சரியமும் அடைந்தான். அஜி எல்லா கதையையும் எல்லாருக்கும் சொல்ல அங்கே காதலும், நட்பும், குடும்பங்களும் ஒன்று சேர்ந்தன!!

முற்றும்.

 


Sunday, December 1, 2019

மகிஷா - பாகம் 6

"ஐயோ, சாரி மா, நா கேட்டது உன்னை இவ்ளோ டிஸ்டர்ப் பண்ணும்னு நினைக்கல. வெரி சாரி" என்றான் விக்கி பதறியவனாய்.  "இல்ல விக்கி, பரவால்ல. அவன் உன்கிட்டயும் பேசலேனு எனக்கு தெரியாது. எவ்ளோ கிளோஸ் பிரண்ட்ஸ் நீங்க? உனக்கு எவ்ளோ கஷ்டமாயிருக்கும்னு எனக்கு புரியுது. வீட்ல பாக்கற அலையன்ச கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு செஞ்சதுக்கப்புறம் நாங்க ரெண்டு பேரும் பேசிக்கவேயில்லை" என்று ஆரம்பித்து அவள் யூஎஸ் போனது, வேறு திருமணம் செய்துகொள்ளாதது என்று எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள்.அவள் பேசி முடித்த போது, இத்தனை நாள் பேசாமல் இருந்த அந்த பாரம் நீங்கி விக்கியுடனான அந்த பழைய நெருங்கிய நண்பன் என்ற உணர்வு திரும்பியிருந்தது. 

"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல மா, லைப்ஃல எவ்ளோ மாற்றங்கள்ல? எனக்கு உன் கஷ்டம் புரியுது, இருந்தாலும் நீ கொஞ்சம் யோசிச்சு வேற நல்ல டெஸிஷன் எடுத்தா நல்லா இருக்கும். எல்லாரும் ஏற்கனவே உனக்கு இப்படி தான் சொல்லியிருப்பாங்க, நானும் அதே தான் சொல்றேன். பட் உன்னோட எதிர்காலத்துக்காகவும் உன் பேரென்ட்ஸ்க்காகவும்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அனு "சாரி டு டிஸ்டர்ப், ஒன்றரை மணி ஆகிருச்சு.  சாப்பிட்டுக்கிட்டே பேசறீங்களா?" என்று கேட்டபடி ஹாலுக்கு வந்தாள். "பிரணவ் குட்டி சாப்டாச்சா?" என்று மகி கேட்க "ஆமா அக்கா, உங்களை தொந்தரவு செய்ய வேண்டாம்னு அவனுக்கு அப்பவே பருப்பு சாதம் ஊட்டி தூங்க வைத்து விட்டேன்." என்றாள்.  

"சரி மகி வா, சாப்பிடலாம்" என்று விக்கி சொல்ல இருவரும் சோபாவை விட்டு எழுந்து கைகழுவ சென்றார்கள். "கூட எதுவும் ஹெல்ப் பண்ண வர முடியல அனு, தனியாவே எல்லாம் செய்ய வச்சிட்டேன்" என்று மகி சொல்ல "நோ ப்ராப்ளம்க்கா, நீங்க வீட்டுக்கு வந்ததே போதும். இவர் தான் எப்பவுமே ரொம்ப வருத்தப்பட்டுட்டு இருப்பார் உங்க ரெண்டு பேரையும் பத்தி சொல்லி. இன்னைக்கு கொஞ்சம் ரிலீப்ஃ ஆகியிருப்பார்னு நினைக்கறேன்" என்று சொல்லியபடி பரிமாறிவிட்டு அவளும் சாப்பிட உட்கார்ந்தாள். "ஷாப்பிங் போகணும்னு சொன்னியே, சாப்டுட்டு கெளம்பலாமா? க்விக்கா முடிச்சிரலாம்" என்றான் விக்கி. "பரவால்ல, கண்டிப்பா போகணும்னு இல்ல, அவ்ளோ முக்கியமா வாங்கறதுக்கும் ஏதும் இல்ல. ரொம்ப வருஷம் கழிச்சு பேசிட்டு இருந்தோம். சாப்டுட்டு நா கிளம்பறேன், போயி கொஞ்சம் பேக்கிங் எல்லாம் இருக்கு" என்றாள். இரண்டு மணி வாக்கில் சாப்பிட்டு முடிக்க, "நா டாக்ஸி புக் பண்ணிக்கறேன் விக்கி, நீ தேவையில்லாம அலைய வேணாம்" என்று மகி சொல்ல "இல்ல இல்ல, நானே வந்து ட்ராப் பண்றேன். அப்படியே வரும் போது கொஞ்சம் திங்ஸ் எல்லாம் வாங்கவேண்டியிருக்கு" என்று விக்கி சொல்ல மகி முகம் கழுவி, முடியை விரல்களால் கோரி க்ளட்சர் கிளிப்பை சரி செய்து கொண்டாள். "ஓகே அனு, தாங்க்ஸ் ஃபோர் தி ஒன்டர்ஃபுள் லஞ்ச். நான் கிளம்பறேன்" என்றாள். "தாங்க்ஸ் ஃபார் கமிங் அக்கா, இன்னொருக்க சென்னை வந்தா கண்டிப்பா இங்க வந்து தான் ஸ்டே பண்ணனும்" என்று சொன்னவளுக்கு "கண்டிப்பா.. பை அனு. பிரணவ் குட்டி எந்திரிச்சதும் அவன் கிட்ட சொல்லிடு" என்று சொல்லி கிளம்பினாள்.

அவள் ஏறி உட்கார்ந்து சீட் பெல்ட் அணிந்ததும் அந்த பச்சை நிற ஃபோர்டு ஃபிகோ கிளம்பி மதிய நேர சாலையில் இருந்த சொற்ப டிராஃபிக்கில் கலந்தது. "ஆறரை மணிக்கு ஃபிளைட் இல்ல?" என்றான் மொபைலில் மெசேஜ் செக் பண்ணிக்கொண்டிருந்த மகியிடம். "ஆமா, நாலரை மணிக்கு வீட்ல கெளம்பினா சரியா இருக்கும்" பதிலுரைத்தாள் மகி. இருபது நிமிடங்களில் அவள் தங்கியிருந்த வீடு வர காரிலிருந்து இறங்கிய மகியிடம் "நா சொன்னதை கொஞ்சம் கன்சிடர் பண்ணுமா" என்றவனுக்கு புன்னகையை பதிலாக கொடுத்தபடி காலிங் பெல்லை அடித்தாள். கதவை திறந்த ரதியின் அக்கா "ஓ வந்தாச்சா? இன்னும் வரலயேன்னு இப்ப தான் நெனச்சிட்டு இருந்தேன்" என்றாள். "சரிம்மா நா கிளம்பறேன், போய் ரீச் ஆகிட்டு மெசேஜ் பண்ணு. சேஃப் ஜர்னி" என்று அவளிடமும் ரதியின் அக்கா மற்றும் அவர் கணவரிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினான். 

விக்கி கிளம்பியவுடன் "ஷாப்பிங் எல்லாம் பண்ணியாச்சா மகி? பேக் பண்ண ஏதாது ஹெல்ப் வேணுமா?" என்றாள் ரதியின் அக்கா. "இல்லக்கா, ஷாப்பிங் போக டைம் இல்ல. சோ போகல. நானே பேக் பண்ணிக்கறேன் அக்கா, அதிக திங்ஸ் இல்ல" என்றாள். "சரிம்மா, பொங்கலுக்கு உனக்கும் ரதிக்கும் ஒரு புடவை எடுத்தேன். இது உனக்கு, இது ரதிக்கு." என்று இரண்டு  டிரஸ் கவர்களை மகியிடம் குடுத்தாள். "ஓ, தாங்க் யு சோ மச் அக்கா" என்றபடி அதை வாங்கி பிரித்துப்பார்த்தாள். வெளிர் பச்சை நிறத்தில், கோல்டன் மற்றும் சில்வர் பார்டரும், உடல் முழுவதும் லைட் பிங்க் பூக்களும் அதிலிருந்து நீண்ட கோல்டன் ஒர்க் செய்த இலைகளும் என்று மிக அழகாக இருந்தது அந்த ஜார்ஜ்ஜெட் புடவை. ரதிக்கு அதே டிசைனில் லைட் யெல்லோ கலரில் எடுத்திருந்தார்கள். மாட்சிங்காக ரெடிமேட் பிளவுசும் இருந்தது. "ரொம்ப ரொம்ப அழகா இருக்கு அக்கா" என்றாள் அதை திரும்ப மடித்து வைத்தபடி. எல்லாவற்றையும் பேக் செய்து, ஜீன்ஸ் டாப்பிற்கு மாறி, அறையிலிருந்த பொருட்களை அதனதன் இடத்தில் எடுத்து வைத்துக்கொண்டிருக்கையில் கையில் காபி மற்றும் குழிப்பணியாரம் தட்டுடன் ரதியின் அக்கா உள்ளே வந்தாள்.  "ஆஹா, குழிப்பணியாரம் என்னோட ஃபேவரிட். பட் இப்ப சுத்தமா பசி இல்லை அக்கா. ஒன்னு மட்டும் எடுத்துக்கறேன்" என்று சொல்லி காபியும் ஒரே ஒரு குழிப்பணியாரம் எடுத்துக்கொண்டாள். 

சிறிது நேரத்தில் முழுதும் ரெடி ஆகியதும் ஏர்போர்ட்க்கு டாக்ஸி புக் பண்ணினாள். பாஸ்போர்ட் மற்றும் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று எல்லாவற்றையும் செக் பண்ணி, அவளது ட்ராலி சூட்கேஸ், கேபின் பேக் மற்றும் லேப்டாப்  பேக்கை எடுத்துக்கொண்டு ஹாலிற்கு வருவதற்கும் டாக்ஸி வருவதற்கும் சரியாக இருந்தது. "ஒரு வாரம் ரொம்ப கம்ஃபர்டபிள்'ஆ போச்சு, ரொம்ப தாங்க்ஸ் அக்கா" என்று மகியும் "நீ இங்க வந்து தங்கினதில் எங்களுக்கும் ரொம்ப சந்தோஷம்மா. எப்ப சென்னை வந்தாலும் நீ இங்கயே வந்து ஸ்டே பண்ணு" என்று ரதியின் அக்காவும் சொல்ல, மகி அக்காவிடமும், அவளது கணவரிடமும், மிதுனிடமும் பை சொல்லி டாக்ஸியில் ஏறினாள். ஓடிபியை டிரைவர்க்கு சொல்லிவிட்டு காரின் கண்ணாடியை இறக்கி எல்லோருக்கும் கையசைக்க அந்த டாக்ஸி நகரத்தொடங்கியது.

5.05 க்கு டாக்ஸி ஏர்போர்ட்டில் அவளை இறக்கி விட லக்கேஜ்ஜை எடுத்துக்கொண்டு என்ட்ரி நோக்கி நடந்தாள். லக்கேஜ்ஜை செக்கின் பண்ணிவிட்டு, செக்யூரிட்டி செக் முடித்து மாலை 6 .30  மணி இண்டிகோ ஃபிளைட்டிற்காக அதன் கேட் அருகே சென்று அமர்ந்தாள்.  ஃபிளைட்டிற்கு இன்னும் முக்கால் மணி நேரம் இருக்கவே அம்மாவிற்கு ஏர்போர்ட் ரீச் ஆகிவிட்டதாக மெசேஜ் அனுப்பிவிட்டு மொபைலில் இந்த வாரம் முழுக்க எடுத்த போட்டோசை பார்க்கலானாள். சிறிது நேரத்தில் ஃபிளைட்டிற்காண அனௌன்ஸ்மென்ட் வர, கேட் வழியாக சென்று விமானத்தில் ஏறினாள். டேக் ஆப் ஆகும் சமயம் பை பை சென்னை என்று மனதிற்குள் சொல்லிக்கொள்ள, தான் இறங்கப்போகும் யூஎஸ்ஸில் தான் அஜி இருக்கிறான் என்று விக்கி சொன்னது நினைவிற்கு வந்தது. காலையிலிருந்து எல்லோரிடமும் பேசிக்கொண்டு நாள் பரபரப்பாக போனதில் அவள் அதைப்பற்றி அவ்வளவாக யோசிக்கவில்லை. கிடைத்த தனிமையில் அஜி நினைவு வர, அதை புறக்கணிப்பதற்காக கையில் கொண்டுவந்திருந்த புத்தகத்தில் மனதை செலுத்தினாள். எட்டு மணி வாக்கில் அவள் முன்னமே புக் பண்ணியிருந்த வெஜ் ட்ரியோ சாண்டவிச் வர, மொபைலில் ஸ்டோர் செய்திருந்த பென்னி தயாளின் பாடல்களை இயர்போனில் கேட்டுக்கொண்டே அதை சாப்பிட ஆரம்பித்தாள். டெல்லியில் ஒன்பது இருபதுக்கு அந்த அலுமினியப்பறவை தரையிறங்க டெர்மினலில் இருந்து வெளியேறி இன்டர்நேஷனல் ஏர்போர்ட்க்கு செல்ல ஷட்டில் பஸ் வருவதற்காக வெயிட் செய்தாள். ஒரு பத்து நிமிட காத்திருத்தலின் பிறகு அந்த சிவப்பு நிறத்திலான ஷட்டில் வர அதில் ஏறிக்கொண்டாள். அடுத்த கால் மணி நேரத்தில் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் அவளை இறக்கிவிட உள்ளே நுழைந்து எதிஹாட் ஏர்வேஸ் கவுண்டர் எங்குள்ளது என்று பார்க்கலானாள்.   பின்னர் செக்யூரிட்டி செக் மற்றும் இம்மிகிரேஷன் ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடிக்க பன்னிரண்டு மணியாகிவிட்டது.      

நாலேகால் மணிக்கு தான்  ஃபிளைட். இன்னும் நான்கு மணி நேரம் இருந்த நிலையில் ஏர்போர்ட்டில் இருந்த கடைகளை சுற்றி வரலாமா என யோசித்தாள். ஏற்கனவே தூக்கம் வர ஆரம்பித்திருக்க நடப்பதற்கு சோம்பேறித்தனம் காட்டி உடல் ஒரு சாய்வான இருக்கையை தேடியது. அங்கிருந்த வெயிட்டிங் லான்ஜில் ஒரு இருக்கையை தேர்வு செய்து போய் உட்கார்ந்தாள். மொபைலை எடுத்து பார்த்த போது அம்மாவிடம் இருந்தும் விக்கியிடம் இருந்தும் மெசேஜ் வந்திருந்தது. அம்மாவிற்கு ரிப்ளை பண்ணிவிட்டு விக்கியின் மெசேஜ்ஜை ஓபன் பண்ணினாள். +1 (463 )- என்று ஆரம்பித்த பத்து இலக்க நம்பர், அடுத்த வரியில் அஜய் என்று இருந்தது. மகிக்கு ஒரு நிமிடம் ஆகியது அது அஜியின் நம்பர் என்று நம்புவதற்கு. நம்பரை பார்ப்பதற்கு தைரியம் இல்லாமல் மொபைலை லாக் பண்ணி வைத்தாள். விக்கி எதற்கு எனக்கு இந்த நம்பரை அனுப்பினான். இந்த பனிரெண்டு வருடங்களில் அவள் அஜியின் பெயரை பெரிதாக யோசிக்கவும் இல்லை, யாரிடமும் அது பற்றி பேசியதும் இல்லை. இன்றானால், முழுக்க முழுக்க அஜியை பற்றி தான் பேச்சு. நினைவிலும் அடிக்கடி அஜி தான். இது தவறில்லையா? அதுவும் அவனுக்கு திருமணமாகிவிட்டது என்று தெரிந்தும். அவள் மனம் அவளையே கேள்வி கேட்டது. மொபைலை அன்லாக் செய்து மறுபடி  அந்த நம்பரை வாசித்தாள். இரண்டு முறை வாசித்ததும் மனதில் பதிந்து விட்டது.  சேவ் பண்ணலாமா? என்று ஒரு மனமும், கூடாது என்று மற்றொன்றும் கூக்குரலிட சிறிது நேரத்தில் Ajay என்று  டைப் செய்து அதை Aji  என்று மாற்றி சேவ் பண்ணினாள். குரங்கு மனம் அதோடு நிற்குமா? வாட்ஸாப்ப்பில் என்ன டீபி வச்சிருக்கான் என்று பாக்கலாமா? என்று குறுகுறுக்கத்தொடங்கியது. பனிரெண்டு வருடங்களுக்கு முன் பார்த்தது.இன்று எப்படி இருப்பான்? ஒரு வேளை அவனுடைய மனைவி அல்லது குழந்தையின் பிக்சர் வச்சிருப்பானோ? குழந்தை - ஒன்றா அல்லது இரண்டா? என்ன வயசு இருக்கும்? மகி, அதை பார்த்தால் உன் மனம் தாங்குமா? வேண்டாம் மகி என்று ஒரு புறம் எச்சரிக்கை மணி அடிக்க, இன்னொரு புறம் முகத்தையாவது பார்த்துக்கொள்கிறேனே என்று கெஞ்சியது. வாட்ஸாப்ப்பை ஓபன் பண்ணி அஜியின் பெயரை டைப் செய்தாள். Aji  - online  என காட்டியதும் தூக்கிவாரிப்போட்டது. கையிலிருக்கும் போனின் பின்னால் அஜி உட்கார்ந்து கொண்டிருப்பது போல உணர்ந்தாள். உடனே போனை லாக் செய்தாள். போனை எடுத்து பான்ட்  பாக்கெட்டில் வைத்தாள். 

ம்ம்ஹ்ம் இங்கே சும்மா உக்கார்ந்திருந்தால் சரியாய் இருக்காது என்று எண்ணி நடக்க ஆரம்பித்தாள். அங்கும் இங்கும் சிறிது தூரம் நடந்த போதும் மனம் மட்டும் Aji  - online என்பதிலேயே நிலைத்து நின்றது. மொபைலை எடுத்து அஜியின் காண்டக்ட்டை டெலீட் செய்தாள். விக்கி அனுப்பிய மெசேஜ்ஜையும் டெலீட் செய்தாள். கடிவாளம் போட்டு கட்டி வைத்திருந்த மனம் இன்று  அவிழ்த்து விட்ட குதிரையாக தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்காகத்தான் சென்னை வரணும் என்று ஆசைப்பட்டேனா ? இது ரதி போயிருக்க வேண்டிய ட்ரிப், அதை கெஞ்சி கூத்தாடி அவள் வாங்கிக்கொண்டு வந்தது இப்படி வேலியில் போன ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டுக்கொள்ளத்தானா? யூஎஸ் வந்த புதிதில் தெளிவில்லாமல் இருந்த மனதை எவ்வளவு பாடுபட்டு தேற்றிவைத்திருந்தாள். இந்த ஒரு ட்ரிப் எல்லாவற்றையும் பாழ் பண்ணிவிட்டது போலாக்கிவிட்டதே. உனக்கு இது தேவையா மகி? நீ ஏன் விக்கி வீட்டிற்கு போன? ஏன் அவனிடம் சகஜமாக எல்லா விஷயமும் சொன்ன? இப்ப ஏன் இந்த நிலமைல நிக்கற? அடுத்த வாரம் ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு கிளையண்ட் மீட்டிங் இருக்கு. காரீயர்ல அடுத்த படிக்கான மீட்டிங் அது. அதை சரியாக செய்தே ஆகவேண்டும் மகி. அதுக்கான வேலைகள் நிறைய இருக்கு.  உன்னோட நினைப்பையும் கவனத்தையும் அதில் செலுத்து என்று மனம் அவளது வீணான எண்ணங்களுக்கு தடுப்பணை போட்டு நிறுத்தியது.

மகிஷா வருவாள்... பாகம் 7

மகிஷா - பாகம் 5

 எட்டு மணி வாக்கில் வீடு திரும்பிய மகி, அன்று மிகுந்த உற்சாகத்தோடு இருப்பது போல காணப்பட்டாள். இரண்டு நாட்களாக வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் கூட பழைய நினைவுகளும், அது சம்பந்தப்பட்ட இடங்களுக்கும் சென்று வந்த திருப்தி ஒருபுறம் இருக்க, அஜியும் ஒருவேளை வேலைநிமித்தமாக சென்னையில் குடியேறியிருக்கலாமில்லையா? அப்படியிருந்தால் அஜி இருக்கும் அதே ஊரில் ஒரு வாரம் நானும் இருந்திருக்கிறேன் என்று அவள் மனம் குதூகலித்துக்கொண்டிருந்தது. இரவு உணவு அருந்திவிட்டு ரதியின் அக்காவிடமும் அவள் கணவரிடமும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவள் அறைக்குள் புகுந்தாள். கையில் கொண்டு வந்திருந்த ரஷ்மி பன்சாலின் டச் தி ஸ்கை என்ற புத்தகத்தை சிறிது நேரம் படித்துக்கொண்டிருந்தாள். மனம் முழுவதுமாக அதில் லயிக்காததால் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு சென்னையில் அவள் சென்று வந்த இடங்களை மறுபடி ஓட விட்டு ரசிக்கலானாள்.

எப்போது தூங்கிப்போனாளோ, காலையில்  மொபைல் அலாரம் அடித்து எழுப்பிவிட்டது. எப்போதும் போல எழுந்தவுடன் அவள் அம்மாவிற்கு போன் பண்ணி பேசிவிட்டு ஆபீஸிற்கு ரெடியாகி கிளம்பிச்சென்றாள். அன்று தான் அந்த KT  செக்ஷனின் கடைசி நாள் என்பதால் அன்றைக்கு கவர் பண்ண வேண்டிய டாபிக்ஸ் கம்மியாகத்தான் இருந்தது. லஞ்ச் டைமில் அன்று நரேன் ஜாயின் பண்ணுவதாக மெசேஜ் பண்ணியிருந்ததால், பில்டிங் வாசலில் அவன் வருவதற்காக வெயிட் பண்ணிக்கொண்டிருந்தாள். வரும் போதே அவன் யாருடனோ கால் பேசிக்கொண்டே வர, சைகையால் ஹாய் சொல்லிவிட்டு அவனுடன் சேர்ந்து நடக்கலானாள். அவன் பேசி முடிப்பதற்கும் புட் கோர்ட் (food  court ) வருவதற்கும் சரியாக இருந்தது. மகி ஒரு கோபி பராத்தாவும் மொசம்பி ஜூஸ்'ம் வாங்கிக் கொள்ள நரேன் ஒரு சவுத் இண்டியன் தாலி வாங்கிக்கொண்டான். "உன் வைப்ஃக்கு இப்ப உடம்பு பரவாயில்லையா?" என்றாள் மகி. "ம்ம் இப்ப கொஞ்சம் பெட்டெர், எப்படி போச்சு உன்னோட சென்னை சுற்றும் படலம் எல்லாம்? ஷாப்பிங் எல்லாம் முடிச்சாச்சா?" என்று கேட்டபடி காலியாக இருந்த ஒரு டேபிளில் இருவரும் உட்கார்ந்தார்கள். 

"ஷாப்பிங் நாளைக்கு தான் போகணும். இன்னைக்கு ஒர்க் முடிஞ்சதும் மஹாபலிபுரம் போறேன். அதோட சென்னை சுற்றும் படலம் ஓவர்" என்றாள் ராகத்துடன். "மகாபலிபுரமா, அவ்ளோ தூரம் ஆபீஸ் முடிச்சபிறகு போய்ட்டு திரும்ப வர லேட்டாகிருமே"  என்று கேட்டவனுக்கு "இன்னைக்கு லாஸ்ட் டே ட்ரெயினிங் அப்டீங்கறதால சீக்கிரமே முடிஞ்சிரும். அப்படி தான் ஸ்கெட்டியுல் பண்ணியிருக்கேன். சோ, எப்படியும் ஒரு டூ ஓ கிளாக் முடிஞ்சிரும். அண்ட் அங்க ரொம்ப நேரம் டைம் ஸ்பென்ட் பண்ண மாட்டேன். மேக்சிமம் ஒரு தர்ட்டி மினிட்ஸ் தான் இருப்பேன்" என்று சொல்லியபடி ஸ்ட்ராவை வாயில் வைத்து ஜூஸ்'ஐ உறிஞ்சினாள். "கிளம்பும் போது உன்ன மீட் பண்ண முடியாதுன்னு நினைக்கறேன். வெரி ஹாப்பி டு மீட் யு அஃப்டர்  சோ மெனி  இயர்ஸ்  நரேன்" என்று சொல்லியவாறே சாப்பிட்ட ப்ளேட்ஸ்'ஐ வைத்துவிட்டு கைகழுவ எழுந்தாள். "எனக்கும் கூட உன்ன பாத்ததுல ரொம்ப சந்தோஷம் மகி. பத்திரமா போய்ட்டு வா. இன்னொரு தரம் சென்னை வந்தா வீட்டுக்கு வர ட்ரை பண்ணு. அப்பா அம்மாவை விசாரிச்சேன்னு சொல்லு. உன் லைப்ஃ பத்தி இன்னும் கொஞ்சம் கன்சிடர் பண்ணு மகி" என்று பேசிக்கொண்டே நடந்து கொண்டிருக்கையில் அவன் கையில் இருந்த மொபைல் சிணுங்க, டிஸ்பிளே விக்னேஷ் என்றது. சரி நா நாளைக்கு உனக்கு கால் பண்றேன், பை" என்று சொல்லி போனை அட்டென்ட் செய்ய, இருவரும் அவரவர் வழியில் சென்றார்கள். 

மகியின் ட்ரெயினிங் இரண்டு மணியுடன் நிறைவுபெற, தான் அனுப்ப வேண்டிய ஃபைனல்  நோட்ஸை அன்று மாலைக்குள் அனுப்புவதாக சொல்லிவிட்டு டீமிடமும் ஸ்ரீதரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினாள். ஓலாவில் ஆறு மணி நேர பேக்கேஜ்ஜில் மஹாபலிபுரத்திற்கு ஒரு ஓலா மினி புக் பண்ணிக்கொண்டாள்.  டாக்ஸியில் போகும் வழியில் தான் அனுப்புவதாக சொன்ன டீடெயில்ஸ்'ஐ டைப் பண்ணி, அதை சரி பார்த்து மொபைல் டேடாவை டீத்தேர் பண்ணி ஈமெயில் அனுப்பி முடிக்கும் போது அவளது டாக்ஸி  மஹாபலிபுரத்தின் நுழைவுவாயிலை அடைந்திருந்தது. லாப்டாப்பை மூடி பேக்கில் வைத்துவிட்டு ஜன்னலின் வழியே வேடிக்கை பார்கலானாள். டாக்ஸியில் ஏறியவுடன் டிரைவரிடம் பீச் மட்டும் தான் போக வேண்டும் என்றும், அதற்கேத்த மாதிரி பார்க்கிங் இருக்கும் இடத்திற்கே நேராக செல்லும்படியும் சொல்லி இருந்தாள். டாக்ஸியின் டிரைவர் நாற்பதின் தொடக்கத்தில் இருந்தார். பீச்சிற்கு அருகே செல்லும் ஒரு சாலையின் ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு "இந்த ரோடு தான் மா, நேரா போனா பீச் வந்துரும்" என்று சொல்லி வண்டியின் என்ஜினை ஆப் செய்தார். "சரி இங்கயே வெயிட் பண்ணுங்க சார், நா போய்ட்டு வந்துடறேன்" என்று சொல்லி லாப்டாப் பேக்குடன் இறங்கிய மகி பீச்சை நோக்கி நடந்தாள். மஹாபலிபுரம் வர வேண்டும் என்று அவள் நினைத்தது பீச்சின் அழகை கண்டு ரசிப்பதற்காக இல்லை. அவளுடைய வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டுமே நடந்த அந்த ஒரு நிகழ்வு, அது நடந்த இடத்திற்கு மீண்டும் ஒரு முறை வர வேண்டும் என்ற ஆவலில் தான். 

மகி PG 'யில்  தங்கியிருந்த போது மாதங்கி, அஜி, மற்றும் வேறு சில நண்பர்களுடன் ஒரு முறை மஹாபலிபுரம் வந்திருந்தார்கள். மகி அது வரைக்கும் பீச்சிற்கே சென்றதில்லை. அது தான் முதல் தடவை என்பதால் தண்ணீரில் உள்ளே செல்லாமல் முன்னாடியே நின்று கொண்டிருந்தாள். இன்னும் கொஞ்சம் உள்ளே வரும்படி அவள் நண்பர்கள் எவ்வளவு கூப்பிட்டும் தனக்கு பயமாயிருப்பதாக சொல்லி முன்னாடியே நின்றாள். "நீ இப்படி எல்லாம் கூப்பிட்டா வர மாட்ட, இரு வரேன்" என்று சொல்லி அஜி அவள் கரம் பற்றி தண்ணீருக்குள் கூட்டி வந்தான். அன்று அவனுடைய கையை பிடிக்க வேண்டும் என்று அவள் நினைக்கவில்லை. ஆனால் வாழ்நாள் முழுவதும் அந்த கரத்தை பற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைத்த போது அது நடக்கவேயில்லை. இருப்பினும் பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு(சூரியன்) ஆகியவற்றின் முன்னிலையில் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே நடந்த அந்த நிகழ்வை பொக்கிஷமாக பொத்தி வைத்துக்கொண்டாள்.

சிறிது நேரம் கடற்கரையில் நின்று விட்டு நேரத்திற்கு திரும்ப வேண்டும் என்பதால் டாக்ஸி இருக்கும் திசையில் நடந்தாள். மகி வருவதை பார்த்த டாக்ஸி டிரைவர் என்ஜினை ஆன் பண்ணி வைத்தார். அவள் ஏறி உட்கார்ந்ததும் "வேற எங்க போகணும்மா?" என்றார். "வேற எங்கேயும் இல்ல சார், வீட்டிற்கு தான், அப்படியே மேப்பை  ஃபாலோ பண்ணுங்க" என்று சொல்லிக்கொண்டிருக்கையில் மகியின் செல்ஃபோன் அழைத்தது. திரையில் பெயர் வராமல் நம்பர் மட்டும் வர ப்ளூடூத் ஹெட்செட்டில் அட்டென்ட் செய்தாள். மறுமுனையில் ஒரு ஆண் குரல்  "ஹலோ மகிஷா?" என்றது. "யெஸ், மகிஷா ஹியர்" என்றாள். "மகிஷா, நா விக்னேஷ் பேசறேன்மா. விக்கி... என்னை ஞாபகம் இருக்கா?" என்றது அந்த குரல். விக்கி என்ற பெயரை கேட்டதும் மகிக்கு அடையாளம் தெரிந்துவிட்டது. அதே சமயத்தில் பனிரெண்டு வருடங்களாக கேட்காத குரலை கேட்ட போது  நெஞ்சு படபடக்கத்தொடங்கியது. விக்கிக்கு என் நம்பர் எப்படி கெடச்சது? நா சென்னையிலிருக்கேன்னு யாரு சொல்லியிருப்பாங்க? விக்கி ஏன் இப்போது எனக்கு கால் பண்ணியிருக்கான்? என ஆயிரமாயிரம் கேள்விகள் நொடிப்பொழுதில் வந்து போக,  அவள் தொண்டை வறண்டு போனது, நாக்கு ஒட்டிக்கொண்டது.

"மகிஷா, லைன்ல இறுக்கியாம்மா?" என்றான் விக்கி மறுபடி. "ஆ ஆ விக்னேஷ்... விக்கி... எப்படி இருக்க.. இருக்கீங்க...?" என்று உளறிக்கொட்டினாள். "ஃபைன் மா, நீ எப்படி இருக்க? ரொம்ப வருஷம் ஆச்சு உங்கிட்ட பேசி இல்ல?" என்றான். "ஆமா விக்கி, நா நல்லா இருக்கேன். பட் என் நம்பர் உங்களுக்கு எப்படி கெடச்சது?" என்றாள் பதற்றம் அடங்காமல். "இன்னைக்கு மத்தியானம் ஒரு வேலை விஷயமா எதேர்ச்சையா நரேனுக்கு ஃபோன் பண்ணப்ப தான் நீ சென்னை வந்திருக்கறதா அவன் சொன்னான். அதான் அவன் கிட்ட நம்பர் வாங்கி உனக்கு கால் பண்ணேன். உனக்கு சண்டே ஏர்லி மார்னிங் ஃபிளைட்னு சொன்னான். நாளைக்கு நீ ஃபிரியா? வீட்டுக்கு வாயேன்" என்றான். "ஆ.. இல்ல விக்கி. நா தெரிஞ்சவங்க வீட்ல தான் தங்கியிருக்கேன். தவிர நாளைக்கு ஷாப்பிங் வேற போகணும்" என்று சம்பந்தம் இல்லாமல் பிதற்றினாள். "ஷாப்பிங் தான, நா கூட்டிட்டு போறேன் மகி. என் வைப்ஃ உன்னை கண்டிப்பா வீட்டுக்கு கூட்டிட்டு வரணும் கேட்டுட்டு இருக்கா.  தேனாம்பேட்டை என் வீட்ல இருந்து ஒன்னும் அவ்வளவு தூரம் இல்ல. நானே உன்ன கூட்டிட்டு வந்துட்டு திரும்ப ஈவினிங் வீட்ல ட்ராப் பண்ணிடறேன். நம்ம ஷாப்பிங் மதியம் முடிச்சிரலாம் மா" என்று எப்பொழும் போல அதே பரிவுடனும் உரிமையுடனும் சொல்லிய விக்கிக்கு மறுப்பு தெரிவிக்க முடியாமல் மறுநாள் காலை ஒன்பது மணிக்கு தயாராக இருப்பதாக ஒத்துக்கொண்டு போனை வைத்தாள்.      

விக்கி அஜியின் உயிர் தோழன். அவர்கள் இருவரும் பள்ளிப்பருவம் முதலே நெருங்கிய நண்பர்கள். எப்போதும் ஒன்றாக தான் இருப்பார்கள். அஜியின் மூலம் தான் மகிக்கும் விக்கியை தெரியும். விக்கியும் அஜியை போலவே நல்ல நண்பன். இந்தா மா, வா மா, போ மா என்று தான் பரிவுடன் அழைப்பான். அஜியிடன் பேசுவதை நிறுத்தியதிலிருந்து மகி விக்கியுடனும் பேசவில்லை. இவர்களது விஷயம் வீட்டில் தெரிந்து எல்லாம் நடந்து முடிந்த காலத்தில் விக்கி ப்ராஜெக்ட் விஷயமாக லண்டன் போயிருந்தான்.  அவன் திரும்பி வந்து இரண்டு மூன்று முறை கால் செய்த போது மகி போனை எடுக்கவில்லை. யாரிடம் என்ன சொல்லுவது, எப்படி சொல்லுவது என்று ஒன்றும் புரியாமல், யாரிடமும் பேசாமல் இருப்பதே மேல் என்று எல்லாரிடம் இருந்தும் ஒதுங்கிக்கொண்டாள். யாருடனும் தொடர்பு வேண்டாம் என்று அவள் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாக்ராம்  போன்ற எதிலும் அக்கௌன்ட்  வைத்துக்கொள்ளவில்லை.  அவள் தோழி மாதங்கியுடன் கூட யுஎஸ் போனதிலிருந்து பேசவில்லை. நண்பர்களுடன் பேச அவளுக்கு ஏனோ சங்கடமாயிருந்தது. இப்போது ஏன் மறுபடி விக்கியுடன் பேசும்படியான ஒரு சூழ்நிலை?

விக்கிக்கு தெரிந்தால் அஜிக்கு அவன் சொல்லுவானா? அஜி தனக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று தானே நினைத்துக்கொண்டிருப்பான்? இன்னும் ஒரே ஒரு நாள் தானே, எல்லாம் ஸ்மூத்தாக போயிருக்க கூடாதா? கடவுளே.. எனக்கு அஜி சார்ந்த பழைய நினைவுகளும் அந்தந்த இடங்களையும் தான் பார்க்கணும்னு ஆசைப்பட்டேனே தவிர அஜியையோ, அஜி சார்ந்த யாரையும் இல்லை. இப்படி யோசித்து யோசித்து அஜி அஜி அஜி என்று எல்லாவற்றிற்கும் அவன் பெயரே மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது. வீட்டிற்கு வந்ததும் அடுத்த நாள் தான் ஒன்பது மணிக்கு நண்பருடன் அவர் வீட்டிற்கு செல்வதாகவும், மாலையில் வந்து விடுவதாகவும் ரதியின் அக்காவிடம் தெரிவித்தாள். அவள் முகம் தெளிவில்லாமல் வெளிறிப் போயிருப்பதை அவர்கள் பார்த்த போதும், அவள் வந்ததிலிருந்தே ஒரு சில நாள் உற்ச்சாகமாகவும் சில நேரங்களில் குழப்பத்துடனும் இருப்பதை கவனித்திருந்ததால் பழைய நினைவுகள் ஏதேனும் அவளை வருத்திக்கொண்டிருக்கலாம் என்று நினைத்து அவளை எதுவும் தொந்தரவு செய்யவில்லை.

மறுநாள் காலை ஒன்பது மணிக்கு சொன்னபடி விக்கி வந்திருந்தான். அவன் அவனுடன் அவனது ஆறு வயது மகனையும் அழைத்து வந்திருந்தான். "நா சாயங்காலம் வந்துருவேன் அக்கா, வந்து பேக் பண்ணிக்கறேன்" என்று ரதியின் அக்காவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள். காரின் பின்னிருக்கையில் விக்கியின் மகன் பிரணவ் ஏறிக்கொள்ள, மகி முன் சீட்டில் உட்கார்ந்து சீட் பெல்ட்டை போட்டதும் விக்கி காரை கிளப்பினான். மனதில் இருந்த குழப்பத்தாலும், பன்னிரண்டு வருடங்கள் பேசாமல் இருந்ததாலும் மகியால் சகஜமாக விக்கியிடம் பேச முடியவில்லை. நல்ல வேளையாக அந்த சங்கடம் தெரியாமல் இருக்க பிரணவ் ஏதேதோ கேட்டுக்கொண்டும் பேசிக்கொண்டும் வந்தான். விக்கி அதற்காகத்தான் பிரணவ்'ஐ கூட்டிக்கொண்டு வந்திருப்பான் என்று நினைத்துக்கொண்டாள். கார் அந்த பெரிய அபார்ட்மென்டின் உள்ளே நுழைந்து பார்க்கிங்கில் நிற்க மகி இறங்கிக்கொண்டாள். பிரணவ் வேகமாக இறங்கி அவளது கையை பிடித்துக்கொண்டு "ஆண்ட்டி வாங்க, எங்க வீடு இந்த பிளாக்ல தான் இருக்கு. செகண்ட் ஃபிலோர் போகணும். நம்ம ஸ்டெப்ஸ்ல போகலாமா? யாரு ஃபர்ஸ்ட்னு பாப்போமா?" என்று கேட்டபடி இழுத்துக்கொண்டு ஓடினான்.

மகி படியில் அவனை பின்தொடர, அவன் ஓடிபோய் நின்ற வீட்டின் கதவு திறந்திருந்தது, உள்ளேயிருந்து புன்னகைத்தபடி ஒரு பெண் வெளியே வந்து "வாங்க அக்கா, எப்படி இருக்கீங்க?" என்று உரிமையுடன் அவளை உள்ளே அழைத்துச் சென்றாள். படியேறி பின்னால் வந்து கொண்டிருந்த விக்கியை பாத்து "ஹை டாடி தான் லாஸ்ட்டு, நா தான்  ஃபர்ஸ்ட்டு. ஆண்ட்டி நா உங்களுக்கு என் டாய்ஸ் காட்டவா?"  என்று மிகவும் ஆர்வமாக கேட்டான். "ஓ.. காட்டேன். எனக்கும் கூட டாய்ஸ் ரொம்ப பிடிக்கும்" என்று அவனுடன் ஒட்டிக்கொண்டாள். "மகி இது அனுபமா, உன்ன வீட்டுக்கு கூட்டிட்டு வந்தா தான் எனக்கு சோறு போடுவேன்னு சொன்ன என் அருமை மனைவி" என்று நகைத்தபடியே சொன்னான். அதற்குள் அனுபமா ஒரு க்ளாசில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். "என்ன குடிக்கறீங்க அக்கா காபி ஆர் டீ?" என்றாள். "எதுவும் வேண்டாம்ங்க, இப்ப தான் சாப்பிட்டேன்" என்றாள் மகி சங்கோஜமாக. "வாங்க போங்கலாம் வேணாம், அனுன்னு பேர் சொல்லியே கூப்பிடுங்க அக்கா" என்று வார்த்தைக்கு வார்த்தை அக்கா என்று சொல்லி மகியை சகஜமாக உணர வைத்தாள். அவளது வேலை, திருமணம், அனுவின் ஸ்கூல், காலேஜ், ஆபீஸ், வீடு, பிரணவ் கதை என்று பொதுவாக இங்கும் அங்குமாக பேசி ஒன்றரை மணி நேரம் போனதே தெரியவில்லை. இடையில் அனு கொடுத்த சர்பத்தை குடித்து விட்டு பிரணவ் காட்டிய டாய்ஸை எல்லாம் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவனுடைய நண்பர்கள் வர "பிரணவ் நீ போயி காரிடோர்ல விளையாடு" என்று அனு அவர்களை அனுப்பி வைத்தாள். "நீங்கள் பேசிக்கொண்டிருங்கள், நான் போயி குக்கரில் பருப்பு வைத்துவிட்டு வருகிறேன்" என்று நாசூக்காக கிச்சனிற்குள் சென்றாள்.         

அனு கொஞ்சம் நார்மலாகிவிட்டாலும் அஜி பற்றி எதுவும் விக்கி பேசிடாமல் இருக்கணும் கடவுளே என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள். "நா கேக்கறேன்னு கோச்சிக்காதம்மா, எனக்கு வேற யாரை கேக்கறதுன்னு தெரியல" என்றான் பெரிய பீடிகையோடு. என்ன என்பது போல மகி விக்கியையே பார்க்க, "என்ன தான் நடந்துச்சு நா லண்டன்ல இருக்கும் போது? ரெண்டு பேர் வீட்லயும் சுமூகமான சூழ்நிலை இல்லைன்னு ஒரு தடவ சொன்னான். அப்புறம் திடுதிப்புனு ஒரு நாள் கல்யாண இன்விடேஷன் ஈமெயில் அனுப்பியிருந்தான். நா ஷாக் ஆகி  கால் பண்ணி என்னடான்னு கேட்டேன், நா அப்புறம் ஃபிரியா பேசறேண்டான்னு சொன்னவன் தான், அதுக்கப்புறம் என்ன ஆச்சுன்னே தெரியல, நா போன் பண்ணா எடுக்கல, திருப்பி கூப்பிடவும் இல்ல, ஈமெயில்க்கு ரிப்ளை இல்ல, என் வெட்டிங் இன்விடேஷன் அனுப்பினேன் அதுக்கும் கூட ரிப்ளை பண்ணல. அவங்க அப்பாவுக்கு ஒரு தரம் போன் பண்ணப்ப கல்யாணம் முடிஞ்சு யூஎஸ் போய்ட்டதா சொன்னார். நம்பர் கேட்டேன், நம்பர் வீட்ல இருக்கதாவும் அப்புறம் பாத்துட்டு கால் பண்ணி சொல்றதாகவும் சொன்னார். அவரும் திரும்ப கூப்பிடல. பல தடவ நா அவனுக்கு ஈமெயில் அனுப்பினேன். அவன் எனக்கு ரிப்ளை பண்ணவே இல்லம்மா. அவன் வேற யார் கூடயும் காண்டக்ட்ல இல்ல. எங்க இருக்கான்னு கூட யாருக்குமே தெரியல. போன மாசம் தான் அவனோட அக்காவை ஊர்ல பாத்தேன், அவங்க கிட்ட கேட்டப்ப, அவன் இண்டியானாபொலிஸ்'ல் இருப்பதாக சொன்னார்கள். நம்பர் கேட்டப்ப, குடுத்துட்டு நாங்க யாரும் அவன்கிட்ட பழைய கதை எதுவும் பேசறதில்ல, நீயும் பேசாதன்னு சொல்லிட்டாங்க. நானும் அதனால இன்னும் அவனுக்கு கால் பண்ணல. நீயும் என்னோடபோனை எடுக்கவே இல்ல. அதான் நேத்து நரேன் உன் நம்பர் குடுத்தப்ப உன்கிட்டயாவது பேசினா ஏதாவது தெரியுமான்னு பாக்கலாம்னு தான் உனக்கு கூப்பிட்டேன்" என்று ஒரு பெரிய கதையை சுருக்கமாக சொல்லிமுடித்தபோது மகிக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது.

கிட்டத்தட்ட இருபது வருட நட்பு அஜி மற்றும் விக்கியுடையது. ஏன் அஜி விக்கியொடு தொடர்பிலில்லை? என்ன ஏது என்று புரியாமல் விக்கிக்கு எவ்வளவு வருத்தமாக இருக்கும் என்று அவளால் உணர முடிந்தது.   அதையெல்லாம் விட அவள் அஜி சென்னையில் இருப்பான் என்று தானே இத்தனை வருடம் நினைத்துக்கொண்டிருந்தாள். கடல் கடந்து வேற நாட்டில் இருந்தால் தான் அவளால் கொஞ்சமேனும் நிம்மதியாக இருக்க முடிந்தது என்று நினைத்துக்கொண்டிருந்தாளே.  இண்டியானாபொலிஸ் சிகாகோவில் இருந்து மூன்று மணி நேரத்தில் போகக்கூடிய இடமாகிற்றே. யூஎஸ்'ல் அதெல்லாம் ஒரு தூரமே இல்லை. அவ்வளவு பக்கத்திலேயே இருந்திருக்கிறானா? என்று நினைத்த போது மகியின் கண்களில் அவளையும் அறியாமல் கண்ணீர் வந்துவிட்டது. 

மகிஷா வருவாள்...பாகம் 6

மகிஷா - பாகம் 4

 அஜி என்ற அஜய்யை சில நாட்களாகத்தான் தெரியும். நல்ல நண்பன், யாருக்கும் தீங்கு நினைக்காதவன், உதவி என்று யார் கேட்டாலும் மறுக்காமல் செய்பவன், பாசாங்கு பண்ணாதவன். வீட்டிலிருக்கும் அம்மா, அக்கா, தங்கையிடம் எப்படி உரிமையுடன் அக்கறையுடன் நடந்து கொள்வானோ அதே போல் தான் தோழிகளிடமும் நடந்து கொள்வான், கடின உழைப்பாளி, தான் சம்பாதித்து குடும்பத்தில் உள்ளவர்களை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவன். இவ்வளவு தான் தெரியும், இதை தவிர அவனை பற்றி எதுவும் தெரியாது. வேறெதுவும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் இது வரை தோன்றியதுமில்லை. அப்படியிருக்க இன்று ஏன் இப்படி ஒரு நிகழ்வு?

குழம்பிய மனதுடன் கால்கள் நடக்க ஆரம்பித்தன.  நாட்கள் எப்போதும் போல நகர்ந்தன. சில நேரங்களில் ஜூஸ் ஷாப், சில நேரங்களில் ரயில்வே ஸ்டேஷன் பெஞ்ச் என அவ்வப்போது நண்பர்களின் அரட்டை கச்சேரி அரங்கேறும். எதுவானாலும் அஜியை கேக்கலாம் மகியை கேக்கலாம் என இருவரும் ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு எல்லாம் கால் பண்ண ஆரம்பித்தார்கள். அது அப்படியே ஐந்து பத்து நிமிடம் என பேச்சு வளரும். இன்றைய தேதி போல் மொபைல் கட்டணம் அவ்வளவு மலிவு இல்லை. எஸ்எம்எஸ்க்கு கூட கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தது அப்போது. நான் இப்ப தான் உனக்கு கால் பண்ணனும்ன்னு நெனச்சேன் நீயே கூப்பிடற, நா நெனச்சேன் நீ சொல்லிட்ட, நா நெனச்சேன் நீ வந்து நிக்கற போன்ற வசனங்கள் நாள்தோறும் ஒன்றிற்கும் மேற்பட்ட முறை இருவருமே சொல்லி விடுவர். நெருங்கிய நண்பர்கள் என்பதை தாண்டி ஏதோ ஒரு உணர்வு தோன்றுவதை இருவருமே வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இதற்கப்புறம் தான் சாய் பாபா கோவில் குங்குமமும், அஷ்டலக்ஷ்மி கோவில் சாமந்தி பூவும் கைமாறின. 

சில காரணங்களால் மகிக்கும் எதுவும் வரன் அமையவில்லை. இப்படியே சில மாதங்கள் உருண்டோடின. இருவரும் ஒருவரின் மீது ஒருவர் வைத்திருந்த மரியாதையும் அன்பும் வளர்ந்துகொண்டே இருந்தது.  அஜிக்கு ஒரு ட்ரைனிங்கிற்காக ஹைதெராபாத் இரண்டு வாரம் போக வேண்டிய சூழ்நிலை. அந்த இரண்டு வாரமும் இருவரும் அவ்வளவாக பேசிக்கொள்ள முடியவில்லை.  அந்த இடைவெளி அவர்களது மனதளவில் இன்னும் நெருக்கத்தை உண்டு பண்ணியது. மகிக்கு அப்போது பெங்களுருவில் ஒரு பெரிய IT கம்பெனியில் வேலை கிடைத்தது. அதே சமயம் அஜிக்கும்  ஹைதெராபாத்தில் வேலை கிடைத்தது. "உன்னோட ஞாபகமா எனக்கு என்ன குடுத்துட்டு போறேன்னு பாப்போம்" என்றாள் மகி விளையாட்டாக ஒருநாள். அப்போது மகி நோக்கியா 1100  மாடல் மொபைல் வைத்திருந்தாள். அஜி நோக்கியா 1108 வைத்திருந்தான். "உன் கையிலிருக்கற மொபைலை குடேன்" என்றான், அவளும் கொடுத்தாள்  இரண்டு போனிலும் இருந்த சிம்மை மாற்றி போட்டுவிட்டு 1108 'ஐ அவளிடம் கொடுத்து விட்டு 1100 'ஐ அவன் எடுத்துக்கொண்டான்.  அதிகபட்சமாக இருவரும் அவர்களது அன்பை அப்படி தான் வெளிக்காட்டிக் கொண்டார்கள்.

இருவரும் வேலை நிமித்தம் அந்தந்த ஊருக்கு சென்றனர். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களாவது பார்த்துக் கொண்டிருந்தவர்கள், தினமும் இரண்டு மூன்று முறையாவது மொபைலில் பேசிக் கொண்டிருந்தவர்கள் இப்போது அவ்வளவு எளிதில் பேச முடியவில்லை. STD  காலுக்கான கட்டணம் மிக அதிகம். ஈமெயில் மட்டுமே அவர்களது தொடர்பு முறையாக இருந்தது. நேரில் பார்க்கவில்லை என்ற போதும் அந்த மொபைல் ஒரு புதுத்தெம்பு கொடுத்துக்கொண்டே இருந்தது. அப்படியே கிட்டத்தட்ட ஒரு வருடம் உருண்டோடிய பின் மகி அவளுடைய பிறந்த நாளன்று அஜியிடம் வெளிப்படையாக தன்னுடைய காதலை தெரிவித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தாள். முடிவெடுத்தபடியே சொல்லவும் செய்தாள்.

அன்றிரவு வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தவர்கள் பெரியவர்களிடம் சொல்லலாம் என முடிவு செய்தனர். வீட்டில் சொல்லவும் மகி வீட்டில் பெரிதாக வெடித்தது. அஜி வீட்டில் அப்போது தான் அவனது அக்கா திருமணம் முடிந்திருந்தது, அக்காவின் கணவரின் தங்கைக்கு அஜியை கேட்டு கொண்டிருப்பதாக அவன் அம்மா சொல்ல, அஜிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.  அவர்கள் இருவருக்குமே பெற்றவர்களை சங்கடப்படுத்துவதில் உடன்பாடில்லை. மகி இரண்டு மூன்று முறை அவள் வீட்டில் பேசிப்பார்த்தாள், யாரும் உடன்படவில்லை. அஜியும் அக்காவின் கணவர் வீட்டாருக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் தவிப்பதை பார்த்து "அஜி, நா தான் அவசரப்பட்டு உன்கிட்ட என் பிறந்தநாள் அப்ப சொல்லிட்டேன். நாம இதை மறந்துருவோம், நம்மள பெத்தவங்களுக்காக" என்று சொன்னாள்.  "அவசரப்பட்டெல்லாம் இல்ல மகி, எனக்கும் தெரியும் நம்ம ரெண்டு பேருக்குமே  ஒருத்தர ஒருத்தர் எவ்ளோ நாளா பிடிக்கும்னு. என் அக்கா கல்யாணம், ரெண்டு பேருக்கும் நல்ல வேலைன்னு ஒரு வருஷத்துக்கு மேல காத்துகிட்டு இருந்து தான் நீயும் சொன்ன, சொந்த பந்தங்களை எதிர்த்து நிக்க நம்ம ரெண்டு பேருக்குமே தைரியம் கிடையாது, அப்படி ஒரு வாழ்க்கையும் வேணாம். ஆண்டவன் நம்ம தலைல வேற ஏதோ எழுதியிருக்கார் போல இருக்கு.  அதன்படியே நடக்கட்டும் மகி. எல்லாம் கொஞ்ச நாள்ல சரியாகிறும்னு நம்புவோம். மனச போட்டு அலட்டிக்காத. நாம எப்பவும் போல நண்பர்களாவே இருப்போம்" என்று சொல்லி அவளை தேற்றினான்.

வீட்டில் அவ்வளவு பிரச்சனைகள் வந்தபோது மிகுந்த வருத்தப்பட்டாளேயொழியஅன்று அழுதது போல் என்றுமே வெடித்து அழுததில்லை. அவர்கள் பேசியது அன்று தான் கடைசி. மகி அவள் அம்மா அப்பாவிடம் பேசி அவளுக்கு கொஞ்சம் டைம் கொடுக்குமாறு கேட்டாள். அந்த வேலையை விட்டு விட்டு சென்னையில் வேறு வேலையில் சேர்ந்தாள், சில மாதங்கள் சென்னையிலிருந்த பிறகு அப்படியே ஆன்சைட் கிடைக்க அவளுக்கு அந்த மாற்றம் தேவை என்று அவள் வீட்டிலும் சம்மதித்தனர். எவ்வளவு தூரம் போன போதிலும் ஒரு சில நினைவுகளை விட்டு நீங்க முடியவில்லை அவளால். கடவுள் வேறேதோ எழுதியிருப்பாரேயானால் அன்று ஏன் விநாயகர் கோவிலில் அஜியின் முகம் தோன்ற வேண்டும், அவன் ஏன் கோவிலில் வைத்து குங்குமமும் பூக்களும் கொடுக்குமாறு அந்த ஆண்டவன் எழுத வேண்டும். இந்த கேள்விகளுக்கு நான் யாரிடம் போய் விடை  கேட்க முடியும் என ஒவ்வொரு நாளும் தனக்குள்ளே மருகிக்கொண்டாள். அப்படியே ஒரு வருடமும் ஓடி விட்டது. மகியின் அம்மா "உனக்கு வரன் பாக்கலாமா மகி?" என்று மறுபடி கேட்டபோது "உங்கள் விருப்பம் அம்மா" என்று (அவர்கள் மனம் வருந்தக்கூடாது என்று) அவள் சொல்லியதும் உள்ளம் குளிர்ந்து போனது. "நீ நல்லா இருப்பேடா என் தங்கம்" என்று மனதார வாழ்த்தினார்.

பெற்ற அன்னையின் வாழ்த்தைத்தவிர வேறு என்ன வேண்டும் என்று அவளை அவளே சமாதானப்படுத்திக்கொண்டாள். ஆனால் இந்த இடம், அந்த இடம், மாப்பிள்ளை போட்டோ என்று பேச்சை எடுக்கும் போதெல்லாம் மனம் பதறும். ஏதாவது சாக்கு சொல்லி தட்டிக்கழித்து விடுவாள். ஒருதரம் அவள் அம்மா பொறுமை இழந்து "ஏன் மகி, என்ன தான் விஷயம்?" என்ற போது மகி அவளது உணர்வுகளையும், கோவில்களில் நடந்தவை பற்றியும், முழு மனதாக இல்லாமல் ஒத்துக்கொண்டால் வேறொரு நபரின் வாழ்க்கையையும் சேர்ந்து பாழாக்கிவிடுவேன் அம்மா என்று சொல்லியபோது தான் இதற்கு மேலும் அஜியை தவிர அவளை வேறு யாருக்கும் மணமுடித்துக்கொடுக்க முடியாது என்பது புரிந்தது. "சரிடா அவர்கள் வீட்டில் பேசலாமா?" என்றார் முதல் முறையாக அப்பா. ஆனால் அஜிக்கு எப்போதோ திருமணம் நிச்சயமாகிவிட்டதாக மாதங்கி ஒருமுறை சொல்லியிருந்தாள். "எல்லாமே கை மீறி போய்விட்டது அப்பா, அஜிக்கு கல்யாணம் ஆகிவிட்டது" என்றாள்.

எல்லோருக்கும் நடுக்காட்டில் விட்டது போன்ற ஒரு உணர்வு. இதற்கு மேல் காலம் தான் பதில் சொல்லணும் என்று மனதை திடப்படுத்திக்கொண்டு அவர்களும் மகியுடன் சென்று சிறிது நாள் தங்கலாம் என்று முடிவெடுத்தனர். அப்பா தற்காலிக விடுப்பு எடுத்துக்கொண்டார், அவள் தங்கியிருந்த சிகாகோ நகரத்திற்கே சென்றனர். அவளது மனம் என்றைக்காவது ஒரு நாள் மாறும் என்று எவ்வளவு காத்திருந்தும் வேறொருவரை கல்யாணம் பண்ணிக்கொள்ள என் மனதளவில் நான் தயாராகவில்லை அம்மா என்று இன்றளவும் சொல்லிக்கொண்டிருக்கிறாள். அவளது திருமணம் என்பதை தவிர வாழ்க்கை சுமுகமாக தான் போய்க்கொண்டிருக்கிறது.  அந்த ஸ்டேஷனில் உட்கார்ந்து எவ்வளவு நேரம் கடந்த கால நிகழ்வுகளை அசை போட்டுக்கொண்டிருந்தாளோ, மொபைல் ரிங்க்டோன் சத்தத்தில் நிகழ்வுலகிற்கு வந்தாள். போனை எடுத்து பேசிவிட்டு வீட்டிற்கு போவதற்கு டாக்ஸி புக் பண்ணினாள். டாக்ஸியில் ஏறியதும் கைப்பையில் இருந்த நோக்கியா 1108 'ஐ  எடுத்து கையில் இறுக்கமாக பற்றிக்கொண்டாள்.

மகிஷா வருவாள்... பாகம் 5

மகிஷா - பாகம் 3

 ஏதோ ஒன்று மகியின் மேல் விழ, கண்களை மூடி தூணில் சாய்ந்து உட்கார்ந்திருந்தவள் சட்டென்று கண்களை திறந்தாள். அருகில் ஒரு சிறு குழந்தை கையில் வைத்திருந்த பந்து அவள் மேல் வந்து விழுந்திருந்தது. பந்துடன், தன் கைப்பையில் வைத்திருந்த ஒரு சாக்லேட்டையும் அந்த குழந்தைக்கு கொடுக்க, அது பந்தை கீழே போட்டு விட்டு கையிலிருந்த சாக்லேட்டை பிரிக்க ஆரம்பித்ததை கண்டு நகைத்துவிட்டு கையிலிருந்த கடிகாரத்தை பார்த்தாள். கிளம்பலாம்  என்று எண்ணி எழுந்தவள் கோவிலுக்கு வெளியே வந்து கொஞ்சம் போட்டோசை க்ளிக்கிக் கொண்டாள். சிறிது தூரம் நடந்து செல்ல ஆரம்பித்தாள். எதிரில் ஒரு காலி ஆட்டோ வரவே கையசைத்து கூப்பிட்டு பெசன்ட் நகர் அஷ்டலக்ஷ்மி கோவிலுக்கு செல்லும்படி உரைத்தாள். 

ஏழு மணிக்கு அந்த கோவில் மிக ஜனரஞ்சகமாக இருந்தது. அவள் அங்கு ஒரே ஒரு முறை தான் வந்திருந்தாள், அதனால் அந்த இடம் மாறியிருக்கிறதா இல்லையா என்று அவளால் பெரிதாக கண்டுபிடிக்க முடியவில்லை. சில்லென்ற கடல் காற்று ரம்மியமாய் வருடுக்கொடுக்க, அங்கிருந்த ஒரு பூக்காரம்மாவிடம் "இரண்டு முழம் சாமந்தி பூ குடுங்க" என்று கேட்டு வாங்கிக்கொண்டு உள்ளே சென்றாள். அந்த மகாலக்ஷ்மி கோவில் மூலஸ்தானத்திற்கு செல்வதற்கு குறுகலான சில படிகளை ஏறி செல்ல வேண்டியிருந்தது. கடல் அலைகளின் சத்தம் ஒரு புறம், அந்த சத்தம் கொடுக்கும் மன அமைதி ஒருபுறம் என்றால் மறுபக்கத்தில் நியான் வெளிச்சத்தில் பரபரப்பாக தெரிந்த சாலையும், அதில் சென்ற எண்ணிலடங்கா வாகனங்களும், சாலையில் நடந்து செல்லும் மக்களும், கடைகளும், அதனிலிருந்து எழும்பிய இரைச்சலும்; இந்த இரண்டிற்கும் நடுவே எழில்கொஞ்சும் அழகுடன் கூடிய வேலைப்பாடுடனான அந்த அஷ்டலக்ஷ்மி கோவில், இவை எல்லாவற்றையும் ஒரு சேர ரசித்துக்கொண்டே மகாலக்ஷ்மியை தரிசனம் செய்ய கியூவில் நின்று கொண்டிருந்தாள் மகிஷா.

பத்து நிமிடம் நின்ற பின் அர்ச்சகரிடம் பூக்களை கொடுத்து விட்டு, அவர் அர்ச்சனை செய்து ஆரத்தி காட்டும் வரை கண்களை மூடி வணங்கிக்கொண்டிருந்தாள். தீபாராதனை முடிந்து குங்குமத்துடன் இரு சாமந்தி மலர்களையும் அவள் கையில் திணித்து விட்டு அடுத்தடுத்து நகர்ந்து சென்றார். கையில் இருந்த சாமந்தி மலர்களையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். பதினான்கு வருடங்களுக்கு முன் அவள் கையில் கிடைத்த மலர்களைப் போலவே இன்றும்; கொடுத்த நபர்கள் தான் வேறு. அப்போது மகி மேத்தா நகரில் ஒரு சிறிய கம்பெனியில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டராக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள், அவளது அன்றாட செலவுகளுக்கு ஆகுமே என்று கிடைத்த அந்த வேலையை ஒப்புக்கொண்டாள்.

ஒரு வார இறுதி நாளில் அஷ்டலக்ஷ்மி கோவிலுக்கு போகலாம் என்று மகியும், மாதங்கியும், அஜியும் சென்றிருந்தார்கள். அன்றும் அப்படி தான் மகாலக்ஷ்மியை தரிசனம் செய்த பிறகு அர்ச்சகர் எல்லோர் கையிலும் குங்குமமும் மலர்களும் கொடுத்தார். அஜியிடம் அவர் கொடுத்த இரு சாமந்தி மலர்களை இந்தா என்று எதேச்சையாக அவன் மகியிடம் கொடுக்க அவளது கைகளும் தன்னிச்சையாக அவற்றை வாங்கிக் கொண்டன. குங்குமத்தை பேப்பரில் மடித்து பர்சிற்குள் வைத்துக் கொண்டு பூக்களை கைப்பையில் சைடு ஜிப்பில் போட்டு வைத்தாள். அங்கிருந்து கிளம்பி ரூமிற்கு சென்றவுடன் பூக்களை எடுத்து அவளுடைய டைரியில் பத்திரப்படுத்திக்கொண்டாள். "நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன், ஏன் இப்படி செய்கிறேன்?" என்று அவள் மனம் அவளையே கேள்விகேட்டது.

எதற்கும் அவளிடம் விடையில்லை. ஆனாலும் சில நினைவுகளையும் நிகழ்வுகளையும் பொக்கிஷம் போல பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள தோன்றுமல்லவா? இது வரை நூறு முறைக்கும் மேல் இந்த நிகழ்வுகளை ஆசை தீர அசை போட்டு பார்த்திருப்பாள். இன்று அர்ச்சகர் கொடுத்த சாமந்திப் பூக்களையும் பத்திரப்படுத்திக் கொண்டு கோவில் பிரகாரத்தை அடிப்பிரதட்சணம் செய்து விட்டு வீட்டிற்கு போவதற்கு ஓலா புக் செய்தாள். டாக்ஸி வந்ததும் ஏறி உட்கார்ந்தாள். அன்றைய தினம் நடந்த நிகழ்வுகளும் அன்றொரு தினம் நடந்த நிகழ்வுகளும் மாறி மாறி அவளது மண்டைக்குள் வந்து செல்ல, அன்று முழுவதும் அலைந்ததினாலும், முந்தைய தினம் சரிவர தூங்காததினாலும், பசியினாலும் அவளது தலை கனக்கத்தொடங்கி, வீட்டிற்கு போவதற்குள் கடுமையான தலை வலியாக மாறியிருந்தது. காலிங் பெல் அடித்த போது கதவை திறந்தது அக்காவின் பத்து வயது மகன் மிதுன். "அம்மா ஆண்ட்டி வந்துட்டாங்க" என்று சொல்லியபடி அவள் உள்ளே வந்ததும் கதவை சாத்தி தாழிட்டான்.

அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த ரதியின் அக்கா அவளது முகத்தை பார்த்து "என்னாச்சு மகி, ரொம்ப டல்லா இருக்கே, உடம்புக்கு எதுவும் முடியலையா?" என்றாள் பரிவுடன். "திடீர்னு தலை ரொம்ப வலிக்க ஆரம்பிச்சிருச்சு அக்கா, ஒரு டேப்லெட் போட்டு தூங்கி எந்திரிச்சா சரியாகிரும்" என்றாள் தலையை பிடித்தவாறே. "சரி நீ போயி கை கால் கழுவிட்டு வா, நா தோசை ஊற்றி தரேன், சாப்டுட்டு மாத்திரை போட்டுக்கோ" என்றாள். மகி கை கால் கழுவி விட்டு வருவதற்குள் சூடான தோசையை தட்டில் சட்னியும் இட்லி பொடியும் வைத்து எடுத்து வைத்திருந்தாள். சூடான தோசை இதமாக தொண்டைக்குள் இறங்கினாலும், அந்த தலை வலியுடன் இரண்டிற்கு மேல் அவளால் சாப்பிட முடியவில்லை. ஒரு தம்ளர் வெது வெதுப்பான பாலை குடித்துவிட்டு ஒரு பரசிட்டமோல் டேப்லெட்டை போட்டு விட்டு படுத்துக்கொண்டாள். படுத்த நிமிஷத்தில் உறங்கியும் போனாள்.

காலை  6 .30  மணிக்கு அலாரம் அடிக்க உறக்கம் கலைந்து படுக்கையில் எழுந்து அமர்ந்தாள். மொபைலிலிருந்த "கால் மீ ஒன்ஸ் யு வேக் அப்" என்ற வாட்ஸாப் செய்தியை பார்த்துவிட்டு அவள் அம்மாவிற்கு கால் பண்ணினாள். "ஹாய் அம்மா ஹொவ் ஆர் யு அண்ட் அப்பா" என்றாள் கொஞ்சலாக. "வி ஆர் பைன் மகி, உனக்கு தலைவலின்னு ரதியோட அக்கா சொன்னாளே, இப்ப எப்படி இருக்கு? வேணும்னா ஒரு நாள் லீவு எடுத்துக்கரியா? முடியுமா?" என்றாள் அக்கறையுடன். "அம்மா ஜஸ்ட் லேசான தலைவலி தான் மா, இப்ப பரவால்ல. தவிர வந்திருக்கிறதே அஞ்சு நாளைக்கு தான். இதுல லீவு எல்லாம் போட முடியாதும்மா, யு டோன்ட் ஒர்ரி ஐ வில்  டேக் கேர். நா ஈவினிங் வந்து பேசறேன், நேரமாச்சு" என்றவளிடம் "இன்னைக்கு சாயங்காலம் எங்கேயும் வெளில போக வேணாம். ஒரு நாள் நல்ல ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு போ. இட்ஸ் மை ஆர்டர்" என்றார் கண்டிப்பு கலந்த அன்புடன். "ஓகே அம்மா, இப்ப நா போனை வைக்கறேன். பை" என்று சொல்லி கட்டிலிலிருந்து வேகமாக இறங்கி பல் துலக்கப்போனாள்.

ரதியின் அக்கா இடையே வந்து "காபி குடுத்துவிட்டு, தலைவலி பரவாயில்லயா?" என கேட்டு விட்டு போனாள். காபி குடித்துக் கொண்டே ஈமெயில் செக் பண்ணி அன்றைய தினத்துக்கான வேலைகளை ஒருமுறை மனதிற்குள் ஓடவிட்டு பார்த்தாள். லேப்டாப்பை  மூடி எடுத்து வைத்துவிட்டு குளியலறைக்குச் சென்றாள். எட்டு மணிக்கு முழுவதுமாக ரெடியாகி சாப்பிட அமர்ந்த போது ரதியின் மாமா "இப்ப தலைவலி ஓகேவா? நா வேணும்னா ஆபீஸ்ல ட்ராப் பண்ணவா?" என்றார். "பரவால்ல அண்ணா, நானே போயிக்கறேன். இப்ப தெம்பாகிட்டேன். தவிர மெட்ரோல போறது ரொம்ப எக்சைட்டிங்கா இருக்கு " என்றாள் சிரித்தவாறே. "சரிம்மா, உன் விருப்பம்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றார். 

சாப்பிட்டு முடித்து, முந்தைய நாள் போலவே நடை, மெட்ரோ, ஆட்டோ என ஆபீஸ் வந்து சேர்ந்தாள். வைப்ஃக்கு உடம்பு சரி இல்லாததால் தான் அன்று ஆபீசுக்கு வரவில்லை என்றும்  ஒர்க் ஃபிரம் ஹோம்  பண்ணுவதாகவும் நரேன் மெசேஜ் பண்ணியிருந்தான். மகிக்கும் அன்று ரொம்ப பிசியாக போனது. மாலை ஐந்து மணிக்குத்தான் கிளம்ப முடிந்தது. அம்மா அன்று எங்கேயும் போக வேண்டாம் என்று கண்டிப்புடன் சொல்லியிருந்ததாலும், ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணி உடம்புக்கு ஏதாவது வந்தால் லீவு போட முடியாது என்பதாலும் அன்று வீட்டிலேயே இருப்பது என முடிவெடுத்தாள். அதற்கேத்தவாறு அன்று மாலை முழுவதும் யூஎஸ் டீமிடம் இருந்து மாற்றி மாற்றி கால் வந்து கொண்டே இருந்தது. 

அடுத்த நாளும் கூட ஆபீஸிலும் மாலையிலும் வேலை ஒன்றன் பின் ஒன்றாக வந்துகொண்டே இருந்தது.  வெளியில் செல்வதை பற்றி யோசிக்க கூட நேரமின்றி வியாழக்கிழமை மதியம் வரை ஓடிக்கொண்டே இருந்தாள். ஒரு வழியாக மூன்றரை மணி வாக்கில் எல்லாவற்றையும் முடித்துவிட்டு, அடுத்த நாளுக்கு தேவையான விஷயங்கள் எல்லாம் இருக்கிறதா என ஒரு கால் மணிநேரம் சரி பார்த்துவிட்டு ஸ்ரீதரிடம் மறு நாள் கன்டினியூ பண்ணலாம் என சொல்லிவிட்டு கிளம்பினாள்.  வெளியில் வந்து ஒரு ஆட்டோ பிடித்து கிண்டி ஸ்டேஷன் போங்க என்றாள். கிண்டியில் டிக்கெட் கவுண்டரில் நுங்கம்பாக்கம் என்று கேட்டு டிக்கெட் வாங்கிக்கொண்டு பிளாட்பாரம் நோக்கி நடந்தாள். தாம்பரத்திலிருந்து பீச் செல்லும் எலக்ட்ரிக் ட்ரெயின் வந்ததும் லேடீஸ் கம்பார்ட்மெண்டில் ஏறிக்கொண்டாள். காலியாக இருந்த இருக்கையில் உக்காரலாமா என்று ஒரு கணம் யோசித்துவிட்டு வாசலருகே தோதாக சாய்ந்து நின்று கொண்டாள். முதல் முறை இந்த ட்ரெயினில் பயணித்த போது மகியும் மாதங்கியும் நுங்கம்பாக்கத்திலிருந்து திநகருக்கு லேடீஸ் கம்பார்ட்மெண்ட் என நினைத்து முதல் வகுப்பில் ஏறி ஒய்யாரமாக நின்றுகொண்டு போன பொது டிக்கெட் செக் பண்ணும் ஆபீசரிடம் மாட்டி இருநூறு ரூபாய் அபராதம் கட்டினது நினைவில் வரவே தனக்குளேயே சிரித்துக்கொண்டாள்.  

நுங்கம்பாக்கத்தில் ஸ்டேஷனிற்கு இடது புறமாக இருந்த சாலைக்கு படியேறி இறங்கி வந்து சேர்ந்தாள். அங்கே இருந்த ஒரு இளநீர் கடையில் இளநீர் அருந்திவிட்டு டிராக்கை  ஒட்டியபடி இருந்த சாலையில் நடந்தாள். அந்த இடம் அறவே மாறிப்போயிருந்தது. அவளது PG  இருந்த இடத்தை எவ்வளவு தேடியும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கிருந்த ஒரு ஜூஸ் ஷாப், ஒரு அம்மன் கோவில், ஒரு சிறிய விநாயகர் கோவில் எதுவுமே கண்ணில் படவில்லை. அங்கே இங்கே என்று நடந்து எல்லா ரோட்டையும் அளந்து பார்த்தாள். ஒன்றும் புலப்படவில்லை. அந்த விநாயகர் கோவிலை தான் கண்டிப்பாக பார்க்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு. எல்லாவற்றிற்கும் பிள்ளையார் சுழி போட்டதே அந்த விநாயகர் கோவிலில் இருந்த ஒரு குட்டி விநாயகர் தான்.

மகி அந்த PG 'யில் தங்கி டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக ஒர்க் பண்ணிக்கொண்டிருந்த போது மேத்தா நகருக்கு தினமும் நடந்து தான் செல்வாள். அவள் தங்கியிருந்த இடத்திலிருந்து நெல்சன் மாணிக்கம் ரோடு வழியாக சிறிது தூரம் சென்று சாலையை கடந்து தான் மேத்தா நகருக்கு செல்ல வேண்டும். அந்த சாலையில் கூட்ட நெரிசலாக இருக்கும் என்பதால் சந்து சந்தாக உள்வழியே சென்று சாலையை கடந்து அவள் செல்வது வழக்கம். அப்படி ஒரு சந்தில் தான் ஒரு சிறிய விநாயகர் கோவில் இருந்தது. தினமும் காலையில் செல்லும் போது தவறாமல் அட்டெண்டென்ஸ் போட்டு விட்டு தான் ஆபீசுக்கு செல்வாள். ஒரு ஞாயிறு அன்று அவள் அம்மா அவளிடம் "உனக்கு அலையன்ஸ் பாக்க ஆரம்பிக்கலாமா? இப்ப ஆரம்பிச்ச தான் சரியா இருக்கும். உனக்கு ஓகே தான?" என்று ஒரு சம்பிரதாயத்துக்கு கேட்டார்கள். மகியும் சரிம்மா உங்க விருப்பம் என்றாள். அப்போது அவள் அம்மா "உனக்கு நல்ல பையனா அமையனும். எங்களையும் மகன் போல பாத்துக்கற வரனா இருக்கணும். கடவுள் தான் அருள் புரியனும்" என்றார். மகி திங்களன்று வேலைக்கு செல்லுகையில் வழக்கமாக செல்லும் விநாயகர் கோவிலுக்கு சென்று அம்மா நெனச்சது போல அவங்களையும் மகனை போல பாத்துக்கற நல்ல மாப்பிள்ளையை காட்டு பிள்ளையாரப்பா என்று கண் மூடி கை கூப்பி வேண்டிக்கொண்டபோது அஜியின் முகம் அவள் கண் முன் வந்து போனது. மாப்பிள்ளை பற்றி வேண்டிக்கொள்ளும் போது ஏன் அஜியின் முகம் ஞாபகம் வரணும்?

மகிஷா வருவாள்... பாகம் 4

மகிஷா - பாகம் 2

 "ஹேய், இப்ப தான் உன்ன துறு துறுன்னு சொன்னேன். அதுக்குள்ள இவ்ளோ எமோஷனல் ஆகிட்ட. சாரி, தப்பான டாபிக் எடுத்துட்டேனோ?" என்றான் வருத்தம் கலந்த தொனியில். "பரவால்ல நரேன், நானும் இதுவரைக்கும் யார் கிட்டயும் என்னோட உண்மையான மனநிலையை வெளிக்காட்டிக்கிட்டது இல்ல. அப்பா அம்மா கிட்ட கூட.. என்னை பார்த்து அவங்களோட வருத்தம் அதிகமாகிட கூடாதுன்னு ரொம்ப காஷியசா இருப்பேன். உன்ன நேர்ல பாத்ததும் ஏனோ எல்லாத்தையும் வென்ட் அவுட் பண்ணிட்டேன். பட் ஐ ஃபீல் மச் பெட்டெர் நௌ. நா தான் உனக்கு தாங்க் பண்ணனும்.  தைரியமா இருக்க மாதிரி  ஒரு முகத்திரை உருவாக்கிக்கிட்டேன், இப்ப அதுவே என் அடையாளம் ஆகிருச்சு" என்றாள் அதே புன்னகை மாறாமல். "உன்கிட்ட நா ஏற்கனவே நெறய தடவ கேட்டது தான், இப்பயும் கேட்கறேன். நீ ஏன் கல்யாணத்த பத்தி கன்சிடர் பண்ண கூடாது?" என்று அவன் கேட்டு முடிப்பதற்குள் "டைம் ஆச்சு, கெளம்பலாமா? நாளைக்கு லஞ்ச் டைம்ல மீட் பண்ணலாம்" என்று எழுந்தாள். "ஐ நோ மகி, நீ இப்படி தான் ரியாக்ட் பண்ணுவேன்னு. சரி விடு, கேக்கல. ஈவினிங் வீட்டுக்கு வாயேன். ஒய்ஃப் உன்ன வீட்டுக்கு கூட்டிட்டு வர சொன்னா" என்றான் அவனும் எழுந்தபடி.

"தாங்க்ஸ் ஃபார் தி இன்வைட் நரேன், பட் நா இந்த வீக் எல்லா நாளுக்கும் பிளான் வச்சிருக்கேன். முடிஞ்சா கண்டிப்பா நடுல வரேன்" என்றபடி அவனுடன் சேர்ந்து நடக்கலானாள் . "மேடம் அப்படி என்ன பிளான் பண்ணி வச்சிருக்கீங்க, சென்னையை சுத்தி பாக்க போறீங்களா?" என்றான் நக்கலாக. "யு ஆர் ரைட் மேன். சென்னைல சில முக்கியமான இடங்கள் இருக்கு, அங்கல்லாம் நா போயே ஆகணும்.  பட் எப்படி போகணும்னு உன்கிட்ட தான் ஆலோசனை கேப்பேன். கொஞ்சம் அப்பப்ப கைட் பண்ணு ப்ளீஸ்" என்றாள். மதிய வெய்யில் சுள்ளென்று அடிக்க, இருவரும் ஆளுக்கொரு குடையை அங்கிருந்த ஸ்டாண்டிலிருந்து எடுத்துக்கொண்டார்கள்.   "எங்கெல்லாம்னு சொல்லு, நானே கூட்டிட்டு போறேன். எல்லா நாளும் முடியாது, ப்ராபபிளி சாட்டர்டே?  உனக்கு சண்டே விடியக்காலைல தான ஃபிளைட்? நாம சனிக்கிழமை அன்னைக்கு எல்லா இடத்துக்கும் போலாம், உனக்கு ஓகேன்னா" என அவன் கேட்க "இல்ல நரேன், எனக்கு சாட்டர்டே ஈவினிங் டெல்லிக்கு ஃபிளைட். அங்கிருந்து தான் இன்டர்நேஷனல் ஃபிளைட். மோர்ஓவர் எனக்கு தனியா போகணும். என்னோட பழைய நினைவுகளோடே கொஞ்ச நேரம் அங்கெல்லாம் இருக்கணும். தப்பா எடுத்துக்காத, எனக்கு வழி மட்டும் சொல்லு போதும்" என்றாள். "நீ ஒரு முடிவோட தான் வந்துருக்க?" என்றான் புருவம் உயர்த்தியபடி. "ஆமாம், அங்கெல்லாம் போனா நானே என்ன ரிச்சார்ஜ் பண்ணிக்கிட்டா மாறி இருக்கும். இன்னைக்கு மயிலாப்பூர் சாய் பாபா கோவிலுக்கு போலாம்னு இருக்கேன். ஈவினிங் வீட்டுக்கு போயி ஃபிரெஷ் ஆகிட்டு அங்கிருந்து தான் போவேன். சோ நீ எனக்கு தேனாம்பேட்'ல் இருந்து வழி சொன்னால் போதும். ஈவினிங் கால் பண்றேன்." என்று அவள் சொல்லி முடிக்கையில் அவளது பில்டிங் வரவே, குடையை மடக்கி அதன் ஸ்டாண்டில் வைத்து விட்டு நரேனுக்கு பை சொல்லி கண்ணாடி கதவை தள்ளி உள்ளே சென்றாள். நரேன் அவனது பில்டிங்கை நோக்கி நடக்கலானான்.

நான்கு மணிக்கே அவளது வேலையை முடித்துவிட்டு அவள் தங்கியிருக்கும் அவளது தோழியின் அக்கா வீட்டின் முகவரிக்கு ஓலா டாக்ஸி புக் பண்ணினாள். யுஎஸ்ஸில் அவளுடன்  பணிபுரியும் தோழி ரதி. ரதியின் சொந்த அக்கா தேனாம்பேட்டையில் இருப்பதாகவும், ஒரு வாரம் அவர்கள் வீட்டிலேயே தங்கிக்கொள்ளும்படியும் அவளை வற்புறுத்தி, அவள் அங்கே தங்குவதற்கும், காலையும் இரவும் சாப்பிடுவதற்கும் அவள் அக்காவிடம் பேசி முன்னமே ஏற்பாடு செய்திருந்தாள் ரதி. பேயிங் கெஸ்ட் ஆகத்தான் போவேன், இதற்கு ஒத்துக்கொண்டால் தான் அங்கே தங்குவேன் என்று அடம்பிடித்து தான் ஒத்துக்கொண்டாள் மகி. ரதியின் அக்கா, அவளது கணவன், மற்றும் அவர்களது பத்து வயது மகன் ரித்விக் அங்கே இருந்தார்கள்.  டாக்ஸி வீட்டின் முன் நிற்கவும், அதற்கான தொகையை கொடுத்துவிட்டு வீட்டின் காலிங் பெல்லை அமுக்கினாள். கதவை திறந்த ரதியின் அக்கா, "வா மகி,  எப்படி போச்சு இன்றைய நாள்? புது இடம், கிளைமேட்  எல்லாம் செட் ஆச்சா?" என்று கேட்டபடி கிச்சனுக்குள் நுழைந்தாள். "நீ முகம் கழுவிட்டு வா, நா காபி போட்டு வைக்கிறேன்" என்றாள் அவள் முதல் கேள்விக்கு பதில் சொல்லுமுன்.

"டே சூப்பரா போச்சுக்கா, ஆனா காபி வேணாம். பசியே இல்ல. வெய்யில், ஜெட் லாக் எல்லாம் சேர்ந்து டைஜெஷன்ன ஸ்லோ டவுன் ஆக்கிருச்சுனு நினைக்கறேன். கொஞ்சம் வயிர ஃபிரீயா விட்டா சரியாகிரும். நா கொஞ்சம் ஃபிரெஷ் ஆகிட்டு சாய் பாபா கோவில் வரைக்கும் போயிட்டு வந்துடறேன்" என்று சொல்லியபடி டவலுடன்  பாத்ரூமிற்குள் நுழைந்தாள். அவள் முகம் கழுவி வருவதற்குள் ஒரு க்ளாசில் லெமன் ஜூஸ் ரெடியாக வைத்திருந்தாள் ரதியின் அக்கா. "இந்தா மொதல்ல இதை குடி, அப்புறம் கிளம்பலாம். டைஜெஷன் சரி பண்ணும், டிஹைடிரேட் ஆகமலும் இருக்கும் " என்று அவளது கையில் கிளாஸை கொடுத்து சோபாவில் உட்காரச்செய்தாள். "தாங்க் யு அக்கா, ரதி உங்கள பத்தி நெறய சொல்லியிருக்கா. நீங்க எவ்ளோ கேர் பண்ணி அவளை பாத்துக்குவீங்கன்னு. இன்னைக்கு நா ரொம்ப லக்கி, அந்த அன்பை பெறுவதற்கு" என்றாள் முகமெல்லாம் மலர. "அவ உன்கிட்ட முழுசா சொல்லலேன்னு நினைக்கறேன். நா அவகிட்ட நெறய சண்டை கூட போடுவேன். சரி, சரி,  கெளம்பி போயிட்டு நைட் சாப்பிட சீக்கிரம் வந்துரு" என்றாள் ரதியின் அக்கா.

ஒரு பாந்தமான குர்த்திக்குள் தன்னை புகுத்திக்கொண்டு, அதற்கு தோதாக ஒரு ஷாலும் எடுத்துக் கொண்டாள். "எப்படி போகணும்னு தெரியுமா மகி?" என்ற அக்காவிடம் "தெரியும்க்கா, ஃபிரெண்டு கிட்ட கேட்டுட்டேன்" என்று சொல்லி கிளம்பினாள். சிறிது தூரம் நடந்து அங்கிருந்த ஆட்டோ ஸ்டாண்டில் "மயிலாப்பூர் சாய் பாபா கோவிலுக்கு போங்க"  என்று சொல்லி ஏறி அமர்ந்தாள். மாலை நேரத்திற்கே உரிய நெரிசல் சாலைகளை கவ்விக்கொள்ள, ஆட்டோ ஊர்ந்து ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இரண்டு கிலோமீட்டரை கால் மணி நேரமாக அளந்து அளந்து கடந்து வந்து, வெள்ளை, ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம் கலந்த ஜரிகை துணியால்  அலங்கரிக்கப்பட்ட சாய் பாபா கோவிலின் முன் வந்து நின்றது. ஓம் சாய் ராம் என இரண்டு பக்க க்ரில்லிலும் எழுதியிருக்க, பத்து வருடங்களில் இந்த இடம் எவ்வளவு மாறியிருக்கிறது என்று வியந்து கொண்டே, அங்கிருந்த காலணி வைக்கும் கவுண்ட்டெரில் செருப்புகளை கழட்டி வைத்து டோக்கன் வாங்கிக்கொண்டாள். பிறகு வெளியிலிருந்து குழாயில் கால்களை கழுவி விட்டு, கொண்டு வந்திருந்த ஷாலை தலைக்கும் தோளுக்குமாக சேர்த்து போட்டுக்கொண்டு அங்கிருந்த பூக்கடையில் சாமந்தி பூ இரண்டு முழம் வாங்கிக்கொண்டு பிரகாரத்திற்குள் நுழைந்தாள்.

வார நாளின் மாலை வேளை என்பதால் அவ்வளவு கூட்டம் இருக்கவில்லை. கோவிலுக்குள்ளும் நிறையவே மாறி இருந்தது. பூக்களை அங்கிருந்த அர்ச்சகர் வாங்கி சாயியின் தோளில் சாத்த, மகி சாய் பாபாவின் பாதங்களை தொட்டு வணங்கி, கீழே விழுந்து நமஸ்கரித்தாள். முன்னாடி அங்கிருந்தே பின்புறம் செல்லும்படி இருந்த வாசலை அடைத்துவிட்டு பக்கவாட்டில் செல்லும் படி மாற்றியமைத்திருந்தார்கள். பெரிய மரக்கதவுகள், மார்பிள் சுவர், குளிரூட்டப்பட்ட மூலஸ்தானம், புதிதாக கட்டப்பட்ட மண்டபம் என பல மாறுதல்கள் இருந்தன. மகி எப்பொழுதும் கோவில்களில் அடிபிரதட்சணம் செய்வது வழக்கம். அன்றும் அடிபிரதட்சணம் செய்து விட்டு அங்கிருந்த ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்தாள். இந்த கோவிலுக்கு வந்தாலே மகிக்கு மனம் சாந்தமாகிவிடும். அன்றும் அப்படி தான், மனதின் இரைச்சல் எல்லாம் அடங்கி சட்டென மனது சமநிலை அடைந்தது. அவளது கருவிழிகள் இங்கும் அங்கும் சுழன்று வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, மனம் அப்படியே பதினான்கு வருடம் பின்னோக்கி செல்லத்தொடங்கியிருந்தது. 

"ஏய் மகி, உன் ஃபோன் அடிக்குது டி" என்று அவள் தோழி மாதங்கி சொல்ல, அந்த PG'யின் முதல் மாடியிலிருந்து திறந்த வெளியில் போடப்பட்டிருந்த கட்டிலில் உட்கார்ந்து ஆப்டிட்யுட் ப்ரீபேர் செய்து கொண்டிருந்த மகி "இதோ வரேன் டி" என்றபடி மரக்கதவு பொருத்தப்பட்டிருந்த அந்த நிலைப்படியை தாண்டி உள்ளறைக்கு சென்றாள். சார்ஜிலிருந்த ஃபோனின் டிஸ்பிளே அஜி  என்று காட்ட, உற்சாகமாய் ஃபோனை அட்டென்ட் செய்து "குட் ஈவினிங் சார், என்ன அதுக்குள்ள ஆஃபீஸ்லயிருந்து வந்தாச்சா?" என்றாள். "வேலை இன்னைக்கு சீக்கிரமே முடிஞ்சுது, இனிமே தான் கெளம்பனும். சாய் பாபா கோவிலுக்கு போலாம்னு தோணுச்சு, அதான் நீயும் மாதங்கியும் வர்றீங்களான்னு கேட்கலாம்னு கால் பண்ணேன். என்ன பண்ணிக்கிட்டு இருக்க?" என்றான். "இந்த வீக்கெண்ட் ஒரு வாக்-இன் இருக்கு. அதுக்கு தான் ப்ரீபர் பண்ணிக்கிட்டு இருந்தேன். சரி இரு மாதங்கிகிட்டயும் கேட்டுட்டு சொல்றேன்" என்று ஃபோனை வைத்தாள். மூவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். அஜி என்ற அஜய்க்கு ஒரு சிறிய கம்பெனியில் வேலை கிடைக்க, மகியும் மாதங்கியும் ஒரு PG 'யில்  தங்கி வேலை தேடிக்கொண்டிருந்தனர். "ஹேய் மாது, சாய் பாபா கோவிலுக்கு வரியா டி, அஜி கேட்டான்" என்று மகி கேட்க "இல்ல டி, எனக்கு டையர்டா இருக்கு, நீ வேணும்னா போயிட்டு வா" என்றாள். 

மகிக்கு அந்த கோவில் மிகவும் பிடிக்கும் என்பதால் அவள் மட்டும் கிளம்பினாள். சூளைமேடு பஸ் ஸ்டாப்பில் பஸ் ஏறி "ஒரு S.I.E.T" என்று சொல்லி டிக்கெட் வாங்கினாள். அங்கிருந்து அஜியும் அவளும் மயிலாப்பூர்க்கு ஒரு ஆட்டோ எடுத்து சென்றார்கள். இன்றைக்கு இருக்கும் அளவிற்கு அந்த கோவிலில் அவ்வளவு கூட்டம் அன்று இருந்ததில்லை. கண்களை மூடி கும்பிட்டு அந்த அமைதியில் லயித்திருந்த  வேளையில் அர்ச்சகர் ஆரத்தி காட்டியிருந்திருப்பார் போலும். குங்குமமும் கொடுத்து முடித்திருந்தார். மகி கண்களை திறந்த போது அவர் அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டார். அஜி அவன் கையிலிருந்த குங்குமத்தை மகியிடம் நீட்ட, அவளும் அதனை எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டாள். அதனை எடுக்கும் போது மகிக்கு எதுவும் தோன்றவில்லை தான், ஆனால் ரூமிற்க்கு செல்லும் வழியில் தான் மனதிற்குள் ஏதோ குறுகுறுக்க ஆரம்பித்திருந்தது. 

 மகிஷா வருவாள்.... பாகம் 3

மகிஷா - பாகம் 1

 "நெக்ஸ்ட் ஸ்டேஷன் கிண்டி" என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் பெண் குரல் ஒலிக்க, தான் அமர்ந்திருந்த நீல நிற இருக்கையிலிருந்து எழுந்து கம்பியை பிடித்தவாறு நிற்கலானாள் மகி என்ற மகிஷா. ரயில் நிலையத்தில் அலுங்காமல் நின்று, தானியங்கி கதவுகள் திறந்ததும், மகியுடன் சேர்ந்து வேறு சில பயணிகளையும்  உதிர்த்துவிட்டு சிறு குலுங்கலுடன் புறப்பட்டு சென்றது சாம்பல் மற்றும் நீல நிறத்திலான அந்த உலோக ரயில். தன்னிடமிருந்த டோக்கனை தானியங்கி எந்திரத்தின் ஸ்லாட்டில் மகி போட, பகாசுரன் போல டோக்கனை விழுங்கி விட்டு விசிறி போன்ற கதவுகளை திறந்து அது வழி விட்டது.

காலை 8.30 மணி என்று கைக்கடிகாரம் காட்ட, ஒரு ஆட்டோவை நிறுத்தி "ஒலிம்பியா டெக் பார்க்"  என்று கொஞ்சும் தமிழில் கூறினாள் மகி. மார்கழிப் பனியின் குளிரும், இளங்கதிரவனின் வெதுவெதுப்பும் மனதிற்கு இதமளிக்க, பத்து வருடங்களில் சென்னை எவ்வளவு மாறியிருக்கிறது என்று ஆச்சர்யத்தோடு கருப்பு மையிட்ட கயல் போன்ற விழிகள் அகல பார்த்துக்கொண்டிருந்தாள்.  முகத்தில் அறைந்த காற்றில் பறந்த கூந்தலை அநாயசமாக காதின் பின்னால் சொருகி, கையில் இருந்த ஸ்கார்ஃபால் சிறை வைத்தாள். சிணுங்கிய செல்பேசியை தனது வயர்லெஸ் இயர்ஃபோன் மூலம் ஆன் செய்து "யா ஸ்ரீதர், ஐ ஆம் ஆன் தி வே. வில் ரீச் தேர் இன் அனதர் 5 மினிட்ஸ். பை" என்று கூறி கட் செய்தாள். அவள் பேசிய நுனி நாக்கு ஆங்கிலமும், ஒய்யாரமாக கால் மேல் கால் போட்டு அவள் உட்கார்ந்திருந்த தோரணையும், சென்னையின் போக்குவரத்து நெரிசலை புன்னகையோடு அவள் ரசித்து பார்த்த விதமும் அவள்  இந்த இடத்திற்கு புதிது என்று ஆட்டோக்காரனுக்கு காட்டி கொடுக்க வழக்கத்தை விட கூடுதலாக வசூலித்துக்கொண்டு உற்சாகமாக புறப்பட்டு சென்றான்.

அந்த 10 மாடி கட்டிடத்தின் கண்ணாடி கதவை தள்ளிவிட்டு உள்ளே நுழைந்து செக்யூரிட்டி செக் முடித்து விட்டு லிஃப்டை நோக்கி நடந்தாள். ஐந்தாம் தளத்தில் இறங்கி இடதுபுறத்திலிருந்த அந்த கதவு வழியாக நடந்துக்கொண்டே மொபைலிலிருந்த ஸ்ரீதர் என்ற நம்பருக்கு கால் செய்தபடியே விழிகளை அந்த அறை முழுதும் ஓட விட்டாள். அந்த அகண்ட தளத்தின் நடுவே தனித்து இருந்த ஒரு கேபினிலிருந்து ஆறடி உயரத்திலிருந்த அந்த ஸ்ரீதர் கையசைக்க, மகிஷாவும் அதற்க்கு பதிலாக புன்னகையுடன் சேர்ந்த ஒரு தலையசைப்போடு அவரை நோக்கி நடந்தாள். மகிஷா அந்த ப்ரொஜெக்ட்டின் யுஎஸ் கிளையன்ட்  டீமில்  இருப்பவள். ஒரு KT (அறிவு பரிமாற்றம்) செஷனுக்காக ஒரு வார காலத்திற்கு சென்னை வந்திருந்தாள். ஸ்ரீதருடன் பரஸ்பர அறிமுகம், அவளது பயணம், சென்னை போக்குவரத்து நெரிசல் மற்றும் வெதர் என்று மேலோட்டமாக பேசிய பின் டீம், ப்ராஜெக்ட் என டெக்னிகலாக  பேசத்துவங்கினர்.  "ஸ்ரீதர், ஐ டோன்ட் வாண்ட் எனி டிலேஸ்  டியுரிங் தி KT செஷன். ஹோப் தி டீம் வில் பி ஆன் டைம் த்ரூஅவுட்  திஸ் வீக்" (மொழிபெயர்ப்பு: டீம்'ல் இருக்கும் அனைவரும் எந்த கால தாமதமும் செய்யாமல் இந்த வாரம் முழுக்க நேரத்திற்கு வந்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்.) "எஸ் மகிஷா, தே வில்" என்று ஆமோதித்தபடி டீமை அறிமுகப்படுத்த அருகிலிருந்த கேபினை நோக்கி நடந்தனர்.

KT'யின் பிரேக் டைமில் மகிஷா மொபைலை செக் செய்தாள்.  "ஹவ் யு ரீச்ட்?" என்று நரேனின் மெசேஜ் திரையில் மின்ன, "எஸ், வில் மீட் யு  டியுரிங் லஞ்ச்" என்று ரிப்ளை பண்ணிவிட்டு வேலையை தொடரலானாள். லஞ்ச் டைமில் புட் கோர்ட்டின் (food court) ஜூஸ் கவுண்டர் அருகில் நிற்கும்படி நரேன் உரைத்திருந்தான். அங்கிருந்த ஒரு டேபிளில் உட்கார்ந்து வந்திருந்த மெயிலிற்கு ரிப்ளை பண்ணிக்கொண்டிருந்த போது "ஹலோ மேடம்" என்று குரல் கேட்க "ஹேய் எப்படி இருக்க" என்று உற்சாகமாக பதிலளித்தபடி எழுந்து நரேனின் கையை குலுக்கினாள். "வெரி ஃபைன், நீ எப்படி இருக்க" என்ற பொதுவான சம்பாஷணைகள் நடந்தேறின. நரேனும் மகியும் வேரோரு IT  கம்பெனியில் ஒன்றாக வேலைபார்த்தவர்கள். ஃப்ரெஷராக   ஒன்றாக சேர்ந்து, ஒன்றாக ட்ரைனிங் அட்டென்ட் செய்து வேற வேற ப்ரொஜெக்ட்டில் வேலை செய்தவர்கள். வேற கம்பெனி மாறிய பிறகும் வாட்சப்பில் இன்னும் தொடர்பில் இருந்து கொண்டிருப்பவர்கள்.  மகி சென்னை வருவது குறித்து சொன்னதும் மீட் பண்ணலாம் என்று முன்னமே பிளான் பண்ணியிருந்தார்கள்.    

சாப்பிட்டுக்கொண்டே பத்து வருட கதையை அளவளாவிக்கொண்டிருந்தார்கள். "சென்னை எப்படி இருக்கு?" என்று கேட்டவனிடம் "ரொம்பவே மாறிருச்சு, அடையாளமே தெரியல" என்றாள். "ம்ம் உன்னை மாதிரியே.. அப்ப நா பார்த்த மகிக்கும் இப்ப பாக்கற மகிக்கும் எவ்ளோ வித்தியாசம்? எவ்ளோ அமைதியா இருப்ப,  இப்ப அப்படியே துரு துறுனு, நீ ஏதாவது  ஒன்னு சொன்னா எதிர்ல இருக்கறவங்க மறு பேச்சு  பேசாம உடனே அத செஞ்சு முடிச்சுருவாங்க போல" என்று கிண்டலாக சொன்னான். எதுவும் சொல்லாமல் வெற்று புன்னகை பூத்த மகியிடம் "அப்பா அம்மா எப்படி இருக்காங்க? யுஎஸ் செட் ஆகிருச்சா அவங்களுக்கு? எப்படி பொழுது போகுது அவங்களுக்கு அங்க?  அண்ட் நீ இப்படியே எவ்ளோ நாள் இருக்க போற மகி?" என்று அக்கறையாக கேள்விகளை  அடுக்கினான் நரேன்.

அப்பா அம்மா நல்லா இருக்காங்க நரேன். அம்மா அங்க இருக்கற பசங்களுக்கு பாட்டு சொல்லி கொடுக்கறாங்க. அப்பாவும் அம்மாவும் தமிழ் சங்கம்ல ஆக்ட்டிவ் மெம்பெர்ஸ். அதுனால யார் கூடவாவது எப்பவும் ஏதாவது பேசிக்கிட்டும் செஞ்சிகிட்டும் அவங்கள பிஸியா வச்சிக்கறாங்க. ரொம்ப ஹாப்பியா இருக்காங்களான்னு கேட்டா, ஹோனஸ்ட்டா சொல்லனும்னா இல்லனு தான் சொல்லணும். பட் லைப்ஃ அப்படியே போயிட்டு இருக்கு. எந்த மோட்டிவும் இல்ல, அடுத்து என்னனு சத்தியமா தெரியல, என்ன வாழறோம், ஏன் வாழறோம் அப்படிங்கற கேள்வி அடிக்கடி மண்டைக்குள்ள வந்து கொண்டஞ்சிகிட்டே இருக்கும். அதுனால முடிஞ்ச வரைக்கும் ஐடிலா இருக்கறத அவொய்ட் பண்ணிக்குவேன். பட் கொஞ்ச நாள்ல மத்தவங்களுக்கு உறுதுணையா இருக்கற மாதிரி ஏதாவது அக்டிவிட்டீஸ்ல ஈடுபடலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன் நரேன். 

மகிஷா வருவாள்....பாகம் 2 


Learning Beyond Textbooks - Life Skills - Child Growth

#Learning_Beyond_Textbooks #Life_Skills A home is the first environment where children can playfully learn a plenty. Traditional textbook le...