ஏதோ ஒன்று மகியின் மேல் விழ, கண்களை மூடி தூணில் சாய்ந்து உட்கார்ந்திருந்தவள் சட்டென்று கண்களை திறந்தாள். அருகில் ஒரு சிறு குழந்தை கையில் வைத்திருந்த பந்து அவள் மேல் வந்து விழுந்திருந்தது. பந்துடன், தன் கைப்பையில் வைத்திருந்த ஒரு சாக்லேட்டையும் அந்த குழந்தைக்கு கொடுக்க, அது பந்தை கீழே போட்டு விட்டு கையிலிருந்த சாக்லேட்டை பிரிக்க ஆரம்பித்ததை கண்டு நகைத்துவிட்டு கையிலிருந்த கடிகாரத்தை பார்த்தாள். கிளம்பலாம் என்று எண்ணி எழுந்தவள் கோவிலுக்கு வெளியே வந்து கொஞ்சம் போட்டோசை க்ளிக்கிக் கொண்டாள். சிறிது தூரம் நடந்து செல்ல ஆரம்பித்தாள். எதிரில் ஒரு காலி ஆட்டோ வரவே கையசைத்து கூப்பிட்டு பெசன்ட் நகர் அஷ்டலக்ஷ்மி கோவிலுக்கு செல்லும்படி உரைத்தாள்.
ஏழு மணிக்கு அந்த கோவில் மிக ஜனரஞ்சகமாக இருந்தது. அவள் அங்கு ஒரே ஒரு முறை தான் வந்திருந்தாள், அதனால் அந்த இடம் மாறியிருக்கிறதா இல்லையா என்று அவளால் பெரிதாக கண்டுபிடிக்க முடியவில்லை. சில்லென்ற கடல் காற்று ரம்மியமாய் வருடுக்கொடுக்க, அங்கிருந்த ஒரு பூக்காரம்மாவிடம் "இரண்டு முழம் சாமந்தி பூ குடுங்க" என்று கேட்டு வாங்கிக்கொண்டு உள்ளே சென்றாள். அந்த மகாலக்ஷ்மி கோவில் மூலஸ்தானத்திற்கு செல்வதற்கு குறுகலான சில படிகளை ஏறி செல்ல வேண்டியிருந்தது. கடல் அலைகளின் சத்தம் ஒரு புறம், அந்த சத்தம் கொடுக்கும் மன அமைதி ஒருபுறம் என்றால் மறுபக்கத்தில் நியான் வெளிச்சத்தில் பரபரப்பாக தெரிந்த சாலையும், அதில் சென்ற எண்ணிலடங்கா வாகனங்களும், சாலையில் நடந்து செல்லும் மக்களும், கடைகளும், அதனிலிருந்து எழும்பிய இரைச்சலும்; இந்த இரண்டிற்கும் நடுவே எழில்கொஞ்சும் அழகுடன் கூடிய வேலைப்பாடுடனான அந்த அஷ்டலக்ஷ்மி கோவில், இவை எல்லாவற்றையும் ஒரு சேர ரசித்துக்கொண்டே மகாலக்ஷ்மியை தரிசனம் செய்ய கியூவில் நின்று கொண்டிருந்தாள் மகிஷா.
பத்து நிமிடம் நின்ற பின் அர்ச்சகரிடம் பூக்களை கொடுத்து விட்டு, அவர் அர்ச்சனை செய்து ஆரத்தி காட்டும் வரை கண்களை மூடி வணங்கிக்கொண்டிருந்தாள். தீபாராதனை முடிந்து குங்குமத்துடன் இரு சாமந்தி மலர்களையும் அவள் கையில் திணித்து விட்டு அடுத்தடுத்து நகர்ந்து சென்றார். கையில் இருந்த சாமந்தி மலர்களையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். பதினான்கு வருடங்களுக்கு முன் அவள் கையில் கிடைத்த மலர்களைப் போலவே இன்றும்; கொடுத்த நபர்கள் தான் வேறு. அப்போது மகி மேத்தா நகரில் ஒரு சிறிய கம்பெனியில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டராக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள், அவளது அன்றாட செலவுகளுக்கு ஆகுமே என்று கிடைத்த அந்த வேலையை ஒப்புக்கொண்டாள்.
ஒரு வார இறுதி நாளில் அஷ்டலக்ஷ்மி கோவிலுக்கு போகலாம் என்று மகியும், மாதங்கியும், அஜியும் சென்றிருந்தார்கள். அன்றும் அப்படி தான் மகாலக்ஷ்மியை தரிசனம் செய்த பிறகு அர்ச்சகர் எல்லோர் கையிலும் குங்குமமும் மலர்களும் கொடுத்தார். அஜியிடம் அவர் கொடுத்த இரு சாமந்தி மலர்களை இந்தா என்று எதேச்சையாக அவன் மகியிடம் கொடுக்க அவளது கைகளும் தன்னிச்சையாக அவற்றை வாங்கிக் கொண்டன. குங்குமத்தை பேப்பரில் மடித்து பர்சிற்குள் வைத்துக் கொண்டு பூக்களை கைப்பையில் சைடு ஜிப்பில் போட்டு வைத்தாள். அங்கிருந்து கிளம்பி ரூமிற்கு சென்றவுடன் பூக்களை எடுத்து அவளுடைய டைரியில் பத்திரப்படுத்திக்கொண்டாள். "நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன், ஏன் இப்படி செய்கிறேன்?" என்று அவள் மனம் அவளையே கேள்விகேட்டது.
எதற்கும் அவளிடம் விடையில்லை. ஆனாலும் சில நினைவுகளையும் நிகழ்வுகளையும் பொக்கிஷம் போல பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள தோன்றுமல்லவா? இது வரை நூறு முறைக்கும் மேல் இந்த நிகழ்வுகளை ஆசை தீர அசை போட்டு பார்த்திருப்பாள். இன்று அர்ச்சகர் கொடுத்த சாமந்திப் பூக்களையும் பத்திரப்படுத்திக் கொண்டு கோவில் பிரகாரத்தை அடிப்பிரதட்சணம் செய்து விட்டு வீட்டிற்கு போவதற்கு ஓலா புக் செய்தாள். டாக்ஸி வந்ததும் ஏறி உட்கார்ந்தாள். அன்றைய தினம் நடந்த நிகழ்வுகளும் அன்றொரு தினம் நடந்த நிகழ்வுகளும் மாறி மாறி அவளது மண்டைக்குள் வந்து செல்ல, அன்று முழுவதும் அலைந்ததினாலும், முந்தைய தினம் சரிவர தூங்காததினாலும், பசியினாலும் அவளது தலை கனக்கத்தொடங்கி, வீட்டிற்கு போவதற்குள் கடுமையான தலை வலியாக மாறியிருந்தது. காலிங் பெல் அடித்த போது கதவை திறந்தது அக்காவின் பத்து வயது மகன் மிதுன். "அம்மா ஆண்ட்டி வந்துட்டாங்க" என்று சொல்லியபடி அவள் உள்ளே வந்ததும் கதவை சாத்தி தாழிட்டான்.
அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த ரதியின் அக்கா அவளது முகத்தை பார்த்து "என்னாச்சு மகி, ரொம்ப டல்லா இருக்கே, உடம்புக்கு எதுவும் முடியலையா?" என்றாள் பரிவுடன். "திடீர்னு தலை ரொம்ப வலிக்க ஆரம்பிச்சிருச்சு அக்கா, ஒரு டேப்லெட் போட்டு தூங்கி எந்திரிச்சா சரியாகிரும்" என்றாள் தலையை பிடித்தவாறே. "சரி நீ போயி கை கால் கழுவிட்டு வா, நா தோசை ஊற்றி தரேன், சாப்டுட்டு மாத்திரை போட்டுக்கோ" என்றாள். மகி கை கால் கழுவி விட்டு வருவதற்குள் சூடான தோசையை தட்டில் சட்னியும் இட்லி பொடியும் வைத்து எடுத்து வைத்திருந்தாள். சூடான தோசை இதமாக தொண்டைக்குள் இறங்கினாலும், அந்த தலை வலியுடன் இரண்டிற்கு மேல் அவளால் சாப்பிட முடியவில்லை. ஒரு தம்ளர் வெது வெதுப்பான பாலை குடித்துவிட்டு ஒரு பரசிட்டமோல் டேப்லெட்டை போட்டு விட்டு படுத்துக்கொண்டாள். படுத்த நிமிஷத்தில் உறங்கியும் போனாள்.
காலை 6 .30 மணிக்கு அலாரம் அடிக்க உறக்கம் கலைந்து படுக்கையில் எழுந்து அமர்ந்தாள். மொபைலிலிருந்த "கால் மீ ஒன்ஸ் யு வேக் அப்" என்ற வாட்ஸாப் செய்தியை பார்த்துவிட்டு அவள் அம்மாவிற்கு கால் பண்ணினாள். "ஹாய் அம்மா ஹொவ் ஆர் யு அண்ட் அப்பா" என்றாள் கொஞ்சலாக. "வி ஆர் பைன் மகி, உனக்கு தலைவலின்னு ரதியோட அக்கா சொன்னாளே, இப்ப எப்படி இருக்கு? வேணும்னா ஒரு நாள் லீவு எடுத்துக்கரியா? முடியுமா?" என்றாள் அக்கறையுடன். "அம்மா ஜஸ்ட் லேசான தலைவலி தான் மா, இப்ப பரவால்ல. தவிர வந்திருக்கிறதே அஞ்சு நாளைக்கு தான். இதுல லீவு எல்லாம் போட முடியாதும்மா, யு டோன்ட் ஒர்ரி ஐ வில் டேக் கேர். நா ஈவினிங் வந்து பேசறேன், நேரமாச்சு" என்றவளிடம் "இன்னைக்கு சாயங்காலம் எங்கேயும் வெளில போக வேணாம். ஒரு நாள் நல்ல ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு போ. இட்ஸ் மை ஆர்டர்" என்றார் கண்டிப்பு கலந்த அன்புடன். "ஓகே அம்மா, இப்ப நா போனை வைக்கறேன். பை" என்று சொல்லி கட்டிலிலிருந்து வேகமாக இறங்கி பல் துலக்கப்போனாள்.
ரதியின் அக்கா இடையே வந்து "காபி குடுத்துவிட்டு, தலைவலி பரவாயில்லயா?" என கேட்டு விட்டு போனாள். காபி குடித்துக் கொண்டே ஈமெயில் செக் பண்ணி அன்றைய தினத்துக்கான வேலைகளை ஒருமுறை மனதிற்குள் ஓடவிட்டு பார்த்தாள். லேப்டாப்பை மூடி எடுத்து வைத்துவிட்டு குளியலறைக்குச் சென்றாள். எட்டு மணிக்கு முழுவதுமாக ரெடியாகி சாப்பிட அமர்ந்த போது ரதியின் மாமா "இப்ப தலைவலி ஓகேவா? நா வேணும்னா ஆபீஸ்ல ட்ராப் பண்ணவா?" என்றார். "பரவால்ல அண்ணா, நானே போயிக்கறேன். இப்ப தெம்பாகிட்டேன். தவிர மெட்ரோல போறது ரொம்ப எக்சைட்டிங்கா இருக்கு " என்றாள் சிரித்தவாறே. "சரிம்மா, உன் விருப்பம்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றார்.
சாப்பிட்டு முடித்து, முந்தைய நாள் போலவே நடை, மெட்ரோ, ஆட்டோ என ஆபீஸ் வந்து சேர்ந்தாள். வைப்ஃக்கு உடம்பு சரி இல்லாததால் தான் அன்று ஆபீசுக்கு வரவில்லை என்றும் ஒர்க் ஃபிரம் ஹோம் பண்ணுவதாகவும் நரேன் மெசேஜ் பண்ணியிருந்தான். மகிக்கும் அன்று ரொம்ப பிசியாக போனது. மாலை ஐந்து மணிக்குத்தான் கிளம்ப முடிந்தது. அம்மா அன்று எங்கேயும் போக வேண்டாம் என்று கண்டிப்புடன் சொல்லியிருந்ததாலும், ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணி உடம்புக்கு ஏதாவது வந்தால் லீவு போட முடியாது என்பதாலும் அன்று வீட்டிலேயே இருப்பது என முடிவெடுத்தாள். அதற்கேத்தவாறு அன்று மாலை முழுவதும் யூஎஸ் டீமிடம் இருந்து மாற்றி மாற்றி கால் வந்து கொண்டே இருந்தது.
அடுத்த நாளும் கூட ஆபீஸிலும் மாலையிலும் வேலை ஒன்றன் பின் ஒன்றாக வந்துகொண்டே இருந்தது. வெளியில் செல்வதை பற்றி யோசிக்க கூட நேரமின்றி வியாழக்கிழமை மதியம் வரை ஓடிக்கொண்டே இருந்தாள். ஒரு வழியாக மூன்றரை மணி வாக்கில் எல்லாவற்றையும் முடித்துவிட்டு, அடுத்த நாளுக்கு தேவையான விஷயங்கள் எல்லாம் இருக்கிறதா என ஒரு கால் மணிநேரம் சரி பார்த்துவிட்டு ஸ்ரீதரிடம் மறு நாள் கன்டினியூ பண்ணலாம் என சொல்லிவிட்டு கிளம்பினாள். வெளியில் வந்து ஒரு ஆட்டோ பிடித்து கிண்டி ஸ்டேஷன் போங்க என்றாள். கிண்டியில் டிக்கெட் கவுண்டரில் நுங்கம்பாக்கம் என்று கேட்டு டிக்கெட் வாங்கிக்கொண்டு பிளாட்பாரம் நோக்கி நடந்தாள். தாம்பரத்திலிருந்து பீச் செல்லும் எலக்ட்ரிக் ட்ரெயின் வந்ததும் லேடீஸ் கம்பார்ட்மெண்டில் ஏறிக்கொண்டாள். காலியாக இருந்த இருக்கையில் உக்காரலாமா என்று ஒரு கணம் யோசித்துவிட்டு வாசலருகே தோதாக சாய்ந்து நின்று கொண்டாள். முதல் முறை இந்த ட்ரெயினில் பயணித்த போது மகியும் மாதங்கியும் நுங்கம்பாக்கத்திலிருந்து திநகருக்கு லேடீஸ் கம்பார்ட்மெண்ட் என நினைத்து முதல் வகுப்பில் ஏறி ஒய்யாரமாக நின்றுகொண்டு போன பொது டிக்கெட் செக் பண்ணும் ஆபீசரிடம் மாட்டி இருநூறு ரூபாய் அபராதம் கட்டினது நினைவில் வரவே தனக்குளேயே சிரித்துக்கொண்டாள்.
நுங்கம்பாக்கத்தில் ஸ்டேஷனிற்கு இடது புறமாக இருந்த சாலைக்கு படியேறி இறங்கி வந்து சேர்ந்தாள். அங்கே இருந்த ஒரு இளநீர் கடையில் இளநீர் அருந்திவிட்டு டிராக்கை ஒட்டியபடி இருந்த சாலையில் நடந்தாள். அந்த இடம் அறவே மாறிப்போயிருந்தது. அவளது PG இருந்த இடத்தை எவ்வளவு தேடியும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கிருந்த ஒரு ஜூஸ் ஷாப், ஒரு அம்மன் கோவில், ஒரு சிறிய விநாயகர் கோவில் எதுவுமே கண்ணில் படவில்லை. அங்கே இங்கே என்று நடந்து எல்லா ரோட்டையும் அளந்து பார்த்தாள். ஒன்றும் புலப்படவில்லை. அந்த விநாயகர் கோவிலை தான் கண்டிப்பாக பார்க்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு. எல்லாவற்றிற்கும் பிள்ளையார் சுழி போட்டதே அந்த விநாயகர் கோவிலில் இருந்த ஒரு குட்டி விநாயகர் தான்.
மகி அந்த PG 'யில் தங்கி டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக ஒர்க் பண்ணிக்கொண்டிருந்த போது மேத்தா நகருக்கு தினமும் நடந்து தான் செல்வாள். அவள் தங்கியிருந்த இடத்திலிருந்து நெல்சன் மாணிக்கம் ரோடு வழியாக சிறிது தூரம் சென்று சாலையை கடந்து தான் மேத்தா நகருக்கு செல்ல வேண்டும். அந்த சாலையில் கூட்ட நெரிசலாக இருக்கும் என்பதால் சந்து சந்தாக உள்வழியே சென்று சாலையை கடந்து அவள் செல்வது வழக்கம். அப்படி ஒரு சந்தில் தான் ஒரு சிறிய விநாயகர் கோவில் இருந்தது. தினமும் காலையில் செல்லும் போது தவறாமல் அட்டெண்டென்ஸ் போட்டு விட்டு தான் ஆபீசுக்கு செல்வாள். ஒரு ஞாயிறு அன்று அவள் அம்மா அவளிடம் "உனக்கு அலையன்ஸ் பாக்க ஆரம்பிக்கலாமா? இப்ப ஆரம்பிச்ச தான் சரியா இருக்கும். உனக்கு ஓகே தான?" என்று ஒரு சம்பிரதாயத்துக்கு கேட்டார்கள். மகியும் சரிம்மா உங்க விருப்பம் என்றாள். அப்போது அவள் அம்மா "உனக்கு நல்ல பையனா அமையனும். எங்களையும் மகன் போல பாத்துக்கற வரனா இருக்கணும். கடவுள் தான் அருள் புரியனும்" என்றார். மகி திங்களன்று வேலைக்கு செல்லுகையில் வழக்கமாக செல்லும் விநாயகர் கோவிலுக்கு சென்று அம்மா நெனச்சது போல அவங்களையும் மகனை போல பாத்துக்கற நல்ல மாப்பிள்ளையை காட்டு பிள்ளையாரப்பா என்று கண் மூடி கை கூப்பி வேண்டிக்கொண்டபோது அஜியின் முகம் அவள் கண் முன் வந்து போனது. மாப்பிள்ளை பற்றி வேண்டிக்கொள்ளும் போது ஏன் அஜியின் முகம் ஞாபகம் வரணும்?
மகிஷா வருவாள்... பாகம் 4
No comments:
Post a Comment