அஜி என்ற அஜய்யை சில நாட்களாகத்தான் தெரியும். நல்ல நண்பன், யாருக்கும் தீங்கு நினைக்காதவன், உதவி என்று யார் கேட்டாலும் மறுக்காமல் செய்பவன், பாசாங்கு பண்ணாதவன். வீட்டிலிருக்கும் அம்மா, அக்கா, தங்கையிடம் எப்படி உரிமையுடன் அக்கறையுடன் நடந்து கொள்வானோ அதே போல் தான் தோழிகளிடமும் நடந்து கொள்வான், கடின உழைப்பாளி, தான் சம்பாதித்து குடும்பத்தில் உள்ளவர்களை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவன். இவ்வளவு தான் தெரியும், இதை தவிர அவனை பற்றி எதுவும் தெரியாது. வேறெதுவும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் இது வரை தோன்றியதுமில்லை. அப்படியிருக்க இன்று ஏன் இப்படி ஒரு நிகழ்வு?
குழம்பிய மனதுடன் கால்கள் நடக்க ஆரம்பித்தன. நாட்கள் எப்போதும் போல நகர்ந்தன. சில நேரங்களில் ஜூஸ் ஷாப், சில நேரங்களில் ரயில்வே ஸ்டேஷன் பெஞ்ச் என அவ்வப்போது நண்பர்களின் அரட்டை கச்சேரி அரங்கேறும். எதுவானாலும் அஜியை கேக்கலாம் மகியை கேக்கலாம் என இருவரும் ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு எல்லாம் கால் பண்ண ஆரம்பித்தார்கள். அது அப்படியே ஐந்து பத்து நிமிடம் என பேச்சு வளரும். இன்றைய தேதி போல் மொபைல் கட்டணம் அவ்வளவு மலிவு இல்லை. எஸ்எம்எஸ்க்கு கூட கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தது அப்போது. நான் இப்ப தான் உனக்கு கால் பண்ணனும்ன்னு நெனச்சேன் நீயே கூப்பிடற, நா நெனச்சேன் நீ சொல்லிட்ட, நா நெனச்சேன் நீ வந்து நிக்கற போன்ற வசனங்கள் நாள்தோறும் ஒன்றிற்கும் மேற்பட்ட முறை இருவருமே சொல்லி விடுவர். நெருங்கிய நண்பர்கள் என்பதை தாண்டி ஏதோ ஒரு உணர்வு தோன்றுவதை இருவருமே வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இதற்கப்புறம் தான் சாய் பாபா கோவில் குங்குமமும், அஷ்டலக்ஷ்மி கோவில் சாமந்தி பூவும் கைமாறின.
சில காரணங்களால் மகிக்கும் எதுவும் வரன் அமையவில்லை. இப்படியே சில மாதங்கள் உருண்டோடின. இருவரும் ஒருவரின் மீது ஒருவர் வைத்திருந்த மரியாதையும் அன்பும் வளர்ந்துகொண்டே இருந்தது. அஜிக்கு ஒரு ட்ரைனிங்கிற்காக ஹைதெராபாத் இரண்டு வாரம் போக வேண்டிய சூழ்நிலை. அந்த இரண்டு வாரமும் இருவரும் அவ்வளவாக பேசிக்கொள்ள முடியவில்லை. அந்த இடைவெளி அவர்களது மனதளவில் இன்னும் நெருக்கத்தை உண்டு பண்ணியது. மகிக்கு அப்போது பெங்களுருவில் ஒரு பெரிய IT கம்பெனியில் வேலை கிடைத்தது. அதே சமயம் அஜிக்கும் ஹைதெராபாத்தில் வேலை கிடைத்தது. "உன்னோட ஞாபகமா எனக்கு என்ன குடுத்துட்டு போறேன்னு பாப்போம்" என்றாள் மகி விளையாட்டாக ஒருநாள். அப்போது மகி நோக்கியா 1100 மாடல் மொபைல் வைத்திருந்தாள். அஜி நோக்கியா 1108 வைத்திருந்தான். "உன் கையிலிருக்கற மொபைலை குடேன்" என்றான், அவளும் கொடுத்தாள் இரண்டு போனிலும் இருந்த சிம்மை மாற்றி போட்டுவிட்டு 1108 'ஐ அவளிடம் கொடுத்து விட்டு 1100 'ஐ அவன் எடுத்துக்கொண்டான். அதிகபட்சமாக இருவரும் அவர்களது அன்பை அப்படி தான் வெளிக்காட்டிக் கொண்டார்கள்.
இருவரும் வேலை நிமித்தம் அந்தந்த ஊருக்கு சென்றனர். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களாவது பார்த்துக் கொண்டிருந்தவர்கள், தினமும் இரண்டு மூன்று முறையாவது மொபைலில் பேசிக் கொண்டிருந்தவர்கள் இப்போது அவ்வளவு எளிதில் பேச முடியவில்லை. STD காலுக்கான கட்டணம் மிக அதிகம். ஈமெயில் மட்டுமே அவர்களது தொடர்பு முறையாக இருந்தது. நேரில் பார்க்கவில்லை என்ற போதும் அந்த மொபைல் ஒரு புதுத்தெம்பு கொடுத்துக்கொண்டே இருந்தது. அப்படியே கிட்டத்தட்ட ஒரு வருடம் உருண்டோடிய பின் மகி அவளுடைய பிறந்த நாளன்று அஜியிடம் வெளிப்படையாக தன்னுடைய காதலை தெரிவித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தாள். முடிவெடுத்தபடியே சொல்லவும் செய்தாள்.
அன்றிரவு வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தவர்கள் பெரியவர்களிடம் சொல்லலாம் என முடிவு செய்தனர். வீட்டில் சொல்லவும் மகி வீட்டில் பெரிதாக வெடித்தது. அஜி வீட்டில் அப்போது தான் அவனது அக்கா திருமணம் முடிந்திருந்தது, அக்காவின் கணவரின் தங்கைக்கு அஜியை கேட்டு கொண்டிருப்பதாக அவன் அம்மா சொல்ல, அஜிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர்கள் இருவருக்குமே பெற்றவர்களை சங்கடப்படுத்துவதில் உடன்பாடில்லை. மகி இரண்டு மூன்று முறை அவள் வீட்டில் பேசிப்பார்த்தாள், யாரும் உடன்படவில்லை. அஜியும் அக்காவின் கணவர் வீட்டாருக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் தவிப்பதை பார்த்து "அஜி, நா தான் அவசரப்பட்டு உன்கிட்ட என் பிறந்தநாள் அப்ப சொல்லிட்டேன். நாம இதை மறந்துருவோம், நம்மள பெத்தவங்களுக்காக" என்று சொன்னாள். "அவசரப்பட்டெல்லாம் இல்ல மகி, எனக்கும் தெரியும் நம்ம ரெண்டு பேருக்குமே ஒருத்தர ஒருத்தர் எவ்ளோ நாளா பிடிக்கும்னு. என் அக்கா கல்யாணம், ரெண்டு பேருக்கும் நல்ல வேலைன்னு ஒரு வருஷத்துக்கு மேல காத்துகிட்டு இருந்து தான் நீயும் சொன்ன, சொந்த பந்தங்களை எதிர்த்து நிக்க நம்ம ரெண்டு பேருக்குமே தைரியம் கிடையாது, அப்படி ஒரு வாழ்க்கையும் வேணாம். ஆண்டவன் நம்ம தலைல வேற ஏதோ எழுதியிருக்கார் போல இருக்கு. அதன்படியே நடக்கட்டும் மகி. எல்லாம் கொஞ்ச நாள்ல சரியாகிறும்னு நம்புவோம். மனச போட்டு அலட்டிக்காத. நாம எப்பவும் போல நண்பர்களாவே இருப்போம்" என்று சொல்லி அவளை தேற்றினான்.
வீட்டில் அவ்வளவு பிரச்சனைகள் வந்தபோது மிகுந்த வருத்தப்பட்டாளேயொழியஅன்று அழுதது போல் என்றுமே வெடித்து அழுததில்லை. அவர்கள் பேசியது அன்று தான் கடைசி. மகி அவள் அம்மா அப்பாவிடம் பேசி அவளுக்கு கொஞ்சம் டைம் கொடுக்குமாறு கேட்டாள். அந்த வேலையை விட்டு விட்டு சென்னையில் வேறு வேலையில் சேர்ந்தாள், சில மாதங்கள் சென்னையிலிருந்த பிறகு அப்படியே ஆன்சைட் கிடைக்க அவளுக்கு அந்த மாற்றம் தேவை என்று அவள் வீட்டிலும் சம்மதித்தனர். எவ்வளவு தூரம் போன போதிலும் ஒரு சில நினைவுகளை விட்டு நீங்க முடியவில்லை அவளால். கடவுள் வேறேதோ எழுதியிருப்பாரேயானால் அன்று ஏன் விநாயகர் கோவிலில் அஜியின் முகம் தோன்ற வேண்டும், அவன் ஏன் கோவிலில் வைத்து குங்குமமும் பூக்களும் கொடுக்குமாறு அந்த ஆண்டவன் எழுத வேண்டும். இந்த கேள்விகளுக்கு நான் யாரிடம் போய் விடை கேட்க முடியும் என ஒவ்வொரு நாளும் தனக்குள்ளே மருகிக்கொண்டாள். அப்படியே ஒரு வருடமும் ஓடி விட்டது. மகியின் அம்மா "உனக்கு வரன் பாக்கலாமா மகி?" என்று மறுபடி கேட்டபோது "உங்கள் விருப்பம் அம்மா" என்று (அவர்கள் மனம் வருந்தக்கூடாது என்று) அவள் சொல்லியதும் உள்ளம் குளிர்ந்து போனது. "நீ நல்லா இருப்பேடா என் தங்கம்" என்று மனதார வாழ்த்தினார்.
பெற்ற அன்னையின் வாழ்த்தைத்தவிர வேறு என்ன வேண்டும் என்று அவளை அவளே சமாதானப்படுத்திக்கொண்டாள். ஆனால் இந்த இடம், அந்த இடம், மாப்பிள்ளை போட்டோ என்று பேச்சை எடுக்கும் போதெல்லாம் மனம் பதறும். ஏதாவது சாக்கு சொல்லி தட்டிக்கழித்து விடுவாள். ஒருதரம் அவள் அம்மா பொறுமை இழந்து "ஏன் மகி, என்ன தான் விஷயம்?" என்ற போது மகி அவளது உணர்வுகளையும், கோவில்களில் நடந்தவை பற்றியும், முழு மனதாக இல்லாமல் ஒத்துக்கொண்டால் வேறொரு நபரின் வாழ்க்கையையும் சேர்ந்து பாழாக்கிவிடுவேன் அம்மா என்று சொல்லியபோது தான் இதற்கு மேலும் அஜியை தவிர அவளை வேறு யாருக்கும் மணமுடித்துக்கொடுக்க முடியாது என்பது புரிந்தது. "சரிடா அவர்கள் வீட்டில் பேசலாமா?" என்றார் முதல் முறையாக அப்பா. ஆனால் அஜிக்கு எப்போதோ திருமணம் நிச்சயமாகிவிட்டதாக மாதங்கி ஒருமுறை சொல்லியிருந்தாள். "எல்லாமே கை மீறி போய்விட்டது அப்பா, அஜிக்கு கல்யாணம் ஆகிவிட்டது" என்றாள்.
எல்லோருக்கும் நடுக்காட்டில் விட்டது போன்ற ஒரு உணர்வு. இதற்கு மேல் காலம் தான் பதில் சொல்லணும் என்று மனதை திடப்படுத்திக்கொண்டு அவர்களும் மகியுடன் சென்று சிறிது நாள் தங்கலாம் என்று முடிவெடுத்தனர். அப்பா தற்காலிக விடுப்பு எடுத்துக்கொண்டார், அவள் தங்கியிருந்த சிகாகோ நகரத்திற்கே சென்றனர். அவளது மனம் என்றைக்காவது ஒரு நாள் மாறும் என்று எவ்வளவு காத்திருந்தும் வேறொருவரை கல்யாணம் பண்ணிக்கொள்ள என் மனதளவில் நான் தயாராகவில்லை அம்மா என்று இன்றளவும் சொல்லிக்கொண்டிருக்கிறாள். அவளது திருமணம் என்பதை தவிர வாழ்க்கை சுமுகமாக தான் போய்க்கொண்டிருக்கிறது. அந்த ஸ்டேஷனில் உட்கார்ந்து எவ்வளவு நேரம் கடந்த கால நிகழ்வுகளை அசை போட்டுக்கொண்டிருந்தாளோ, மொபைல் ரிங்க்டோன் சத்தத்தில் நிகழ்வுலகிற்கு வந்தாள். போனை எடுத்து பேசிவிட்டு வீட்டிற்கு போவதற்கு டாக்ஸி புக் பண்ணினாள். டாக்ஸியில் ஏறியதும் கைப்பையில் இருந்த நோக்கியா 1108 'ஐ எடுத்து கையில் இறுக்கமாக பற்றிக்கொண்டாள்.
மகிஷா வருவாள்... பாகம் 5
No comments:
Post a Comment