"ஹேய், இப்ப தான் உன்ன துறு துறுன்னு சொன்னேன். அதுக்குள்ள இவ்ளோ எமோஷனல் ஆகிட்ட. சாரி, தப்பான டாபிக் எடுத்துட்டேனோ?" என்றான் வருத்தம் கலந்த தொனியில். "பரவால்ல நரேன், நானும் இதுவரைக்கும் யார் கிட்டயும் என்னோட உண்மையான மனநிலையை வெளிக்காட்டிக்கிட்டது இல்ல. அப்பா அம்மா கிட்ட கூட.. என்னை பார்த்து அவங்களோட வருத்தம் அதிகமாகிட கூடாதுன்னு ரொம்ப காஷியசா இருப்பேன். உன்ன நேர்ல பாத்ததும் ஏனோ எல்லாத்தையும் வென்ட் அவுட் பண்ணிட்டேன். பட் ஐ ஃபீல் மச் பெட்டெர் நௌ. நா தான் உனக்கு தாங்க் பண்ணனும். தைரியமா இருக்க மாதிரி ஒரு முகத்திரை உருவாக்கிக்கிட்டேன், இப்ப அதுவே என் அடையாளம் ஆகிருச்சு" என்றாள் அதே புன்னகை மாறாமல். "உன்கிட்ட நா ஏற்கனவே நெறய தடவ கேட்டது தான், இப்பயும் கேட்கறேன். நீ ஏன் கல்யாணத்த பத்தி கன்சிடர் பண்ண கூடாது?" என்று அவன் கேட்டு முடிப்பதற்குள் "டைம் ஆச்சு, கெளம்பலாமா? நாளைக்கு லஞ்ச் டைம்ல மீட் பண்ணலாம்" என்று எழுந்தாள். "ஐ நோ மகி, நீ இப்படி தான் ரியாக்ட் பண்ணுவேன்னு. சரி விடு, கேக்கல. ஈவினிங் வீட்டுக்கு வாயேன். ஒய்ஃப் உன்ன வீட்டுக்கு கூட்டிட்டு வர சொன்னா" என்றான் அவனும் எழுந்தபடி.
"தாங்க்ஸ் ஃபார் தி இன்வைட் நரேன், பட் நா இந்த வீக் எல்லா நாளுக்கும் பிளான் வச்சிருக்கேன். முடிஞ்சா கண்டிப்பா நடுல வரேன்" என்றபடி அவனுடன் சேர்ந்து நடக்கலானாள் . "மேடம் அப்படி என்ன பிளான் பண்ணி வச்சிருக்கீங்க, சென்னையை சுத்தி பாக்க போறீங்களா?" என்றான் நக்கலாக. "யு ஆர் ரைட் மேன். சென்னைல சில முக்கியமான இடங்கள் இருக்கு, அங்கல்லாம் நா போயே ஆகணும். பட் எப்படி போகணும்னு உன்கிட்ட தான் ஆலோசனை கேப்பேன். கொஞ்சம் அப்பப்ப கைட் பண்ணு ப்ளீஸ்" என்றாள். மதிய வெய்யில் சுள்ளென்று அடிக்க, இருவரும் ஆளுக்கொரு குடையை அங்கிருந்த ஸ்டாண்டிலிருந்து எடுத்துக்கொண்டார்கள். "எங்கெல்லாம்னு சொல்லு, நானே கூட்டிட்டு போறேன். எல்லா நாளும் முடியாது, ப்ராபபிளி சாட்டர்டே? உனக்கு சண்டே விடியக்காலைல தான ஃபிளைட்? நாம சனிக்கிழமை அன்னைக்கு எல்லா இடத்துக்கும் போலாம், உனக்கு ஓகேன்னா" என அவன் கேட்க "இல்ல நரேன், எனக்கு சாட்டர்டே ஈவினிங் டெல்லிக்கு ஃபிளைட். அங்கிருந்து தான் இன்டர்நேஷனல் ஃபிளைட். மோர்ஓவர் எனக்கு தனியா போகணும். என்னோட பழைய நினைவுகளோடே கொஞ்ச நேரம் அங்கெல்லாம் இருக்கணும். தப்பா எடுத்துக்காத, எனக்கு வழி மட்டும் சொல்லு போதும்" என்றாள். "நீ ஒரு முடிவோட தான் வந்துருக்க?" என்றான் புருவம் உயர்த்தியபடி. "ஆமாம், அங்கெல்லாம் போனா நானே என்ன ரிச்சார்ஜ் பண்ணிக்கிட்டா மாறி இருக்கும். இன்னைக்கு மயிலாப்பூர் சாய் பாபா கோவிலுக்கு போலாம்னு இருக்கேன். ஈவினிங் வீட்டுக்கு போயி ஃபிரெஷ் ஆகிட்டு அங்கிருந்து தான் போவேன். சோ நீ எனக்கு தேனாம்பேட்'ல் இருந்து வழி சொன்னால் போதும். ஈவினிங் கால் பண்றேன்." என்று அவள் சொல்லி முடிக்கையில் அவளது பில்டிங் வரவே, குடையை மடக்கி அதன் ஸ்டாண்டில் வைத்து விட்டு நரேனுக்கு பை சொல்லி கண்ணாடி கதவை தள்ளி உள்ளே சென்றாள். நரேன் அவனது பில்டிங்கை நோக்கி நடக்கலானான்.
நான்கு மணிக்கே அவளது வேலையை முடித்துவிட்டு அவள் தங்கியிருக்கும் அவளது தோழியின் அக்கா வீட்டின் முகவரிக்கு ஓலா டாக்ஸி புக் பண்ணினாள். யுஎஸ்ஸில் அவளுடன் பணிபுரியும் தோழி ரதி. ரதியின் சொந்த அக்கா தேனாம்பேட்டையில் இருப்பதாகவும், ஒரு வாரம் அவர்கள் வீட்டிலேயே தங்கிக்கொள்ளும்படியும் அவளை வற்புறுத்தி, அவள் அங்கே தங்குவதற்கும், காலையும் இரவும் சாப்பிடுவதற்கும் அவள் அக்காவிடம் பேசி முன்னமே ஏற்பாடு செய்திருந்தாள் ரதி. பேயிங் கெஸ்ட் ஆகத்தான் போவேன், இதற்கு ஒத்துக்கொண்டால் தான் அங்கே தங்குவேன் என்று அடம்பிடித்து தான் ஒத்துக்கொண்டாள் மகி. ரதியின் அக்கா, அவளது கணவன், மற்றும் அவர்களது பத்து வயது மகன் ரித்விக் அங்கே இருந்தார்கள். டாக்ஸி வீட்டின் முன் நிற்கவும், அதற்கான தொகையை கொடுத்துவிட்டு வீட்டின் காலிங் பெல்லை அமுக்கினாள். கதவை திறந்த ரதியின் அக்கா, "வா மகி, எப்படி போச்சு இன்றைய நாள்? புது இடம், கிளைமேட் எல்லாம் செட் ஆச்சா?" என்று கேட்டபடி கிச்சனுக்குள் நுழைந்தாள். "நீ முகம் கழுவிட்டு வா, நா காபி போட்டு வைக்கிறேன்" என்றாள் அவள் முதல் கேள்விக்கு பதில் சொல்லுமுன்.
"டே சூப்பரா போச்சுக்கா, ஆனா காபி வேணாம். பசியே இல்ல. வெய்யில், ஜெட் லாக் எல்லாம் சேர்ந்து டைஜெஷன்ன ஸ்லோ டவுன் ஆக்கிருச்சுனு நினைக்கறேன். கொஞ்சம் வயிர ஃபிரீயா விட்டா சரியாகிரும். நா கொஞ்சம் ஃபிரெஷ் ஆகிட்டு சாய் பாபா கோவில் வரைக்கும் போயிட்டு வந்துடறேன்" என்று சொல்லியபடி டவலுடன் பாத்ரூமிற்குள் நுழைந்தாள். அவள் முகம் கழுவி வருவதற்குள் ஒரு க்ளாசில் லெமன் ஜூஸ் ரெடியாக வைத்திருந்தாள் ரதியின் அக்கா. "இந்தா மொதல்ல இதை குடி, அப்புறம் கிளம்பலாம். டைஜெஷன் சரி பண்ணும், டிஹைடிரேட் ஆகமலும் இருக்கும் " என்று அவளது கையில் கிளாஸை கொடுத்து சோபாவில் உட்காரச்செய்தாள். "தாங்க் யு அக்கா, ரதி உங்கள பத்தி நெறய சொல்லியிருக்கா. நீங்க எவ்ளோ கேர் பண்ணி அவளை பாத்துக்குவீங்கன்னு. இன்னைக்கு நா ரொம்ப லக்கி, அந்த அன்பை பெறுவதற்கு" என்றாள் முகமெல்லாம் மலர. "அவ உன்கிட்ட முழுசா சொல்லலேன்னு நினைக்கறேன். நா அவகிட்ட நெறய சண்டை கூட போடுவேன். சரி, சரி, கெளம்பி போயிட்டு நைட் சாப்பிட சீக்கிரம் வந்துரு" என்றாள் ரதியின் அக்கா.
ஒரு பாந்தமான குர்த்திக்குள் தன்னை புகுத்திக்கொண்டு, அதற்கு தோதாக ஒரு ஷாலும் எடுத்துக் கொண்டாள். "எப்படி போகணும்னு தெரியுமா மகி?" என்ற அக்காவிடம் "தெரியும்க்கா, ஃபிரெண்டு கிட்ட கேட்டுட்டேன்" என்று சொல்லி கிளம்பினாள். சிறிது தூரம் நடந்து அங்கிருந்த ஆட்டோ ஸ்டாண்டில் "மயிலாப்பூர் சாய் பாபா கோவிலுக்கு போங்க" என்று சொல்லி ஏறி அமர்ந்தாள். மாலை நேரத்திற்கே உரிய நெரிசல் சாலைகளை கவ்விக்கொள்ள, ஆட்டோ ஊர்ந்து ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இரண்டு கிலோமீட்டரை கால் மணி நேரமாக அளந்து அளந்து கடந்து வந்து, வெள்ளை, ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம் கலந்த ஜரிகை துணியால் அலங்கரிக்கப்பட்ட சாய் பாபா கோவிலின் முன் வந்து நின்றது. ஓம் சாய் ராம் என இரண்டு பக்க க்ரில்லிலும் எழுதியிருக்க, பத்து வருடங்களில் இந்த இடம் எவ்வளவு மாறியிருக்கிறது என்று வியந்து கொண்டே, அங்கிருந்த காலணி வைக்கும் கவுண்ட்டெரில் செருப்புகளை கழட்டி வைத்து டோக்கன் வாங்கிக்கொண்டாள். பிறகு வெளியிலிருந்து குழாயில் கால்களை கழுவி விட்டு, கொண்டு வந்திருந்த ஷாலை தலைக்கும் தோளுக்குமாக சேர்த்து போட்டுக்கொண்டு அங்கிருந்த பூக்கடையில் சாமந்தி பூ இரண்டு முழம் வாங்கிக்கொண்டு பிரகாரத்திற்குள் நுழைந்தாள்.
வார நாளின் மாலை வேளை என்பதால் அவ்வளவு கூட்டம் இருக்கவில்லை. கோவிலுக்குள்ளும் நிறையவே மாறி இருந்தது. பூக்களை அங்கிருந்த அர்ச்சகர் வாங்கி சாயியின் தோளில் சாத்த, மகி சாய் பாபாவின் பாதங்களை தொட்டு வணங்கி, கீழே விழுந்து நமஸ்கரித்தாள். முன்னாடி அங்கிருந்தே பின்புறம் செல்லும்படி இருந்த வாசலை அடைத்துவிட்டு பக்கவாட்டில் செல்லும் படி மாற்றியமைத்திருந்தார்கள். பெரிய மரக்கதவுகள், மார்பிள் சுவர், குளிரூட்டப்பட்ட மூலஸ்தானம், புதிதாக கட்டப்பட்ட மண்டபம் என பல மாறுதல்கள் இருந்தன. மகி எப்பொழுதும் கோவில்களில் அடிபிரதட்சணம் செய்வது வழக்கம். அன்றும் அடிபிரதட்சணம் செய்து விட்டு அங்கிருந்த ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்தாள். இந்த கோவிலுக்கு வந்தாலே மகிக்கு மனம் சாந்தமாகிவிடும். அன்றும் அப்படி தான், மனதின் இரைச்சல் எல்லாம் அடங்கி சட்டென மனது சமநிலை அடைந்தது. அவளது கருவிழிகள் இங்கும் அங்கும் சுழன்று வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, மனம் அப்படியே பதினான்கு வருடம் பின்னோக்கி செல்லத்தொடங்கியிருந்தது.
"ஏய் மகி, உன் ஃபோன் அடிக்குது டி" என்று அவள் தோழி மாதங்கி சொல்ல, அந்த PG'யின் முதல் மாடியிலிருந்து திறந்த வெளியில் போடப்பட்டிருந்த கட்டிலில் உட்கார்ந்து ஆப்டிட்யுட் ப்ரீபேர் செய்து கொண்டிருந்த மகி "இதோ வரேன் டி" என்றபடி மரக்கதவு பொருத்தப்பட்டிருந்த அந்த நிலைப்படியை தாண்டி உள்ளறைக்கு சென்றாள். சார்ஜிலிருந்த ஃபோனின் டிஸ்பிளே அஜி என்று காட்ட, உற்சாகமாய் ஃபோனை அட்டென்ட் செய்து "குட் ஈவினிங் சார், என்ன அதுக்குள்ள ஆஃபீஸ்லயிருந்து வந்தாச்சா?" என்றாள். "வேலை இன்னைக்கு சீக்கிரமே முடிஞ்சுது, இனிமே தான் கெளம்பனும். சாய் பாபா கோவிலுக்கு போலாம்னு தோணுச்சு, அதான் நீயும் மாதங்கியும் வர்றீங்களான்னு கேட்கலாம்னு கால் பண்ணேன். என்ன பண்ணிக்கிட்டு இருக்க?" என்றான். "இந்த வீக்கெண்ட் ஒரு வாக்-இன் இருக்கு. அதுக்கு தான் ப்ரீபர் பண்ணிக்கிட்டு இருந்தேன். சரி இரு மாதங்கிகிட்டயும் கேட்டுட்டு சொல்றேன்" என்று ஃபோனை வைத்தாள். மூவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். அஜி என்ற அஜய்க்கு ஒரு சிறிய கம்பெனியில் வேலை கிடைக்க, மகியும் மாதங்கியும் ஒரு PG 'யில் தங்கி வேலை தேடிக்கொண்டிருந்தனர். "ஹேய் மாது, சாய் பாபா கோவிலுக்கு வரியா டி, அஜி கேட்டான்" என்று மகி கேட்க "இல்ல டி, எனக்கு டையர்டா இருக்கு, நீ வேணும்னா போயிட்டு வா" என்றாள்.
மகிக்கு அந்த கோவில் மிகவும் பிடிக்கும் என்பதால் அவள் மட்டும் கிளம்பினாள். சூளைமேடு பஸ் ஸ்டாப்பில் பஸ் ஏறி "ஒரு S.I.E.T" என்று சொல்லி டிக்கெட் வாங்கினாள். அங்கிருந்து அஜியும் அவளும் மயிலாப்பூர்க்கு ஒரு ஆட்டோ எடுத்து சென்றார்கள். இன்றைக்கு இருக்கும் அளவிற்கு அந்த கோவிலில் அவ்வளவு கூட்டம் அன்று இருந்ததில்லை. கண்களை மூடி கும்பிட்டு அந்த அமைதியில் லயித்திருந்த வேளையில் அர்ச்சகர் ஆரத்தி காட்டியிருந்திருப்பார் போலும். குங்குமமும் கொடுத்து முடித்திருந்தார். மகி கண்களை திறந்த போது அவர் அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டார். அஜி அவன் கையிலிருந்த குங்குமத்தை மகியிடம் நீட்ட, அவளும் அதனை எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டாள். அதனை எடுக்கும் போது மகிக்கு எதுவும் தோன்றவில்லை தான், ஆனால் ரூமிற்க்கு செல்லும் வழியில் தான் மனதிற்குள் ஏதோ குறுகுறுக்க ஆரம்பித்திருந்தது.
மகிஷா வருவாள்.... பாகம் 3
No comments:
Post a Comment