பாகம் 1
பாகம் 2
கோர்வையாக தான் எழுதிய மின்னஞ்சலை இரண்டு முறை படித்து, எழுத்துப்பிழை வாக்கியப்பிழை இல்லாமல் இருக்கிறதா என சரி பார்த்தாள். "தேவகி, நான் HR'ரிடம் விடுப்பு குறித்து பேசிவிட்டேன். அதன் படி இன்னும் பத்து நாட்கள் விடுப்பில் போவதற்கான விடுப்பு படிவத்தை சமர்ப்பித்துள்ளேன், தயவு செய்து அதனை அங்கீகரிக்கவும்" என்ற சாராம்சம் கொண்ட அந்த மின்னஞ்சலை தேவகிக்கும், HR மிதுனுக்கும் அனுப்பினாள்.
அப்போது அங்கு வந்த கணேஷ் "என்னங்க, இன்னைக்கு எப்படி இருக்கீங்க" என்றார் சிரித்தபடி. "ஹலோ உங்களுக்கெல்லாம் கிண்டலா போச்சா? பத்து நாள் லீவுல போயிட்டு வந்து கவனிச்சுக்கறேன்" என்றாள் சுழற்நாற்காலியில் சாய்ந்த வண்ணம். "என்ன இன்னும் பத்து நாள் லீவா? அப்ரூவ் பண்ணிட்டாங்களா?" என்றவர் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு, குரலை தாழ்த்தியபடி "அதுவும் தேவகி கிட்ட பேசி வாங்கிட்டீங்களா? பெரிய விஷயம் தான். அவங்களோட யாருக்கும் ஒத்து போகல, லேடி ஹிட்லர்" என்றார். "ஆமா கணேஷ், என்கிட்டயும் கடுமையா தான் பேசினாங்க. எனக்கு ரொம்ப சங்கடமாகிருச்சு" என ஆரம்பித்து நடந்ததை விவரித்தாள். "விடுங்க வந்தனா, உங்களோட வேலை சுத்தம் பத்தி இங்க எல்லாருக்குமே தெரியும். அவங்க பேசினதை மனசுல போட்டு வருத்திக்காதீங்க. HR கிட்ட பேசி நீங்க போல்டு டெஸிஷன் எடுத்துருக்கீங்க, லீவுல போயிட்டு நல்லா ரெஸ்ட் எடுத்து தெம்பா வாங்க. எப்படியும் உங்கள 'வச்சு' செய்வாங்க, அப்ரைசல் (appraisal- மதிப்பீடு) வேற அவங்க கிட்ட தான் போகும். சேர்த்து வச்சு சமாளிக்கற அளவுக்கு ரெடி ஆகிட்டு வாங்க" என்றார், அந்த கியூபிக்கலின் மீது இரண்டு கைகளையும் மடக்கியவாறு வைத்து அதில் தாடையை முட்டுக்கொடுத்தபடி நின்று கொண்டு. "அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் கணேஷ், என் வேலைய நா ஒழுங்கா செஞ்சிட்டு போறேன், நா ஏன் அவங்களுக்கு பயப்படணும்" என்று சொல்லிக்கொண்டிருக்கையில் "Approved" என்ற ஒற்றை வார்த்தையை தாங்கியபடி அந்த மின்னஞ்சல் அவளது உள்பெட்டிக்கு(inbox ) வந்தது. "அப்ரூவ் பண்ணிட்டாங்க" என்றாள் கண்ணடித்தபடி. "கூட உதவிக்கு அம்மா வந்திருக்காங்களா" என்றவரிடம் "இல்லங்க.. அம்மா சிங்கப்பூர் போயிருக்காங்க. அண்ணிக்கு இப்ப தான் டெலிவரி ஆகியிருக்கு. அதுனால அங்க இருக்காங்க, இங்க எப்படியும் வர கொறஞ்சது மூணு மாசம் ஆகும்" என்று வந்தன சொல்லிக்கொண்டிருக்கையில் விவேக்கிடமிருந்து அழைப்பு வர "ஓகே வந்தனா, நீங்க ஒடம்ப பாத்துக்கோங்க. நாம அப்புறம் பேசுவோம். பை" என்று சொல்லிக்கொண்டு கணேஷ் அவரது கியூபிகலுக்கு சென்றார்.
பாட்டு பாடி அழைத்த மொபைலை காதுக்கு கொடுத்தபடி "தாங்கள் அழைத்த வாடிக்கையாளர் பத்து நாட்கள் விடுப்பில் செல்ல இருப்பதால் நீங்கள் விஷயங்களை நிதானமாக நேரில் பேசிக்கொள்ளலாம்" என்று கொஞ்சி கொஞ்சி வந்தனா சொல்ல "அப்பாடா.. நல்லதா போச்சு நா போனை வச்சிடறேன்" என்றான் விவேக்கும் "ஒய், ஒத வாங்குவ.. என்ன விஷயம் சொல்லு" என்றாள் வந்தனா. "சரி எப்ப கெளம்பர சொல்லு, நா கூப்பிட வரேன்" என்றான் "வேணாம்பா, நா ஆபீஸ் பஸ்லயே வந்துடறேன். நீ ஸ்டாப்பிலே பிக் பண்ணிக்கோ. எதுக்கு இவ்ளோ தூரம் அலையணும்" என அவள் சொல்ல "அதெல்லாம் ஒன்னும் அலைச்சல் இல்ல, நீ பஸ்ல எல்லாம் வர வேணாம். நா ஷிப்ட் முடிச்சிட்டு போயி கார எடுத்துட்டு வரேன். நீங்க மகாராணி மாறி உக்காந்து வந்தா போதும்.. நீங்க வந்தா மட்டும் போதும்" என்றான் ராகத்துடன். "அப்படியா.. டிரைவர் லேட் பண்ணாம வந்துருவல.." என்றாள் அவளும். "வந்துடறேன் மேடம்" என்று பவ்யமாக சொல்லிவிட்டு "வந்து உன்ன கவனிச்சுக்கறேன்.. இப்ப போயி நா வேலைய பாக்கறேன். தேவைப்பட்டா டார்மிட்டரி போயி ரெஸ்ட் எடு. பை" என்று சொல்லி போனை வைத்தான்.
மறு நாள் மட்டும் விவேக் வீட்டில் இருந்து பணி செய்தான். வந்தனா காய் மட்டும் நறுக்கிக்கொடுக்க, இடையிடையே சமையலையும் பார்த்துக்கொண்டு, அவளுக்கு சூப், ஜூஸ் என போட்டுக்கொடுத்ததில் அவளுக்கு அயர்ச்சி நன்றாகவே குறைந்திருந்தது. சமையல் எதுவும் அவள் செய்யாததால் வாந்தியும் குறைந்திருந்தது, இரண்டு தரம் மட்டும் எடுத்தாள். மதியம் சாப்பிட்டு விட்டு ஒரு நல்ல தூக்கம் போட்டு எழுந்தாள். "இப்ப தான் உடம்பே கொஞ்சம் பெட்டரா இருக்க மாறி இருக்கு. இப்படியே இருந்தா இன்னும் ஒரு நாலு நாள் மட்டும் ரெஸ்ட் எடுத்துட்டு ஆபீசுக்கு போயிரலாம். உள்ள இருக்க குட்டி என்ன முடிவு பண்ணி இருக்குன்னு தெரிலையே" என்றவளை முறைத்தபடி "இன்னைக்கு தான லீவு அப்ளை பண்ணிட்டு வந்திருக்க, ஆபீஸ பத்தி அப்புறம் யோசிக்கலாம். மொதல்ல மனச ரிலாக்ஸ்சா வையி" என்றவன் "நைட் டின்னருக்கு என்ன பண்ணட்டும்" என்று பேச்சை மாற்றினான். விவேக்கிற்கு தெரியும் தேவகி பேசியது வந்தனாவின் மனதிற்குள் குடைந்து கொண்டே இருக்கும், எப்படியும் அவளை நிரூபிக்க சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருப்பாள் என்று. அதனால் தான் பேச்சை மாற்றினான்.
அடுத்து வந்த மூன்று நாட்களும், வந்தனா முந்தைய இரவே காய்களை நறுக்கி பிரிட்ஜில் வைக்க, விவேக் காலையிலேயே சமைத்து ஹாட் பாக்கில் அவளுக்கு வைத்துவிட்டான். அவளும் நன்கு சாப்பிட்டு உறங்கி எழுந்ததில் சோர்வு முற்றிலுமாக நீங்கியிருந்தது. மார்னிங் சிக்னெஸ், அவள் நிதானமாக எழுந்ததால் அவ்வளவாக இல்லை. வாந்தியும் குமட்டலும் கொஞ்சம் இருந்தது, ஆனால் சமாளிக்க கூடிய அளவில் இருந்ததால் அவளுக்கு ரொம்பவும் சங்கடமில்லாமல் இருந்தது. அவள் விடுப்பு எடுத்த ஆறாவது நாளில் காலையில் ஒரே ஒரு தரம் மட்டும் தான் வாந்தி எடுத்தாள். மாலையில் விவேக்கும் அவளும் சிறிது தூரம் நடந்து விட்டு வந்தார்கள். வீட்டிற்கு திரும்பியவுடன் "நடந்துட்டு வந்தது டையர்டா இருக்கா குட்டிமா" என்றான் பரிவுடன். "ஆக்சுவலி இல்லப்பா, அன்னைக்கெல்லாம் எவ்ளோ அசதியா இருக்குன்னு சொன்னேன். இன்னைக்கு எதுவுமே இல்ல, நார்மலா ஃபீல் பண்றேன். மே பீ வாமிட்டிங் அதிகமா இருந்ததால டீஹைடிரேட் ஆகியிருக்கும் போல" என்றாள். "நீயா யோசிச்சு யோசிச்சு ஏதாவது காரணம் சொல்லிக்கிட்டு இருக்காத. நார்மலா இருக்கீல.. சந்தோஷம். அப்படியே இன்னும் ரெஸ்ட் எடு. ஆபீஸ் கத ஏதாது ஆரம்பிச்ச பாத்துக்கோ" என்று முடிக்கும் முன் "உடனே ஆரம்பிக்கல, இன்னும் ரெண்டு நாள் பாக்கறேன், நல்லா பெட்டரா இருந்தா வியாழக்கிழமையிலிருந்து போறேன். ரெண்டு நாள் முன்னாடியே ஜாயின் பண்ணிடறேன், வீட்ல எனக்கும் கொஞ்சம் போர் அடிக்க தான் செய்யுது".
"நீ எப்படி டைப் டைப்பா யோசிப்பனு எனக்கு தெரியும், அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். நீ போய் கை கால் கழுவிட்டு வா" என்று அவளை அங்கிருந்து கிளப்பி பேச்சை மாற்ற முயற்சித்தான். "ஓகே டியர் புருஷா, நா புதன்கிழமை மதியத்துக்கு மேல டிசைட்பண்றேன் போதுமா" என்று சொல்லிவிட்டு அங்கிருந்தால் அவன் கண்டிப்பாக திட்டுவான் என தெரிந்து பாத்ரூமிற்குள் ஓடினாள். அடுத்த இரண்டு நாட்களில் வாமிட்டிங் சுத்தமாக நின்றிருக்க, விடுப்பை ஏன் வீணாக்கவேண்டும், எப்படியும் நிறைய லீவு வேணும் தானே என்ற அவளின் வாதம் நியாயமாக படவே அவள் அன்று மாலையே தேவகிக்கும் HR'க்கும் மின்னஞ்சல் அனுப்பினாள். தனக்கு உடல் நலம் தேவலாம் போல் இருப்பதால் விடுப்பை ரத்து செய்து இரண்டு நாள் முன்னரே வேலைக்கு திரும்பலாம் என நினைப்பதாகவும், அதில் ஏதும் சிக்கல் இருந்தால் தெரிவிக்கும் படியும் அதில் எழுதியிருந்தாள். அவள் உடல் நிலை ஒத்துழைத்தால் தாராளமாக அவள் வேலைக்குத் திரும்பலாம் என மிதுன் ரிப்ளை செய்ய அவள் வியாழனன்று வேலைக்கு திரும்பினாள்.
வந்தனா அலுவலகத்தில் அவளது தளத்திற்கு செல்ல, கண்ணாடி கதவை தள்ளிக் கொண்டு உள்ளே செல்கையில் நிரூபமாவும் தேவிகாவும் பேசிக்கொண்டிருந்தார்கள். வந்தனா அவளது இடத்தில் கைப்பையை வைத்துவிட்டு அவர்களை நோக்கி சென்றாள். "இதோ வந்தனா இருக்காங்களே, இவங்கள அந்த ப்ராஜெக்ட்க்கு நியமிக்கலாமே" என்று சொன்ன நிருபமா "வாங்க வந்தனா, ஹெல்த் இப்ப எப்படி இருக்கு?" என்றாள். "கம்ப்ளீட்லி ஃபைன் நிருபமா, தாங்க் யு" என்றாள் வந்தனா. "ஒரு புது ப்ராஜெக்ட் வந்துருக்கு, அதுக்கு தான் யாரை அசைன் பண்றதுனு பேசிட்டு இருந்தோம், நீங்க கூட அதுக்கு சரியா இருப்பீங்க. Requirements Gathering, Documentation'னு இனிஷியல் ஸ்டேஜ்ல தான் இருக்கு. டீம்லாம் இனிமே தான் ஃபாம் பண்ணனும். எடுத்துக்கறீங்களா?" என்றாள் நிருபமா. "ஷ்யுர்.. ஆனா அந்த பழைய ப்ராஜெக்ட்ல கணேஷுக்கு பதிலா டேக் ஓவர் பண்ணனும்னு மொதல்ல சொல்லிட்டு இருந்தார்களே, அதுக்கு வேற ஆள் வந்தாச்சா?" என்று வந்தனா கேட்டுக்கொண்டே தேவகியை பார்க்க, தேவகி பதில் ஏதும் சொல்ல வில்லை. நிருபமா தான் "அத கணேஷ் தான் பாத்துக்கறார். அப்படியே இன்னொரு ப்ராஜெக்ட்டும் ஹாண்டில் பண்றார். அதுனால அத பத்தி நம்ம ரொம்ப யோசிக்க வேண்டியதில்லை" என்றாள். இப்படி தான் நிறைய நேரங்களில் நான்கு பேர் செய்ய வேண்டிய வேலை ஒருவரின் தலையிலேயே வந்து விழும். முடியும் முடியாது என்றெல்லாம் சொல்ல முடியாது. பாவம் கணேஷ், என்று நினைத்துக்கொண்டாள்.
அன்றே வந்தனா அந்த ப்ராஜெக்ட்டிற்கான வேலைகளை செய்ய ஆரம்பித்தாள். நிரூபமாவும் அந்த ப்ராஜெக்ட்டில் இருந்ததனால் இவளுக்கு தேவகியிடம் பேச வேண்டிய நிர்பந்தம் இல்லாமல் இருந்தது, அதனால் கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்தது. இவளை பார்த்த போது பேருக்கு கூட புன்னகைக்கவில்லை, உடல் நிலை பத்தி விசாரிக்கவில்லை, ஆனால் நிரூபமாவிடம் மட்டும் "வந்தனா ஒரு ஸ்டேபிள் மனநிலை இல்லாதவங்க. ப்ராஜெக்ட் எடுத்தக்கறேன்னு சொல்லிட்டு அடுத்த நாளே லீவு வேணும்னு கேக்கறாங்க. லீவுல போயிட்டு பாதிலேயே திரும்ப வரேன்னு சொல்றாங்க. இவங்கள நம்பி எப்படி புது ப்ராஜெக்ட்டை குடுக்கறது நிரு" என்று குத்தல் பேச்சு வேற. "இப்ப நமக்கு வேற யாரும் தகுதியான ரிஸோர்ஸ் இல்ல தேவகி. இவங்க ஆரம்பிக்கட்டும், நடுல ஏதாவது ட்ரபிள் இருந்தா நம்ம ஆள மாத்திரலாம்" என்று நிருபமா சொன்னது தேவகியின் வாயை அடைப்பதற்கா அல்லது அவளுக்கும் அதே கருத்து தானா தெரியலையே. என்னவாயிருந்தா என்ன, இப்படி தான் நம்மள நடத்துவார்கள் என்று ஏற்கனவே தெரிந்தது தானே, கண்டுக்காமல் வேலையை பார்க்கலாம் என்று முடிவு பண்ணி வேலையில் மூழ்கினாள்.
இவளுக்கு கீழ் அப்போது தான் புதிதாக சேர்ந்த இரண்டு ஃபிரெஷர்ஸ்'ஐ கொடுக்க, அவர்களுக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்து புரியவைத்து வேலை வாங்குவதற்கு அதிக நேரம் எடுத்தது. அதனால் வீட்டிற்கு சென்றும் வேலை பார்க்க என்று ஒரு லேப்டாப்பை கேட்டு வாங்கிக்கொண்டாள். ஒரு மாதம் ஓடியதே தெரியவில்லை. நடுவில் ஒரு தரம் செக் அப் போன போது, குழந்தையின் வளர்ச்சி ஆராக்கியமாக இருப்பதாகவும், சிறு சிறு உடற்பயிற்சி, சிறிது நடைப்பயணம் எல்லாமே நார்மல் டெலிவரிக்கு உதவும் என்று டாக்டர் சொன்னதால் தினமும் காலையில் பத்து நிமிடம் உடற்பயிற்சியும், மாலையில் அரைமணி நேரம் வாக்கிங்கும் போக ஆரம்பித்தாள். வீட்டு வேலை செய்ய வரும் சாந்தி அக்காவை காய்கள் நறுக்கி தரும்படி சொல்லி, சமையலை வந்தனா பார்த்துக்கொண்டாள். விவேக்கும் முடிந்தவரை எல்லா உதவிகளும் செய்தான். ஆளுக்கொருபுரம் பரபரப்பாக அவர்களது வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அன்று வந்தனா ஆபீசில் வேலை செய்துகொண்டிருந்த போது அவளது இடத்திற்கு வந்த நிருபமா "வந்தனா, மைக்ரோசாப்ட் ப்ராடெக்ட் ட்ரைனிங் ஒன்னு நீங்க எடுக்கறதுக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருந்தோம். வீடியோ கான்பரன்சிங் தான் இத்தனை நாளா சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஆனா அத இப்ப கிளாஸ் ரூம் ட்ரெய்னிங்கா மாத்திட்டாங்க. பெங்களூருல தான் ட்ரைனிங், அஞ்சு நாள் ட்ரைனிங் . ட்ரைனிங் முடிச்சிட்டு அதை டீமுக்கு அறிவு பரிமாற்றம்(KT - Knowledge Transfer) பண்ணனும். உங்களால ட்ராவல் பண்ண முடியுமா? ஹெல்த் எப்படி இருக்கு?" என்றாள்.
"ஹெல்த் ஒன்னும் ப்ராப்ளம் இல்ல, டிராவல் பத்தி டாக்டர் கிட்ட பேசிட்டு சொல்லட்டுமா? என்றாள் வந்தனா. டாக்டர் சரி என்று சொன்னால் கூட விவேக் என்ன சொல்லுவானோ என்ற கவலை இருந்தது. "நோ ப்ராப்ளம் , நீங்க டாக்டர் கிட்டயும் உங்க கணவர் கிட்டயும் பேசிட்டு நாளைக்கு சொல்ல முடியுமா?" என்ற நிரூபமாவிடம் "சரி, நா நாளைக்கு கன்பார்ம் பண்றேன் உங்களுக்கு" என்றவள் எங்கே தங்கணும், மற்றும் வேறு சில விவரங்களை சேகரித்த பிறகு விவேக்கிற்கு கால் செய்தாள். அவனிடம் விவரம் சொன்னவள் அவனது பதிலுக்காக காத்திருந்தாள். பொதுவாக விவேக்கிடம் கேட்டு தான் முடிவெடுக்கணும் என்றெல்லாம் இல்லை. ஆனால் இப்போது டிராவல், சேஃப்டி, வெளி சாப்பாடு என எல்லாம் அவனும் யோசிப்பான் தானே. "நீ என்ன நினைக்கற" என்று அவன் அவளிடமே கேட்பான் என்று எதிர்பார்க்கவில்லை. "எனக்கும் ரெண்டு மனசா தான் இருக்கு கண்ணா. டிராவல் ஒன்னும் பிரச்சனை இல்லேன்னா, பெங்களூருல எல்லாம் ஓகேவா தான் இருக்கணும்னு நினைக்கறேன். MG ரோடுல இருக்க தாஜ் பைவ் ஸ்டார் ஹோட்டல்ல தான் கான்ஃபெரென்ஸ் ரூம், அங்க தான் ட்ரைனிங். ப்ரேக்ஃபாஸ்ட், லஞ்ச் ரெண்டுமே அங்க குடுத்துருவாங்க. நைட் டின்னர்க்கு கெஸ்ட் ஹவுஸ் பக்கத்துல கண்டிப்பா ஏதாவது ரெஸ்டாரண்ட் இருக்கும். அப்படி இல்லேனா இருக்கவே இருக்கு ஸ்விக்கி, ஜோமடோ எல்லாம். கெஸ்ட் ஹவுஸ்ல இருந்து பத்து நிமிஷத்துல தாஜ்க்கு போயிரலாம். சென்னைல வேற ப்ராஜெக்ட்ல இருந்தும் இந்த ட்ரைனிங்க்கு வராங்க. ரொம்ப பரிச்சயம் இல்லேன்னாலும் கொஞ்சம் தெரியும் அவங்கள" என்றாள். ட்ரைனிங்க்கு போறாங்க என்று சொல்லாமல், வராங்க என்று அவள் சொன்னதிலேயே அவளுக்கும் அந்த ட்ரைனிங் அட்டென்ட் பண்ணனும் என்கிற விருப்பம் இருப்பது விவேக்கிற்கு புரிந்தது. "நீயே டாக்டர் கிட்ட போன்ல கேளேன். போன வாரம் தான செக் அப் போனோம். போன்லயே கேட்கலாம்னு நினைக்கறேன்" என்றான். இவ்வளவு தானா உன் ரியாக்ஷன் என்று நினைத்தபடி "சரி நா அவங்களுக்கு பேசறேன்" என்றாள்.
டாக்டரிடம் பேசியவள் மறுபடி விவேக்கிற்கு கூப்பிட்டாள். போனை அட்டென்ட் செய்தவனிடம் "அவங்க, ட்ரெயின் டிராவல் ஏதும் ப்ராப்ளம் இல்ல. பாதுகாப்பா போயிட்டு வந்துக்கலாம்னு சொல்லிட்டாங்க. ட்ரைனும் செகண்ட் கிளாஸ் AC தான் புக் பண்றங்க" என்றாள். "உனக்கு புக் பண்ண வேணாம்னு சொல்லு குட்டி" என்றான். அடப்பாவி இவ்ளோ கதையை கேட்டுட்டு இப்ப வேணாம்னு சொல்ல போறானா என நினைத்தபடி "ஏன்?" என்றாள் குரலில் சுரத்தே இல்லாமல். "வீட்ல இருந்து சென்ட்ரல் போயி, அப்புறம் பெங்களூர் போயி, அங்க ஸ்டேஷன்ல இருந்து MG ரோடு போறதுக்குள்ள விடிஞ்சிரும். நானே உன்ன கூட்டிட்டு போறேன். கூப்பிடவும் நானே வரேன். நம்ம கார்ல போனா அங்கங்க ஸ்டாப் பண்ணி ரெஸ்ட் எடுத்துக்கலாம், எனக்கும் உன்ன தனியா அனுப்பின ஃபீல் இருக்காது" என்றான். அவன் சொல்ல சொல்ல வந்தனாவின் மனம் கரைந்தது "உன்ன மாதிரி யாரும் என் மேல அக்கறை காட்டவே முடியாது டா" என்றாள். "என்னது டா வா?" என்று அவன் கேட்டு முடிக்கும் முன், "சரி சரி நேரமாகுது, நா நிரூபமாகிட்ட போயி கன்பார்ம் பண்ணனும்.. பை" என்று சொல்லி வேண்டுமென்றே போனை வைத்தாள், ஆபீசில் அவள் வெட்கப்படுவதை யாரேனும் பார்த்துவிட்டால்?
ஞாயிறு மதியம் இரண்டரை வாக்கில் வந்தனா தங்க ஏற்பாடு பண்ணியிருந்த கெஸ்ட் ஹௌஸிற்கு அவர்கள் சென்றார்கள். அதற்கு இரண்டு கட்டிடங்கள் தள்ளி A2B ரெஸ்டாரண்ட் இருந்தது. சாப்பாட்டிற்கு பிரச்சனை இல்லை. ஆட்டோ ஸ்டான்ட், மெடிக்கல்ஸ், டிபார்ட்மென்டல் ஸ்டோர் என எல்லாமே நடக்கும் தூரத்தில் இருந்தது. "சரி, பாத்து இருந்துக்கோ குட்டிமா, அப்பப்ப கால் பண்ணு. நா கிளம்பறேன்" என்றவரிடம் "தனியா டிரைவ் பண்ணனும், நீங்களும் பாத்து போங்க. நேரத்திற்கு சாப்பிடுங்க. நானும் கால் பண்றேன்" என்று சொல்லி அவன் வண்டியை கிளப்பியதும் பை சொல்லிவிட்டு அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றாள். ஒவ்வொன்றும் மூன்று அறைகள் கொண்ட வீடுகள் தான். அறைக்கு ஒருவர் விகிதம் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காமன் கிச்சன், யார் வேண்டுமானாலும் உபயோகப்படுத்திக்கொள்ளலாம். ரூமிலேயே டீவீ, பாத்ரூம் எல்லாம் இருந்தது. சிறிது நேரம் டீவீ பார்த்துக்கொண்டிருந்தவள், சாயங்காலம் அங்கிருந்த கிச்சனில் க்ரீன் டி போட்டுக்கொண்டு வந்து உட்கார்ந்து வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
மறுநாள் எட்டு மணிக்கெல்லாம் ரெடி ஆகி ஆட்டோ எடுத்துக்கொண்டு, தாஜில் அவளது ட்ரைனிங் நடக்க இருக்கும் கான்பெரென்ஸ் ரூமை தேடி சென்றாள். சென்னையிலிருந்த வந்த மற்ற இருவரும் அப்போது தான் அங்கு வர அவர்களுடன் இணைந்து கொண்டாள். பயிற்றுவிப்பாளர் அவர்களை ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டு வரும்படி சொல்ல அவர்கள் பஃபே இருந்த அறையை நோக்கி சென்றார்கள். அளவாக குளிரூட்டப்பட்ட அந்த அறையின் ஒரு ஓரத்தில் உணவுகள் சூடாக பரிமாறப்பட, அங்கங்கே டேபிள்களும் சேர்களும் நேர்த்தியாக போடப்பட்டிருந்தன. பல தரப்பட்ட மொழிகளை பேசும் மக்கள் அவரவர்க்கு விருப்பமான உணவுகளை தட்டில் எடுத்து வந்து அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். எல்லாருமே பேசிக்கொண்டு தான் இருந்தனர், எனினும் அங்கே அமைதி நிலவியதை போல் இருந்தது. அவ்வளவு மெதுவாக பேசிக்கொண்டிருந்தனர். வந்தனா அவளது தட்டில் சிறிது பழங்களையும் ஒரு பிரட் ஆம்லெட்டையும் எடுத்துக்கொண்டு எலுமிச்சையும் புதினாவும் கலந்து செய்திருந்த ஒரு மோக்டைல் ஜூஸ் தம்ளரையும் எடுத்துக்கொண்டு அவளது இடத்திற்கு வந்து அமர்ந்தாள். அங்கே பரிமாறப்படும் மசால் தோசையும் கிச்சடியும் மிக அருமையாக இருக்கும் என கேள்விப்பட்டதால் அடுத்து அதையும் வேணும்ங்கிற அளவிற்கு எடுத்துக்கொண்டாள். சாப்பிட்டு முடித்ததும் ட்ரைனிங்கில் அறிமுகப்படலம் ஆரம்பித்து, செஷன் ஆரம்பித்தாள் அந்த பயிற்சியாளர். இரண்டு மணி நேரம் விறு விறுவென நடந்தது. காபி பிரேக் போது விவேக்கிடம் பேசிக்கொண்டே அங்கிருந்த ஸ்ட்ராபெர்ரி குக்கீஸை கொறித்தாள். அவள் போனை வைத்த சமயம் அங்கே வந்த பயிற்சியாளரை பார்த்து வந்தனா புன்னகைக்க "செஷன் எப்படி போகுது" என்றாள் அவள் நுனிநாக்கு ஆங்கிலத்தில். இருவரும் உரையாடிக்கொண்டிருக்க ட்ரைனிங் மறுபடி தொடர்ந்தது. ட்ரைனிங் முடித்து கெஸ்ட் ஹௌஸிற்கு சென்றதும் அதை டீமிற்கு பயிற்சி அளிப்பதற்கு ஏதுவாக ப்ரெசென்ட்டேஷன் வேலையை அன்றன்றே செய்து முடித்தாள். வெள்ளியன்று இரவே விவேக் வர, அவர்கள் இரவு அங்கிருந்த விடுதியில் தங்குவதற்கு அறை புக் செய்திருந்தான். மறுநாள் காலை கிளம்பி அவர்கள் சென்னை வந்து சேர்ந்தனர்.
திங்களன்றிலிருந்து ஒரு வாரம் டீமிற்கு அவள் அந்த பயிற்சியை கொடுக்க, ப்ராஜெக்ட்டில் வேலை மிக மும்முரமாக போய்க்கொண்டிருந்தது. மூன்று மாத காலம் முடிந்திருந்த நிலையில் ஷங்கரிடம் இருந்து ஒரு ஈமெயில் வந்திருந்தது. நிருபமா, தேவகி, வந்தனா மூவரையும் அன்று மதியம் இரண்டரை மணிக்கு அவரது அறையில் சந்திக்க வரும்படி அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டரை மணிக்கு ஷங்கரின் அறையில் இருந்த நாற்காலியில் மூவரும் அமர, புன்னகைத்தபடி ஷங்கர் "கிரேட் ஜாப் லேடீஸ். உங்க ப்ராஜெக்ட் ரொம்ப நல்லா போய்க்கிட்டிருக்கு. புது டெக்னாலஜி , நமக்கு குடுத்துருக்க டைம்ல முடிக்க முடியுமா அப்படீன்னேல்லாம் எவ்ளோ குழப்பங்கள் இருந்தது? வந்தனா நீங்க மறுபடி உங்கள நிரூபிச்சிட்டீங்க. ப்ரெக்நன்ஸி டைம்ல ட்ராவல் பண்ணி ட்ரைனிங் அட்டென்ட் பண்ணினது உங்களோட கம்மிட்மெண்ட காமிக்குது. நீங்க கண்டிப்பா டீமுக்கு ஒரு இன்ஸ்பிரஷன்" என்ற போது அவரது குரலில் இருந்த உற்சாகம் வந்தனாவின் முகத்திலும் அப்பிக்கொண்டது.
முற்றும்.