இருபத்து இரண்டு மணி நேர பயணம் முழுக்க மகி மெனக்கெட்டு அவளது எண்ணங்களை வேறு விஷயங்களில் திணித்தாள். ஞாயிறு மதியம் (சிகாகோ நேரம்) 2 .45 க்கு சரியாக அந்த விமானம் தரையிறங்க மகி அவளது கேபின் பேகையும் லேப்டாப் பேகையும் எடுத்துக்கொண்டு இறங்குவதற்கு தயாரானாள். ஒவ்வொரு முப்பது செகண்டிற்கும் ஒரு விமானம் டேக் ஆப் அல்லது லேண்டிங் செய்யும் அந்த ஓஹர் இன்டர்நேஷனல் ஏர்போர்ட், யுஎஸ்ஸின் பிஸியான ஏர்போர்ட்களின் வரிசையில் மூன்றாவது இடத்திலிருந்து. கிறிஸ்துமஸ்- நியூ இயர் கொண்டாட்டங்கள் முடிந்து மக்கள் அவரவர் வேலைக்குத்திரும்பி இருந்தனர் போலும். இம்மிகிரேஷனிலும் கஸ்டம்ஸிலும் பெரிய க்யு நின்றது. அதை முடித்து விட்டு அவளது செக் இன் பேக்கை கலெக்ட் செய்வதற்காக சென்றாள். அந்த பேக்கேஜ் பெல்ட் ஓயாமல் சுற்றிக்கொண்டிருக்க அதிலிருந்த அவரவர் சூட்கேஸை எடுப்பதற்காக பலரும் காத்துக்கொண்டிருந்தனர். மகியும் அவளது சிவப்பு நிற ஈகிள் கிரீக் வருவதற்காக காத்திருந்தாள். அந்த மார்பிள் தரையில் ட்ராலி வீல்கள் டகடகடக என உருளும் சத்தம் ஓயாமல் கேட்க, எங்கோ ஒரு குழந்தை வீறிட்டு அழுதது. அங்கங்கே வீல் சேரை தள்ளிக்கொண்டு ஏர்போர்ட் ஸ்டாப்ஸ் சென்றுகொண்டிருந்தார்கள். மகி அவற்றை கவனித்தவாறே அவளது லக்கேஜ்ஜூக்கு சிறிது நேரம் வெயிட் பண்ணினாள். தலை குப்புற கவிழ்ந்து ஊர்ந்து வந்த அவளது செக்கின் பேக்கை அதன் ஹாண்டிலை பிடித்து தூக்கி அவள் எடுத்து வைத்திருந்த டிராலியில் வைத்து தள்ளி எக்ஸிட்டை நோக்கி நடந்தாள்.
இன்டர்நேஷனல் அரைவலில் அவளது அப்பா காத்திருப்பதாக கால் செய்ய லாண்ட்மார்க் கேட்டுக்கொண்டு அந்த திசையில் நடந்தாள். அந்த சிவப்பு நிற நிஸ்ஸான் மாக்ஸிமாவின் அருகே அவளது அப்பா நிற்பதை பார்த்ததும் கையசைத்தபடி "ஹாய் அப்பா" என்று சொல்லிக்கொண்டே அவரிடம் சென்றாள். "வா டா, ஜர்னி எல்லாம் எப்படி இருந்துச்சு?" என்று கேட்டபடி அவளை தோளோடு அணைத்துக்கொண்டார். "இண்டியா வாஸ் ஆஸ்ஸம், பட் ஜர்னி வாஸ் வெரி டயர்சம்" என்றாள் சிரித்தபடி. அவர் காரின் ட்ரைவிங் சீட்டில் அமர்ந்து பூட்டை(boot) ஓபன் செய்ய லக்கேஜ்ஜை உள்ளே வைத்து மூடினாள். பின்னர் காரின் வலது பக்க முன்னிருக்கையில் அமர்ந்து சீட் பெல்ட்டை அணிந்துகொண்டாள். அவளது தலை முடியை கவ்விக்கொண்டிருந்த க்ளட்சரை அவிழ்த்து ஃப்ரீ ஹேர் ஆக்கிவிட்டாள். அவர்களது அபார்ட்மெண்ட் இருந்த நேபர்வில்லிற்கு செல்வதற்கான அந்த முப்பது நிமிட பயணம் முழுவதும் அப்பா சென்னையை பற்றி கேட்ட எல்லா கேள்விகளுக்கும் நிதானமாக பதில் சொல்லிக்கொண்டு வந்தாள்.
அவர்கள் பார்க்கிங்கில் காரை பார்க் செய்த சத்தம் கேட்டு அவளது அம்மா வீட்டின் கதவை திறந்து வைத்து, வீட்டிற்குள் நுழைந்த மகியை அணைத்து முத்தமிட்டாள். "அம்மா மதியம் பாகற்காய் ஃப்ரையா? வாசம் மூக்கு வழிய போயி வயித்தை கிள்ளுது" என்றாள். "அம்மா உனக்கு பிடிச்ச வாழைக்காய் பருப்பு, பாகற்காய் ஃப்ரை, சர்க்கரை பூசணி பொரியல் செஞ்சு உனக்காக ஹாட் பாக்கில் போட்டு வச்சிருக்காங்க" என்றார் அப்பா. "இதோ ரெண்டு நிமிஷத்துல போயி குளிச்சு ஃப்ரெஷ் ஆயிட்டு வரேன், உடம்பெல்லாம் பயங்கரமா வலிக்குது" என்று சொல்லிக்கொண்டே சோபாவில் சரிந்து காலை நீட்டி உட்கார்ந்தாள்.
"சரி மகி, சாப்டுட்டு நீ இன்னைக்கு சீக்கிரம் தூங்கு. அப்ப தான் நாளைக்கு ஆபீஸ்க்கு போக முடியும்" என்றாள் அம்மா. "ஓகே மா" என்று சொல்லியபடி எழுந்து அவள் அறைக்கு சென்றாள். சிறிது நேரத்தில் குளித்து நைட் சூட்டில் வந்து சாப்பிட உக்கார்ந்தாள். அம்மா பரிமாறிக்கொண்டே "மகி, இந்த வீக் சிகாகோ தமிழ் சங்கம் பொங்கல் செலிப்ரஷன்க்கு நிறைய வேல இருக்கு. ஐம்பதாவது வருஷம்ங்கறதால ரொம்ப க்ராண்டா செலிப்ரேட் பண்ணனும்னு பிளான் பண்ணிக்கிட்டு இருக்கோம். சோ நானும் அப்பாவும் ட்யூஸ்டேவே பிரேமா ஆண்ட்டி வீட்ல போயி ஸ்டே பண்ணலாம்னு இருக்கோம். டிஸ்கஸ் பண்றதுக்கு, அரேன்ஜ்மெண்ட்ஸ் எல்லாம் பண்றதுக்கு வசதியா இருக்கும். நீயும் அங்க இருந்து ஆபீஸ் போறியா இல்ல இங்கயே மானேஜ் பண்ணிக்குவியா மகி?" என்றாள். "நோ மா, நா இங்கயே மானேஜ் பண்ணிக்குவேன். சாட்டர்டே மார்னிங் நா அங்க வரேன். சொல்ல மறந்துட்டேன், ரதியோட அக்கா எனக்கும் ஒரு சாரீ எடுத்துக்கொடுத்துருக்காங்க. பியுடிஃபுல்லா இருக்கு. நா அத அன்னைக்கு வியர் பண்ணிக்கறேன்" என்றாள். சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த விட்டு தூங்குவதற்கு அவள் ரூமிற்கு சென்றுவிட்டாள்.
சூட்கேஸில் இருந்த துணிமணிகளை எடுத்து வைப்பதற்கு சோம்பலாக இருந்ததால் அவளது மொபைலையும் கைப்பையிலிருந்த நோக்கியா 1108'ஐயும் எடுத்துக்கொண்டு போய் கட்டிலில் விழுந்தாள். அந்த 1108 எப்போதும் அவளது கைப்பையில் இருக்கும். அதை கையில் வைத்தவாறே அஜியின் நம்பரை ஒருமுறை சொல்லிப்பார்த்தாள். இத்தோடு இந்த நினைப்பை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எண்ணி லைட் சுவிட்ச்சை ஆப் செய்தாள். இருந்த களைப்பில் உடனே உறங்கிவிட்டாள்.
காலை ஆறு மணிக்கு அலாரம் அடிக்க எழுந்து ஜாகிங் போய்விட்டு வந்து ரெடியாகி ஆபீஸ் கிளம்பிவிட்டாள். அன்றும் அந்த வாரத்தில் அடுத்து வந்த நாட்களும் அவளை பிசியாக வைத்திருந்தன. அவளது அம்மாவும் அப்பாவும் செவ்வாய்க்கிழமையன்று வீட்டில் பொங்கல் வைத்து சாமி கும்பிட்டு விட்டு பிரேமா ஆண்ட்டி வீட்டிற்கு சென்றுவிட்டார்கள்.
சனிக்கிழமை மூன்று மணி முதல் தான் நிகழ்ச்சிகள் ஆரம்பம் என்றாலும் கோலப் போட்டியில் கலந்து கொண்டவர்கள் மட்டும் காலையிலேயே வந்து கோலம் போட ஆரம்பித்திருந்தார்கள். மகி மிக அழகாக ரங்கோலி போடுவாள். அவளும் கோலப்போட்டிக்கு பெயர் கொடுத்திருந்தாள். ரதியும் அவள் கணவன் வெங்கட்டும் அவர்கள் போகும் வழியில் மகியை பிக்கப் பண்ணிக்குவதாக சொல்லியிருந்தார்கள். மகி, ரதியின் அக்கா எடுத்துக்கொடுத்திருந்த புடவையும் அதற்க்கு தோதாக குந்தன் நெக்லஸ் செட்டும் அணிந்து தயாராக இருக்க, ரதியின் கார் வந்ததும் அதில் ஏறிக்கொண்டாள். ரதியும் அதே புடவையில் அதற்க்கு மாட்ச்சிங்காக சில்க் த்ரெட் செட் அணிந்திருந்தாள். "தோழிகள் ரெண்டு பெரும் இன்னைக்கு பயங்கரமா அசத்தறீங்களே" என்று வெங்கட் கலாய்க்க அவர்கள் அடுத்த இருபத்தைந்தாவது நிமிடத்தில் அந்த தமிழ் சங்கம் கட்டிடத்தின் பார்க்கிங்கில் காரை பார்க் செய்துவிட்டு மகியின் கோலத்திற்கான பொருட்கள் இருந்த பேக்கை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றார்கள். பிசியாக இருந்த அவளது அம்மாவையும் அப்பாவையும் பார்த்து தான் உடுத்தியிருந்த புது புடவையை காட்டிவிட்டு கோலம் போடும் இடத்திற்கு சென்று பதினோரு மணி வாக்கில் கோலத்தை ஆரம்பித்தாள்.
இரண்டரை மணிதொட்டே பலரும் வர ஆரம்பிக்க, அந்த சில்வர் நிற ஹோண்டா சிவிக், மேப்ஸ்'ஐ ஃபாலோ செய்து நேபேர்வில்லிற்குள் வந்துகொண்டிருந்தது. அதிலிருந்து பிங்க் லெஹன்கா அணிந்த லாவண்யா அவளுடைய ஐந்து வயது மகனை கார் சீட்டிலிருந்து பெல்ட்டை ரிலீஸ் செய்து இறக்கி விட, முன் சீட்டிலிருந்து குர்த்தா அணிந்த இரண்டு ஆண்கள் இறங்கினார்கள். ஒன்று பிரபு, மற்றொன்று AJ'வாகிய அஜய். ஆறடி உயரத்தில் மெரூன் குர்தாவும் வெள்ளை நிற பாண்டும் அணிந்திருந்த அஜய் "சிக்காகோவோட பிரசித்தி பெற்ற தமிழ் சங்கம் பத்தி நா நெறய கேள்வி பட்டிருக்கேன். லாவண்யாவோட அத்தை இன்வைட் செஞ்சதால இன்னைக்கு இந்த ஈவெண்ட்க்கு வர முடிஞ்சுது. அவங்களுக்கு தான் நன்றி சொல்லணும்" என்றான். அன்றைய பொங்கல் கொண்டாட்டத்திற்கு அஜய், லாவண்யா, அவளது கணவன் பிரபு, மற்றும் குழந்தையுடன் இண்டியானாபோலிஸிலிருந்து வந்திருந்தார்கள். பிரபுவும், அஜய்யும் ஒன்றாக வேலை செய்பவர்கள்.
அஜய்க்கு திருமணம் நிச்சயம் செய்து திருமண பத்திரிகை எல்லாம் அடித்து டிஸ்ட்ரிபூட் பண்ண ஆரம்பித்த பிறகு, எல்லாமே ரொம்ப வேகமாக நடப்பது போல உணர்ந்தான். அந்த அவசர திருமணம் சரியாக இருக்குமா என்ற கேள்வி வலுப்பெற்றுக்கொன்டே இருக்க, வீட்டிருந்த எல்லோரின் கோபத்திற்கும் ஆளாகி, ஆபீசில் அவனது மானேஜரிடம் கெஞ்சி ஒரு ஆன்சைட் பொசிஷன் வாங்கி அந்த திருமணத்தை தற்காலிகமாக தள்ளிப்போட்டான். அதில் அவனது அக்காவின் மாமியார் வீட்டில் மிகுந்த கோபம் கொண்டு இந்த சம்பந்தம் வேண்டாம் என்று அந்த பெண்ணிற்கு வேறு சம்பந்தம் பார்த்துவிட்டனர். இதில் அஜய்யின் அக்காவிற்கும் மாமாவுக்கும் அவன் மேல் மிகுந்த கோபம், சிறிது நாள் பேசாமல் கூட இருந்தனர். பிறகு அதெல்லாம் தணிந்தாலும், அதன் பிரதிபலிப்பு அவ்வப்போது இருந்து கொண்டு தான் இருந்தது. அப்படியொரு சமயத்தில் தான் விக்கி அஜய்யின் அக்காவிடம் நம்பர் கேட்க, அவனுக்கு கல்யாணம் ஆகிவிட்டதாக பொய் சொல்லி நம்பர் கொடுத்தார். இந்த பனிரெண்டு வருட யூஎஸ் வாழ்வில் அஜய்யின் ஒரே ஆறுதல் அவனுடன் வேலை பார்த்து பின்னர் நண்பனாக மாறிய பிரபுவும் அவனது குடும்பமும் தான். கிட்டத்தட்ட அஜய்யும் பிரபுவின் குடும்பத்தில் ஒருத்தனாகவே மாறி விட்டான் . எப்போதும் ஒன்றாக தான் இருப்பார்கள். அவர்களுடன் தான் இன்று அந்த பொங்கல் கொண்டாட்டத்திற்கு வந்திருந்தான். லாவண்யா அவள் அத்தைக்கு கால் பண்ண, இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவதாக சொன்னார்.
கார் பார்க்கிங்கில் இருந்து ரங்கோலி போட்டி நடந்த இடத்தை தாண்டி தான் அவர்கள் மெயின் ஹாலுக்கு செல்ல வேண்டியிருந்தது. கோலப்போட்டி முடிந்து, கோலங்கள் மட்டும் எல்லோரையும் வரவேற்க்கும் விதமாக நிற்க, சிலர் அந்த கோலங்களின் முன் நின்று போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்கள். கோலத்தை பார்த்துக்கொண்டே சென்ற அஜயின் கண்களை ஒரு கோலம் மிகவும் வசீகரித்தது. வீடு, பொங்கல் பானை, கரும்பு, சூரியன், நெற்பயிர்கள், பசு என்று தத்ரூபமாக இருந்த அந்த கோலத்தை பார்த்ததும் அஜய்க்கு மகிஷாவின் ரங்கோலிகள் நினைவிற்கு வந்தது. லாவண்யாவும் பிரபுவும் அவனை பார்க்க ஒன்றுமில்லை என்பது போல் தோள்களை குலுக்கிக்கொண்டான். அந்த பெரிய ஹாலின் ஒருபுறத்தில் காலியாக இருந்த இருக்கையில் மூவரும் அமர்ந்தார்கள். மைக்கில் யாரோ ஒருவர் பேசிக்கொண்டிருந்தார், அன்றைய நிகழ்ச்சிகள் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். பெரிய ஹால் என்பதால் எல்லாருக்கும் தெரியும் வண்ணமாக அங்கங்கே டிஸ்ப்பிலே வைத்திருந்தார்கள். "டேய், இந்த ஊர்ல இது மாறி ஏதாச்சும் செலெப்ரஷன் அப்ப தான் இப்படி ட்ரடிஷனலா அழகை ரசிக்கலாம்" என்று பிரபு கிசுகிசுக்க, லாவண்யா புருவத்தை உயர்த்தினாள். "அதானே, இதெல்லாம் எவ்ளோ ரகசியமா பேசினாலும் உங்க காதுல கரெக்டா விழுமே!! நா நம்ம அஜய்க்கு உபயோகப்படும்னு சொன்னேன்மா" என்று அசடு வழிந்தான் லாவண்யாவின் கணவனான பிரபு. அஜய் இதெல்லாம் உனக்கு தேவையா என்பது போல நக்கலாக ஒரு பார்வை பார்த்துவிட்டு எல்ஈடி டிஸ்பிலேவை பார்த்தவன் சில கணங்கள் இமைக்க மறந்தான்.
அங்கே கிளோஸ் அப்பில் வெளிர் பச்சை நிற ஜார்ஜ்ஜெட் புடவையில், மகியே தான் அது. நேர்த்தியாக கட்டிய புடவையில், யாருடனோ மலர்ந்த முகத்துடன் கையை ஆட்டி ஆட்டி அவள் பேசிய விதம் ஏதோ அவள் காற்றில் நடனம் ஆடுவதை போல இருந்தது. அனால், மகி இங்கே எப்படி என்று யோசிப்பதற்குள் ஸ்கிரீனில் காட்சிகள் மாறின. "டேய் வந்துடறேன் இரு" என்று சொல்லிவிட்டு இந்த ஹாலில் எப்படி தேடுவது என்று யோசித்தபடியே இங்கும் அங்கும் தேட, ஸ்டேஜ்க்கு அருகில் ஸ்கிரீனில் காட்டிய அதே மகி, அவளருகில் அதே டிசைனில் லைட் யெல்லோ கலர் புடவை கட்டிய இன்னொரு பெண். அவர்கள் இருந்த இடத்திற்கு அருகில், ஆனால் அவர்கள் கண்ணுக்கு தெரியாதபடி நின்று கொண்டு கொஞ்ச நேரம் மகியையே பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது கோலப்போட்டிக்கான பரிசுகள் அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. மூன்றாம், இரண்டாம் பரிசுக்கு பிறகு முதல் பரிசு மிகவும் தத்ரூபமாக ஒரு பொங்கல் நாளின் காட்சியை தன் கோலத்தின் மூலம் நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்திய மிஸ் மகிஷா என்று அறிவிக்க மகி மேடையேறி பரிசை வாங்கிக்கொண்டாள். டிட் ஐ ஹியர் இட் கரெக்ட்லி, மிஸ் மகிஷாவா? மகி உனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையா? நீ எங்கோ ஹாப்பியா இருக்கேன்ல நெனச்சுக்கிட்டு இருந்தேன், நீ எப்படி இங்க? போய் பேசலாமா? வேண்டாமா? என்று தனக்குளேயே கேள்விமேல் கேள்வி கேட்டுக்கொண்டான்.
மகி சிறிது தூரம் சென்ற அடுத்த நொடியில் வேகமாக ஓடி ரதியிடம் "எக்ஸ்க்யுஸ் மீ" என்றான், "எஸ்" என்று புன்னகையோடு திரும்பிய ரதியிடம் "நீங்.. நீங்க மகி.. மகியோட ஃப்ரெண்டா?" என்றான். "யா... பட் நீங்க... வெயிட் எ செகண்ட். ஆர் யு பை எனி சான்ஸ் அஜய்?" என்றாள். "அப்போ மகி என்னை பத்தியும் உங்ககிட்ட சொல்லியிருக்காளா?" என்று சொன்னவனின் முகத்தில் ஏதோ ஒன்றை ரதி பார்த்தாள். அது ஒரு நிம்மதி பெருமூச்சா, சந்தோஷமா? "ஓ மை காட், ஐ கான்ட் பிலிவ் மை ஐஸ்!! பட் நீங்க இண்டியால தான இருக்கறதா மகி சொன்னா?" என்றாள் ஆச்சர்யம் மாறாமல். "ஐ கேம் ஹியர் டுவெல் இயர்ஸ் அகோ. பட் நா மகி இந்தியால இருக்கறதா நெனச்சிட்டு இருந்தேன்" அஜய் சொல்ல, "அவளும் இங்க வந்து பனிரெண்டு வருஷம் ஆச்சு. பை தி பை உங்க வைப்ஃ.." என்று ரதி இழுக்க, "அவங்களை தான் இப்ப தேடிக்கிட்டு இருக்கேன்" என்றான். "எக்ஸ்க்யுஸ் மீ" என்று ரதி முடிக்கும் முன் "மகி..." என்றான். "ஹையோ என்னால நம்பவே முடியல. நீங்க ரெண்டு பெரும் ஒரே மாதிரி, ஒருத்தர ஒருத்தர் நெனச்சுக்கிட்டு.. சினிமால பாக்கற மாறி இருக்கு. வெயிட் நா மகிய கூப்பிடரேன். எனக்கு அவளோட சந்தோஷத்தை பாக்கணும்" என்றாள் உணர்ச்சிவசப்பட்டவளாய்.
"நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?" என்றான் அஜய். "தயவு செஞ்சு சொல்லுங்க, என்ன வேணும்னாலும் செய்யறேன்" என்றாள் ரதி. "எனக்கு கொஞ்சம் குங்குமம் வேணும், உங்க போன் நம்பர் வேணும். நா உங்க நம்பர்க்கு கால் பண்றேன், மகிகிட்டே போனை குடுங்க ப்ளீஸ். அப்புறம் இந்த நோக்கியா 1100'வை அவகிட்ட காட்டுங்க" என்றபடி பான்ட் பாக்கெட்டிலிருந்து அந்த போனை எடுத்து அவளிடம் குடுத்தான். அதை பார்த்ததும் ரதியின் உள்ளமே கரைந்து விட்டது. "ரியல்லி, நீங்க ரெண்டு பெரும் மேட் ஃபார் ஈச் அதர் தான்" என்றாள். "அப்புறம் அவளை அந்த சின்ன விநாயகர் கோவில்கிட்ட வரச்சொல்லுங்க" என்று சொல்லி அவளது நம்பர் வாங்கிக்கொண்டான்.
அஜய் ரதிக்கு கால் பண்ண, ரதி மகி இருக்கும் இடம் தேடி சென்று "மகி, உனக்கு போன்" என்றாள். "எனக்கா? உன் நம்பர்ல யாரு கூப்பிடறது?" என்றபடி வாங்கி "hello" என்று சொல்ல பன்னிரெண்டு வருடம் கழித்து கேட்ட மகியின் குரலில் அஜியின் உள்ளம் உருகியது. சிறிது நேரம் பேச்சே வரவில்லை அவனுக்கு. மகி மறுபடி "hello" என்று சொல்ல, அஜியும் "ஹலோ மகி" என்றான். அடுத்த வினாடியே மகியின் மூளைக்குள் கரண்ட் பாய்ந்தது போல ஷாக் அடிக்க, அவளது கண்கள் மகிழ்ச்சியையும் அதிர்ச்சியையும் ஒன்றாக பிரதிபலிக்க, ரதி நோக்கியா 1100'வை மகியின் கையில் கொடுத்தாள். அடுத்த நொடி மகிக்கு ஏதோ புரிந்தது போல் இருக்க, கண்கள் கலங்க, உதடுகள் துடிக்க, கை, கால்கள் எல்லாம் நடுங்க, உடல் சிலிர்க்க, எங்கே என்பது போல கையால் சைகை செய்தாள். ரதி வெளியிலிருந்து விநாயகர் கோவிலை காட்ட மகி ரதியிடம் போனை குடுத்துவிட்டு கோவிலை நோக்கி ஓடினாள்.
அவள் ஓடுவதை ஒரு சிலர் என்ன ஆச்சு என்பது போல் திரும்பி பார்க்க, ரதி வேகமாக போய் மகியின் அப்பா அம்மாவிடம் விஷயத்தை சொல்லி அவர்களை கோவிலுக்கு அருகில் கூட்டி சென்றாள். அங்கே அஜி ஒரு கையில் பூவும், மறு கையில் குங்குமச்சிமிழும் வைத்துக்கொண்டு மகியையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி நின்றான். அவள் அருகில் வர அஜய் முட்டி போட்டபடி "இது தான் ஆண்டவன் நமக்கு எழுதியிருக்கிறார் போல மகி. இந்த பூவையும் குங்குமத்தையும் வாங்கிக்குவியா?" என்றான். அஜியை பார்த்த மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும் அவனுக்கு தான் கல்யாணம் ஆகிவிட்டதாக சொன்னார்களே என்று மகி குழப்பத்தில் பார்க்க, "நானும் இன்னும் 'மிஸ்' தான் மகி, ஷால் வி கெட் மாரீட்? சாரி, சாமந்தி பூ கிடைக்கல. ஹால்ல டெகரேஷன்ல இது தான் இருந்துச்சு" என்றான் கண்ணடித்தபடி. "சட்டென நனைந்தது நெஞ்சம், சர்க்கரை ஆனது கண்ணீர்" என்று ஸ்டேஜில் யாரோ மைக்கில் பாட, நீட்டியிருந்த அவன் இரு கைகளையும் பற்றியபடி "இந்த கரங்களை இனி எப்போதும் விட மாட்டேன்" என்று நா தழு தழுக்க சொல்லியபடி அவள் முகத்தை அவன் கைகளில் புதைத்துக்கொண்டாள். மகியின் அம்மா அப்பாவும் உணர்ச்சிவசப்பட்டிருக்க, அப்பா தான் "என்ன மகி, இப்ப அஜய் வீட்ல பேசலாமா?" என்றார். "கண்டிப்பா பேசுங்கப்பா, ப்ளீஸ்" என்றாள் மகி ஆனந்த கண்ணீர் நிறைந்த கண்களுடன். இருவரையும் அவள் அப்பா தோளோடு அணைத்து "ஸ்டே ஹாப்பி ஃபாரெவர் மை டியெர்ஸ். இது வரை தொலைத்த உங்கள் சந்தோஷங்களை எல்லாம் சேர்த்து வச்சு மகிழ்ச்சியா இருங்க" என்றார். சிறிது நிமிடங்களில் மகி அவளது மொபைலை எடுத்து யாருக்கோ வீடியோ கால் செய்ய "யாருக்கு மகி" என்றான் அஜி. "விக்கிக்கு.. நடு ராத்திரி ஆனாலும் பரவால்ல, நீ மொதல்ல அவன் கிட்ட பேசு, அவன் எவ்ளோ வருத்தப்பட்டானு தெரியுமா?" என்றாள். நடு ராத்திரியில் மகி ஏன் கால் பண்ணுகிறாள் என்று விக்கி பதற்றத்துடன் வீடியோ காலை அட்டென்ட் செய்ய அங்கே மகியும் அஜியும் ஒன்றாக இருப்பது பார்த்து குழப்பமும் ஆச்சரியமும் அடைந்தான். அஜி எல்லா கதையையும் எல்லாருக்கும் சொல்ல அங்கே காதலும், நட்பும், குடும்பங்களும் ஒன்று சேர்ந்தன!!
முற்றும்.