எட்டு மணி வாக்கில் வீடு திரும்பிய மகி, அன்று மிகுந்த உற்சாகத்தோடு இருப்பது போல காணப்பட்டாள். இரண்டு நாட்களாக வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் கூட பழைய நினைவுகளும், அது சம்பந்தப்பட்ட இடங்களுக்கும் சென்று வந்த திருப்தி ஒருபுறம் இருக்க, அஜியும் ஒருவேளை வேலைநிமித்தமாக சென்னையில் குடியேறியிருக்கலாமில்லையா? அப்படியிருந்தால் அஜி இருக்கும் அதே ஊரில் ஒரு வாரம் நானும் இருந்திருக்கிறேன் என்று அவள் மனம் குதூகலித்துக்கொண்டிருந்தது. இரவு உணவு அருந்திவிட்டு ரதியின் அக்காவிடமும் அவள் கணவரிடமும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவள் அறைக்குள் புகுந்தாள். கையில் கொண்டு வந்திருந்த ரஷ்மி பன்சாலின் டச் தி ஸ்கை என்ற புத்தகத்தை சிறிது நேரம் படித்துக்கொண்டிருந்தாள். மனம் முழுவதுமாக அதில் லயிக்காததால் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு சென்னையில் அவள் சென்று வந்த இடங்களை மறுபடி ஓட விட்டு ரசிக்கலானாள்.
எப்போது தூங்கிப்போனாளோ, காலையில் மொபைல் அலாரம் அடித்து எழுப்பிவிட்டது. எப்போதும் போல எழுந்தவுடன் அவள் அம்மாவிற்கு போன் பண்ணி பேசிவிட்டு ஆபீஸிற்கு ரெடியாகி கிளம்பிச்சென்றாள். அன்று தான் அந்த KT செக்ஷனின் கடைசி நாள் என்பதால் அன்றைக்கு கவர் பண்ண வேண்டிய டாபிக்ஸ் கம்மியாகத்தான் இருந்தது. லஞ்ச் டைமில் அன்று நரேன் ஜாயின் பண்ணுவதாக மெசேஜ் பண்ணியிருந்ததால், பில்டிங் வாசலில் அவன் வருவதற்காக வெயிட் பண்ணிக்கொண்டிருந்தாள். வரும் போதே அவன் யாருடனோ கால் பேசிக்கொண்டே வர, சைகையால் ஹாய் சொல்லிவிட்டு அவனுடன் சேர்ந்து நடக்கலானாள். அவன் பேசி முடிப்பதற்கும் புட் கோர்ட் (food court ) வருவதற்கும் சரியாக இருந்தது. மகி ஒரு கோபி பராத்தாவும் மொசம்பி ஜூஸ்'ம் வாங்கிக் கொள்ள நரேன் ஒரு சவுத் இண்டியன் தாலி வாங்கிக்கொண்டான். "உன் வைப்ஃக்கு இப்ப உடம்பு பரவாயில்லையா?" என்றாள் மகி. "ம்ம் இப்ப கொஞ்சம் பெட்டெர், எப்படி போச்சு உன்னோட சென்னை சுற்றும் படலம் எல்லாம்? ஷாப்பிங் எல்லாம் முடிச்சாச்சா?" என்று கேட்டபடி காலியாக இருந்த ஒரு டேபிளில் இருவரும் உட்கார்ந்தார்கள்.
"ஷாப்பிங் நாளைக்கு தான் போகணும். இன்னைக்கு ஒர்க் முடிஞ்சதும் மஹாபலிபுரம் போறேன். அதோட சென்னை சுற்றும் படலம் ஓவர்" என்றாள் ராகத்துடன். "மகாபலிபுரமா, அவ்ளோ தூரம் ஆபீஸ் முடிச்சபிறகு போய்ட்டு திரும்ப வர லேட்டாகிருமே" என்று கேட்டவனுக்கு "இன்னைக்கு லாஸ்ட் டே ட்ரெயினிங் அப்டீங்கறதால சீக்கிரமே முடிஞ்சிரும். அப்படி தான் ஸ்கெட்டியுல் பண்ணியிருக்கேன். சோ, எப்படியும் ஒரு டூ ஓ கிளாக் முடிஞ்சிரும். அண்ட் அங்க ரொம்ப நேரம் டைம் ஸ்பென்ட் பண்ண மாட்டேன். மேக்சிமம் ஒரு தர்ட்டி மினிட்ஸ் தான் இருப்பேன்" என்று சொல்லியபடி ஸ்ட்ராவை வாயில் வைத்து ஜூஸ்'ஐ உறிஞ்சினாள். "கிளம்பும் போது உன்ன மீட் பண்ண முடியாதுன்னு நினைக்கறேன். வெரி ஹாப்பி டு மீட் யு அஃப்டர் சோ மெனி இயர்ஸ் நரேன்" என்று சொல்லியவாறே சாப்பிட்ட ப்ளேட்ஸ்'ஐ வைத்துவிட்டு கைகழுவ எழுந்தாள். "எனக்கும் கூட உன்ன பாத்ததுல ரொம்ப சந்தோஷம் மகி. பத்திரமா போய்ட்டு வா. இன்னொரு தரம் சென்னை வந்தா வீட்டுக்கு வர ட்ரை பண்ணு. அப்பா அம்மாவை விசாரிச்சேன்னு சொல்லு. உன் லைப்ஃ பத்தி இன்னும் கொஞ்சம் கன்சிடர் பண்ணு மகி" என்று பேசிக்கொண்டே நடந்து கொண்டிருக்கையில் அவன் கையில் இருந்த மொபைல் சிணுங்க, டிஸ்பிளே விக்னேஷ் என்றது. சரி நா நாளைக்கு உனக்கு கால் பண்றேன், பை" என்று சொல்லி போனை அட்டென்ட் செய்ய, இருவரும் அவரவர் வழியில் சென்றார்கள்.
மகியின் ட்ரெயினிங் இரண்டு மணியுடன் நிறைவுபெற, தான் அனுப்ப வேண்டிய ஃபைனல் நோட்ஸை அன்று மாலைக்குள் அனுப்புவதாக சொல்லிவிட்டு டீமிடமும் ஸ்ரீதரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினாள். ஓலாவில் ஆறு மணி நேர பேக்கேஜ்ஜில் மஹாபலிபுரத்திற்கு ஒரு ஓலா மினி புக் பண்ணிக்கொண்டாள். டாக்ஸியில் போகும் வழியில் தான் அனுப்புவதாக சொன்ன டீடெயில்ஸ்'ஐ டைப் பண்ணி, அதை சரி பார்த்து மொபைல் டேடாவை டீத்தேர் பண்ணி ஈமெயில் அனுப்பி முடிக்கும் போது அவளது டாக்ஸி மஹாபலிபுரத்தின் நுழைவுவாயிலை அடைந்திருந்தது. லாப்டாப்பை மூடி பேக்கில் வைத்துவிட்டு ஜன்னலின் வழியே வேடிக்கை பார்கலானாள். டாக்ஸியில் ஏறியவுடன் டிரைவரிடம் பீச் மட்டும் தான் போக வேண்டும் என்றும், அதற்கேத்த மாதிரி பார்க்கிங் இருக்கும் இடத்திற்கே நேராக செல்லும்படியும் சொல்லி இருந்தாள். டாக்ஸியின் டிரைவர் நாற்பதின் தொடக்கத்தில் இருந்தார். பீச்சிற்கு அருகே செல்லும் ஒரு சாலையின் ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு "இந்த ரோடு தான் மா, நேரா போனா பீச் வந்துரும்" என்று சொல்லி வண்டியின் என்ஜினை ஆப் செய்தார். "சரி இங்கயே வெயிட் பண்ணுங்க சார், நா போய்ட்டு வந்துடறேன்" என்று சொல்லி லாப்டாப் பேக்குடன் இறங்கிய மகி பீச்சை நோக்கி நடந்தாள். மஹாபலிபுரம் வர வேண்டும் என்று அவள் நினைத்தது பீச்சின் அழகை கண்டு ரசிப்பதற்காக இல்லை. அவளுடைய வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டுமே நடந்த அந்த ஒரு நிகழ்வு, அது நடந்த இடத்திற்கு மீண்டும் ஒரு முறை வர வேண்டும் என்ற ஆவலில் தான்.
மகி PG 'யில் தங்கியிருந்த போது மாதங்கி, அஜி, மற்றும் வேறு சில நண்பர்களுடன் ஒரு முறை மஹாபலிபுரம் வந்திருந்தார்கள். மகி அது வரைக்கும் பீச்சிற்கே சென்றதில்லை. அது தான் முதல் தடவை என்பதால் தண்ணீரில் உள்ளே செல்லாமல் முன்னாடியே நின்று கொண்டிருந்தாள். இன்னும் கொஞ்சம் உள்ளே வரும்படி அவள் நண்பர்கள் எவ்வளவு கூப்பிட்டும் தனக்கு பயமாயிருப்பதாக சொல்லி முன்னாடியே நின்றாள். "நீ இப்படி எல்லாம் கூப்பிட்டா வர மாட்ட, இரு வரேன்" என்று சொல்லி அஜி அவள் கரம் பற்றி தண்ணீருக்குள் கூட்டி வந்தான். அன்று அவனுடைய கையை பிடிக்க வேண்டும் என்று அவள் நினைக்கவில்லை. ஆனால் வாழ்நாள் முழுவதும் அந்த கரத்தை பற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைத்த போது அது நடக்கவேயில்லை. இருப்பினும் பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு(சூரியன்) ஆகியவற்றின் முன்னிலையில் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே நடந்த அந்த நிகழ்வை பொக்கிஷமாக பொத்தி வைத்துக்கொண்டாள்.
சிறிது நேரம் கடற்கரையில் நின்று விட்டு நேரத்திற்கு திரும்ப வேண்டும் என்பதால் டாக்ஸி இருக்கும் திசையில் நடந்தாள். மகி வருவதை பார்த்த டாக்ஸி டிரைவர் என்ஜினை ஆன் பண்ணி வைத்தார். அவள் ஏறி உட்கார்ந்ததும் "வேற எங்க போகணும்மா?" என்றார். "வேற எங்கேயும் இல்ல சார், வீட்டிற்கு தான், அப்படியே மேப்பை ஃபாலோ பண்ணுங்க" என்று சொல்லிக்கொண்டிருக்கையில் மகியின் செல்ஃபோன் அழைத்தது. திரையில் பெயர் வராமல் நம்பர் மட்டும் வர ப்ளூடூத் ஹெட்செட்டில் அட்டென்ட் செய்தாள். மறுமுனையில் ஒரு ஆண் குரல் "ஹலோ மகிஷா?" என்றது. "யெஸ், மகிஷா ஹியர்" என்றாள். "மகிஷா, நா விக்னேஷ் பேசறேன்மா. விக்கி... என்னை ஞாபகம் இருக்கா?" என்றது அந்த குரல். விக்கி என்ற பெயரை கேட்டதும் மகிக்கு அடையாளம் தெரிந்துவிட்டது. அதே சமயத்தில் பனிரெண்டு வருடங்களாக கேட்காத குரலை கேட்ட போது நெஞ்சு படபடக்கத்தொடங்கியது. விக்கிக்கு என் நம்பர் எப்படி கெடச்சது? நா சென்னையிலிருக்கேன்னு யாரு சொல்லியிருப்பாங்க? விக்கி ஏன் இப்போது எனக்கு கால் பண்ணியிருக்கான்? என ஆயிரமாயிரம் கேள்விகள் நொடிப்பொழுதில் வந்து போக, அவள் தொண்டை வறண்டு போனது, நாக்கு ஒட்டிக்கொண்டது.
"மகிஷா, லைன்ல இறுக்கியாம்மா?" என்றான் விக்கி மறுபடி. "ஆ ஆ விக்னேஷ்... விக்கி... எப்படி இருக்க.. இருக்கீங்க...?" என்று உளறிக்கொட்டினாள். "ஃபைன் மா, நீ எப்படி இருக்க? ரொம்ப வருஷம் ஆச்சு உங்கிட்ட பேசி இல்ல?" என்றான். "ஆமா விக்கி, நா நல்லா இருக்கேன். பட் என் நம்பர் உங்களுக்கு எப்படி கெடச்சது?" என்றாள் பதற்றம் அடங்காமல். "இன்னைக்கு மத்தியானம் ஒரு வேலை விஷயமா எதேர்ச்சையா நரேனுக்கு ஃபோன் பண்ணப்ப தான் நீ சென்னை வந்திருக்கறதா அவன் சொன்னான். அதான் அவன் கிட்ட நம்பர் வாங்கி உனக்கு கால் பண்ணேன். உனக்கு சண்டே ஏர்லி மார்னிங் ஃபிளைட்னு சொன்னான். நாளைக்கு நீ ஃபிரியா? வீட்டுக்கு வாயேன்" என்றான். "ஆ.. இல்ல விக்கி. நா தெரிஞ்சவங்க வீட்ல தான் தங்கியிருக்கேன். தவிர நாளைக்கு ஷாப்பிங் வேற போகணும்" என்று சம்பந்தம் இல்லாமல் பிதற்றினாள். "ஷாப்பிங் தான, நா கூட்டிட்டு போறேன் மகி. என் வைப்ஃ உன்னை கண்டிப்பா வீட்டுக்கு கூட்டிட்டு வரணும் கேட்டுட்டு இருக்கா. தேனாம்பேட்டை என் வீட்ல இருந்து ஒன்னும் அவ்வளவு தூரம் இல்ல. நானே உன்ன கூட்டிட்டு வந்துட்டு திரும்ப ஈவினிங் வீட்ல ட்ராப் பண்ணிடறேன். நம்ம ஷாப்பிங் மதியம் முடிச்சிரலாம் மா" என்று எப்பொழும் போல அதே பரிவுடனும் உரிமையுடனும் சொல்லிய விக்கிக்கு மறுப்பு தெரிவிக்க முடியாமல் மறுநாள் காலை ஒன்பது மணிக்கு தயாராக இருப்பதாக ஒத்துக்கொண்டு போனை வைத்தாள்.
விக்கி அஜியின் உயிர் தோழன். அவர்கள் இருவரும் பள்ளிப்பருவம் முதலே நெருங்கிய நண்பர்கள். எப்போதும் ஒன்றாக தான் இருப்பார்கள். அஜியின் மூலம் தான் மகிக்கும் விக்கியை தெரியும். விக்கியும் அஜியை போலவே நல்ல நண்பன். இந்தா மா, வா மா, போ மா என்று தான் பரிவுடன் அழைப்பான். அஜியிடன் பேசுவதை நிறுத்தியதிலிருந்து மகி விக்கியுடனும் பேசவில்லை. இவர்களது விஷயம் வீட்டில் தெரிந்து எல்லாம் நடந்து முடிந்த காலத்தில் விக்கி ப்ராஜெக்ட் விஷயமாக லண்டன் போயிருந்தான். அவன் திரும்பி வந்து இரண்டு மூன்று முறை கால் செய்த போது மகி போனை எடுக்கவில்லை. யாரிடம் என்ன சொல்லுவது, எப்படி சொல்லுவது என்று ஒன்றும் புரியாமல், யாரிடமும் பேசாமல் இருப்பதே மேல் என்று எல்லாரிடம் இருந்தும் ஒதுங்கிக்கொண்டாள். யாருடனும் தொடர்பு வேண்டாம் என்று அவள் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாக்ராம் போன்ற எதிலும் அக்கௌன்ட் வைத்துக்கொள்ளவில்லை. அவள் தோழி மாதங்கியுடன் கூட யுஎஸ் போனதிலிருந்து பேசவில்லை. நண்பர்களுடன் பேச அவளுக்கு ஏனோ சங்கடமாயிருந்தது. இப்போது ஏன் மறுபடி விக்கியுடன் பேசும்படியான ஒரு சூழ்நிலை?
விக்கிக்கு தெரிந்தால் அஜிக்கு அவன் சொல்லுவானா? அஜி தனக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று தானே நினைத்துக்கொண்டிருப்பான்? இன்னும் ஒரே ஒரு நாள் தானே, எல்லாம் ஸ்மூத்தாக போயிருக்க கூடாதா? கடவுளே.. எனக்கு அஜி சார்ந்த பழைய நினைவுகளும் அந்தந்த இடங்களையும் தான் பார்க்கணும்னு ஆசைப்பட்டேனே தவிர அஜியையோ, அஜி சார்ந்த யாரையும் இல்லை. இப்படி யோசித்து யோசித்து அஜி அஜி அஜி என்று எல்லாவற்றிற்கும் அவன் பெயரே மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது. வீட்டிற்கு வந்ததும் அடுத்த நாள் தான் ஒன்பது மணிக்கு நண்பருடன் அவர் வீட்டிற்கு செல்வதாகவும், மாலையில் வந்து விடுவதாகவும் ரதியின் அக்காவிடம் தெரிவித்தாள். அவள் முகம் தெளிவில்லாமல் வெளிறிப் போயிருப்பதை அவர்கள் பார்த்த போதும், அவள் வந்ததிலிருந்தே ஒரு சில நாள் உற்ச்சாகமாகவும் சில நேரங்களில் குழப்பத்துடனும் இருப்பதை கவனித்திருந்ததால் பழைய நினைவுகள் ஏதேனும் அவளை வருத்திக்கொண்டிருக்கலாம் என்று நினைத்து அவளை எதுவும் தொந்தரவு செய்யவில்லை.
மறுநாள் காலை ஒன்பது மணிக்கு சொன்னபடி விக்கி வந்திருந்தான். அவன் அவனுடன் அவனது ஆறு வயது மகனையும் அழைத்து வந்திருந்தான். "நா சாயங்காலம் வந்துருவேன் அக்கா, வந்து பேக் பண்ணிக்கறேன்" என்று ரதியின் அக்காவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள். காரின் பின்னிருக்கையில் விக்கியின் மகன் பிரணவ் ஏறிக்கொள்ள, மகி முன் சீட்டில் உட்கார்ந்து சீட் பெல்ட்டை போட்டதும் விக்கி காரை கிளப்பினான். மனதில் இருந்த குழப்பத்தாலும், பன்னிரண்டு வருடங்கள் பேசாமல் இருந்ததாலும் மகியால் சகஜமாக விக்கியிடம் பேச முடியவில்லை. நல்ல வேளையாக அந்த சங்கடம் தெரியாமல் இருக்க பிரணவ் ஏதேதோ கேட்டுக்கொண்டும் பேசிக்கொண்டும் வந்தான். விக்கி அதற்காகத்தான் பிரணவ்'ஐ கூட்டிக்கொண்டு வந்திருப்பான் என்று நினைத்துக்கொண்டாள். கார் அந்த பெரிய அபார்ட்மென்டின் உள்ளே நுழைந்து பார்க்கிங்கில் நிற்க மகி இறங்கிக்கொண்டாள். பிரணவ் வேகமாக இறங்கி அவளது கையை பிடித்துக்கொண்டு "ஆண்ட்டி வாங்க, எங்க வீடு இந்த பிளாக்ல தான் இருக்கு. செகண்ட் ஃபிலோர் போகணும். நம்ம ஸ்டெப்ஸ்ல போகலாமா? யாரு ஃபர்ஸ்ட்னு பாப்போமா?" என்று கேட்டபடி இழுத்துக்கொண்டு ஓடினான்.
மகி படியில் அவனை பின்தொடர, அவன் ஓடிபோய் நின்ற வீட்டின் கதவு திறந்திருந்தது, உள்ளேயிருந்து புன்னகைத்தபடி ஒரு பெண் வெளியே வந்து "வாங்க அக்கா, எப்படி இருக்கீங்க?" என்று உரிமையுடன் அவளை உள்ளே அழைத்துச் சென்றாள். படியேறி பின்னால் வந்து கொண்டிருந்த விக்கியை பாத்து "ஹை டாடி தான் லாஸ்ட்டு, நா தான் ஃபர்ஸ்ட்டு. ஆண்ட்டி நா உங்களுக்கு என் டாய்ஸ் காட்டவா?" என்று மிகவும் ஆர்வமாக கேட்டான். "ஓ.. காட்டேன். எனக்கும் கூட டாய்ஸ் ரொம்ப பிடிக்கும்" என்று அவனுடன் ஒட்டிக்கொண்டாள். "மகி இது அனுபமா, உன்ன வீட்டுக்கு கூட்டிட்டு வந்தா தான் எனக்கு சோறு போடுவேன்னு சொன்ன என் அருமை மனைவி" என்று நகைத்தபடியே சொன்னான். அதற்குள் அனுபமா ஒரு க்ளாசில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். "என்ன குடிக்கறீங்க அக்கா காபி ஆர் டீ?" என்றாள். "எதுவும் வேண்டாம்ங்க, இப்ப தான் சாப்பிட்டேன்" என்றாள் மகி சங்கோஜமாக. "வாங்க போங்கலாம் வேணாம், அனுன்னு பேர் சொல்லியே கூப்பிடுங்க அக்கா" என்று வார்த்தைக்கு வார்த்தை அக்கா என்று சொல்லி மகியை சகஜமாக உணர வைத்தாள். அவளது வேலை, திருமணம், அனுவின் ஸ்கூல், காலேஜ், ஆபீஸ், வீடு, பிரணவ் கதை என்று பொதுவாக இங்கும் அங்குமாக பேசி ஒன்றரை மணி நேரம் போனதே தெரியவில்லை. இடையில் அனு கொடுத்த சர்பத்தை குடித்து விட்டு பிரணவ் காட்டிய டாய்ஸை எல்லாம் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவனுடைய நண்பர்கள் வர "பிரணவ் நீ போயி காரிடோர்ல விளையாடு" என்று அனு அவர்களை அனுப்பி வைத்தாள். "நீங்கள் பேசிக்கொண்டிருங்கள், நான் போயி குக்கரில் பருப்பு வைத்துவிட்டு வருகிறேன்" என்று நாசூக்காக கிச்சனிற்குள் சென்றாள்.
அனு கொஞ்சம் நார்மலாகிவிட்டாலும் அஜி பற்றி எதுவும் விக்கி பேசிடாமல் இருக்கணும் கடவுளே என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள். "நா கேக்கறேன்னு கோச்சிக்காதம்மா, எனக்கு வேற யாரை கேக்கறதுன்னு தெரியல" என்றான் பெரிய பீடிகையோடு. என்ன என்பது போல மகி விக்கியையே பார்க்க, "என்ன தான் நடந்துச்சு நா லண்டன்ல இருக்கும் போது? ரெண்டு பேர் வீட்லயும் சுமூகமான சூழ்நிலை இல்லைன்னு ஒரு தடவ சொன்னான். அப்புறம் திடுதிப்புனு ஒரு நாள் கல்யாண இன்விடேஷன் ஈமெயில் அனுப்பியிருந்தான். நா ஷாக் ஆகி கால் பண்ணி என்னடான்னு கேட்டேன், நா அப்புறம் ஃபிரியா பேசறேண்டான்னு சொன்னவன் தான், அதுக்கப்புறம் என்ன ஆச்சுன்னே தெரியல, நா போன் பண்ணா எடுக்கல, திருப்பி கூப்பிடவும் இல்ல, ஈமெயில்க்கு ரிப்ளை இல்ல, என் வெட்டிங் இன்விடேஷன் அனுப்பினேன் அதுக்கும் கூட ரிப்ளை பண்ணல. அவங்க அப்பாவுக்கு ஒரு தரம் போன் பண்ணப்ப கல்யாணம் முடிஞ்சு யூஎஸ் போய்ட்டதா சொன்னார். நம்பர் கேட்டேன், நம்பர் வீட்ல இருக்கதாவும் அப்புறம் பாத்துட்டு கால் பண்ணி சொல்றதாகவும் சொன்னார். அவரும் திரும்ப கூப்பிடல. பல தடவ நா அவனுக்கு ஈமெயில் அனுப்பினேன். அவன் எனக்கு ரிப்ளை பண்ணவே இல்லம்மா. அவன் வேற யார் கூடயும் காண்டக்ட்ல இல்ல. எங்க இருக்கான்னு கூட யாருக்குமே தெரியல. போன மாசம் தான் அவனோட அக்காவை ஊர்ல பாத்தேன், அவங்க கிட்ட கேட்டப்ப, அவன் இண்டியானாபொலிஸ்'ல் இருப்பதாக சொன்னார்கள். நம்பர் கேட்டப்ப, குடுத்துட்டு நாங்க யாரும் அவன்கிட்ட பழைய கதை எதுவும் பேசறதில்ல, நீயும் பேசாதன்னு சொல்லிட்டாங்க. நானும் அதனால இன்னும் அவனுக்கு கால் பண்ணல. நீயும் என்னோடபோனை எடுக்கவே இல்ல. அதான் நேத்து நரேன் உன் நம்பர் குடுத்தப்ப உன்கிட்டயாவது பேசினா ஏதாவது தெரியுமான்னு பாக்கலாம்னு தான் உனக்கு கூப்பிட்டேன்" என்று ஒரு பெரிய கதையை சுருக்கமாக சொல்லிமுடித்தபோது மகிக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது.
கிட்டத்தட்ட இருபது வருட நட்பு அஜி மற்றும் விக்கியுடையது. ஏன் அஜி விக்கியொடு தொடர்பிலில்லை? என்ன ஏது என்று புரியாமல் விக்கிக்கு எவ்வளவு வருத்தமாக இருக்கும் என்று அவளால் உணர முடிந்தது. அதையெல்லாம் விட அவள் அஜி சென்னையில் இருப்பான் என்று தானே இத்தனை வருடம் நினைத்துக்கொண்டிருந்தாள். கடல் கடந்து வேற நாட்டில் இருந்தால் தான் அவளால் கொஞ்சமேனும் நிம்மதியாக இருக்க முடிந்தது என்று நினைத்துக்கொண்டிருந்தாளே. இண்டியானாபொலிஸ் சிகாகோவில் இருந்து மூன்று மணி நேரத்தில் போகக்கூடிய இடமாகிற்றே. யூஎஸ்'ல் அதெல்லாம் ஒரு தூரமே இல்லை. அவ்வளவு பக்கத்திலேயே இருந்திருக்கிறானா? என்று நினைத்த போது மகியின் கண்களில் அவளையும் அறியாமல் கண்ணீர் வந்துவிட்டது.
மகிஷா வருவாள்...பாகம் 6
No comments:
Post a Comment