Sunday, December 1, 2019

மகிஷா - பாகம் 6

"ஐயோ, சாரி மா, நா கேட்டது உன்னை இவ்ளோ டிஸ்டர்ப் பண்ணும்னு நினைக்கல. வெரி சாரி" என்றான் விக்கி பதறியவனாய்.  "இல்ல விக்கி, பரவால்ல. அவன் உன்கிட்டயும் பேசலேனு எனக்கு தெரியாது. எவ்ளோ கிளோஸ் பிரண்ட்ஸ் நீங்க? உனக்கு எவ்ளோ கஷ்டமாயிருக்கும்னு எனக்கு புரியுது. வீட்ல பாக்கற அலையன்ச கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு செஞ்சதுக்கப்புறம் நாங்க ரெண்டு பேரும் பேசிக்கவேயில்லை" என்று ஆரம்பித்து அவள் யூஎஸ் போனது, வேறு திருமணம் செய்துகொள்ளாதது என்று எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள்.அவள் பேசி முடித்த போது, இத்தனை நாள் பேசாமல் இருந்த அந்த பாரம் நீங்கி விக்கியுடனான அந்த பழைய நெருங்கிய நண்பன் என்ற உணர்வு திரும்பியிருந்தது. 

"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல மா, லைப்ஃல எவ்ளோ மாற்றங்கள்ல? எனக்கு உன் கஷ்டம் புரியுது, இருந்தாலும் நீ கொஞ்சம் யோசிச்சு வேற நல்ல டெஸிஷன் எடுத்தா நல்லா இருக்கும். எல்லாரும் ஏற்கனவே உனக்கு இப்படி தான் சொல்லியிருப்பாங்க, நானும் அதே தான் சொல்றேன். பட் உன்னோட எதிர்காலத்துக்காகவும் உன் பேரென்ட்ஸ்க்காகவும்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அனு "சாரி டு டிஸ்டர்ப், ஒன்றரை மணி ஆகிருச்சு.  சாப்பிட்டுக்கிட்டே பேசறீங்களா?" என்று கேட்டபடி ஹாலுக்கு வந்தாள். "பிரணவ் குட்டி சாப்டாச்சா?" என்று மகி கேட்க "ஆமா அக்கா, உங்களை தொந்தரவு செய்ய வேண்டாம்னு அவனுக்கு அப்பவே பருப்பு சாதம் ஊட்டி தூங்க வைத்து விட்டேன்." என்றாள்.  

"சரி மகி வா, சாப்பிடலாம்" என்று விக்கி சொல்ல இருவரும் சோபாவை விட்டு எழுந்து கைகழுவ சென்றார்கள். "கூட எதுவும் ஹெல்ப் பண்ண வர முடியல அனு, தனியாவே எல்லாம் செய்ய வச்சிட்டேன்" என்று மகி சொல்ல "நோ ப்ராப்ளம்க்கா, நீங்க வீட்டுக்கு வந்ததே போதும். இவர் தான் எப்பவுமே ரொம்ப வருத்தப்பட்டுட்டு இருப்பார் உங்க ரெண்டு பேரையும் பத்தி சொல்லி. இன்னைக்கு கொஞ்சம் ரிலீப்ஃ ஆகியிருப்பார்னு நினைக்கறேன்" என்று சொல்லியபடி பரிமாறிவிட்டு அவளும் சாப்பிட உட்கார்ந்தாள். "ஷாப்பிங் போகணும்னு சொன்னியே, சாப்டுட்டு கெளம்பலாமா? க்விக்கா முடிச்சிரலாம்" என்றான் விக்கி. "பரவால்ல, கண்டிப்பா போகணும்னு இல்ல, அவ்ளோ முக்கியமா வாங்கறதுக்கும் ஏதும் இல்ல. ரொம்ப வருஷம் கழிச்சு பேசிட்டு இருந்தோம். சாப்டுட்டு நா கிளம்பறேன், போயி கொஞ்சம் பேக்கிங் எல்லாம் இருக்கு" என்றாள். இரண்டு மணி வாக்கில் சாப்பிட்டு முடிக்க, "நா டாக்ஸி புக் பண்ணிக்கறேன் விக்கி, நீ தேவையில்லாம அலைய வேணாம்" என்று மகி சொல்ல "இல்ல இல்ல, நானே வந்து ட்ராப் பண்றேன். அப்படியே வரும் போது கொஞ்சம் திங்ஸ் எல்லாம் வாங்கவேண்டியிருக்கு" என்று விக்கி சொல்ல மகி முகம் கழுவி, முடியை விரல்களால் கோரி க்ளட்சர் கிளிப்பை சரி செய்து கொண்டாள். "ஓகே அனு, தாங்க்ஸ் ஃபோர் தி ஒன்டர்ஃபுள் லஞ்ச். நான் கிளம்பறேன்" என்றாள். "தாங்க்ஸ் ஃபார் கமிங் அக்கா, இன்னொருக்க சென்னை வந்தா கண்டிப்பா இங்க வந்து தான் ஸ்டே பண்ணனும்" என்று சொன்னவளுக்கு "கண்டிப்பா.. பை அனு. பிரணவ் குட்டி எந்திரிச்சதும் அவன் கிட்ட சொல்லிடு" என்று சொல்லி கிளம்பினாள்.

அவள் ஏறி உட்கார்ந்து சீட் பெல்ட் அணிந்ததும் அந்த பச்சை நிற ஃபோர்டு ஃபிகோ கிளம்பி மதிய நேர சாலையில் இருந்த சொற்ப டிராஃபிக்கில் கலந்தது. "ஆறரை மணிக்கு ஃபிளைட் இல்ல?" என்றான் மொபைலில் மெசேஜ் செக் பண்ணிக்கொண்டிருந்த மகியிடம். "ஆமா, நாலரை மணிக்கு வீட்ல கெளம்பினா சரியா இருக்கும்" பதிலுரைத்தாள் மகி. இருபது நிமிடங்களில் அவள் தங்கியிருந்த வீடு வர காரிலிருந்து இறங்கிய மகியிடம் "நா சொன்னதை கொஞ்சம் கன்சிடர் பண்ணுமா" என்றவனுக்கு புன்னகையை பதிலாக கொடுத்தபடி காலிங் பெல்லை அடித்தாள். கதவை திறந்த ரதியின் அக்கா "ஓ வந்தாச்சா? இன்னும் வரலயேன்னு இப்ப தான் நெனச்சிட்டு இருந்தேன்" என்றாள். "சரிம்மா நா கிளம்பறேன், போய் ரீச் ஆகிட்டு மெசேஜ் பண்ணு. சேஃப் ஜர்னி" என்று அவளிடமும் ரதியின் அக்கா மற்றும் அவர் கணவரிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினான். 

விக்கி கிளம்பியவுடன் "ஷாப்பிங் எல்லாம் பண்ணியாச்சா மகி? பேக் பண்ண ஏதாது ஹெல்ப் வேணுமா?" என்றாள் ரதியின் அக்கா. "இல்லக்கா, ஷாப்பிங் போக டைம் இல்ல. சோ போகல. நானே பேக் பண்ணிக்கறேன் அக்கா, அதிக திங்ஸ் இல்ல" என்றாள். "சரிம்மா, பொங்கலுக்கு உனக்கும் ரதிக்கும் ஒரு புடவை எடுத்தேன். இது உனக்கு, இது ரதிக்கு." என்று இரண்டு  டிரஸ் கவர்களை மகியிடம் குடுத்தாள். "ஓ, தாங்க் யு சோ மச் அக்கா" என்றபடி அதை வாங்கி பிரித்துப்பார்த்தாள். வெளிர் பச்சை நிறத்தில், கோல்டன் மற்றும் சில்வர் பார்டரும், உடல் முழுவதும் லைட் பிங்க் பூக்களும் அதிலிருந்து நீண்ட கோல்டன் ஒர்க் செய்த இலைகளும் என்று மிக அழகாக இருந்தது அந்த ஜார்ஜ்ஜெட் புடவை. ரதிக்கு அதே டிசைனில் லைட் யெல்லோ கலரில் எடுத்திருந்தார்கள். மாட்சிங்காக ரெடிமேட் பிளவுசும் இருந்தது. "ரொம்ப ரொம்ப அழகா இருக்கு அக்கா" என்றாள் அதை திரும்ப மடித்து வைத்தபடி. எல்லாவற்றையும் பேக் செய்து, ஜீன்ஸ் டாப்பிற்கு மாறி, அறையிலிருந்த பொருட்களை அதனதன் இடத்தில் எடுத்து வைத்துக்கொண்டிருக்கையில் கையில் காபி மற்றும் குழிப்பணியாரம் தட்டுடன் ரதியின் அக்கா உள்ளே வந்தாள்.  "ஆஹா, குழிப்பணியாரம் என்னோட ஃபேவரிட். பட் இப்ப சுத்தமா பசி இல்லை அக்கா. ஒன்னு மட்டும் எடுத்துக்கறேன்" என்று சொல்லி காபியும் ஒரே ஒரு குழிப்பணியாரம் எடுத்துக்கொண்டாள். 

சிறிது நேரத்தில் முழுதும் ரெடி ஆகியதும் ஏர்போர்ட்க்கு டாக்ஸி புக் பண்ணினாள். பாஸ்போர்ட் மற்றும் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று எல்லாவற்றையும் செக் பண்ணி, அவளது ட்ராலி சூட்கேஸ், கேபின் பேக் மற்றும் லேப்டாப்  பேக்கை எடுத்துக்கொண்டு ஹாலிற்கு வருவதற்கும் டாக்ஸி வருவதற்கும் சரியாக இருந்தது. "ஒரு வாரம் ரொம்ப கம்ஃபர்டபிள்'ஆ போச்சு, ரொம்ப தாங்க்ஸ் அக்கா" என்று மகியும் "நீ இங்க வந்து தங்கினதில் எங்களுக்கும் ரொம்ப சந்தோஷம்மா. எப்ப சென்னை வந்தாலும் நீ இங்கயே வந்து ஸ்டே பண்ணு" என்று ரதியின் அக்காவும் சொல்ல, மகி அக்காவிடமும், அவளது கணவரிடமும், மிதுனிடமும் பை சொல்லி டாக்ஸியில் ஏறினாள். ஓடிபியை டிரைவர்க்கு சொல்லிவிட்டு காரின் கண்ணாடியை இறக்கி எல்லோருக்கும் கையசைக்க அந்த டாக்ஸி நகரத்தொடங்கியது.

5.05 க்கு டாக்ஸி ஏர்போர்ட்டில் அவளை இறக்கி விட லக்கேஜ்ஜை எடுத்துக்கொண்டு என்ட்ரி நோக்கி நடந்தாள். லக்கேஜ்ஜை செக்கின் பண்ணிவிட்டு, செக்யூரிட்டி செக் முடித்து மாலை 6 .30  மணி இண்டிகோ ஃபிளைட்டிற்காக அதன் கேட் அருகே சென்று அமர்ந்தாள்.  ஃபிளைட்டிற்கு இன்னும் முக்கால் மணி நேரம் இருக்கவே அம்மாவிற்கு ஏர்போர்ட் ரீச் ஆகிவிட்டதாக மெசேஜ் அனுப்பிவிட்டு மொபைலில் இந்த வாரம் முழுக்க எடுத்த போட்டோசை பார்க்கலானாள். சிறிது நேரத்தில் ஃபிளைட்டிற்காண அனௌன்ஸ்மென்ட் வர, கேட் வழியாக சென்று விமானத்தில் ஏறினாள். டேக் ஆப் ஆகும் சமயம் பை பை சென்னை என்று மனதிற்குள் சொல்லிக்கொள்ள, தான் இறங்கப்போகும் யூஎஸ்ஸில் தான் அஜி இருக்கிறான் என்று விக்கி சொன்னது நினைவிற்கு வந்தது. காலையிலிருந்து எல்லோரிடமும் பேசிக்கொண்டு நாள் பரபரப்பாக போனதில் அவள் அதைப்பற்றி அவ்வளவாக யோசிக்கவில்லை. கிடைத்த தனிமையில் அஜி நினைவு வர, அதை புறக்கணிப்பதற்காக கையில் கொண்டுவந்திருந்த புத்தகத்தில் மனதை செலுத்தினாள். எட்டு மணி வாக்கில் அவள் முன்னமே புக் பண்ணியிருந்த வெஜ் ட்ரியோ சாண்டவிச் வர, மொபைலில் ஸ்டோர் செய்திருந்த பென்னி தயாளின் பாடல்களை இயர்போனில் கேட்டுக்கொண்டே அதை சாப்பிட ஆரம்பித்தாள். டெல்லியில் ஒன்பது இருபதுக்கு அந்த அலுமினியப்பறவை தரையிறங்க டெர்மினலில் இருந்து வெளியேறி இன்டர்நேஷனல் ஏர்போர்ட்க்கு செல்ல ஷட்டில் பஸ் வருவதற்காக வெயிட் செய்தாள். ஒரு பத்து நிமிட காத்திருத்தலின் பிறகு அந்த சிவப்பு நிறத்திலான ஷட்டில் வர அதில் ஏறிக்கொண்டாள். அடுத்த கால் மணி நேரத்தில் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் அவளை இறக்கிவிட உள்ளே நுழைந்து எதிஹாட் ஏர்வேஸ் கவுண்டர் எங்குள்ளது என்று பார்க்கலானாள்.   பின்னர் செக்யூரிட்டி செக் மற்றும் இம்மிகிரேஷன் ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடிக்க பன்னிரண்டு மணியாகிவிட்டது.      

நாலேகால் மணிக்கு தான்  ஃபிளைட். இன்னும் நான்கு மணி நேரம் இருந்த நிலையில் ஏர்போர்ட்டில் இருந்த கடைகளை சுற்றி வரலாமா என யோசித்தாள். ஏற்கனவே தூக்கம் வர ஆரம்பித்திருக்க நடப்பதற்கு சோம்பேறித்தனம் காட்டி உடல் ஒரு சாய்வான இருக்கையை தேடியது. அங்கிருந்த வெயிட்டிங் லான்ஜில் ஒரு இருக்கையை தேர்வு செய்து போய் உட்கார்ந்தாள். மொபைலை எடுத்து பார்த்த போது அம்மாவிடம் இருந்தும் விக்கியிடம் இருந்தும் மெசேஜ் வந்திருந்தது. அம்மாவிற்கு ரிப்ளை பண்ணிவிட்டு விக்கியின் மெசேஜ்ஜை ஓபன் பண்ணினாள். +1 (463 )- என்று ஆரம்பித்த பத்து இலக்க நம்பர், அடுத்த வரியில் அஜய் என்று இருந்தது. மகிக்கு ஒரு நிமிடம் ஆகியது அது அஜியின் நம்பர் என்று நம்புவதற்கு. நம்பரை பார்ப்பதற்கு தைரியம் இல்லாமல் மொபைலை லாக் பண்ணி வைத்தாள். விக்கி எதற்கு எனக்கு இந்த நம்பரை அனுப்பினான். இந்த பனிரெண்டு வருடங்களில் அவள் அஜியின் பெயரை பெரிதாக யோசிக்கவும் இல்லை, யாரிடமும் அது பற்றி பேசியதும் இல்லை. இன்றானால், முழுக்க முழுக்க அஜியை பற்றி தான் பேச்சு. நினைவிலும் அடிக்கடி அஜி தான். இது தவறில்லையா? அதுவும் அவனுக்கு திருமணமாகிவிட்டது என்று தெரிந்தும். அவள் மனம் அவளையே கேள்வி கேட்டது. மொபைலை அன்லாக் செய்து மறுபடி  அந்த நம்பரை வாசித்தாள். இரண்டு முறை வாசித்ததும் மனதில் பதிந்து விட்டது.  சேவ் பண்ணலாமா? என்று ஒரு மனமும், கூடாது என்று மற்றொன்றும் கூக்குரலிட சிறிது நேரத்தில் Ajay என்று  டைப் செய்து அதை Aji  என்று மாற்றி சேவ் பண்ணினாள். குரங்கு மனம் அதோடு நிற்குமா? வாட்ஸாப்ப்பில் என்ன டீபி வச்சிருக்கான் என்று பாக்கலாமா? என்று குறுகுறுக்கத்தொடங்கியது. பனிரெண்டு வருடங்களுக்கு முன் பார்த்தது.இன்று எப்படி இருப்பான்? ஒரு வேளை அவனுடைய மனைவி அல்லது குழந்தையின் பிக்சர் வச்சிருப்பானோ? குழந்தை - ஒன்றா அல்லது இரண்டா? என்ன வயசு இருக்கும்? மகி, அதை பார்த்தால் உன் மனம் தாங்குமா? வேண்டாம் மகி என்று ஒரு புறம் எச்சரிக்கை மணி அடிக்க, இன்னொரு புறம் முகத்தையாவது பார்த்துக்கொள்கிறேனே என்று கெஞ்சியது. வாட்ஸாப்ப்பை ஓபன் பண்ணி அஜியின் பெயரை டைப் செய்தாள். Aji  - online  என காட்டியதும் தூக்கிவாரிப்போட்டது. கையிலிருக்கும் போனின் பின்னால் அஜி உட்கார்ந்து கொண்டிருப்பது போல உணர்ந்தாள். உடனே போனை லாக் செய்தாள். போனை எடுத்து பான்ட்  பாக்கெட்டில் வைத்தாள். 

ம்ம்ஹ்ம் இங்கே சும்மா உக்கார்ந்திருந்தால் சரியாய் இருக்காது என்று எண்ணி நடக்க ஆரம்பித்தாள். அங்கும் இங்கும் சிறிது தூரம் நடந்த போதும் மனம் மட்டும் Aji  - online என்பதிலேயே நிலைத்து நின்றது. மொபைலை எடுத்து அஜியின் காண்டக்ட்டை டெலீட் செய்தாள். விக்கி அனுப்பிய மெசேஜ்ஜையும் டெலீட் செய்தாள். கடிவாளம் போட்டு கட்டி வைத்திருந்த மனம் இன்று  அவிழ்த்து விட்ட குதிரையாக தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்காகத்தான் சென்னை வரணும் என்று ஆசைப்பட்டேனா ? இது ரதி போயிருக்க வேண்டிய ட்ரிப், அதை கெஞ்சி கூத்தாடி அவள் வாங்கிக்கொண்டு வந்தது இப்படி வேலியில் போன ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டுக்கொள்ளத்தானா? யூஎஸ் வந்த புதிதில் தெளிவில்லாமல் இருந்த மனதை எவ்வளவு பாடுபட்டு தேற்றிவைத்திருந்தாள். இந்த ஒரு ட்ரிப் எல்லாவற்றையும் பாழ் பண்ணிவிட்டது போலாக்கிவிட்டதே. உனக்கு இது தேவையா மகி? நீ ஏன் விக்கி வீட்டிற்கு போன? ஏன் அவனிடம் சகஜமாக எல்லா விஷயமும் சொன்ன? இப்ப ஏன் இந்த நிலமைல நிக்கற? அடுத்த வாரம் ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு கிளையண்ட் மீட்டிங் இருக்கு. காரீயர்ல அடுத்த படிக்கான மீட்டிங் அது. அதை சரியாக செய்தே ஆகவேண்டும் மகி. அதுக்கான வேலைகள் நிறைய இருக்கு.  உன்னோட நினைப்பையும் கவனத்தையும் அதில் செலுத்து என்று மனம் அவளது வீணான எண்ணங்களுக்கு தடுப்பணை போட்டு நிறுத்தியது.

மகிஷா வருவாள்... பாகம் 7

No comments:

Post a Comment

Learning Beyond Textbooks - Life Skills - Child Growth

#Learning_Beyond_Textbooks #Life_Skills A home is the first environment where children can playfully learn a plenty. Traditional textbook le...